Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 36-41

அசீரியர்கள் யூதாவைக் கைப்பற்றுதல்

36 எசேக்கியா யூதாவின் ராஜாவாக இருந்தான். அசீரியாவின் ராஜாவாக சனகெரிப் இருந்தான். எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டில், யூதாவின் அரணாக சூழ்ந்திருந்த நகரங்களுக்கு எதிராக சனகெரிப்போரிட்டான். சனகெரிப் அந்நகரங்களைத் தோற்கடித்தான். சனகெரிப் எருசலேமிற்கு எதிராகப்போரிட அவனது தளபதியை அனுப்பினான். தளபதி லாகீசை விட்டு எருசலேமில் இருந்த எசேக்கியா ராஜாவிடம் சென்றான். அந்தத் தளபதி தன்னோடு வல்லமையான படையை அழைத்துச் சென்றான். தளபதியும் அவனது படையும் வண்ணார்துறையின் அருகிலுள்ள சாலைக்குச் சென்றனர். அந்தச் சாலை, மேல் குளத்திலிருந்து வரும் தண்ணீர்க் குழாயின் அருகில் இருந்தது.

எருசலேமிலிருந்து மூன்று ஆண்கள் தளபதியோடு பேச வெளியே வந்தனர். அந்த ஆண்கள், இலக்கியாவின் குமாரனான எலியாக்கீம், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக்கும், செப்னாவும் ஆவார்கள். எலியாக்கீம் அரண்மனை மேலாளராக இருந்தான். யோவாக் பொருளாளராக இருந்தான். செப்னா செயலாளராக இருந்தான்.

தளபதி அவர்களிடம், “பின்வருவதை நீங்கள் எசேக்கியா ராஜாவிடம் கூறுங்கள்:

“மகாராஜாவான, அசீரியாவின் ராஜா கூறுகிறார், நீ நம்பி இருக்கிற இந்த நம்பிக்கை என்ன? நான் உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் வல்லமையிலும் யுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனையிலும் நம்பிக்கை வைத்தால், அது பயனற்றதாக இருக்கும். அவை வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை. எனவே, எனக்கு எதிராக நீ ஏன் போரிடுகிறாய்? இப்பொழுது நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கு உதவ யார்மேல் நீ நம்பிக்கை வைத்திருக்கிறாய்? உனது உதவிக்கு எகிப்தைச் சார்ந்து இருக்கின்றாயா? எகிப்து ஒரு உடைந்த கம்புபோலுள்ளது. உன்னைத் தாங்குவதற்கு அதனை நீ ஊன்றினால் அது உன்னைப் பாதிக்கும். உன் கையில் ஓட்டையிடும். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன், உதவிபெறுவதற்கு எவராலும் நம்பத்தகாதவன்.

“ஆனால் நீ, ‘நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தர் மீது எங்களுக்கு உதவுமாறு நம்பிக்கை வைத்தோம்’ என்று கூறலாம். ஆனால் நான் கூறுகிறேன், எசேக்கியா கர்த்தருடைய பலிபீடங்களையும் தொழுதுகொள்வதற்குரிய உயர் இடங்களையும் அழித்துவிட்டான். எசேக்கியா யூதா மற்றும் எருசலேமிடம் இவற்றைச் சொன்னான்: ‘எருசலேமில் உள்ள இந்த ஒரே ஒரு பலிபீடத்தை மட்டும் நீங்கள் தொழுது கொள்ளவேண்டும்.’

“நீங்கள் இன்னும் போர் செய்ய விரும்பினால், எனது எஜமானரான, அசீரியாவின் ராஜா உன்னோடு இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார். ராஜா சொல்கிறார், உங்களால் போருக்குக் குதிரைகளின் மீது சவாரி செய்யப்போதுமான ஆட்களைக் கண்டுகொள்ள முடியுமானால் நான் உங்களுக்கு 2,000 குதிரைகளைத் தருவேன். ஆனால் அதற்குப் பிறகும்கூட உன்னால் எனது எஜமானரின் அடிமைகளில் ஒருவனைத் தோற்கடிக்க முடியாது.” எனவே, நீங்கள் ஏன் தொடர்ந்து எகிப்தின் குதிரைகளையும் இரதங்களையும் நம்பி இருக்கிறீர்கள்?

10 அதோடு, “நான் இந்த நாட்டிற்கு வந்து போரிட்டபோது கர்த்தர் என்னோடு இருந்தார் என்பதை நினைவுகொள்ளவேண்டும். நான் இந்த நகரங்களை அழித்தபோது கர்த்தர் என்னோடு இருந்தார். கர்த்தர் என்னிடம், ‘எழுந்து நில், இந்த நாட்டிற்குப்போ. இதனை அழித்துவிடு!’ என்று கூறினார்” என்று கூறுங்கள் என்றான்.

