Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எஸ்றா 8-10

எஸ்றாவோடு திரும்பிய தலைவர்கள்

பாபிலோனில் இருந்து எருசலேமிற்கு என்னோடு வந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் மற்ற ஜனங்களின் பெயர்கள்: அர்தசஷ்டாவின் ஆட்சியின் போது நாங்கள் எருசலேமிற்கு வந்தோம். அப்போது வந்தவர்களின் பெயர்ப்பட்டியல்:

பினெகாசின் சந்ததியில் கெர்சோம், இத்தமாரின் சந்ததியில் தானியேல், தாவீதின் சந்ததியில் அத்தூஸ்;

செக்கனியா என்பவனின் சந்ததியில் பாரோஷ், சகரியா மேலும் 150 பேர்கள்;

பாகாத் மோவாபின் சந்ததியில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடு 200 ஆண்களும்;

செக்கனியாவின் சந்ததியில் யகசியேலின் குமாரனும் அவனோடு 300 ஆண்களும்;

ஆதின் என்பவனின் சந்ததியில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும் அவனோடு 50 ஆண்களும்;

ஏலாம் என்பவனின் சந்ததியில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடு 70 ஆண்களும்;

செப்பதியா என்பவனின் சந்ததியில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடு 80 ஆண்களும்;

யோவாப் என்பவனின் சந்ததியில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடு 218 ஆண்களும்;

10 பானி என்பவனின் சந்ததியில் யொசிபியாவின் குமாரனான செலோமித் என்பவனும், அவனோடு 160 ஆண்களும்;

11 பெயாய் என்பவனின் சந்ததியில் அவனது குமாரனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்;

12 அஸ்காதின் சந்ததியில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடு 110 ஆண்களும்;

13 அதோனிகாம் என்பவனின் கடைசி சந்ததியில் எலிபேலேத், ஏயேல், செமாயா என்னும் பெயர்கள் உள்ளவர்களும், அவர்களோடு 60 ஆண்களும்;

14 பிக்வாய் என்பவனின் சந்ததியில் ஊத்தாயும், சபூதும் அவர்களோடு 70 ஆண்களும் ஆவார்கள்.

எருசலேமிற்குத் திரும்பியது

15 நான், (எஸ்றா) அகாவாவை நோக்கி ஓடும் ஆற்றங்கரையில் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டினேன். நாங்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அவர்களில் ஆசாரியர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் அங்கு லேவியர்கள் இல்லை. 16 எனவே நான் கீழ்க்கண்ட தலைவர்களை அழைத்தேன்: எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம். அதோடு யோயாரிப், எல்நாத்தான் என்னும் போதகர்களையும் அழைத்தேன். 17 நான் அவர்களை இத்தோவுக்கு அனுப்பினேன். கஸ்பியா எனும் நகரத்துக்கு இத்தோ தலைவனாக இருந்தான். நான் அவர்களிடம், இத்தோ மற்றும் அவனது உறவினர்களிடம் பேச வேண்டியதைப்பற்றிக் கூறினேன். அவனது உறவினர்கள் ஆலயக் கட்டிட வேலைகளைச் செய்பவர்கள். நான் அவர்களை இத்தோவிடம் அனுப்பியதால் அவன் தேவாலயக் கட்டிடக்காரர்களை அனுப்பி வைப்பான். 18 ஏனென்றால் தேவன் நம்மோடு இருந்ததால், இத்தோவின் உறவினர்கள் கீழக்கண்டவர்களை அனுப்பி வைத்தனர்: மகேலி என்பவனின் சந்ததியில் ஒருவனும், அறிவாளியுமான செரெபியா: மகேலி லேவியின் குமாரர்களில் ஒருவன். லேவி இஸ்ரவேலின் குமாரர்களில் ஒருவன். அவர்கள் செரெபியாவின் குமாரர்களையும், சகோதரர்களையும் அனுப்பினார்கள். அக்குடும்பத்தில் மொத்தம் 18 பேர் வந்தனர். 19 அவர்கள் மெராரி என்பவனின் சந்ததியில் அஷபியாவையும், எஷாயாவையும் அனுப்பினார்கள், அதனோடு அவர்களின் குமாரர்களையும் சகோதரர்களையும் அனுப்பினார்கள். ஆகமொத்தம் அந்தக் குடும்பத்தில் 20 பேர் இருந்தனர். 20 அவர்கள் 220 ஆலய வேலைக்காரர்களையும் அனுப்பினார்கள். தாவீதின் ஜனங்களான அவர்களது முற்பிதாக்களும், அவரது முக்கிய அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவும்படி தேர்ந்தெடுத்தனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டுள்ளன.

