Beginning
யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான்
19 ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் ராஜா அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள். 2 அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “ராஜா தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.
3 ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். 4 ராஜா முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது குமாரன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
5 ராஜாவின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் ராஜாவைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் குமாரர்கள், குமாரத்திகள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள். 6 உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது! 7 இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான்.
8 அப்போது ராஜா நகரவாயிலுக்குச் சென்றான். ராஜா வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் ராஜாவைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.
தாவீது மீண்டும் ராஜாவாகுதல்
9 எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த ஜனங்களும் விவாதிக்கக் தொடங்கினார்கள். அவர்கள், “பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவரிடமிருந்தும் தாவீது ராஜா நம்மைக் காப்பாற்றினார். தாவீது, அப்சலோமிடமிருந்து ஓடிப்போனார். 10 நம்மை ஆள்வதற்கு அப்சலோமைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் அவன் போரில் மரித்துப் போனான். நாம் தாவீதை மீண்டும் ராஜாவாக்க வேண்டும்” என்றார்கள்.
11 தாவீது ராஜா ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் செய்தியனுப்பினர். தாவீது, “யூதாவின் தலைவர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் கூறுங்கள், ‘தாவீதை தன் வீட்டிற்கு அழைத்து வரும் கடைசி கோத்திரமாக நீங்கள் இருப்பதேன்? பாருங்கள், இஸ்ரவேலர் எல்லோரும் ராஜாவை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 12 நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் ராஜாவை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள். 13 அமாசாவிடம், ‘நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியினர். யோவாபின் இடத்தில் உங்களைப் படை தலைவன் ஆக்காவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
14 தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் ராஜாவுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், “நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்” என்றனர்.
15 பின்பு தாவீது ராஜா யோர்தான் நதிக்கு வந்தான். யூதா ஜனங்கள் ராஜாவைக் காண கில்காலுக்கு வந்தனர். ராஜாவை யோர்தான் நதியைத் தாண்டி அழைத்துச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்தனர்.
சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்
16 கேராவின் குமாரனாகிய சீமேயி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் பகூரிமில் வாழ்ந்தான். தாவீது ராஜாவைச் சந்திப்பதற்குச் சீமேயி விரைந்தான். யூதாவின் ஜனங்களோடு சீமேயி வந்தான். 17 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆட்களும் சீமேயியோடு வந்தனர். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சீபா என்னும் பணியாளும் வந்தான். சீபா தன் 15 குமாரர்களையும் 20 பணியாட்களையும் தன்னோடு அழைத்து வந்தான். தாவீது ராஜாவைச் சந்திப்பதற்கு இவர்கள் எல்லோரும் யோர்தான் நதிக்கு விரைந்தனர்.
18 ராஜாவின் குடும்பத்தை மீண்டும் யூதாவுக்கு அழைத்து வருவதில் உதவுவதற்காக ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். ராஜா விரும்பியவாறே ஜனங்கள் செயல்பட்டனர். ராஜா நதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, கேராவின் குமாரனாகிய சீமேயி அவனைச் சந்திப்பதற்கு வந்தான். ராஜாவுக்கு முன் சீமேயி தரையில் விழுந்து வணங்கினான். 19 சீமேயி ராஜாவிடம், “என் ஆண்டவனே, நான் செய்த தவறுகளை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனது ராஜாவாகிய ஆண்டவனே, நீர் எருசலேமை விட்டுப் போனபோது நான் செய்த தீய காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள். 20 நான் பாவம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். யோசேப்பின் குடும்பத்திலிருந்து வந்து உங்களைச் சந்திக்கிற முதல் மனிதன் நான், எனது ஆண்டவனாகிய ராஜாவே” என்றான்.
21 ஆனால் செருயாவின் குமாரனாகிய அபிசாய், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்” என்றான்.