11 எருசலேமிலிருந்து வந்த எலியாக்கீம், செப்னா, யோவாக் ஆகியோர் தளபதியிடம், “தயவுசெய்து எங்களோடு அரமேய மொழியில் பேசுங்கள். எங்களோடு எங்கள் யூத மொழியில் பேசாதீர்கள். நீங்கள் யூத மொழியைப் பயன்படுத்தினால், நகர சுவர்களுக்குமேல் இருக்கிற ஜனங்கள் நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்கள்.

12 ஆனால் தளபதி, “எனது எஜமானர் இவற்றை உங்களிடமும் உங்கள் எஜமானர் எசேக்கியாவிடமும் மட்டும் கூற என்னை அனுப்பவில்லை. சுவர்களுக்கு மேல் உட்கார்ந்திருக்கிற அந்த ஜனங்களுக்கும் கூறுமாறு என்னை அனுப்பியுள்ளார். அந்த ஜனங்கள் போதுமான உணவையும் தண்ணீரையும் பெறுவதில்லை. அவர்கள் உங்களைப்போன்றே தங்கள் மலத்தை உண்ணவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் செய்வார்கள்” என்றான்.

13 பிறகு, தளபதி எழுந்து நின்று மிக உரத்தக் குரலில் யூத மெழியில் பேசினான்.

14 “தளபதி சொன்னான், மகாராஜாவான அசீரியா அரசனிமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: எசேக்கியா உங்களை முட்டாளாக்கவிடாதீர்கள். அவனால் உங்களை என்னுடைய வல்லமையிலிருந்து பாதுகாக்க முடியாது! 15 எசேக்கியா, ‘கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள். கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார். அசீரியா ராஜா இந்த நகரத்தைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் விடமாட்டார்’ என்று சொல்லும்போது அதை நம்பாதீர்கள்.

16 “எசேக்கியாவிடமிருந்து வரும் அந்த வார்த்தைகளைக் கேட்காதீர்கள். அசீரியா ராஜா சொல்வதைக் கேளுங்கள். அசீரியா ராஜா கூறுகிறான், ‘நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் நகரத்தைவிட்டு வெளியே என்னிடம் வர வேண்டும். பிறகு, ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளுக்குப்போக விடுதலை பெறுவீர்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்தத் திராட்சைத் தோட்டத்தில் திராட்சைப்பழம் உண்ணும் சுதந்திரம் பெறுவீர்கள். ஒவ்வொருவரும் அவர்களது சொந்த அத்திமரத்தில் அத்திப் பழம் உண்ணும் சுதந்திரத்தைப் பெறுவீர்கள்.’ 17 இதனை, உங்கள் தேசத்தைப்போன்ற நாட்டிற்கு நான் வந்து உங்களை அழைத்துச் செல்லும்வரை நீங்கள் செய்யலாம். அந்தப் புதிய நாட்டில் உங்களுக்கு நல்ல தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும் பெறுவீர்கள். அந்த நாட்டில் உணவும் திராட்சை வயல்களும் இருக்கும்.

18 “எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படிவிடாதீர்கள். அவன் சொல்கிறான், ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்’ என்று. ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன், ‘அசீரியாவின் வல்லமையிலிருந்து அந்த ஜனங்களை அந்நிய நாட்டு தெய்வங்கள் எவராவது காப்பாற்றினார்களா? இல்லை. 19 ஆமாத் அர்பாத் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். செப்பர்வாயீமின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். எனது வல்லமையிலிருந்து சமாரியாவின் தெய்வங்கள் தம் ஜனங்களை காப்பாற்றினார்களா? இல்லை! 20 இந்த நாடுகளில் என்னுடைய வல்லமையிலிருந்து தம் ஜனங்களைக் காப்பாற்றிய ஏதாவது ஒரு தெய்வங்களுடைய பெயரைக் கூறுங்கள். அவர்கள் அனைவரையும் நான் தோற்கடித்துவிட்டேன். எனவே, எனது வல்லமையிலிருந்து கர்த்தர் எருசலேமைக் காப்பாற்றுவாரா?’” இல்லை! என்கிறார் என்றான்.

21 எருசலேமிலுள்ள ஜனங்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் தளபதிக்குப் பதில் சொல்லவில்லை. (“தளபதிக்குப் பதில் சொல்லவேண்டாம்” என்று எசேக்கியா ஜனங்களுக்கு கட்டளையிட்டிருந்தான்).

22 பிறகு அரண்மனை மேலாளரான இல்க்கியாவின் குமாரனான எலியாக்கீம், செயலாளரான செப்னா மற்றும் பொருளாளரான ஆசாப்பின் குமாரனான யோவாக் ஆகியோர், தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். (அவர்கள் துக்கமாய் இருப்பதாக காட்டினார்கள்). மூன்று பேரும் எசேக்கியாவிடம் சென்று தளபதி அவர்களுக்கு சொன்ன அனைத்தையும் கூறினார்கள்.

