Beginning
நேபுகாத்நேச்சாரின் மரம் பற்றிய கனவு
4 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உலகமெங்கிலும் வாழும் சகல தேசத்தாருக்கும், ஜாதியாருக்கும், மொழிக்காரர்களுக்கும், பின்வரும் கடிதத்தை அனுப்பினான்.
வாழ்த்துக்கள்:
2 மிக உன்னதமான தேவன் எனக்காகச் செய்த அற்புதமும் ஆச்சரியமும்கொண்ட செயல்களை உங்களுக்குச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
3 தேவன் வியக்கத்தக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார்.
தேவன் வல்லமைமிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார்.
தேவனுடைய இராஜ்யம் என்றென்றும் தொடர்கிறது.
தேவனுடைய ஆட்சி அனைத்துத் தலைமுறைகளுக்கும் தொடரும்.
4 நேபுகாத்நேச்சாராகிய நான் எனது அரண்மனையில் மகிழ்ச்சியுடனும், வெற்றியோடும் இருந்தேன். 5 என்னை அச்சுறுத்தும் ஒரு கனவை நான் கண்டேன். நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என் மனதில் படங்களையும், தரிசனங்களையும் பார்த்தேன். அவை என்னை மிகவும் அச்சுறுத்தின. 6 எனவே என் கனவிற்குரிய பொருளைக் கூறும்படி நான் பாபிலோனிலுள்ள அனைத்து ஞானிகளையும் அழைத்துவருமாறு கட்டளையிட்டேன். 7 சாஸ்திரிகளும், கல்தேயர்களும் வந்தபோது நான் அவர்களிடம் என் கனவைப்பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் பொருளைச் சொல்ல முடியவில்லை. 8 இறுதியாக, தானியேல் என்னிடம் வந்தான், (நான் தானியேலுக்கு என் தேவனைப் பெருமைப்படுத்தும்படி பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டிருந்தேன். பரிசுத்த தெய்வங்களின் ஆவி அவனிடமிருந்தது.) நான் தானியேலிடம் எனது கனவைச் சொன்னேன்.
9 “பெல்தெஷாத்சார், நீ சாஸ்திரிகளிலேயே மிகவும் முக்கியமானவன். உன்னிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதை நான் அறிவேன். உன்னால் புரிந்துகொள்ள முடியாத கடுமையான இரகசியம் இல்லை என்பதை அறிவேன். நான் கண்ட கனவு இதுதான். என்னிடம் இதன் பொருள் என்னவென்று சொல். 10 நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது கண்ட தரிசனங்கள் இதுதான். என் முன்னால் பூமியின் மத்தியில் ஒரு மரம் நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மரம் மிக உயரமாக இருந்தது. 11 அம்மரம் பெரிதாகவும் பலமுடையதாகவும் வளர்ந்தது. அம்மரத்தின் உச்சி வானத்தைத் தொட்டது. அதனை பூமியின் எந்த இடத்தில் இருந்தும் பார்க்கமுடியும். 12 அம்மரத்தின் இலைகள் மிக அழகானவை. அதில் ஏராளமான நல்ல பழங்கள் இருந்தன. அம்மரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான உணவு இருந்தது. அம்மரத்தின் அடியில் காட்டு மிருகங்கள் தங்கின. அதன் கிளைகளில் பறவைகள் வசித்தன. ஒவ்வொரு மிருகங்களும் அம்மரத்திலிருந்து சாப்பிட்டன.
13 “நான் படுக்கையில் படுத்திருந்தபோது நான் அவற்றைக் காட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நான், ஒரு பரிசுத்தமான தேவதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். 14 அவன் உரத்தகுரலில்: மரத்தை வெட்டிப்போடுங்கள். அதன் கிளைகளை வெட்டிப் போடுங்கள். அதன் இலைகளை உதிர்த்துவிடுங்கள். அதன் பழங்களைச் சிதறடியுங்கள். அம்மரத்தின் அடியிலுள்ள மிருகங்கள் ஓடிப்போகும். அதன் கிளைகளில் உள்ள பறவைகள் பறந்துபோகும். 15 ஆனால் அதன் தண்டையும், வேர்களையும், மண்ணிலே இருக்கவிடுங்கள். அதைச் சுற்றி இரும்பாலும், வெண்கலத்தாலுமான விலங்கைப் போடுங்கள். அதின் தண்டும் வேர்களும் தம்மைச் சுற்றிலும் புல்லிருக்கின்ற வெளியில் இருக்கும். அது காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு மத்தியில் இருக்கும். அது பனியில் நனையும். 16 அவன் ஒரு மனிதனைப்போல சிந்திக்கமாட்டான். அவன் ஒரு மிருகத்தின் மனதைப் பெறுவான். அவன் இவ்வாறு இருக்கையில் ஏழு பருவங்களும் கடந்துபோகும் என்று கூறினான்.
