Beginning
யூதாவின் ராஜாவாகிய அபியா
15 நேபாத் என்பவனின் குமாரனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் ராஜாவாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது குமாரன் அபியா யூதாவின் ராஜா ஆனான். 2 அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் குமாரத்தியான மாகாள்.
3 அவன் தன் தந்தையைப்போலவே அனைத்து பாவங்களையும் செய்தான். அபியா தன் தாத்தாவாகிய தாவீதைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவனாக இல்லை. 4 கர்த்தர் தாவீதை நேசித்தார். அதனால், கர்த்தர் அபியாவிற்கு எருசலேமின் ஆட்சியைக் கொடுத்தார். அவனுக்கு ஒரு குமாரனையும் எருசலேமிற்குப் பாதுகாப்பையும் தாவீதிற்காக கர்த்தர் கொடுத்தார். 5 கர்த்தருக்குப் பிடித்த சரியான காரியங்களை மட்டுமே எப்பொழுதும் தாவீது செய்துவந்தான். அவன் எப்பொழுதும் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். அவன் ஒரே ஒருமுறைமட்டும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. அது ஏத்தியனான உரியாவிற்கு செய்ததாகும்.
6 ரெகொபெயாமும் யெரொபெயாமும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 7 அபியா செய்த பிற செயல்களெல்லாம் யூதாவின் ராஜாக்கள் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அபியா ராஜாவாக இருந்த காலம்வரை அவன் யெரொபெயாமோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். 8 அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரதத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அபியாவிற்குப் பின் அவனது குமாரனான ஆசா ராஜாவானான்.
யூதாவின் ராஜாவாகிய ஆசா
9 யெரொபெயாமின் 20வது ஆட்சி ஆண்டின் போது, ஆசா யூதாவின் ராஜாவானான். 10 ஆசா 41 ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் குமாரத்தி.
11 ஆசா அவனது முற்பிதாவான தாவீதைப் போன்றே கர்த்தருக்குச் சரியான செயல்களை மட்டுமே செய்துவந்தான். 12 அப்போது ஆண்கள் பாலின உறவுக்காக தம் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்குச் சேவைசெய்து வந்தனர். இத்தகையவர்களை ஆசா நாட்டை விட்டுத் துரத்தினான். அவன் முற்பிதாக்களால் செய்யப்பட்ட பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களையும் எடுத்தெறிந்தான். 13 அவன் தனது பாட்டியான மாகாவையும், இராணி என்ற பதவியிலிருந்து விலக்கினான். ஏனென்றால் அவள் அஷரா பொய்த் தெய்வத்தின் உருவத்தை செய்தாள். ஆசா இந்தப் பயங்கரமான உருவத்தை உடைத்துப்போட்டான். கீதரோன் பள்ளத்தாக்கில் அதனை எரித்துவிட்டான். 14 அவன் பொய்த் தெய்வங்களை தொழுவதற்கான மேடைப் பகுதிகளை அழிக்கவில்லை. ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு நம்பிக்கையாளனாக இருந்தான். 15 ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர்.
16 அப்போது, இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த பாஷாவோடு, ஆசா அடிக்கடி சண்டையிட்டான். 17 பாஷா யூதாவிற்கு எதிராக, இஸ்ரவேல் ஜனங்களை அங்கே போகவோ வரவோ அனுமதிக்காமல் சண்டையிட்டான். அவன் ராமா நகரத்தைப் பலம் பொருந்தியதாக ஆக்கினான். 18 எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் ராஜா பெனாதாத் தப்ரிமோனின் குமாரன். தப்ரிமோன் எசியோனின் குமாரன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம். 19 ஆசா அவனுக்கு, “என் தந்தையும் உங்கள் தந்தையும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நான் இப்போது உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொன்னையும் வெள்ளியையும் உமக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன். நீங்கள் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்போதுதான் அவன் எங்கள் நாட்டை விட்டு விலகுவான்” என்று தூது அனுப்பினான்.
20 ராஜாவாகிய பெனாதாத் ஒப்பந்தத்தின்படி ஆசாவோடு ஒரு படையை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களான ஈயோன், தாண், பெத்மாக்கா எனும் ஆபேல், கின்னரோத், நப்தலி ஆகியவற்றில் போர் செய்து வென்றான். 21 பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான். 22 பிறகு ஆசா தம் ஜனங்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டான். அதன்படி ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்றும் அவர்கள் ராமாவிற்குப் போய் கல்லையும் மரத்தையும் எடுத்து வரவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் கேபாவில் உள்ள பென்யமீன் மற்றும் மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினான்.