எசேக்கியா தேவனுடைய உதவிக்காக வேண்டுதல்

37 எசேக்கியா, தளபதியிடமிருந்து வந்த செய்தியைக் கவனித்தான். அவன் அந்தச் செய்தியைக் கேட்டதும் தான் சோகமாயிருப்பதைக் காண்பிக்க தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். பிறகு எசேக்கியா துக்கத்தைக் குறிக்கும் சிறப்பான ஆடைகளை அணிந்துகொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்குப்போனான். எசேக்கியா அரண்மனை மேலாளரையும் (எலீக்கியாம்) செயலாளனையும் (செப்னா) ஆசாரியர்களின் மூப்பர்களையும் (தலைவர்களையும்) ஆமோத்சின் குமாரனான ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்பினான். அந்த மூன்று பேரும் துக்கத்தைக் குறிக்கும் சிறப்பு ஆடைகளை அணிந்திருந்தனர்.

அவர்கள் ஏசாயாவிடம், “ராஜா எசேக்கியா, இன்று துக்கத்திற்கும் துயரத்திற்குமான விசேஷ நாள் என்று கட்டளையிட்டிருக்கிறார். இன்று மிக துக்கமான நாளாக இருக்கும். இது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டிய நாளைப்போன்ற ஒரு நாளாக இருக்கும். ஆனால் குழந்தை பெறவோ போதிய பெலன் தாய்க்கில்லை. (உமது தேவனான கர்த்தர் தளபதி சொன்னவற்றைக் கேட்டிருக்கலாம்). அசீரியா ராஜா தளபதியை அனுப்பி, ஜீவனுள்ள தேவனைப்பற்றி மோசமாகப் பேசும்படி அனுப்பியிருக்கிறான். உமது தேவனாகிய கர்த்தர் அந்தக் கெட்ட வார்த்தைகளைக் கேட்பார். ஒருவேளை சத்துரு தப்பானவன் என்று கர்த்தர் நிரூபிக்கச் செய்வார்! தயவுசெய்து இஸ்ரவேலில் மீதியாக இருக்கிற சில ஜனங்களுக்காக ஜெபம் செய்யும்” என்றனர்.

5-6 ஏசாயா அவர்களிடம், “இந்தத் தகவலை உங்கள் எஜமானனான எசேக்கியாவிடம் சொல்லுங்கள். கர்த்தர் சொல்கிறார், ‘தளபதியிடமிருந்து நீங்கள் கேட்டவற்றைப்பற்றிப் பயப்பட வேண்டாம்! அசீரியா ராஜாவின் சிறுவர்கள் என்னைப்பற்றி சொன்ன தீயவற்றை நம்பவேண்டாம். பாருங்கள், நான் அசீரியாவிற்கு எதிராக ஒரு ஆவியை அனுப்புவேன். அசீரியா ராஜா அவனது நாட்டிற்கு வரவிருக்கும் ஆபத்து பற்றிய எச்சரிக்கையைப் பெறுவான். எனவே அவன் தனது நாட்டிற்குத் திரும்பிப்போவான். அந்த நேரத்தில் அவனது சொந்த நாட்டில் ஒரு வாளால் அவனைக் கொல்லுவேன்’” என்றார்.

அசீரியா படை எருசலேமை விட்டு விலகியது

8-9 அசீரியா ராஜா ஒரு அறிக்கையைப் பெற்றான். அந்த அறிக்கை, “எத்தியோப்பியா ராஜாவாகிய திராக்கா உம்மோடு போரிட வருகிறான்” என்று சொன்னது. எனவே, அசீரியா ராஜா லாகீசை விட்டு லிப்னாவுக்குத் திரும்பிப்போனான். தளபதி இதனைக் கேள்விப்பட்டான். அவன் லிப்னா நகரத்திற்குப்போனான். அங்கே அசீரியா ராஜா போரிட்டுக்கொண்டிருந்தான். பிறகு தளபதி எசேக்கியாவிற்குத் தூதுவர்களை அனுப்பினான். 10 “நீங்கள் இவற்றை யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் சொல்லவேண்டுவன:

‘நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். “அசீரியா ராஜாவால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார்” என்று சொல்லாதீர்கள். 11 கவனியுங்கள், அசீரியாவின் ராஜாக்கள் மற்ற நாடுகளுக்குச் செய்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் மற்றவர்களை முற்றிலுமாய் அழித்தார்கள். நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நம்புகிறீர்களா? இல்லை. 12 அந்த ஜனங்களின் தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்றினார்களா? இல்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். எனது ஜனங்கள் கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்களையும் தோற்கடித்தனர். 13 ஆமாத் அர்பாத் ராஜா எங்கே இருக்கிறார்கள்? செப்பர்வாயீம் ராஜா எங்கே இருக்கிறான்? ஏனா, ஈவா நகரங்களின் ராஜாக்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் முறியடிக்கப்பட்டனர்! அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்!’” என்று தளபதி சொன்னான்.