17 “பரிசுத்த தேவதூதன் இத்தண்டனையை அறிவித்தது ஏன்? அதனால் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் மனிதர்களின் இராஜ்யங்களை மிக உன்னதமான தேவன் ஆளுகிறார் என்று அறிந்துகெள்வார்கள். தேவன் அந்த இராஜ்யங்களை தாம் விரும்புகிற எவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கிறார். தேவன் அந்த இராஜ்யங்களை ஆள பணிவானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
18 “நேபுகாத்நேச்சாரகிய நான் கண்ட கனவு இதுதான். இப்பொழுது பெல்தெஷாத்சாரே (தானியேல்), இதன் பொருள் என்னவென்று சொல். எனக்காக என் இராஜ்யத்தில் உள்ள எந்த ஞானிக்கும் இதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால் பெல்தெஷாத்சாரே, நீ இதற்கு விளக்கமளிக்கமுடியும். ஏனென்றால் பரிசுத்த தேவனுடைய ஆவி உன்னில் இருக்கிறது.”
19 தானியேல் (பெல்தெஷாத்சார்) ஒருமணி நேரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தான். அவனது சிந்தனை அவனைப் பாதித்தது. எனவே, ராஜா அவனிடம்: “பெல்தெஷாத்சாரே (தானியேல்) கனவோ அல்லது அதன் பொருளோ உன்னைக் கலங்கப் பண்ண வேண்டியதில்லை” என்றான்.
பிறகு பெல்தெஷாத்சார் (தானியேல்) ராஜாவுக்குப் பதில் சொன்னான். என் எஜமானரே! அந்தக் கனவு உமது பகைவரைக் குறித்ததாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்தக் கனவின் பொருளும் உமக்கு விரோதமானவர்களைக் குறித்ததாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். 20-21 நீர் உமது கனவில் ஒரு மரத்தைப் பார்த்தீர். அம்மரம் பெரிதாகவும் பலமானதாகவும் வளர்ந்தது. அதின் உச்சி வானத்தைத் தொட்டது. அது பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அதன் இலைகள் அழகாய் இருந்தன. அதில் ஏராளமாகப் பழங்கள் இருந்தன. அப்பழங்கள் ஏராளமானவர்களுக்கு உணவாகியது. அது காட்டுமிருங்களுக்கு வீடாகியது. அதன் கிளைகள் பறவைகளுக்குக் கூடாகியது. நீர் பார்த்த மரம் இதுதான். 22 ராஜாவே, நீரே அந்த மரம். நீர் சிறப்பும், வல்லமையும் பெற்றிருக்கிறீர். நீர் வானத்தைத் தொடும் மரத்தைப்போன்று உயர்ந்து உமது வல்லமை பூமியின் அனைத்துப் பாகங்களையும் போய் அடைந்திருக்கிறது.
23 “ராஜாவே, நீர் பரலோகத்திலிருந்து ஒரு பரிசுத்தமான தேவதூதன் வருவதைப் பார்த்தீர். அவன், இம்மரத்தை வெட்டு, இதனை அழித்துப்போடு, அதற்கு இரும்பாலும் வெண்கலத்தாலுமான விலங்கைப் போடு. அதன் தண்டையும் வேர்களையும் பூமியிலேயே விட்டுவிடு. அதனைப் புல்வெளியில் விட்டுவிடு. அது பனியில் நனையும். அவன் காட்டு மிருகத்தைப் போன்று வாழ்வான். ஏழு பருவங்கள் (காலங்கள்) அவன் இவ்வாறு இருக்கும்போதே கடந்துபோகும்.
24 “கனவின் பொருள் இதுதான், ராஜாவே, மிக உன்னதமான தேவன் அரசருக்கு இவை ஏற்படும்படி கட்டளையிட்டார். 25 ராஜாவான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.