23 ஆசாவைப் பற்றிய, அவன் செய்த மற்ற பெரும் செயல்களையெல்லாம் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நகரங்கள் கட்டப்பட்டதும் உள்ளன. அவன் முதுமையடைந்ததும் பாதத்தில் ஒரு நோய் வந்தது. 24 அவன் மரித்ததும் தனது முற்பிதாவான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். பின் இவனது குமாரனான யோசபாத் ராஜாவானான்.
இஸ்ரவேல் ராஜாவாகிய நாதாப்
25 ஆசாவின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யெரொபெயாமின் குமாரனான நாதாப் இஸ்ரவேலின் ராஜாவானான். அவன் 2 ஆண்டுகள் ஆண்டான். 26 இவன் கர்த்தருக்கு எதிராகக் கெட்ட காரியங்களை தந்தையைப்போலவே செய்தான். ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
27 அகியா என்பவனின் குமாரன் பாஷா ஆவான். இவன் இசக்கார் கோத்திரத்தில் உள்ளவன். இவன் நாதாப்பைக் கொல்லதிட்டமிட்டான். இது நாதாப்பும் இஸ்ரவேலர்களும் கிப்பெத்தோனுக்கு எதிராகச் சண்டையிடும்போது நிகழ்ந்தது. இது பெலிஸ்தியரின் நகரம். இங்கே பாஷா நாதாப்பைக் கொன்றான். 28 இது யூதாவின் ராஜாவாகிய ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் ராஜா ஆனான்.
பாஷா இஸ்ரவேலின் ராஜா
29 இவன் ராஜா ஆனதும், யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. கர்த்தர் சொன்னபடியே நடந்தது. இதனைக் கர்த்தர் சீலோவில் அகியா மூலம் சொன்னார். 30 இவ்வாறு நிகழ யெரொ பெயாம் செய்த பாவங்களும் ஜனங்களைப் பாவம் செய்ய வைத்ததும் காரணமாயிற்று, இவையே இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு கோபத்தைத் தந்தது.
31 நாதாப் செய்த மற்ற செயல்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 32 பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவோடு போரிட்டான்.
33 ஆசாவின் மூன்றாவது ஆட்சி ஆண்டில்தான் இஸ்ரவேலின் ராஜாவாக அகியாவின் குமாரனான பாஷா ராஜா ஆனான். திர்சாவில் அவன் 24 ஆண்டுகள் ஆட்சிசெய்தான். 34 பாஷா கர்த்தருக்கு விரோதமான செயல்களைச் செய்தான். யெரொபெயாமைப்போல் தானும் பாவம்செய்து ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டினான்.
16 பிறகு கர்த்தர் ஆனானியின் குமாரனான யெகூவோடு பாஷாவிற்கு எதிராக கீழ்க்கண்டவாறு பேசினார்: 2 “நான் உன்னை ஒரு முக்கியமான மனிதனாகச் செய்தேன். உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்கினேன். ஆனால் நீ யெரொபெயாமின் வழியில் என் ஜனங்களை பாவத்துக்குள்ளாக்குகிறாய். இது எனக்குப் பெரும்கோபத்தை உண்டாக்கிற்று. 3 எனவே நான் பாஷாவையும் அவனது குடும்பத்தையும் அழிப்பேன். நான் நாபாத்தின் குமாரனான யெரொபெயாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோலவே செய்வேன். 4 இந்நகரத் தெருக்களில் நாய்கள் உண்ணும்படி உன் குடும்பத்தினர் சிலர் மரிப்பார்கள். இன்னும் சிலர் வயல்வெளிகளில் மரிப்பார்கள். அவர்கள் பிணங்களைப் பறவைகள் தின்னும்.”
5 பாஷாவைப்பற்றிய அவன் செய்த பெருஞ் செயல்களைப்பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 6 பாஷா மரித்ததும் திர்சா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனது குமாரனான ஏலா அடுத்த ராஜாவானான்.
7 எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் குமாரனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலா
8 யூதாவின் ராஜாவாகிய ஆசா 26ஆம் ஆண்டில் இருக்கும்போது ஏலா இஸ்ரவேலின் ராஜாவானான். பாஷாவின் குமாரனான இவன் திர்சாவில் 2 ஆண்டுகள் ஆண்டான்.