எசேக்கியா தேவனிடம் ஜெபம் செய்கிறான்

14 எசேக்கியா தூதுவர்களிடமிருந்து செய்தியைப் பெற்று வாசித்தான். பிறகு, எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்றான். எசேக்கியா கடிதத்தைத் திறந்து கர்த்தருக்கு முன்பு வைத்தான். 15 எசேக்கியா கர்த்தரிடம் ஜெபம் செய்யத் தொடங்கினான். எசேக்கியா சொன்னான்: 16 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் ராஜாவாக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்! 17 கர்த்தாவே நான் சொல்வதைக் கேளும். சனகெரிப்பிடமிருந்து வந்த செய்தியை உமது கண்களைத் திறந்து பாரும். எனக்குச் சனகெரிப் இந்தச் செய்தியை அனுப்பினான். ஜீவனுள்ள தேவனாகிய உம்மைப்பற்றி தீயச் செய்திகளை இது சொல்கிறது. 18 கர்த்தாவே, அசீரியாவின் ராஜா உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான். 19 கர்த்தாவே, அந்த நாடுகளில் உள்ள தெய்வங்களை அசீரியாவின் ராஜாக்கள் எரித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை உண்மையான தெய்வங்கள் அல்ல. அவைகள் மனிதர்களால் செய்யப்பட்ட சிலைகள்தான். அவைகள் மரமும் கல்லும் தான். எனவேதான் அசீரியாவின் ராஜாக்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 20 ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா ராஜாவின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான்.

எசேக்கியாவிற்கு தேவனுடைய பதில்

21 பிறகு ஆமோத்சின் குமாரனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், ‘அசீரியா ராஜாவாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப்பற்றி நீ ஜெபம் செய்தாய். நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.’

22 “சனகெரிப்பைக் குறித்து கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்:

“அசீரியா ராஜாவே, சீயோனின் (எருசலேம்) கன்னிமகள், ‘நீ முக்கியமானவன்’ என்று எண்ணுவதில்லை.
    உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
எருசலேமின் குமாரத்தி உன்னை பரிகாசம் செய்கிறாள்.
    உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
23 ஆனால், நீ யாரை பரிகாசம் செய்தாய்?
    நீ யாருக்கு எதிராகப் பேசினாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு எதிராகப் பேசினாய்.
    அவரைவிட நீ உத்தமன்போல நடித்தாய்.
24 எனது கர்த்தராகிய ஆண்டவரைப்பற்றி எதிராகப் பேச உனது வேலைக்காரர்களைப் பயன்படுத்தினாய்.
    நீ, ‘நான் வல்லமையுள்ளவன்! என்னிடம் பற்பல இரதங்கள் உள்ளன.
எனது வல்லமையால் நான் லீபனோனைத் தோற்கடித்தேன்.
    லீபனோனின் மலை உச்சிகளில் நான் ஏறினேன்.
நான் லீபனோனில் உள்ள உயரமான மரங்களை (படைகள்) வெட்டித் தள்ளினேன்.
    நான் மலையின் உச்சிக்கும் காட்டின் மிக ஆழமான பகுதிக்கும் சென்றிருக்கிறேன் என்று கூறினாய்.
25 நான் கிணற்றைத் தோண்டி புதிய இடங்களிலிருந்து தண்ணீரைக் குடித்திருக்கிறேன்.
    எகிப்தின் ஆறுகளை வற்றச்செய்து அந்நாட்டில் நான் நடந்து சென்றிருக்கிறேன்.’

26 “‘இதைத்தான் நீ கூறினாய். ஆனால் நான் சொன்னவற்றை நீ கேட்டாயா?
    நீண்ட காலத்துக்கு முன்னால் தேவனாகிய நானே இவற்றைத் திட்டமிட்டேன்.
பழங்காலத்திலிருந்து நானே அதைத் திட்டமிட்டேன்.
    இப்போதும் நானே அதை நடப்பித்தேன்.
பலமான நகரங்களையெல்லாம் அழிக்கும்படி நான் உன்னை அனுமதித்தேன்.
    நான் அந்த நகரங்களைப் பாழான மண்மேடாகும்படி மாற்றினேன்.
27 அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் பலவீனமானவர்களாக இருந்தார்கள்.
    அவர்கள் அச்சமும் குழப்பமும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் வயல்வெளியில் உள்ள புல்லைப்போல வெட்டப்படுகிறவர்களாக இருந்தார்கள்.
    வீடுகளுக்கு மேலே வளர்ந்துள்ள புல்லைப்போல அவர்கள் இருந்தனர். அது உயரமாக வளருவதற்கு முன் வனாந்தரத்து வெப்பக்காற்றால் எரிக்கப்படுகிறது.
28 உனது படையைப்பற்றியும், போர்களைப்பற்றியும் எனக்குத் தெரியும்.
    நீ எப்பொழுது ஓய்வெடுத்தாய், எப்பொழுது போருக்குப்போனாய் என்று எனக்குத் தெரியும்.
போரிலிருந்து எப்பொழுது வீட்டிற்கு வந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
    என்னிடத்தில் எப்போது கலக்கமடைந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
29 என் மீது நீ கோபத்தோடு இருக்கிறாய்.
    உனது பெருமையான சொற்களை நான் கேட்டேன்.
எனவே, நான் உனது மூக்கில் கொக்கியை மாட்டுவேன்.
    நான் உனது வாயில் கடிவாளத்தைப்போடுவேன்.
நீ வந்த அதே சாலையில்
    என் நாட்டை விட்டு நீ போகும்படி பலவந்தப்படுத்துவேன்.’”