26 “மரத்தின் தண்டையும் வேர்களையும் பூமியில் விடவேண்டும் என்பதன் பொருள் இதுதான்: உமது இராஜ்யம் உம்மிடம் திருப்பிக்கொடுக்கப்படும். உமது இராஜ்யத்தை உன்னதமான தேவன் ஆளுகிறார் என்பதை நீர் கற்கும்போது இது நிகழும். 27 எனவே, ராஜாவே, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும். நீர் பாவம் செய்வதை நிறுத்தி சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். தீமை செய்வதை நிறுத்தும். ஏழை ஜனங்களிடம் இரக்கமாயிரும். பிறகு நீர் வெற்றியுள்ளவராக இருப்பீர்.”
28 அவை யாவும் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன. 29-30 கனவுக்கண்ட 12 மாதத்திற்குப் பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள தன் அரண்மனையின் மாடியின் மேல் நடந்துகொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்துக் கொண்டு, “பாபிலோனைப் பார்! நான் இந்தப் பெரியநகரத்தைக் கட்டினேன். இது எனது அரண்மனை! எனது வலிமையினால் நான் இந்த அரண்மனையைக் கட்டினேன். நான் எவ்வளவு பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த இடத்தைக் கட்டினேன்” என்று கூறினான்.
31 இந்த வார்த்தைகள் ராஜாவின் வாயில் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அச்சத்தம் சொன்னது: “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, இவையெல்லாம் உனக்கு நிகழும். உன்னிடமிருந்து ராஜா என்னும் அதிகாரம் எடுத்துக் கொள்ளப்படும். 32 நீ ஜனங்களிடமிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவாய். நீ காட்டுமிருகங்களோடு வாழ்வாய். நீ பசுவைப்போன்று புல்லைத் தின்பாய். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்), நீ உனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும் முன் கடந்துபோகும். பிறகு உன்னதமான தேவன் மனிதரின் இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதை நீ கற்பாய். அந்த உன்னதமான தேவன் அவர் விரும்புகிறவர்களுக்கு இராஜ்யங்களைக் கொடுக்கிறார்.”
33 அக்காரியங்கள் உடனே நிகழ்ந்தன. நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பசுவைப்போன்று புல்லைத் உண்ணத்தொடங்கினான். அவன் பனியால் நனைந்தான். அவனது தலைமுடி கழுகின் சிறகுகள் போன்று நீளமாக வளர்ந்தன. அவனது நகங்கள் பறவையின் நகத்தைப்போன்று வளர்ந்தது.
34 பிறகு காலத்தின் முடிவில், நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை நோக்கிப் பார்த்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. பிறகு நான் உன்னதமான தேவனைப் போற்றினேன். நான் அவருக்கு மதிப்பையும் மகிமையையும் என்றென்றும் கொடுத்தேன்.
தேவன் என்றென்றும் ஆளுகிறார்.
அவரது இராஜ்யம் எல்லா தலைமுறைகளுக்கும் தொடருகிறது.
35 பூமியிலுள்ள ஜனங்கள் உண்மையிலேயே முக்கியமானவர்களல்ல.
பரலோகத்தின் வல்லமைகளோடும்,
பூமியின் ஜனங்களோடும் தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்கிறார்.
எவராலும் அவரது அதிகாரமுள்ள கையை நிறுத்தமுடியாது.
எவராலும் அவரது செயல்களைக் கேள்விக் கேட்க்கமுடியாது.
36 எனவே, அந்த நேரத்தில், தேவன் எனது சரியான புத்தியை எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு சிறந்த மதிப்பையும், ராஜா என்ற வல்லமையையும் திரும்பக் கொடுத்தார். எனது ஆலோசகர்களும், பிரபுக்களும் மீண்டும் எனது ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினார்கள். நான் மீண்டும் ராஜாவானேன். நான் முன்பைவிட இன்னும் சிறந்தவனாகவும் மிகுந்த வல்லமையுள்ளவனாகவும் ஆனேன். 37 இப்பொழுது, நேபுகாத்நேச்சாரகிய நான் பரலோக அரசருக்கு புகழ்ச்சி, கனம், மகிமை ஆகியவற்றைக் கொடுக்கிறேன். அவர் செய்கிறவை எல்லாம் சரியானது. அவர் எப்பொழுதும் நேர்மையானவர். அவரால் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்தமுடியும்.