22 தாவீது, “செருயாவின் குமாரர்களே, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இன்று நீங்கள் என் எதிராளி. ஆனால் இஸ்ரவேலில் ஒருவனும் இன்று கொல்லப்படமாட்டான். இஸ்ரவேலுக்கு நான் ராஜா என்பது இன்று எனக்குத் தெரியும்” என்றான். 23 பிறகு ராஜா சீமேயியை நோக்கி, “நீ மரிக்கமாட்டாய்” என்றான். ராஜா சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான்.[a]
மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான்
24 தாவீது ராஜாவைக் காண சவுலின் பேரனாகிய மேவிபோசேத் வந்தான். மேவிபோசேத் ராஜா எருசலேமிலிருந்து போனதிலிருந்து அமைதியோடு திரும்பி வரும் வரைக்கும் அவனது கால்களைச் சுத்தம் பண்ணவில்லை. தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. அவனது ஆடைகளை வெளுக்கவுமில்லை. 25 மேவிபோசேத் எருசலேமிலிருந்து ராஜாவைச் சந்திக்க வந்தான். ராஜா மேவிபோசேத்தை நோக்கி, “மேவிபோசேத், நான் எருசலேமிலிருந்து ஓடிப் போனபோது நீ ஏன் என்னோடு வரவில்லை?” என்று கேட்டான்.
26 மேவிபோசேத் பதிலாக, “எனது ராஜாவாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம், ‘நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி ராஜாவோடு போவேன்’ என்றேன். 27 ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது ராஜாவாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள். 28 எனது பாட்டனாரின் குடும்பத்தார் எல்லோரையும் நீங்கள் கொன்றிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. உங்கள் மேசையில் உண்கிறவர்களோடு என்னையும் வைத்தீர்கள். எனவே எதைக் குறித்தும் ராஜாவோடு முறையிட எனக்கு உரிமையில்லை” என்றான்.
29 ராஜா மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.
30 மேவிபோசேத் ராஜாவிடம், “நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது ராஜாவாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்” என்றான்.
பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான்
31 கீலேயாத்தின் பர்சிலா ரோகிலிமிலிருந்து வந்தான். தாவீது ராஜாவோடு அவன் யோர்தான் நதிக்கு வந்தான். நதியைக் கடந்து ராஜாவை அழைத்துச் செல்வதற்காக அவன் ராஜாவோடு போனான். 32 பர்சிலா மிகவும் வயது முதிர்ந்தவன். அவனுக்கு 80 வயது. மக்னாயீமில் தாவீது தங்கியிருந்தபோது அவனுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்தான். அவன் செல்வந்தனாக இருந்தபடியால் அவனால் இதைச் செய்யமுடிந்தது. 33 தாவீது பர்சிலாவிடம், “என்னோடு நதியைக் கடந்துவா. என்னோடு எருசலேமில் நீ வாழ்ந்தால் நான் உன்னைப் பராமரிப்பேன்” என்றான்.
34 ஆனால் பர்சிலா ராஜாவிடம், “நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா? 35 எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்? 36 உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன். 37 ஆனால் நான் திருப்பிப் போக அனுமதியுங்கள். அப்போது நான் எனது நகரத்தில் மரித்து எனது தந்தை, தாய் ஆகியோரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவேன். கிம்காம் உங்களுக்குப் பணியாளாயிருப்பான். எனது ராஜாவாகிய ஆண்டவனே, அவன் உங்களோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனை நடத்தும்” என்றான்.
38 ராஜா பதிலாக, “கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.
தாவீது வீட்டிற்குப் போகிறான்
39 ராஜா பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். ராஜாவும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.
40 ராஜா யோர்தான் நதியைத் தாண்டி, கில்காலுக்குப் போனான். கிம்காம் அவனோடு சென்றான். யூதா ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலில் பாதிப் பகுதியினரும் தாவீதை நதியைத் தாண்டி அழைத்துச் சென்றனர்.