எசேக்கியாவிற்கு கர்த்தருடையச் செய்தி

30 பிறகு கர்த்தர் எசேக்கியாவிடம், “நான் சொன்னவையெல்லாம் உண்மை என்பதைக் காட்ட உனக்கு ஒரு அடையாளம் தருவேன். இந்த ஆண்டு எந்த தானியத்தையும் விதைக்க மாட்டாய். எனவே இந்த ஆண்டு நீ சென்ற ஆண்டின் விளைச்சலில் காடு போல வளர்ந்த தானியம் மட்டுமே உண்பாய். ஆனால் மூன்று ஆண்டுகளில் நீ பயிர் செய்த தானியத்தையே உண்பாய். நீ அவற்றை அறுவடை செய்வாய். உண்பதற்கு உன்னிடம் ஏராளமாக இருக்கும். நீ திராட்சையைப் பயிர் செய்து அதன் பழங்களை உண்பாய்.

31 “யூதாவின் குடும்பத்தில் தப்பி மீதியாய் இருக்கிற ஜனங்கள் மறுபடியும் வளர ஆரம்பிப்பார்கள். அந்த ஜனங்கள், தரையில் தன் வேர்களை ஆழமாகச் செலுத்தி உறுதியாக வளர்ந்த செடிகளைப்போன்றவர்கள். அந்த ஜனங்களுக்கு மிகுதியான பழங்கள் (பிள்ளைகள்) பூமியின்மேல் இருக்கும். 32 ஏனெனில் எருசலேமை விட்டு வெளியே வந்த சில ஜனங்கள் மட்டும் உயிரோடு இருப்பார்கள். சீயோன் மலையில் இருந்து உயிரோடு வந்தவர்களும் இருப்பார்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய பலமான அன்பு இதனைச் செய்யும்.

33 எனவே, அசீரியா ராஜாவைப்பற்றி ஒரு செய்தி கர்த்தர் இதைக் கூறுகிறார்,

“அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
    இந்த நகரத்தில் அவன் ஒரு அம்பைக்கூட எய்யமாட்டான்.
அவனது கேடயங்களோடு இந்த நகரத்திற்கு எதிராக சண்டையிட நகரமாட்டான்.
    நகரச் சுவர்களில் அவன் கொத்தளம் அமைக்கமாட்டான்.
34 அவன் வந்த சாலையிலேயே அவனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான்.
    அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
    கர்த்தர் இதைச் சொல்லுகின்றார்.
35 இந்த நகரத்தை நான் பாதுகாத்து காப்பாற்றுவேன்.
    இதனை நான் எனக்காகவும், எனது தாசனாகிய தாவீதுக்காகவும் செய்வேன்” என்று கர்த்தர் சொல்கிறார்.

36 எனவே, அசீரியாவின் பாளையத்தில் உள்ள 1,85,000 ஆட்களை கர்த்தருடைய தூதன் போய் கொன்றான். மறுநாள் காலையில் ஜனங்கள் எழுந்தனர். அவர்கள் தங்களைச் சுற்றிலும் மரித்துப்போன ஆட்களின் உடல்களைக் கண்டனர். 37 எனவே, அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.

38 ஒரு நாள், சனகெரிப் அவனது தேவனான நிஸ்ரோகின் ஆலயத்தில் தொழுகை செய்வதற்காக இருந்தான். அந்த நேரத்தில் அவனது இரண்டு குமாரர்களான அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றனர். பிறகு, அந்த குமாரர்கள் அரராத்துக்கு ஓடிப்போனார்கள். எனவே, அசீரியாவின் புதிய ராஜாவாகச் சனகெரிப்பின் குமாரனான எசரத்தோன் வந்தான்.

எசேக்கியாவின் சுகவீனம்

38 அந்த நேரத்தில், எசேக்கியா சுகவீனம் அடைந்தான். அவன் மரணத்துக்கு சமீபமாயிருந்தான். ஆமோத்சின் குமாரனான ஏசாயா தீர்க்கதரிசி அவனைப் பார்க்க வந்தான்.

ஏசாயா ராஜாவிடம், “இவற்றை உன்னிடம் சொல்லுமாறு கர்த்தர் கூறினார்: நீ விரைவில் மரிப்பாய். எனவே, நீ மரித்தபிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனது குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நீ மீண்டும் குணமடையமாட்டாய்!” என்று கூறினான்.

எசேக்கியா ஆலயத்தின் சுவரின் பக்கம் திரும்பி ஜெபம் செய்யத் தொடங்கினான். “கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உண்மையாக உமக்குச் சேவை செய்ததை நினைத்தருளும். நீர் நல்லது என்று கூறியவற்றையே நான் செய்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான். பிறகு எசேக்கியா மிக உரத்த குரலில் கதறத் தொடங்கினான்.