21 அகாவா ஆற்றின் அருகில் நான், (எஸ்றா) நாம் அனைவரும் உபவாசம் இருக்கவேண்டும். தேவனுக்கு முன்னால் நம்மைப் பணிவாக்கிக்கொள்ள நாம் உபவாசம் இருக்க வேண்டும். நமக்கும், நமது பிள்ளைகளுக்கும், நமக்கு உடமையுமான எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பாதுகாப்பான பயணத்திற்காக நாங்கள் தேவனிடம் வேண்டிக்கொள்ள விரும்பினோம். 22 நாங்கள் பயணம் செய்யும்போது எங்கள் பாதுகாப்புக்காக சேவகர்களையும், குதிரை வீரர்களையும் அனுப்பும்படி ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் கேட்க வெட்கப்பட்டேன். வழியில் பகைவர்கள் இருந்தனர். நான் வெட்கப்பட்டதற்கும் காரணம் இருந்தது. நாங்கள் ராஜாவிடம், “எங்கள் தேவன் அவரை நம்புகிற ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஆனால் தேவனைவிட்டு விலகுகிறவர்களிடம் அவர் மிக கோபமாக இருப்பார்” என்று சொன்னோம். 23 அதனால் நாங்கள் உபவாசம் இருந்து எங்கள் பயணத்துக்கு உதவும்படி எங்கள் தேவனிடம் ஜெபித்தோம். எங்கள் ஜெபத்திற்கு அவர் பதிலளித்தார்.

24 பிறகு நான் 12 ஆசாரியர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். நான் செரெபியாவையும், அஷபியாவையும், அவர்களது சகோதரர்களில் 10 பேரையும் தேர்ந்தெடுத்தேன். 25 நான் தேவாலயத்திற்குக் கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடைபோட்டு பார்த்தேன். நான் அவற்றை தேர்ந்தெடுத்த அந்த 12 ஆசாரியர்களிடமும் கொடுத்தேன். அர்தசஷ்டா ராஜாவும், அவனது ஆலோசகர்களும், முக்கியமான அதிகாரிகளும், பாபிலோனில் உள்ள இஸ்ரவேலர்களும் தேவனுடைய ஆலயத்திற்காக அவற்றைக் கொடுத்திருந்தார்கள். 26 நான் எல்லாவற்றையும் எடைபோட்டுப் பார்த்தேன். அவற்றில் 25 டன்கள் எடையுள்ள வெள்ளியும், 3 3/4 டன் எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்களும், 3 3/4 டன் எடையுள்ள தங்கமும் இருந்தன. 27 நான் அவர்களுக்கு 20 பொற் கிண்ணங்களைக் கொடுத்தேன். அக்கிண்ணங்கள் 1,000 தங்கக் காசு பெறுமானம் உள்ளதாய் இருந்தது. மேலும் நான் தங்கத்தைப் போன்று மதிப்பும், பளபளப்புமாக மெருகேற்றப்பட்ட வெண்கலத்தாலான இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தேன். 28 பிறகு நான் அந்த 12 ஆசாரியர்களிடமும், “நீங்களும் இந்தப் பொருட்களும் கர்த்தருக்கு பரிசுத்தமானவை. உங்கள் முற்பிதாக்களின் தேவனான கர்த்தருக்கு, ஜனங்கள் இப்பொன்னையும், வெள்ளியையும் கொடுத்தனர். 29 எனவே இவற்றை எச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்களே இதற்கு, இவற்றை எருசலேமில் உள்ள ஆலயத் தலைவர்களுக்குக் கொடுக்கும்வரை பொறுப்பானவர்கள். நீங்கள் இவற்றை லேவியர்களின் தலைவர்களுக்கும், இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அவர்கள் அவற்றை எடைபோட்டு அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலய அறைகளில் பத்திரமாக வைக்கவேண்டும்” என்றேன்.

30 எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் பொன், வெள்ளி மற்றும் எஸ்றாவால் எடைப்போட்டுக் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லப்பட்டனர்.