சுவரின் மேல் எழுதிய கை
5 ராஜாவாகிய பெல்ஷாத்சார் தனது அதிகாரிகளில் 1,000 பேருக்கு விருந்து கொடுத்தான். ராஜா அவர்களோடு திராட்சைரசம் குடித்துக் கொண்டிருந்தான். 2 பெல்ஷாத்சார் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போதே அவன் தனது வேலைக்காரர்களுக்குத் தங்கத்தாலும் வெள்ளியாலுமான கிண்ணங்களைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். இந்தக் கிண்ணங்கள் அவனது தந்தையான நேபுகாத்நேச்சாரால் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டவை. ராஜாவாகிய பெல்ஷாத்சார், தனது பிரபுக்களும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடிக்க வேண்டும் என்று விரும்பினான். 3 எனவே அவர்கள் எருசலேமின் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டக் கிண்ணங்களைக் கொண்டு வந்தனர். ராஜாவும், அவனது அதிகாரிகளும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அவற்றில் குடித்தனர். 4 அவர்கள் குடித்துக்கொண்டே தங்கள் விக்கிரக தெய்வங்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மண் போன்றவற்றால் செய்யப்பட்ட வெறும் சிலைகளைப் போற்றினார்கள்.
5 பிறகு திடீரென்று ஒரு மனிதக் கை தோன்றி சுவரில் எழுதத் தொடங்கியது. விரல்கள் சுவரிலுள்ள சாந்துபூச்சின் மீது எழுதிற்று. அந்தக் கை ராஜாவின் அரண்மனையில் விளக்குக்கு எதிராயிருந்த சுவரில் எழுதியது. ராஜா அந்தக் கை எழுதும்போது கவனித்துக்கொண்டிருந்தான்.
6 ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் பயந்தான். அவனது முகம் பயத்தால் வெளிறிற்று. அவனது முழங்கால்கள் நடுங்கி இடித்துக்கொண்டன. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது கால்கள் அவ்வளவு பலவீனமாக இருந்தன. 7 ராஜா ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான்.
8 எனவே, ராஜாவின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை. 9 பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு ராஜா மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது.
10 பிறகு ராஜாவின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் ராஜா மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ ராஜாவே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம். 11 உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான். 12 நான் சொல்லிக்கொண்டிருக்கிற அவனுடைய பெயர் தானியேல். ராஜா அவனுக்கு பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டார். பெல்தெஷாத்சார் மிக சுறுசுறுப்புடையவன். அவனுக்குப் பல செய்திகள் தெரியும். அவனால் கனவின் பலன்களும், இரகசியங்களின் விளக்கமும், கடினமான விஷயங்களுக்குத் தீர்வுகளும் தெரியும். தானியேலைக் கூப்பிடு, அவனால் சுவர் மேல் எழுதியுள்ளவற்றுக்கு விளக்கம் சொல்லமுடியும்” என்றாள்.
13 எனவே அவர்கள் தானியேலை ராஜாவிடம் அழைத்துவந்தனர். ராஜா தானியேலிடம் உனது பெயர் தானியேல்தானா? யூதாவிலிருந்து என் தந்தையால் சிறை பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவர்களில் நீ ஒருவனா? 14 தேவர்களின் ஆவி உன்னிடம் இருப்பதாக நான் அறிந்தேன். அதோடு நீ இரகசியங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவன், வெளிச்சமும், புத்தியும், ஞானமும் கொண்டவன் என்றும் உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டேன். 15 ஞானிகளும், சோதிடர்களும் என்னிடம் அழைத்துவரப்பட்டு சுவரில் எழுதப்பட்டவற்றை வாசிக்கச் சொன்னேன். இந்த எழுத்துக்களின் பொருள் என்னவென்று அம்மனிதர்கள் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்களால் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கான விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை. 16 ஒவ்வொரு பொருளின் அர்த்தத்தையும் உன்னால் விளக்க முடியும் என்றும் மிகச் கடினமான பிரச்சனைகளுக்கும் உன்னால் பதில் சொல்ல முடியும் என்றும் நான் உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உன்னால் இச்சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்து அதன் பொருளை எனக்கு விளக்க முடியுமானால் நான் உனக்கு இரத்தாம்பர ஆடையைக் கொடுப்பேன். நான் உனது கழுத்தில் பொன் மாலையை அணிவிப்பேன். பிறகு நீ இந்த இராஜ்யத்தின் மூன்றாவது உயர் ஆளுநராக ஆகலாம் என்றான்.