ஏசாயா கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றான். ஏசாயா, “எசேக்கியாவிடம் போய் உனது முற்பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொன்னவை இதுதான் என்று அவனிடம் கூறு. உனது ஜெபத்தை நான் கேட்டேன். உனது கண்ணீரை நான் பார்த்தேன். நான் உனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளைக் கூட்டுவேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவிடமிருந்து காப்பாற்றுவேன், நான் இந்த நகரத்தை பாதுகாப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்றான்.

அவர் இவற்றையெல்லாம் செய்வார் என்பதைக் காண்பிக்கும்படி கர்த்தரிடமிருந்து வந்த அடையாளம் இதுதான். “பார், ஆகாசு சூரிய கடியாரத்தில் படிக்குப்படி இறங்கின சூரிய நிழலை பத்துப் படிகள் பின்னிட்டுத் திருப்புகிறேன். முன்பு இருந்த இடத்திலிருந்து சூரிய நிழல் பத்துப்பாகை பின்னால் போகும்” என்றான்.

எசேக்கியா நோயிலிருந்து குணமடைந்ததும் அவனிடமிருந்து வந்த கடிதம் இதுதான்.

10 நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன்.
    ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
11 எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன்.
    இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
12 எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும்.
    நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பதுபோல் நான் முடிந்து போகிறேன்.
    எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
13 ஒரு சிங்கத்தைப்போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன்.
    ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பதுபோன்று நொறுக்கப்பட்டன.
    இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
14 ஒரு புறாவைப்போன்று அலறினேன்.
    ஒரு பறவையைப்போன்று அலறினேன்.
எனது கண்கள் சோர்ந்துபோயின.
    ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப்போகிறேன்.
    எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
15 நான் என்ன சொல்லமுடியும்.
    என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார்.
    அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார்.
இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன்.
    எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
16 எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும்.
    என் ஆவி பலமும் நலமும் பெற உதவும்.
நான் நலம் பெற உதவும்!
    நான் மீண்டும் வாழ உதவும்!

17 பார்! எனது தொல்லைகள் போகின்றன!
    இப்போது எனக்கு சமாதானம் உள்ளது.
நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர்.
    நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர்.
எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர்,
    எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
18 மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை.
    பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை.
மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
    அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள்.
    அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
19 இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர்.
    ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
20 எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம்.
    எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்.”

21 பிறகு எசேக்கியாவிடம் ஏசாயா, “நீ அத்திப்பழங்களை பசையைபோன்று குழைத்து உனது புண்ணின்மேல் தடவவேண்டும். பிறகு நீ குணம் பெறுவாய்” என்றான்.

22 ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், “நான் குணமடைவேன் என்பதையும், நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதையும் நீரூபிக்கும் அடையாளம் எது?” என்று கேட்டிருந்தான்.

பாபிலோனிலிருந்து தூதுவர்கள்

39 அந்த நேரத்தில், பலாதானின் குமாரனான மெரோதாக் பலாதான் பாபிலோனின் ராஜாவாக இருந்தான். எசேக்கியாவிற்கு மெரோதாக் கடிதங்களையும், அன்பளிப்புகளையும் அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருந்து குணம் பெற்றதை மெரோதாக் கேள்விப்பட்டே அன்பளிப்புகளை அனுப்பினான். இந்த அன்பளிப்புகள் எசேக்கியாவை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. எனவே, எசேக்கியா தனது பொக்கிஷ சாலையிலுள்ள விலையுயர்ந்தவற்றை மெரோதாக்கின் ஆட்கள் பார்வையிட அனுமதித்தான். அந்த ஆட்களிடம் எசேக்கியா தனது செல்வங்களான வெள்ளி, தங்கம், எண்ணெய்வளம், விலைமதிப்புள்ள வாசனைப் பொருட்கள் என அனைத்தையும் காட்டினான். பிறகு அவன் போருக்குப் பயன்படுத்தும் வாள்கள் மற்றும் கேடயங்களையும் காட்டினான். தான் பாதுகாத்து வைத்திருந்த அனைத்தையும் அவன் அவர்களுக்குக் காட்டினான். அவன் தனது வீட்டிலும், தனது நாட்டிலும் உள்ள எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான்.

தீர்க்கதரிசியான ஏசாயா, ராஜாவாகிய எசேக்கியாவிடம் சென்று, “இந்த ஆட்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.

எசேக்கியா, “வெகு தொலைவிலுள்ள நாட்டிலிருந்து இவர்கள் வந்தார்கள். இவர்கள் பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று கூறினான்.

எனவே ஏசாயா அவனிடம் கேட்டான், “உனது வீட்டில் இவர்கள் என்ன பார்த்தார்கள்?” என்று கேட்டான்.

எசேக்கியா, “இவர்கள் எனது அரண்மனையில் உள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் எனது செல்வம் முழுவதையும் காட்டினேன்” என்று கூறினான்.