யூதா மக்களோடு இஸ்ரவேலர் வாதாடுகின்றனர்
41 இஸ்ரவேலர் எல்லோரும் ராஜாவிடம் வந்தனர். அவர்கள் ராஜாவைப் பார்த்து, “ஏன் எங்கள் சகோதரராகிய யூதா ஜனங்கள் உங்களைத் திருடிச் சென்று, இப்போது உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆட்களோடு யோர்தான் ஆற்றைத் தாண்டி அழைத்து வந்திருக்கின்றனர்!” என்றார்கள்.
42 யூதாவின் ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலருக்குப் பதிலாக, “ஏனெனில் ராஜா எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதே அதன் காரணம். இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் ராஜாவின் செலவில் சாப்பிடவில்லை. ராஜா எங்களுக்கு எந்தப் பரிசும் தரவில்லை” என்றார்கள்.
43 இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள்.
ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.
தாவீதுக்கு எதிராக இஸ்ரவேலரை சேபா வழிநடத்துகிறான்
20 பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் மனிதன் அந்த இடத்தில் இருந்தான். சேபா எல்லோருக்கும் தொல்லை விளைவிக்கும் பயனற்ற மனிதன். சேபா பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஜனங்களைக் கூட்டுவதற்காக அவன் ஒரு எக்காளம் ஊதினான். பின்பு அவன்,
“நமக்கு தாவீதிடம் பங்கெதுவும் இல்லை.
ஈசாயின் மகனிடத்தில் நமக்கு எந்தப் பாகமும் இல்லை.
இஸ்ரவேலே, நாம் நமது கூடாரங்களுக்குத் திரும்புவோம்” என்றான்.
2 எனவே இஸ்ரவேலர் எல்லோரும் தாவீதை விட்டு பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா ஜனங்கள் யோர்தான் ஆற்றிலிருந்து எருசலேம்வரைக்கும் வருகிற வழியில் எல்லாம் அவர்களுடைய ராஜாவோடு தங்கியிருந்தனர்.
3 தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சென்றான். தாவீது தன் 10 மனைவியரை வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் சென்றிருந்தான். தாவீது அவர்களை ஒரு தனித்த வீட்டில் வைத்தான்.
அந்த வீட்டைச் சுற்றிலும் காவலாளரை நியமித்தான். அவர்கள் மரிக்கும்வரைக்கும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். தாவீது அப்பெண்களைப் பராமரித்து அவர்களுக்கு உணவளித்தான். ஆனால் அவர்களோடு பாலின உறவுக்கொள்ளவில்லை. அவர்கள் மரிக்கும்வரைக்கும் விதவைகளைப்போல் வாழ்ந்தார்கள்.
4 ராஜா அமாசாவை நோக்கி, “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா ஜனங்கள் என்னை வந்து சந்திக்க வேண்டுமென அவர்களுக்குக் கூறு, நீயும் இங்கிருக்க வேண்டும்” என்றான்.
5 உடனே யூதா ஜனங்களை அழைத்து வருவதற்காக அமாசா சென்றான். ஆனால் ராஜா கொடுத்த கால அவகாசத்தைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொண்டான்.
சேபாவைக் கொல்லும்படி அபிசாயிடம் தாவீது கூறுகிறான்
6 தாவீது அபிசாயிடம், “பிக்கிரியின் குமாரனாகிய சேபா அப்சலோமைக் காட்டிலும் அதிகம் ஆபத்தானவன். எனவே என் அதிகாரிகளை அழைத்துச் சென்று சேபாவைத் துரத்து, மதிலுள்ள நகரங்களுக்குள் அவன் நுழையும்முன் விரைந்து செல். பாதுகாப்பான நகரங்களுக்குள் சேபா சென்றுவிட்டால் பிறகு அவனைப் பிடிக்க முடியாது” என்றான்.
7 எனவே யோவாப் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் துரத்துவதற்காக எருசலேமை விட்டுச் சென்றான். கிரேத்தியர் பிலேத்தியர் மற்ற வீரர்கள் ஆகியோரோடுகூட யோவாப் தன் ஆட்களையும் அழைத்துக் கொண்டான்.
