Book of Common Prayer
148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
    பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது சேனைகள்[a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
    நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
    வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
    ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
    என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
    சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
    புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
    கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
    ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் ராஜாக்களையும் தேவன் உண்டாக்கினார்.
    தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
    முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
    அவர் நாமத்தை என்றென்றும்
    மகிமைப்படுத்துங்கள்!
    பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
    தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
    ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
    தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்.
149 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
    சீயோனின் ஜனங்கள் அவர்களின் ராஜாவோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
    அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
    அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
    அவர் அவர்களை மீட்டார்!
5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
    படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.
6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
    அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
    அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
8 தேவனுடைய ஜனங்கள் அந்த ராஜாக்களுக்கும் அங்குள்ள முக்கியமான
    ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
    தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
கர்த்தரைத் துதியுங்கள்!
150 கர்த்தரைத் துதியுங்கள்!
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
    பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
2 அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
    அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
3 எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
    வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
4 தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
    நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
5 ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
    பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!
6 எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!
கர்த்தரைத் துதிப்போம்!
114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
    யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
2 யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
    இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
3 செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
    யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
4 ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
    ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
5 செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
    யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
6 மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
    மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
7 யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
    பூமி நடுங்கி அதிர்ந்தது.
8 கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
    கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.
115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
    மகிமை உமக்கே உரியது.
    உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
2 எங்கள் தேவன் எங்கே என்று
    ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
3 தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
    அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
4 அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
    அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
5 அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
    அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
6 அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
    அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
7 அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
    அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
    அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
8 அச்சிலைகளைச் செய்து,
    அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
9 இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
    கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
    உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
    அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
    ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
    கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
    இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.
அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.
22 பிறகு சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்தின் முன்பு நின்றான். அனைவரும் அவனுக்கு முன்பு நின்றனர். 23 அவன் தன் கைகளை விரித்து வானத்தை நோக்கி,
“இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப் போன்று வேறு ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய ஜனங்களிடம் அன்பாயிருந்ததால் அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டீர். அதனைக் காப்பாற்றினீர். உம்மைப் பின்பற்றுபவர்களிடம் கருணையோடும் உண்மையோடும் இருந்தீர். 24 உமது சேவகனான என் தந்தை தாவீதிடம், ஒரு வாக்குறுதி தந்தீர். அதையும் காப்பாற்றினீர். உம்முடைய வாயாலேயே அந்த வாக்குறுதியைச் செய்தீர். அதை உண்மையாக்கிட உம்முடைய சொந்த பலத்தைப் பயன்படுத்தினீர். 25 இப்போது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தாவீதிற்குத் தந்த மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நீர், ‘உன் குமாரர்கள் உன்னைப்போலவே எனக்குக் கவனமாகக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் பிறகு எப்பொழுதும் உன் குடும்பத்தில் உள்ளவர்களே இஸ்ரவேல் ஜனங்களை ஆள்வார்கள்’ என்று சொன்னீர். 26 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தந்தைக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்றும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
27 “ஆனால், தேவனே உண்மையில் நீர் இந்தப் பூமியில் எங்களோடு வாழ்கின்றீரா? வானங்களும், வானாதி வானங்களும் உமக்குப் போதாதே. என்னால் கட்டப்பட்ட இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28 ஆனால் என் ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் தயவுசெய்து கேளும். நான் உமது ஊழியன், நீர் எனது தேவனாகிய கர்த்தர், இன்று என் ஜெபத்தைக் கேட்டருளும். 29 முன்பு நீர், ‘அங்கே நான் மகிமைப்படுத்தப்படுவேன்’ என்றீர். இவ்வாலயத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும். இந்த ஆலயத்தில் நான் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும் 30 கர்த்தாவே, நானும் இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே உம்மிடம் திரும்பி ஜெபிக்கிறோம். தயவு செய்து அந்த ஜெபங்களைக் கேளும்! நீர் பரலோகத்தில் இருப்பதை அறிவோம். அங்கிருந்து எங்கள் ஜெபங்களைக் கேட்டு எங்களை மன்னியும்.