31 முதல் மாதத்தில் 12வது நாள் நாங்கள் அகாவா ஆற்றைவிட்டு எருசலேமை நோக்கிப் புறப்பட்டோம். தேவன் எங்களோடு இருந்தார். வழியில் பகைவர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் எங்களைக் காப்பாற்றினார். 32 பிறகு நாங்கள் எருசலேம் வந்து சேர்ந்தோம். அங்கு 3 நாட்கள் ஓய்வெடுத்தோம். 33 நான்காவது நாள், ஆலயத்திற்குப் போனோம். பொன், வெள்ளி, மற்றுமுள்ள சிறப்பானப் பொருட்களை எடை போட்டோம். நாங்கள் உரியா ஆசாரியனின் குமாரனான மெரேமோத்திடம் கொடுத்தோம். மெரேமோத்தோடு, பினெகாசின் குமாரனான எலெயாசார் கூட இருந்தான். அவர்களோடு லேவியர்களும், யெசுவாவின் குமாரனான யோசபாத்தும், பின்னுயின் குமாரனான நொவதியாவும் இருந்தார்கள். 34 எல்லாவற்றையும் நாங்கள் எண்ணிக்கையிட்டும் எடையிட்டும் பார்த்தோம். அப்போது இருந்த மொத்த எடையையும் எண்ணிக்கையையும் எழுதி வைத்தோம்.

35 பிறகு சிறையிலிருந்து மீண்ட யூத ஜனங்கள் வந்து இஸ்ரவேலின் தேவனுக்குத் தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் சேர்த்து 12 காளைகள், 96 செம்மறி ஆட்டுக்கடாக்கள், 77 ஆட்டுக்குட்டிகள், 12 ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றைப் பாவப் பரிகாரப் பலியாகச் செலுத்தினர். இவை அனைத்தும் கர்த்தருக்கானத் தகனபலியாகும்.

36 பிறகு அவர்கள் அர்தசஷ்டாவின் கடிதத்தை ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிகளுக்குரிய ஆளுநரிடமும், தலைவர்களிடமும் கொடுத்தனர். பிறகு அந்தத் தலைவர்கள் தங்கள் ஆதரவை இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆலயத்திற்கும் கொடுத்தனர்.

யூதரல்லாதவர்களுடன் செய்த திருமணங்கள்

இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களை மணந்துக்கொண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் சிறப்புக்குரியவர்களாகக் கருதப்படத்தக்கவர்கள். ஆனால் அவர்கள் இப்போது தம்மோடு வாழும் மற்றவர்களோடு கலந்துவிட்டனர். இந்த வகையில் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் ஒரு மோசமான உதாரணமாக இருந்தனர்” என்றனர். நான் இதைப்பற்றி கேள்விப்பட்டதும், நான் கலக்கமடைந்ததைக் காட்ட எனது ஆடைகளையும் சால்வைகளையும் கிழித்துக்கொண்டேன். என் தலையிலும் தாடியிலும் உள்ள முடியைப் பிடுங்கிக்கொண்டேன். அதிர்ச்சியடைந்தும் கலக்கமடைந்தும் நான் உட்கார்ந்துவிட்டேன். பிறகு, தேவனுடைய சட்டங்கள் மீது மரியாதைக் கொண்ட ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். அவர்கள், அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேலர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் அல்ல என்பதை அறிந்ததால் பயந்தார்கள். நான் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தேன். பலிக்கான மாலை நேரம்வரை நான் உட்கார்ந்திருந்தேன். அந்த ஜனங்கள் என்னைச் சுற்றிக் கூடினார்கள்.

பிறகு பலிக்குரிய மாலை நேரம் வந்ததும் நான் எழுந்தேன். அங்கே அமர்ந்திருந்தபொழுது, பார்ப்பதற்கு வெட்கப்படும்படியாக என்னை நானே ஆக்கிக் கொண்டேன். எனது ஆடையும் சால்வையும் கிழிந்திருந்தன. நான் முழங்காலிட்டு, என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக கைகளை விரித்திருந்தேன். பிறகு நான் இந்த ஜெபத்தைச் செய்தேன்.