யோவாப் அமாசாவைக் கொல்கிறான்
8 கிபியோனிலுள்ள பெரும்பாறை அருகே யோவாபும் அவனது படையும் வந்தபோது, அவர்களை சந்திப்பதற்கு அமாசா அங்கு வந்தான். யோவாப் சீருடை அணிந்திருந்தான். யோவாப் கட்டியிருந்த கச்சைக்குள் உறையில் தன் வாளை வைத்திருந்தான். யோவாப் அமாசாவை சந்திக்க நடந்து சென்றபோது யோவாபின் வாள் உறையிலிருந்து வெளியே விழுந்தது. யோவாப் வாளை எடுத்துக் கையில் ஏந்தியிருந்தான். 9 யோவாப் அமாசாவை நோக்கி, “சகோதரனே, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.
பின்பு யோவாப் தனது வலது கையை நீட்டி அமாசாவின் தாடியைப் பிடித்து முத்தமிடுவதுபோல் இழுத்தான். 10 யோவாபின் இடது கையிலிருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. ஆனால் உடனே யோவாப் தன் வாளால் அமாசாவை வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் நிலத்தில் சரிந்தது. யோவாப் மீண்டும் அமாசாவைக் குத்த வேண்டியிருக்கவில்லை. அவன் மரித்துப் போயிருந்தான்.
தாவீதின் ஆட்கள் சேபாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்
பின்பு யோவாபும், அவனது சசோதரன் அபிசாயியும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் துரத்தத் தொடங்கினர். 11 யோவாபின் இளம் வீரர்களில் ஒருவன் அமாசாவின் உடல் அருகே நின்றான். இந்த இளம் வீரன், “யோவாபையும் தாவீதையும் ஆதரிக்கின்ற வீரர்களே, நாம் யோவாபைப் பின் தொடர்வோம்” என்றான். 12 பாதையின் நடுவே அமாசாவின் உடல் அவனது குருதியினூடே கிடந்தது. எல்லா ஜனங்களும் அதைப் பார்ப்பதற்கு நின்றதை அந்த இளம் வீரன் கவனித்தான். எனவே அவன் அந்த உடலைப் பாதையிலிருந்து வயலுக்குள் புரட்டித் தள்ளினான். பின் உடலை ஒரு துணியால் மூடினான். 13 அமாசாவின் உடல் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, ஜனங்கள் அதைத் தாண்டிச்சென்று யோவாபைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் யோவாபோடு சேர்ந்து பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் துரத்தினார்கள்.
ஆபேல் பெத்மாக்காவிற்கு சேபா தப்பிக்கிறான்
14 ஆபேல் பெத்மாக்காவை அடையும்வரை வழியில் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களையும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா கடந்து சென்றான். பேரீமின் ஜனங்களும் சேபாவைப் பின்தொடர்ந்து சென்றனர்.
15 யோவாபும் அவனது ஆட்களும் ஆபேல் பெத்மாக்காவிற்கு வந்தனர். யோவாபின் படை நகரத்தைச் சூழ்ந்தது. நகரத்து மதிலின் மேல் அவர்கள் புழுதி வீசினார்கள். அவர்கள் மதிலில் ஏறுவதற்கு வசதியாக இதைச் செய்தார்கள். யோவாபின் மனிதர் மதில் கீழே விழும்படியாக மதிலின் கற்களை உடைக்க ஆரம்பித்தார்கள்.
16 ஆனால் அந்நகரத்தில் ஒரு புத்திசாலியானப் பெண் இருந்தாள். அவள், “நான் சொல்வதைக் கேளுங்கள்! யோவாபை இங்கு வரும்படி கூறுங்கள். நான் அவனோடு பேசவேண்டும்” என்றாள்.
17 யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள்.
யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான்.
அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள்.
யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான்.