31 “எவனாவது ஒருவன் இன்னொருவனுக்குத் தப்பு செய்தால், அவன் இங்கே பலிபீடத்திற்குக் கொண்டு வரப்படுவான். அவன் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால், ஒரு சத்தியம் செய்துக்கொள்வான். தான் ஒன்றும் அறியாதவன் என்று அவன் வாக்குறுதி செய்யவேண்டும். 32 பரலேகத்திலிருந்து கவனித்து நியாயம் வழங்கவேண்டும். அவன் குற்றவாளியானால், தயவு செய்து அதை எங்களுக்கு உணர்த்தும். அவன் ஒன்றும் அறியாத அப்பாவியாக இருந்தால், அவன் குற்றமற்றவன் என்பதை உணர்த்தியருளும்.
33 “சில நேரங்களில் உமது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யலாம், அவர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்கலாம். பிறகு அவர்கள் உம்மைத் துதிப்பார்கள், இந்த ஆலயத்தில் வந்து ஜெபம் செய்வார்கள். 34 தயவு செய்து பரலோகத்திலிருந்து அவற்றைக் கேளும். அவர்களை மன்னித்து நமது நாட்டைப் பெற்றுக்கொள்ளும்படி உதவும், நீர் இந்த நாட்டை அவர்களின் முற்பிதாக்களுக்கு தந்துள்ளீர்.
35 “சில வேளைகளில் இவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வதினால், நீர் மழையை நிறுத்திவிடுகிறீர். பிறகு அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஜெபித்து உம்மைத் துதித்து உமது பேரையும் புகழையும் பாடுவார்கள். நீர் துன்புறுத்த, அவர்கள் தமது பாவங்களுக்காக வருந்துவார்கள். 36 தயவு செய்து பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபத்தைக் கேளும். பிறகு எங்களது பாவங்களை மன்னியும். ஜனங்களுக்கு சரியான வழிகளை கற்பியும். கர்த்தாவே, உமது ஜனங்களுக்கு வாரிசுரிமையாகக் கொடுத்த மண்ணுக்கு மழையை அனுப்பிவையும்.
37 “இந்த பூமி வறண்டு போகலாம், உணவுப் பொருட்கள் விளையாமல் போகலாம், அல்லது ஜனங்களிடம் பெருநோய் பரவலாம் அல்லது பயிர்கள் புழுப் பூச்சிகளால் அழிக்கப்படலாம் அல்லது பகைவர்களால் ஜனங்கள் தம் நகரங்களில் தாக்கப்படலாம் அல்லது ஜனங்களுக்கு நோய் வரலாம். 38 இவற்றில் ஏதாவது ஒன்று ஏற்பட்டு, ஜனங்களில் ஒவ்வொருவனும் மனம்மாற விரும்பி, ஆலயத்தை நோக்கித் தன் கைகளை ஏறெடுத்து ஜெபம் செய்தால், 39 தயவு செய்து கவனியும். நீர் உமக்குரிய இடமாகிய பரலோகத்தில் இருந்தாலும் கவனியும். அவர்களை மன்னித்து உதவிசெய்யும். உமக்கு மட்டுமே மனிதர்கள் உண்மையாக நினைப்பது தெரியும். எனவே, ஒவ்வொருவரையும் அவரவர் செய்கிறபடி நடத்தும். 40 எங்கள் முற்பிதாக்களுக்காக நீர் கொடுத்த இந்நாட்டில் நாங்கள் வாழும்வரை உமக்கு பயந்துநடப்போம்.
7 மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். 8 உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். 9 நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
47 தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார்.
இயேசுவும்-ஆபிரகாமும்
48 யூதர்கள் இயேசுவிடம், “நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?” என்று கேட்டனர்.
49 “என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை. 50 நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி. 51 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை” என்றார் இயேசு.
52 யூதர்களோ இயேசுவிடம், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும்கூட இறந்துபோய்விட்டார்கள். ஆனால் நீயோ, ‘என் உபதேசத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை’ என்று கூறுகிறாய். 53 எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக்கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்துபோனார். தீர்க்கதரிசிகளும் இறந்துபோயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டனர்.
54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். 56 உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” என்றார்.
57 யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர்.
58 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. 59 இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.
2008 by World Bible Translation Center