“எனது தேவனே, உம்மைப் பார்ப்பதற்கு நான் மிகவும் வெட்கமும் குழப்பமும் அடைகிறேன். எங்கள் தலைகளைவிட எங்கள் பாவங்கள் உயரமாகிவிட்டதை அறிந்து வெட்கப்படுகிறேன். எங்கள் குற்றங்கள் பரலோகம்வரை எட்டியது. எங்கள் முற்பிதாக்களின் காலமுதல் இன்றுவரை நாங்கள் பலவகையான பாவங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் பாவம் செய்ததினால் எங்களுடைய ராஜாக்களும் ஆசாரியர்களும் தண்டிக்கப்பட்டனர். வெளிநாட்டு ராஜாக்கள் எங்களைத் தாக்கி, எங்கள் ஜனங்களை இழுத்துச் சென்றனர். எங்களுக்குரிய செல்வங்களையும் எடுத்துக்கொண்டு எங்களை அவமானத்திற்குள்ளாக்கிவிட்டார்கள். இன்றும் கூட அதே நிலைதான் உள்ளது.

“ஆனால் இப்போது, முடிவாக நீர் எங்கள் மீது இரக்கத்துடன் இருக்கிறீர். அடிமைத்தனத்திலிருந்த எங்களில் சிலரை விடுதலை செய்து, இந்தப் பரிசுத்தமான இடத்திற்கு அழைத்து வந்தீர், கர்த்தாவே எங்களுக்குப் புதிய வாழ்வும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் தந்தீர். ஆமாம், நாங்கள் அடிமைகளாய் இருந்தோம். ஆனால் நீர் எங்களை எப்போதும் அடிமைகளாய் இருக்கவிடவில்லை. எங்களோடு நீர் இரக்கமாய் இருக்கிறீர். பெர்சியா ராஜாக்களையும் எங்கள் மீது கருணை காட்டுமாறு செய்தீர். உமது ஆலயம் அழிக்கப்பட்டது. ஆனால் நீர் எங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்தீர். எனவே, நாங்கள் உமது ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட முடிந்தது. தேவனே, யூதாவையும் எருசலேமையும் காப்பாற்ற ஒரு சுவர் கட்ட நீர் உதவிச்செய்தீர்.

10 “இப்போது, தேவனே உமக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மீண்டும் நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திக் கொண்டோம். 11 தேவனே, நீர் உம்முடைய ஊழியக்காரர்களையும், தீர்க்கதரிசிகளையும் பயன்படுத்தி உமது கட்டளைகளைக் கொடுத்தீர். நீர், ‘நீங்கள் வாழப் போகிற நாடு அழிந்துபோன நாடு. அது, அங்குள்ள ஜனங்களின் தீயச் செயல்களால் அழிந்து போனது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஜனங்கள் பாவம் செய்தனர். அவர்கள் இந்தத் தேசத்தைத் தங்கள் பாவங்களால் அசிங்கப்படுத்திவிட்டனர். 12 எனவே, இஸ்ரவேல் ஜனங்களே, அவர்களது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்! அவர்களோடு சேராதீர்கள். அவர்களது பொருட்களை விரும்பாதீர்கள்! எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். எனவே நீங்கள் பலமுள்ளவர்களாகவும், இந்த நாட்டிலுள்ள நல்லவற்றை அனுபவிப்பவர்களாகவும் இருப்பீர்கள். பிறகு இந்த நிலத்தை உமது பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்’ என்று சொன்னீர்.

13 “எங்களுடைய சொந்தத் தவறுகளால்தான் எங்களுக்கு தீமைகள் ஏற்பட்டன. நாங்கள் கெட்டவற்றைச் செய்திருக்கிறோம், எங்களிடம் நிறைய குற்றங்கள் உள்ளன. ஆனால், எங்கள் தேவனாகிய நீர் எங்களுக்குரிய தண்டனைகளைவிடக் குறைவாகவே தண்டித்தீர். நாங்கள் பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறோம். நாங்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நீர் எங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டிருக்கின்றீர். 14 எனவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளை மீறக்கூடாது என்று தெரிந்துக்கொண்டோம். அவர்களை நாங்கள் மணந்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் தீய பாவங்களை செய்தனர். தேவனே, நாங்கள் அவர்களைத் தொடர்ந்து மணந்துக்கொண்டிருந்தால், எங்களை நீர் முழுவதும் அழித்துவிடுவீர் என்பதை அறிவோம்! பிறகு, இஸ்ரவேலர் எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள்.