18 அப்போது அப்பெண்மணி, “முன்பு ஜனங்கள் ‘ஆபேலில் யாரேனும் உதவி வேண்டினால் தேவையானது கிடைக்கும்’ என்று சொல்லிக்கொள்வார்கள். 19 நான் இவ்வூரின் சமாதானமான, உண்மையான ஜனங்களுள் ஒருத்தி. இஸ்ரவேலின் ஒரு முக்கிய நகரத்தை நீ அழிக்கப்போகிறாய். கர்த்தருக்குச் சொந்தமான ஒன்றை நீ ஏன் அழிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.
20 யோவாப் பதிலாக, “நான் எதையும் அழிக்க விரும்பவில்லை! உங்கள் ஊரை அழிக்க, நான் விரும்பமாட்டேன். 21 ஆனால் மலைநாடாகிய எப்பிராயீமைச் சார்ந்த ஒரு மனிதன் உங்கள் நகரில் இருக்கிறான். அவன் பிக்கிரியின் குமாரன் சேபா. அவன் தாவீது ராஜாவை எதிர்க்கிறான். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் நகரை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றான்.
அப்பெண் யோவாபிடம், “சரி அவனது தலை மதிலின் மேலாக உங்களிடம் வீசப்படும்” என்றாள்.
22 அந்நகரின் ஜனங்களிடம் அப்பெண் மிகவும் புத்திசாதுரியத்தோடு பேசினாள். பிக்கிரியின் குமாரனாகிய சேபாவின் தலையை ஜனங்கள் வெட்டினார்கள். சேபாவின் தலையை மதிலுக்கு மேலாக யோவாபுக்கு அந்த ஜனங்கள் வீசினார்கள்.
ஆகையால் யோவாப் எக்காளம் ஊதினான். படை நகரைவிட்டு நீங்கிச் சென்றது. ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். யோவாப் எருசலேமில் ராஜாவிடம் சென்றான்.
தாவீதின் ஆளுகையின் கீழ் மக்கள்
23 இஸ்ரவேல் படைக்கு யோவாப் தலைவனாக இருந்தான். கிரேத்தியரையும் பிலேத்தியரையும் யோய்தாவின் குமாரன் பெனாயா வழி நடத்தினான். 24 அதோனிராம் கடும் உழைப்பாளிகளுக்குத் தலைவனானான். அகிலூதின் குமாரன் யோசபாத் வரலாற்றாசிரியனாக இருந்தான். 25 சேவா செயலாளரானான். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாக இருந்தார்கள். 26 யயீரியனாகிய ஈரா தாவீதுக்குப் பிரதானியாக[b] இருந்தான்.
சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது
21 தாவீது ராஜாவாக இருந்தபோது ஒரு பஞ்சம் வந்தது. இம்முறை பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்தது. தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தரும் அவனுக்குப் பதில் தந்தார். கர்த்தர், “சவுலும் கொலைக்காரரான அவனது குடும்பத்தாரும் இப்பஞ்சத்திற்குக் காரணமானார்கள். இப்பஞ்சம் சவுல் கிபியோனியரைக் கொன்றதால் வந்ததாகும்” என்றார். 2 (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.)
ராஜாவாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான். 3 தாவீது கிபியோனியரிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இஸ்ரவேலின் பாவத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே நீர் கர்த்தருடைய ஜனங்களை ஆசிர்வதிக்கலாம்” என்றான்.
4 கிபியோனியர் தாவீதிடம், “தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது” என்றனர்.
தாவீது, “அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
5 அதற்கு கிபியோனியர் ராஜா தாவீதிடம், “எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான். 6 சவுலின் ஏழு குமாரர்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் குமாரர்களைத் தூக்கில் இடுவோம்” என்றார்கள்.