ஏசாயா எசேக்கியாவிடம், “சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனி. எதிர்காலத்தில், உன் அரண்மனையிலுள்ள அனைத்தும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்த உன்னிடமுள்ள அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். எல்லா செல்வமும் வெளியே எடுக்கப்படும். எதுவும் விடுபடாது! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதனைக் கூறினார். பாபிலோனின் ராஜா உனது சொந்த குமாரர்களை எடுத்துச் செல்வான்! பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் உனது குமாரர்கள் வேலைக்காரர்களாக இருப்பார்கள்” என்றான்.

எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தி நன்றாக உள்ளது” என்று கூறினான். (எசேக்கியா இதனைச் சொன்னான். ஏனென்றால், அவன், “நான் ராஜாவாக இருக்கும்போது தொல்லைகள் இல்லாமல் சமாதானம் இருக்கும்” என்று எண்ணினான்).

இஸ்ரவேலின் தண்டனை முடியும்

40 உனது தேவன் கூறுகிறார்,
    “ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்!
எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள்.
    உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது.
    ‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு.
கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும்
    இருமுறை தண்டித்தார்.”

கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்!
“கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்!
    நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்!
ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள்.
    ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள்.
    கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள்.
பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும்.
    கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள்.
ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!”
ஒரு குரல் சொன்னது, “பேசு!”
    எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?”
அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள்.
    அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
    அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது.
கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும்.
    அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும்.
    உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும்.
    ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”

மீட்பு: தேவனுடைய நற்செய்தி

சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன.
    உயரமான மலைக்கு மேலே போய் நற்செய்திகளை சத்தமாய் சொல்! எருசலேமே!
உன்னிடம், சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன அஞ்சவேண்டாம்.
    சாந்தமாய் பேசு! யூதாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் இந்தச் செய்திகளைக் கூறு: “பார், உன் தேவன் இங்கே இருக்கிறார்!”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார்.
    எல்லா ஜனங்களையும் ஆள அவர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார்.
கர்த்தர் தமது ஜனங்களுக்காக விருதுகளைக் கொண்டுவருவார்.
    அவரோடு அவர்களது பலன் இருக்கும்.
11 ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார்.
    கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்தி அவரது ஆடுகளை ஒன்று சேர்ப்பார்.
    கர்த்தர் சிறிய ஆடுகளை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொள்வார். அவற்றின் தாய் ஆடுகள் அவர் பின்னால் நடக்கும்.

தேவன் உலகைப் படைத்தார், அவர் அதனை ஆளுகிறார்

12 யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்?
    யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்?
யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்?
    யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான்.
13 கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
    கர்த்தரிடம் அவர் எப்படிச் செய்யவேண்டும் என யாரும் கூறவில்லை.
14 கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா?
    கர்த்தருக்கு நேர்மையாக இருக்கும்படி யாராவது கற்பித்தார்களா?
கர்த்தருக்கு அறிவை யாராவது கற்பித்தார்களா கர்த்தருக்கு ஞானத்தோடு இருக்குபடி யார் கற்பித்தது?
    இல்லை! கர்த்தர் இவற்றைப்பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கிறார்.
15 பார், நாடுகள் எல்லாம் வாளியில் ஒரு சிறு துளி போன்றது.
    வெகு தொலைவிலுள்ள நாடுகளை கர்த்தர் எடுத்துக்கொண்டால்
    அவரது தராசில் அவற்றை வைத்தால் அவை மணலின் சிறு பொடிகள் போன்று இருக்கும்.
16 லீபனோனில் உள்ள அனைத்து மரங்களும் கர்த்தருக்கு எரித்துப்போட போதாது.
    லீபனோனில் உள்ள அனைத்து மிருகங்களும் பலிக்காக கொல்வதற்குப்போதாது.
17 தேவனோடு ஒப்பிடும்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுமில்லை.
    தேவனோடு ஒப்பிடும்போது அனைத்து நாடுகளும் ஈடு ஒன்றுமே இல்லாமல் போகும்.

தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது

18 எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது!
    தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது!
19 ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து
    அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர்.
ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான்.
    பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான்.
    வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான்.
20 அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.
    அது உளுத்துப்போகாத மரவகையைச் சேர்ந்தது.
பிறகு, அவன் ஒரு சிறந்த மரத்தச்சனைக் கண்டுபிடிக்கிறான்.
    அந்த வேலைக்காரன் விழாமல் இருக்கிற ஒரு தெய்வம் செய்கிறான்.
21 நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா?
    நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்!
உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்!
    இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்!
22 கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
    அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள்.
அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார்.
    அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார்.
23 ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார்.
    அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார்.
24 ஆளுவோர் தாவரங்களைப்போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள்.
    ஆனால், அவை தரைக்குள் தன் வேர்களைச் செலுத்துவதற்குமுன்,
தேவன் அத்தாவரங்களின் மேல் ஊதுகிறார்.
    அவை செத்து காய்ந்து போகின்றன.
    பெருங்காற்று அவற்றை புல்லைப்போல அடித்துப்போகும்.
25 பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது.
    எனக்கு இணையாக ஒருவரும் இல்லை.

