Book of Common Prayer
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
61 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
    என் ஜெபத்தைக் கேளும்.
2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
    எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
    நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
    நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
    உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
6 ராஜாவுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
    அவர் என்றென்றும் வாழட்டும்!
7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
    உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.
    நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
    என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
    ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
    உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
    பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
    நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி
    அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
    வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
    தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
6 தேவனே என் அரண்.
    தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
    உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
    அவர் எனக்குப் பலமான அரண்.
    தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
    தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
    தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
9 மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
    உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
    ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
    திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
    அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
    வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
    ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
    அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
2 காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
    நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
3 ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
    நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
    நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
4 தேவனை நோக்கிப் பாடுங்கள்.
    அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
    அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
    அவரது நாமத்தைத் துதியுங்கள்.
5 அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
    தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
6 தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
    தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
7 தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
    நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
8 பூமி அதிர்ந்தது,
    இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
9 தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
    மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
    தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
11 தேவன் கட்டளையிட்டார்,
    பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர்.
12 “வல்லமையுள்ள ராஜாக்களின் படைகள் ஓடிப்போயின!
    வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர்.
    வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
13 அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.)
    புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள்.
    அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”
14 சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார்.
    அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.
15 பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை.
16 பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்?
    தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார்.
    என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
17 பரிசுத்த சீயோன் மலைக்கு கர்த்தர் வருகிறார்.
    அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன.
18 உயர்ந்த மலையில் அவர் ஏறினார்.
    சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார்.
எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார்.
    தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார்.
19 கர்த்தரைத் துதியுங்கள்!
    ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
    தேவன் நம்மை மீட்கிறார்.
20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
    நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
21 தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
    அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார்.
22 என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
    மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
23 நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய்,
    உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார்.
24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள்.
    என் ராஜாவாகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள்.
    பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள்.
    இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்!
    இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான்.
    அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது.
அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.
28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்!
    கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு,
    ராஜாக்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.
30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும்.
    அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
போரில் அத்தேசங்களை நீர் வென்றீர்.
    இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும்.
    தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.
32 பூமியிலுள்ள ராஜாக்களே, தேவனைப் பாடுங்கள்!
    நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!
33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார்.
    அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்.
    இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர்.
    இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார்.
தேவனைத் துதியுங்கள்!
17 அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர், 18 “ராஜாவிடம் போ, அவன் நாபோத்தின் வயலில் உள்ளான். சொந்தமாக்கப் போகிறான். 19 அவனிடம், ‘ஆகாப்! நீ நாபோத்தைக் கொன்றாய், அவனது வயலை எடுக்கப்போகிறாய். நாபோத் மரித்த இடத்திலேயே நீயும் மரிப்பாய். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் உனது இரத்தத்தையும் நக்கும்’ என்று நான் சொன்னதாகச் சொல்”! என்றார்.
20 எனவே எலியா ஆகாபிடம் சென்றான். ராஜாவோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான்.
அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். 21 எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். 22 உனது குடும்பமானது நேபாத்தின் குமாரனான ராஜா யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். 23 கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். 24 உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான்.
25 ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். 26 அவன் மரவிக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை. எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார்.
27 எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான்.
28 கர்த்தர் எலியாவிடம், 29 “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார்.
20 தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார். 21 தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.
22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 24 ஆனால், தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார். 25 தேவனுடைய மடமை கூட மனிதரின் ஞானத்திலும் சிறந்தது. தேவனுடைய சோர்வும் கூட மனிதரின் பலத்தைக் காட்டிலும் வலிமை உடையது.
26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 27 ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். 28 உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். 29 எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். 30 உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார். 31 எனவே எழுதப்பட்டுள்ளபடி “ஒருவர் பெருமைப்படுவதாக இருந்தால், தேவனில் மட்டுமே பெருமைப்பட வேண்டும்.”(A)
கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்
(மாற்கு 1:14-15; மத்தேயு 4:14-15)
12 யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். 13 இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். 14 தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்:
15 “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும்
    யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில்
16 யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா.
    பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர்.
ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும்
    அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.”(A)
17 அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.
2008 by World Bible Translation Center