17 தானியேல் ராஜாவிடம், “பெல்ஷாத்சார் ராஜாவே, உமது அன்பளிப்புகளை நீர் உம்மிடமே வைத்துக்கொள்ளும். அல்லது நீர் உமது பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆனால் நான் உமக்காகச் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிப்பேன். நான் அதன் பொருள் என்னவென்றும் உமக்கு விளக்குவேன்.
18 “ராஜாவே, உன்னதமான தேவன், உமது தந்தையான நேபுகாத்நேச்சாரை சிறப்பும், வல்லமையும் கொண்ட ராஜாவாக ஆக்கினார். தேவன் அவரை மிக முக்கியமானவராக ஆக்கினார். 19 பல நாடுகளில் உள்ள ஜனங்களும், பலமொழி பேசும் ஜனங்களும் நேபுகாத்நேச்சாருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் உன்னதமான தேவன் அவரை மிக முக்கியமான ராஜாவாக்கினார். நேபுகாத்நேச்சார் ஒருவன் மரிக்கவேண்டும் என்று விரும்பினால் உடனே அவனைக் கொன்றுவிடுவார். அவர் ஒருவன் வாழவேண்டும் என்று விரும்பினால், அவனை வாழவிடுவார். அவர் ஜனங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியப்படுத்துவார். அவர் ஜனங்களை முக்கியமற்றவர்களாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியமற்றவர்களாக்குவார்.
20 “ஆனால் நேபுகாத்நேச்சார் அகந்தையும் கடின மனமும் கொண்டவரானர். எனவே, அவரது வல்லமை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது இராஜ சிங்காசனம் பறிக்கப்பட்டது. அவருடைய மகிமை அகற்றப்பட்டது. 21 பிறகு நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். அவருடைய மனது மிருகத்தின் மனது போலாயிற்று. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்து பசுவைப்போன்று புல்லைத் தின்றார். அவர் பனியில் நனைந்தார். அவர் தனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும்வரை இவை நிகழ்ந்தன. பின்னர் அவர் உன்னதமான தேவன் மனிதர்களின் இராஜ்யங்களை ஆளுகிறார். அதோடு உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவரையும் இராஜ்யத்தை ஆளவைப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார்.
22 “ஆனால் பெல்ஷாத்சாரே, உமக்கு ஏற்கெனவே இவை தெரியும். நீர் நேபுகாத்நேச்சாரின் குமாரன். ஆனாலும் நீர் உம்மை இன்னும் பணிவுள்ளவராக்கிக்கொள்ளவில்லை. 23 இல்லை, நீர் பணிவுள்ளவராகவில்லை. அதற்குப் பதிலாக பரலோகத்தின் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினீர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள கிண்ணங்களைக் குடிப்பதற்குக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டீர். நீரும், உமது அரசு அதிகாரிகளும், உமது மனைவியரும், அடிமைப்பெண்களும், அக்கிண்ணங்களில் திராட்சைரசத்தைக் குடித்தீர்கள். நீர் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும், இரும்பாலும், மரத்தாலும், கல்லாலும் ஆன தெய்வங்களைப் போற்றினீர். அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் உமது வாழ்க்கை மீதும், உமது செயல்கள் மீதும் அதிகாரம் படைத்த தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை. 24 அதனால், தேவன் சுவர்மேல் எழுதுகிற கையை அனுப்பினார். 25 சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்:
மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்.
26 “இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள்:
மெனே: உன் ஆளுகை முடியும் நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார்.
27 தெக்கேல்: நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய்.
28 உப்பார்சின்: உன் ஆளுகை உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு, அது மேதியருக்கும் பெர்சியருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும்” என்றான்.
29 பின்னர் பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை அணிவித்து, அவனது கழுத்தில் பொன் மாலையைப் போட்டான். அவன் இராஜ்யத்தின் மூன்றாம் ஆளுநராக உயர்த்தப்பட்டான். 30 அதே இரவில் பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான். 31 தரியு என்னும் மேதியன் புதிய ராஜாவானான். தரியு 62 வயதுடையவனாக இருந்தான்.