ராஜாவாகிய தாவீது, “நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்” என்றான். 7 ஆனால் ராஜா யோனத்தானின் குமாரனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் குமாரன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான்.[c] ஆகையால் ராஜா மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான். 8 சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும்[d] ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் குமாரத்தி இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் குமாரன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து குமாரர்களைத் தாவீது அழைத்தான். 9 இவ்வாறு தாவீது ஏழுபேரைக் கிபியோனியருக்குக் கொடுத்தான். கிபியோனியர் கர்த்தருக்கு முன்பாக அவர்களை கிபியா மலையில் தூக்கிலிட்டனர். ஏழு பேரும் ஒரே சமயத்தில் மடிந்தனர். அறுவடையின் ஆரம்ப நாட்களில் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர். இது வசந்தக் காலத்தில் பார்லி அறுப்புக்கு முன் நடந்தது.
தாவீதும் ரிஸ்பாவும்
10 ஆயாவின் குமாரத்தியான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.
11 ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள். 12 பின்பு தாவீது யாபேஸ் கீலேயாத்திலுள்ள ஜனங்களிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை எடுத்தனர். (கிலேயாத்திலுள்ள யாபேசின் ஆட்கள் கில்போவாவில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு இந்த எலும்புகளை எடுத்தார்கள். பெலிஸ்தர்கள் சவுல், மற்றும் யோனத்தானின் உடல்களை பெத்சானிலுள்ள ஒரு சுவரில் தொங்கவிட்டனர். ஆனால் யாபேஸ் கீலேயாத்தின் ஆட்கள் அங்குச்சென்று பொது இடத்திலிருந்து உடல்களைத் திருடினார்கள்.)
13 தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர். 14 அவர்கள் பென்யமீன் பகுதியில் சவுல் மற்றும் யோனத்தானின் எலும்பைப் புதைத்தனர். அவர்கள் சவுலின் தந்தையாகிய கீசின் கல்லறையில் அவர்களைப் புதைத்தனர். ராஜா சொன்னபடி ஜனங்கள் செய்தனர். ஆகையால் தேவன் அந்த ஜனங்களின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டார்.
பெலிஸ்தரோடு போர்
15 பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். 16 இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 7 1/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான். 17 ஆனால் செருயாவின் குமாரனாகிய அபிசாய் பெலிஸ்தனைக் கொன்று தாவீதைக் காப்பாற்றினான்.
பின்பு தாவீதின் ஆட்கள் தாவீதிற்கு சிறப்பான ஒரு வாக்குறுதி அளித்தனர். அவர்கள் தாவீதிடம், “இனி நீங்கள் எங்களோடு சேர்ந்து போருக்கு வர வேண்டாம். அவ்வாறு வந்தால் இஸ்ரவேல் தனது சிறந்த தலைவரை இழக்கக்கூடும்” என்றனர்.
18 பின்பு கோப் என்னுமிடத்தில் பெலிஸ்தரோடு மற்றொரு போர் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இன்னொரு இராட்சதனான (ரஃபா குடும்பத்தவனான) சாப் என்பவனைக் கொன்றான்.
19 மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின் குமாரனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.
20 மற்றொரு போர் காத் என்னுமிடத்தில் நடந்தது. அங்கு மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும், ஒவ்வொரு பாதத்திலும் ஆறு விரல்களும் காணப்பட்டன. இவ்வாறு அவனுக்கு மொத்தம் 24 விரல்கள் இருந்தன. இவனும் ரஃபா (இராட்சதக்) குடும்பத்தைச் சார்ந்தவன். 21 அவன் இஸ்ரவேலை சவாலுக்கு அழைத்தான். இஸ்ரவேலரை பார்த்து நகைத்தான். ஆனால் யோனத்தான் அவனைக் கொன்றான். (யோனத்தான் தாவீதின் சகோதரனான சீமேயின் குமாரன்.)
22 இவ்வாறு மரித்த நான்கு பேரும் காத் ஊரைச் சார்ந்த ரஃபாவின் ஜனங்களாவார்கள். அவர்கள் தாவீதினாலும் அவனது ஆட்களாலும் கொல்லப்பட்டார்கள்.
2008 by World Bible Translation Center