15 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நல்லவர்! நீர் இன்னும் எங்களில் சிலரை வாழ விட்டிருக்கிறீர். ஆமாம், நாங்கள் குற்றவாளிகளே! எங்கள் குற்றமனப்பான்மையால் எங்களில் ஒருவரும் உமது முன்னிலையில் நிற்க அனுமதிக்கப்படக்கூடாது.”

ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளுதல்

10 எஸ்றா ஜெபம் செய்து அறிக்கையிட்டான். அழுதுக்கொண்டே அவன் தேவனுடைய ஆலயத்திற்கு முன்பு விழுந்தான். எஸ்றா இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களில் ஆண், பெண், குழந்தைகள் என ஒரு பெரிய கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டது. அவர்களும் அவரோடு சேர்ந்து மிகப் பலமாக அழுதார்கள். அப்போது ஏலாமின் சந்ததியில் ஒருவனான, யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவிடம் பேசினான். செக்கனியா, “நான் நமது தேவனிடம் உண்மையாக இருக்கவில்லை. நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் மணந்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் இதைச் செய்திருந்தாலும், இஸ்ரவேலுக்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது. இப்போது நாம் தேவனுக்கு முன்னால் ஒரு உடன்படிக்கை செய்துக்கொள்வோம். அதன்படி அப்படிப்பட்ட நமது பெண்களையும் குழந்தைகளையும் அகற்றிவிடுவோம். எஸ்றா மற்றும் நமது தேவனுடைய சட்டங்களை மதிக்கும் ஜனங்களின் அறிவுரையைப் பின்பற்றுவதற்காக நாம் அதைச் செய்வோம். நாம் தேவனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவோம். எஸ்றா, எழுந்திரும், இது உங்கள் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களை ஆதரிப்போம். எனவே தைரியமாக செயல்படும்” என்றான்.

எனவே எஸ்றா எழுந்தான். தலைமை ஆசாரியர்களையும், லேவியர்களையும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தன் சொல்லுக்குக் கட்டுப்படும்படி வாக்குறுதி பண்ணச்செய்தான். பிறகு, எஸ்றா தேவனுடைய ஆலயத்தில் இருந்து வெளியேப் போனான். எலியாசிபின் குமாரனான யோகனானின் அறைக்குப் போனான். அங்கே, அவன் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட ஜனங்களுக்காக உணவு உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தான். காரணம் அவன் இன்னும் சோகமாக இருந்தான். எருசலேமிற்குத் திரும்பி வந்த ஜனங்களைப் பற்றி மிகவும் சோகமாயிருந்தான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பினான். அச்செய்தி, அடிமைத்தனத்திலிருந்து மீண்டு எருசலேமிற்கு வந்த இஸ்ரவேலர்கள் அனைவரையும் எருசலேமில் கூடும்படிச் சொன்னது. மூன்று நாட்களுக்குள் எந்த இஸ்ரவேலனும் எருசலேமிற்கு வராவிட்டால், தம் சொத்துக்களை இழக்க வேண்டியதிருக்கும். இந்த முடிவை முக்கிய அதிகாரிகளும், மூப்பர்களும் எடுத்தனர். கூட்டத்திற்கு வராதவர்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக இல்லாமல் போவார்கள்.

எனவே, எருசலேமில் மூன்று நாட்களுக்குள், யூதா மற்றும் பென்யமீனில் உள்ள அனைவரும் வந்து கூடினார்கள். 9வது மாதத்தின் 20வது நாளில் ஆலய பிரகாரத்தில் அனைவரும் கூடினார்கள். இக்கூட்டத்தாலும் அப்போது பெய்த பெரு மழையால் ஜனங்கள் மிகவும் கலக்கமடைந்தார்கள். 10 பிறகு ஆசாரியனான எஸ்றா எழுந்து ஜனங்களிடம் பேசினான். “நீங்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டீர்கள். இதைச் செய்ததன் மூலம் இஸ்ரவேலர்களை மேலும் குற்றவாளிகளாக்கிவிட்டீர்கள். 11 இப்போது, நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை கர்த்தரிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் தேவன். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்தும், உங்கள் அயல்நாட்டு மனைவியரிடம் இருந்தும் தனித்திருங்கள்” என்றான்.