தானியேலும் சிங்கங்களும்
6 தரியு தனது இராஜ்யம் முழுவதையும் ஆளுவதற்கு 120 தேசாதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல திட்டமென்று எண்ணினான். 2 அவன் அந்த 120 தேசாதிபதிகளையும் கட்டுப்படுத்த மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தான். இந்த மூன்று மேற்பார்வையாளர்களில் தானியேலும் ஒருவன். ராஜா இவ்வாறு ஓர் ஏற்பாடு செய்துவிட்டதால் எவரும் அவனை ஏமாற்ற முடியாது. அதோடு அவன் தனது இராஜ்யத்தில் எதையும் இழக்கமாட்டான். 3 தானியேல் தன்னை மற்ற மேற்பார்வையாளர்களைவிடச் சிறந்தவனாகக் காட்டினான். தானியேல் இதனைத் தனது நற்குணங்கள் மூலமும், நல்ல திறமைகள் மூலமும் செய்தான். ராஜா தானியேலின்மேல் மிகவும் வியப்படைந்தான். அவன் தானியேலை இராஜ்யம் முழுவதற்கும் ஆளுநாரக்கிவிடலாம் என்று திட்டமிட்டான். 4 ஆனால் மற்ற மேற்பார்வையளர்களும், மற்ற தேசாதிபதிகளும் இதனை அறிந்ததும் மிகவும் பொறாமைகொண்டனர். அவர்கள் தானியேலை குற்றஞ்சாட்ட காரணங்களைத் தேடினர். எனவே அவர்கள் தானியேல் அரசு பணிகளைச் செய்யும்போது மிகக் கவனமாகக் கவனித்தனர். ஆனால் அவர்களால் தானியேலிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தானியேல் நேர்மையாளனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அவன் ராஜாவை ஏமாற்றாமல் மிகக் கடுமையாக வேலை செய்து வந்தான்.
5 இறுதியாக அந்த ஆட்கள், “நாம் தானியேலை குற்றம் கண்டுபிடிக்கும்படி தவறான எதையும் அவன் செய்யமாட்டான். எனவே நாம் அவனது தேவனுடைய சட்ட விஷயத்தில் குற்றம் காண வேண்டும்” என்று பேசிக்கொண்டனர்.
6 எனவே, அந்த மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும் ஒரு குழுவாக ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அரசரை நோக்கி, “தரியு ராஜாவே, என்றென்றும் வாழ்வீராக. 7 மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார்கள். அதாவது நாங்கள் ராஜா ஒரு சட்டத்தைச் இயற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். எல்லோரும் அதற்கு அடி பணியவேண்டும். இதுதான் அந்தச் சட்டம், எவராவது இன்னும் 30 நாட்களுக்கு ராஜாவாகிய உம்மைத் தவிர வேறெந்த தேவனையோ, மனிதரையோ நோக்கி எந்த ஒரு காரியத்திற்கும் ஜெபம் செய்தால் அவன் சிங்கக்கூண்டிலே போடப்படுவான். 8 இப்பொழுது இதனைச் சட்டமாக்கி இந்தத் தாளிலே கையெழுத்துப் போடும். இவ்வாறு இந்தச் சட்டம் மாற்ற முடியாதபடி இருக்கும். ஏனென்றால் மேதியர்கள் மற்றும் பெர்சியர்களின் சட்டங்கள் விலக்கவோ மாற்றவோ முடியாதவை” என்றனர். 9 அவர்கள் சொன்னபடி ராஜாவான தரியு இச்சட்டத்தை இயற்றி கையெழுத்துப் போட்டான்.
10 தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான்.
11 அந்த ஆட்கள் குழுவாகச் சென்று தானியேலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தானியேல் தேவனிடம் உதவிகேட்டு ஜெபிப்பதைக் கண்டனர். 12 எனவே அந்த ஆட்கள் ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் அவன் இயற்றிய சட்டத்தைப்பற்றி பேசினர். அவர்கள், “தரியு ராஜாவே, எந்த மனிதனும் 30 நாள்வரையிலும் ராஜாவாகிய உம்மைத் தவிர வேறு எந்தத் தேவனையும், ஆளையும் நோக்கி யாதொரு காரியத்தைக் குறித்தும் ஜெபம் செய்தால் அவனைச் சிங்கக்கூண்டிலே போடவேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்திலே கையெழுத்திட்டீர் அல்லவா?” என்றனர்.
அதற்கு ராஜா, “ஆமாம். நான் அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டேன். அதோடு மேதியர்கள் மற்றும் பெர்சியர்களுக்கு இருக்கும் மாறாத சட்டத்தின்படி அது ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது” என்றான்.
