Beginning
இயேசுவின் பிறப்பு
(மத்தேயு 1:18-25)
2 அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது. 2 அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது. 3 எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள்.
4 கலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான். 5 மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.) 6 யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது. 7 அவள் தன் முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள்.
மேய்ப்பர்களின் வருகை
8 அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். 9 தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர். 10 தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 11 தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர். 12 ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான்.
13 அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும்,
14 “பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்”
என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள்.
15 தூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர்.
16 எனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது. 17 மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள். 18 மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 19 மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 20 தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர்.
21 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும்.
தேவாலயத்தில் இயேசு
22 குழந்தை பெற்ற பெண் சுத்தமாகும்[a] பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். 23 தேவனுடைய பிரமாணத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வீட்டின் முதற்பேறான குமாரன் பிறந்ததும் அவன், ‘தேவனுக்கு விசேஷமானவனாகக் கருதப்படுவான்.’”[b] 24 “இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்”(A) என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர்.
சிமியோன் இயேசுவைக் காணல்
25 எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார். 26 கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார். 27 ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். 28 சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு,
29 “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.
30 நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன்.
31 நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர்.
32 யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர்.
உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்”
என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான்.
33 இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர். 34 சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார். 35 இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.
அன்னாள் இயேசுவைக் காணல்
36 தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள். 37 பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.
38 தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.
யோசேப்பும் மரியாளும் வீடு திரும்பல்
39 தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர். 40 சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது.
சிறுவனாக இயேசு
41 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர். 42 வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர். 43 பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். 44 யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர். 45 ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர்.
46 மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார். 47 எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர். 48 இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள்.
49 இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார். 50 அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
51 இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். 52 இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.
யோவானின் போதனை
(மத்தேயு 3:1-12; மாற்கு 1:1-8; யோவான் 1:19-28)
3 அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது;
பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான்.
ஏரோது கலிலேயாவை ஆண்டான்.
ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும்
திராகொனித்தி நாட்டையும் ஆண்டான்.
2 அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். 3 யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். 4 இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது:
“வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்:
‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள்.
அவருக்குப் பாதையை நேராக்குங்கள்.
5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்.
ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும்.
திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும்.
கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்.
6 ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’”(B)
7 யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? 8 உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.
10 மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.
11 அவர்களுக்கு யோவான், “உங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடைகூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிலுரைத்தான்.
12 வரி வசூலிப்போரும்கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
13 அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.
14 வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.
அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.
15 எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், “இவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்” என்று எண்ணினர்.
16 அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 தானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,” என்று பதில் கூறினான். 18 யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.
யோவானுக்கு ஏற்பட்ட உபத்திரவம்
19 ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். 20 எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.
இயேசு ஞானஸ்நானம் பெறுதல்
(மத்தேயு 3:13-17; மாற்கு 1:9-11)
21 யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22 பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
யோசேப்பின் குடும்ப வரலாறு
(மத்தேயு 1:1-17)
23 இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் குமாரன் என்றே எண்ணினர்.
யோசேப்பு ஏலியின் குமாரன்.
24 ஏலி மாத்தாத்தின் குமாரன்.
மாத்தாத் லேவியின் குமாரன்.
லேவி மெல்கியின் குமாரன்.
மெல்கி யன்னாவின் குமாரன்.
யன்னா யோசேப்பின் குமாரன்.
25 யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்.
மத்தத்தியா ஆமோஸின் குமாரன்.
ஆமோஸ் நாகூமின் குமாரன்.
நாகூம் எஸ்லியின் குமாரன்.
எஸ்லி நங்காயின் குமாரன்
26 நங்காய் மாகாத்தின் குமாரன்.
மாகாத் மத்தத்தியாவின் குமாரன்.
மத்தத்தியா சேமேயின் குமாரன்.
சேமேய் யோசேப்பின் குமாரன்.
யோசேப்பு யூதாவின் குமாரன்.
27 யூதா யோவன்னாவின் குமாரன்.
யோவன்னா ரேசாவின் குமாரன்.
ரேசா செரூபாபேலின் குமாரன்.
செரூபாபேல் சலாத்தியேலின் குமாரன்.
சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28 நேரி மெல்கியின் குமாரன்.
மெல்கி அத்தியின் குமாரன்.
அத்தி கோசாமின் குமாரன்.
கோசாம் எல்மோதாமின் குமாரன்.
எல்மோதாம் ஏரின் குமாரன்.
29 ஏர் யோசேயின் குமாரன்.
யோசே எலியேசரின் குமாரன்.
எலியேசர் யோரீமின் குமாரன்.
யோரீம் மாத்தாத்தின் குமாரன்.
மாத்தாத் லேவியின் குமாரன்.
30 லேவி சிமியோனின் குமாரன்.
சிமியோன் யூதாவின் குமாரன்.
யூதா யோசேப்பின் குமாரன்.
யோசேப்பு யோனானின் குமாரன்.
யோனான் எலியாக்கீமின் குமாரன்.
31 எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்.
மெலெயா மயினானின் குமாரன்.
மயினான் மத்தாத்தாவின் குமாரன்.
மத்தாத்தா நாத்தானின் குமாரன்.
நாத்தான் தாவீதின் குமாரன்.
32 தாவீது ஈசாயின் குமாரன்.
ஈசாய் ஓபேதின் குமாரன்.
ஓபேத் போவாசின் குமாரன்.
போவாஸ் சல்மோனின் குமாரன்.
சல்மோன் நகசோனின் குமாரன்.
33 நகசோன் அம்மினதாபின் குமாரன்.
அம்மினதாப் ஆராமின் குமாரன்.
ஆராம் எஸ்ரோமின் குமாரன்.
எஸ்ரோம் பாரேசின் குமாரன்.
பாரேஸ் யூதாவின் குமாரன்.
34 யூதா யாக்கோபின் குமாரன்.
யாக்கோபு ஈசாக்கின் குமாரன்.
ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்.
ஆபிரகாம் தேராவின் குமாரன்.
தேரா நாகோரின் குமாரன்.
35 நாகோர் சேரூக்கின் குமாரன்.
சேரூக் ரெகூவின் குமாரன்.
ரெகூ பேலேக்கின் குமாரன்.
பேலேக் ஏபேரின் குமாரன்.
ஏபேர் சாலாவின் குமாரன்.
36 சாலா காயினானின் குமாரன்.
காயினான் அர்பக்சாத்தின் குமாரன்.
அர்பக்சாத் சேமின் குமாரன்.
சேம் நோவாவின் குமாரன்.
நோவா லாமேக்கின் குமாரன்.
37 லாமேக் மெத்தூசலாவின் குமாரன்.
மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்.
ஏனோக் யாரேதின் குமாரன்.
யாரேத் மகலாலெயேலின் குமாரன்.
மகலாலெயேல் கேனானின் குமாரன்.
கேனான் ஏனோஸின் குமாரன்.
38 ஏனோஸ் சேத்தின் குமாரன்.
சேத் ஆதாமின் குமாரன்.
ஆதாம் தேவனின் குமாரன்.
2008 by World Bible Translation Center