12 பிறகு அங்கு கூடியுள்ள கூட்டம் முழுவதும் எஸ்றாவிற்குப் பதில் சொன்னது. அவர்கள் உரத்த குரலில், “எஸ்றா, நீர் சொல்வது சரி! நீர் சொல்லும் காரியங்களை நாங்கள் செய்யவேண்டும். 13 ஆனால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். இது மழை காலமாகவும் இருக்கிறது. எனவே எங்களால் வெளியே தங்கமுடியாது. நாங்கள் மிக மோசமான பாவங்களைச் செய்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்சினையை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீர்க்க முடியாது. 14 இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர்.

15 மிகச் சிலரே இந்தத் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். அவர்கள் ஆசகேலின் குமாரனான யோனத்தானும், திக்வாவின் குமாரனான யக்சியாவும் ஆவார்கள். லேவியர்களில் மெகல்லாவும், சப்பேதாவும் இதற்கு எதிராக இருந்தனர்.

16 எனவே எருசலேமிற்குத் திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஆசாரியனாகிய எஸ்றா, குடும்பத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவன் ஒவ்வொரு கோத்திரங்களிலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேரால் அழைக்கப்பட்டனர். பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அவர்கள் கூடியமர்ந்து, ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்தனர். 17 அடுத்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில், அவர்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டவர்களைப் பற்றி விசாரித்து முடித்தனர்.

அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்களின் பட்டியல்

18 அயல்நாட்டுப் பெண்களை மணந்துக் கொண்ட ஆசாரியர் சந்ததியினரின் பெயர்கள்:

யோசதாக்கின் குமாரனாகிய யெசுவா என்பவனின் சந்ததியிலும் யெசுவாவின் சகோதரர்களும்; மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா ஆகியோர். 19 இவர்கள் அனைவரும் தம் மனைவியரை விவாகரத்து செய்வதாக வாக்களித்தனர். தங்கள் ஒவ்வொருவரும் மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தார்கள். தங்கள் குற்ற மனப்பான்மையால் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

20 இம்மேர் என்பவனின் சந்ததியில், அனானியும் செபதியாவும்.

21 ஆரீம் என்பவனின் சந்ததியில், மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா ஆகியோர்.

22 பஸ்கூர் என்பவனின் சந்ததியில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா ஆகியோர்.

23 லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா (இவனுக்கு கெலாயா என்ற பேருமுண்டு), பெத்தகீயா, யூதா, எலியேசர் ஆகியோர்

அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.

24 பாடகரில் எலியாசிபும்,

வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி ஆகியோர்

அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.

25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே கீழ்க்கண்டவர்கள் அனைவரும் அயல்தேசப் பெண்களை மணந்துக் கொண்டவர்கள்.

பாரோஷின் சந்ததியில்: ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா ஆகியோர்.

26 ஏலாமின் சந்ததியில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா ஆகியோர்.

27 சத்தூவின் சந்ததியில்: எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா ஆகியோர்.

28 பெபாய் என்பவனின் சந்ததியில்: யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி ஆகியோர்.

29 பானி என்பவனின் சந்ததியில்: மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் ஆகியோர்.

30 பாகாத்மோவாப் என்பவனின் சந்ததியில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே ஆகியோர்.

31 ஆரீம் என்பவனின் சந்ததியில்: எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன். 32 பென்யமீன், மல்லூக், செமரியா ஆகியோர்.

33 ஆசும் என்பவனின் சந்ததியில்: மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி ஆகியோர்.

34 பானி என்பவனின் சந்ததியில்: மாதாயி, அம்ராம், ஊவேல், 35 பெனாயா, பெதியா, கெல்லூ, 36 வனியா, மெரெமோத், எலெயாசீப், 37 மத்தனியா, மதனாய், யாசாய்,

38 பானிபின்னூயி என்பவனின் சந்ததியில்: சிமெயி, 39 செலேமியா, நாத்தான், அதாயா, 40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, 41 அசரெயேல், செலேமியா, செமரியா, 42 சல்லூம், அமரியா, யோசேப் ஆகியோர்.

43 நேபோ என்பவனின் சந்ததியில்: ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.

44 இவர்கள் அனைவரும் அயல்நாட்டுப் பெண்களை மணந்திருந்தனர். சிலருக்கு அவர்களோடு குழந்தைகளும் இருந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center