13 அந்த ஆட்கள் ராஜாவிடம், “தானியேல் என்ற பெயருடைய அந்த மனிதன் உமக்கு மரியாதை செலுத்துவதில்லை. தானியேல் யூதாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கைதிகளில் ஒருவன். தானியேல் நீர் கையெழுத்திட்ட சட்டத்தைப்பற்றி கவலைப்படவில்லை. தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்று முறை தன் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி உதவிக்காக மன்றாடுகிறான்” என்றனர்.
14 ராஜா இதனைக் கேள்விப்பட்டதும் மிக வருத்தப்பட்டு கலக்கமடைந்தான். ராஜா தானியேலைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் மாலைவரை இதற்கான ஒரு திட்டத்தைப்பற்றியே எண்ணினான். 15 பிறகு அந்த ஆட்கள் ஒரு குழுவாக ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “ராஜாவே, நினைத்துப்பாரும். மேதியர் மற்றும் பெர்சியரின் சட்டமானது, ராஜாவால் கையெழுத்திடப்பட்ட கட்டளையோ அல்லது சட்டமோ விலக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது என்று கூறுகிறது” என்றார்கள்.
16 எனவே, தரியு ராஜா கட்டளையிட்டான். அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். ராஜா தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான். 17 ஒரு பெரிய பாறங்கல்லைக் கொண்டு வந்து சிங்கக்குகையின் வாசலை மூடினார்கள். பிறகு ராஜா தனது மோதிரத்தைப் பயன்படுத்தி பாறையின்மேல் முத்திரையிட்டான். பிறகு அவன் தன் அதிகாரிகளின் மோதிரங்களாலும் பாறையின்மேல் முத்திரையிட்டான். இது, எவராலும் பாறாங்கல்லைத் திறந்து தானியேலை கூண்டிலிருந்து வெளியே கொண்டுவர முடியாது என்று காட்டியது. 18 பிறகு ராஜாவாகிய தரியு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். ராஜா அன்றிரவு உணவு உண்ணவில்லை, அவன் யாரும் வந்து வேடிக்கை செய்து மகிழ்வூட்டுவதை விரும்பவில்லை. ராஜாவால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.
19 மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது ராஜாவாகிய தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான். 20 ராஜா மிகத்துயரமாக இருந்தான். அவன் சிங்கங்களின் குகைக்கருகில் போய், தானியேலைக் கூப்பிட்டான். ராஜா, “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய ஊழியனே, நீ எப்பொழுதும் உன் தேவனுக்குச் சேவைசெய்கிறாயே, உனது தேவனால் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?” என்றான்.
21 தானியேல் அதற்குப் பதிலாக, “ராஜாவே, நீர் என்றென்றும் வாழ்க. 22 தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். ராஜாவே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான்.
23 ராஜாவாகிய தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான்.
24 பிறகு ராஜா, தானியேல்மீது குற்றம் சாட்டி அவனைச் சிங்கக்குகைக்குள் அனுப்பியவர்களைக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டான். அம்மனிதர்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் சிங்கக்குகைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் குகையின் தரைக்குள் விழுவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களது உடல்களைக் கிழித்து எலும்புகளை மென்று உண்டன.
25 பிறகு ராஜாவாகிய தரியு பின்வரும் கடிதத்தை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழி பேசுகிற அனைத்து ஜனங்களுக்கும் எழுதினான்:
26 வாழ்த்துக்கள்:
நான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறேன். இச்சட்டம் என் இராஜ்யத்தில் உள்ள எல்லாப் பகுதி ஜனங்களுக்கும் உரியது. நீங்கள் எல்லோரும் தானியேலின் தேவனுக்கு அஞ்சி மரியாதை செய்ய வேண்டும்.
தானியேலின் தேவன் ஜீவனுள்ள தேவன்,
தேவன் என்றென்றும் இருக்கிறார்.
அவரது இராஜ்யம் என்றென்றும் அழியாதது.
அவரது ஆட்சி முடிவில்லாதது.
27 தேவன் ஜனங்களுக்கு உதவிசெய்து காப்பாற்றுகிறார்.
தேவன் பரலோகத்திலும் பூமியிலும் அற்புதங்களைச் செய்கிறார்.
ஆண்டவர் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்.
28 எனவே தானியேல், தரியு ராஜாவாக இருந்த காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சியிலும் வெற்றிகரமாக வாழ்ந்தான்.
2008 by World Bible Translation Center