9 சிம்ரி ஏலாவின் அதிகாரிகளுள் ஒருவன். இரதப் படையின் பாதிக்குத் தளபதி. இவன் ஏலாவிற்கு எதிராகக் திட்டமிட்டான். ராஜா திர்சாவில் அர்சாவின் வீட்டில் குடித்தும் குடிக்க வைத்துக்கொண்டும் இருந்தான். அர்சா அரண்மனை பொறுப்பாளி. 10 சிம்ரி அந்த வீட்டிற்குப்போய் ராஜாவைக் கொன்றுவிட்டான். இது யூதாவின் ராஜாவாக ஆசா 27ஆம் ஆண்டில் இருந்தபோது நடந்தது. பின்னர் சிம்ரி அடுத்து ராஜாவானான்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய சிம்ரி
11 சிம்ரி ராஜாவாகியதும், பாஷாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. பாஷாவின் நண்பர்களையும் கொன்றான். 12 இது பாஷாவிக்கு எதிராக யெகூ தீர்க்கதரிசியிடம் கர்த்தர் சொன்னதுபோலவே ஆயிற்று. 13 இது, பாஷாவும் அவனது குமாரன் ஏலாவும் செய்த பாவத்தால் ஆயிற்று. அவர்கள் தாம் பாவம் செய்ததோடு இஸ்ரவேல் ஜனங்களும் பாவம் செய்ய காரணமானார்கள். அவர்கள் பல விக்கிரகங்களைச் செய்து தொழுதுகொண்டதால் கர்த்தரால் கோபம்கொள்ளக் காரணமானார்கள்.
14 ஏலா செய்த பிறசெயல்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
15 யூதாவின் ராஜாவாக ஆசா 27வது ஆண்டில் இருக்கும்போது சிம்ரி ராஜாவானான். அவன் திர்சாவிலிருந்து 7 நாட்கள்தான் ஆண்டான். இஸ்ரவேல் படைகள் பெலிஸ்தியரின் கிபெத்தோனுக்கு அருகில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் போருக்குத் தயாராயிருந்தார்கள். 16 சிம்ரி ராஜாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக படையிலிருந்தவர்கள் அறிந்தார்கள். அவன் ராஜாவைக் கொன்றதாகவும் கேள்விப்பட்டார்கள். எனவே எல்லா இஸ்ரவேலர்களும் அன்று முகாமில் உம்ரியை இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக்கினார்கள். உம்ரி படைத்தலைவனாக இருந்தான். 17 ஆகவே உம்ரியும் இஸ்ரவேலர்கள் அனைவரும் கிபெத்தோனிலிருந்து சென்று திர்சாவைத் தாக்கினார்கள். 18 சிம்ரி தன் நகரம் கைப்பற்றப்படுவதை அறிந்து அரண்மனைக்குப் போய் தனக்கும் அரண்மனைக்கும் தீவைத்து அதில் செத்தான். 19 தனது பாவத்தால் சிம்ரி மரித்துப்போனான். இவன் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். யெரொபெயாம் பாவம் செய்தது போலவே இவனும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதற்கும் காரணம் ஆனான்.
20 இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சிம்ரி செய்தசதிகளும் பிறசெயல்களும் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஏலாவிற்கு எதிராகக் கிளம்பியதும் சொல்லப்பட்டுள்ளது.
இஸ்ரவேலின் ராஜாவாகிய உம்ரி
21 இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் குமாரனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் ராஜாவாக்க விரும்பினார்கள். 22 ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி ராஜாவானான்.
23 யூதாவின் ராஜாவாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் ராஜாவாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். 24 உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான்.
25 உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். 26 நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான்.
27 இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. 28 உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது குமாரன் ஆகாப் புதிய ராஜாவானான்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்
29 யூதாவின் ராஜாவாகிய ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய ராஜாவானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். 30 இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். 31 நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். 32 சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். 33 ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.
34 இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தகுமாரனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய குமாரன் செகூப் மரித்தான். நூனின் குமாரனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.
எலியாவும் மழையற்ற காலமும்
17 கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் ராஜாவாகிய ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.
2 பிறகு கர்த்தர் எலியாவிடம், 3 “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. 4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். 5 எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். 6 ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.
7 மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது. 8 கர்த்தர் எலியாவிடம், 9 “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.
10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.
12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் குமாரனும் மரிக்கவேண்டும்” என்றாள்.
13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.
15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் குமாரனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.
17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் குமாரன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் குமாரனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
19 எலியா அவளிடம், “உன் குமாரனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? குமாரன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.
22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் குமாரன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.
24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.
2008 by World Bible Translation Center