26 மேலே வானங்களைப் பாருங்கள்.
    இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்?
வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்?
    ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்?
உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர்.
    எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.

27 யாக்கோபே, இது உண்மை. இஸ்ரவேலே, நீ இதனை நம்பவேண்டும்!
    எனவே, நீ எதற்காக இதைக் கூறுகிறாய்?
“கர்த்தர் நான் வாழும் வழியை அறியமாட்டார்.
    தேவன் என்னைக் கண்டுபிடித்துத் தண்டிக்கமாட்டார்.”
28 தேவனாகிய கர்த்தர் மிகவும் ஞானமுள்ளவர் என்று நீ உறுதியாகக் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய்.
    ஜனங்கள் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கற்றுக்கொள்ள இயலாது.
கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை.
    கர்த்தர் தொலைதூர இடங்களைப் பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவிக்கிறார்.
29 கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார்.
    ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.
30 இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர்
    சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.
31 ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள்
    புதிய சிறகுகள் முளைக்கின்ற கழுகுகளைப்போல மீண்டும் பலம் பெறுகின்றனர்.
இந்த ஜனங்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள்.
    இந்த ஜனங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.

கர்த்தரே நித்திய சிருஷ்டிகர்

41 கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்!
    நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள்.
என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம்.
    யார் சரியென்று முடிவு செய்வோம்.
இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள்.
    கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்?
நன்மையானது அவரோடு நடக்கிறது.
அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார்.
    அவைகள் தூசிபோல ஆகின்றன.
    அவர் தமது வில்லைப் பயன்படுத்தி ராஜாக்களை வென்றார்.
    அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப்போன்று ஓடிப்போனார்கள்.
அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை.
    இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார்.
இவை நிகழக் காரணமாக இருந்தது யார்? இதனைச் செய்தது யார்?
    தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்?
    கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
கர்த்தராகிய நானே முதல்வர்!
    தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன்.
    எல்லாம் முடியும்போதும் நான் இங்கே இருப்பேன்.
வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்!
    பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள்.
    இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள்.

“தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள். ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.”

கர்த்தர் மாத்திரமே நம்மைக் காப்பாற்ற முடியும்

கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.
    யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
    ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.
பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள்.
    நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள்.
ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன்,
    ‘நீ எனது ஊழியன்.’
    நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை!
10 கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
    பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன்.
    நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
11 பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள்.
    உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள்.
12 நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள்.
    ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது.
    உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
13 நான் உனது தேவனாகிய கர்த்தர்.
    நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன்.
‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே!
    நான் உனக்கு உதவுவேன்.’
14 விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே.
    எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்!
    நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்.”

கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார்.

“நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்)
    உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார்.
15 பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன்.
    அது கூர்மையான பற்களை உடையது.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள்.
    அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள்.
    நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய்.
    நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய்.
16 நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய்.
    அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும்.
பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.
    இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்.”

17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள்.
    ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் தாகமாக இருக்கிறார்கள்.
    அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று.
அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன்.
    நான் அவர்களை விடமாட்டேன்.
    அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன்.
18 வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன்.
    பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன்.
வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன்.
    வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும்.
19 வனாந்திரங்களில் மரங்கள் வளரும்.
    அங்கு கேதுரு மரங்களும், சித்தீம் மரங்களும், ஒலிவ மரங்களும், சைப்பிரஸ் மரங்களும், ஊசி இலை மரங்களும், பைன் மரங்களும் இருக்கச் செய்வேன்.
20 ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
    கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள்.
ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
    அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்.”

பொய்த் தெய்வங்களுக்கு கர்த்தர் சவால் விடுகிறார்

21 யாக்கோபின் ராஜாவான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம். 22 உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம். 23 என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்.

24 “பாருங்கள், பொய்த் தெய்வங்களான நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்கள்! உங்களால் எதுவும் செய்யமுடியாது! அருவருப்பானவன் மட்டுமே உங்களை வழிபட விரும்புவான்!”

கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார்

25 “வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான்.
    அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான்.
பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல
    அந்தச் சிறப்பானவன் ராஜாக்களை அழிப்பான் (மிதிப்பான்).

26 “இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது.
    நாம் அவனை தேவன் என்று அழைப்போம்.
எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை.
    அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
    அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது.
27 கர்த்தராகிய நானே சீயோனிடம் இதைப் பற்றிச் சொன்ன முதல் நபர்.
    இந்தச் செய்திகளோடு ஒரு தூதுவனை நான் எருசலேமிற்கு அனுப்பினேன்.
    ‘பாருங்கள், உங்கள் ஜனங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்!’”

28 நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன்.
    அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல.
    அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை!
29 அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்!
    அவைகளால் எதுவும் செய்யமுடியாது!
    அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center