Book of Common Prayer
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்.
63 தேவனே, நீரே என் தேவன்.
    நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
    என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
    நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
    என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
    உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
    மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
    நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
    நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
    நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
    அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் ராஜாவோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
    அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
    ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.
ஒரு துதிப்பாடல்.
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
    கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
    மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
    கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
    தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
    துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
    சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
    எங்கள் ராஜாவாகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
    அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
    எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
    அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
    அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
தாவீதின் ஒரு பாடல்.
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
    அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
    அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
    அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
    பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
    அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
    தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
    கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
    ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
    அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
    அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
    கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
    நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
    நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
    அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
    பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
    என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
    தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
    அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
    அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
    தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
    நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
    நீங்கள் அவரது பணியாட்கள்.
    தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
    எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
    அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
7 ஜனங்கள் சவுலிடம் வந்து தாவீது கேகிலாவில் இருப்பதை அறிவித்தனர். அதற்கு சவுல் “தேவன் தாவீதை எனக்குக் கொடுத்தார்! அவன் தானே வலைக்குள் விழுந்திருக்கிறான். அவன் பூட்டிப் போடக்கூடிய கோட்டைக் கதவுகளை உடைய நகரத்திற்குள் போய்விட்டான்” என்றான். 8 சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.
9 தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை கொண்டு வா” என்றான்.
10 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எனக்காக சவுல் இந்நகரத்திற்கு வந்து அதை அழிக்கப்போவதாக அறிந்தேன். 11 சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!” என்று வேண்டினான்.
“சவுல் வருவான்” என்று கர்த்தர் பதிலுரைத்தார்.
12 மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான்.
“அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
13 எனவே தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவை விட்டு விலகினார்கள். அவனோடு 600 பேர் சென்றனர். அவர்கள் ஒவ்வொரு இடமாக நகர்ந்தனர். கேகிலாவிலிருந்து தாவீது தப்பிவிட்டதை சவுல் அறிந்தான். எனவே அவன் அந்நகரத்திற்குப் போகவில்லை.
சவுல் தாவீதைத் துரத்துகிறான்
14 பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை.
15 சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான். 16 ஆனால் சவுலின் குமாரனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். 17 யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் ராஜா ஆவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான்.
18 யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான்.
தேவனுக்கு மகிமை
33 ஆமாம். தேவனுடைய செல்வம் மிகவும் பெருமை மிக்கது. அவரது அறிவுக்கும் ஞானத்துக்கும் எல்லை இல்லை. தேவன் தீர்மானிப்பதை ஒருவராலும் விளக்க முடியாது. தேவனுடைய வழிகளை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.
34 “கர்த்தரின் மனதை அறிந்தவன் யார்?
    தேவனுக்கு அறிவுரைகளைத் தரத் தகுந்தவர் யார்?”(A)
35 “தேவனுக்கு யாரேனும் எதையேனும் கொடுத்ததுண்டா?
    மற்றவர்க்கு எதையும் தேவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை”(B)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
36 ஆமாம். தேவனே அனைத்தையும் உருவாக்கினார். தேவனாலும், தேவனுக்காகவும் தொடர்ச்சியாய் எல்லாம் இயங்குகின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
வாழ்க்கையை தேவனுக்குக் கொடுங்கள்
12 சகோதர சகோதரிகளே! ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். 2 உலகிலுள்ள மக்களைப் போன்று ஆக வேண்டுமென உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் மனதில் புதிய எண்ணங்களால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு தேவனுடைய விருப்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்ய முடியும். நல்லவை எவை, தேவனுக்கு விருப்பமானவை எவை என்று உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
மூன்று வேலைக்காரர்களைப் பற்றிய உவமை
(லூக்கா 19:11-27)
14 “பரலோக இராஜ்யம், தன் வீட்டை விட்டு வேறொரு இடத்திற்குப் பயணமான ஒருவனுக்கு ஒப்பாகும். புறப்பட்டுச் செல்வதற்கு முன் அவன் தனது மூன்று வேலைக்காரர்களுடன் பேசினான். தான் புறப்பட்டுச் சென்றபின் தனது உடமைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொன்னான். 15 ஒவ்வொரு வேலைக்காரனும் எதைப் பார்த்துக் கொள்ள முடியுமென அவன் தீர்மானித்தான். அதற்கேற்ப ஒருவனிடம் ஐந்து பை நிறையப் பணமும்[a] மற்றொருவனிடம் இரண்டு பை நிறையப் பணமும் மூன்றாவது வேலைக்காரனிடம் ஒரு பை நிறையப் பணமும் கொடுத்தான். பின் அவன் புறப்பட்டுப் போனான். 16 ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது. 17 அதே போல இரண்டு பை பணம் பெற்றவனுக்கும் நடந்தது. அவன் தான் பெற்ற இரண்டு பை பணம் முதலிட்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டினான். 18 ஆனால், ஒரு பை பணம் பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.
19 “நீண்ட காலம் கழித்து எஜமானன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன செய்தார்கள் எனத் தன் மூன்று வேலைக்காரர்களிடமும் கேட்டான். 20 ஐந்து பை பணம் பெற்ற வேலைக்காரன் மேலும் ஐந்து பை பணத்தைக் கொண்டு வந்து தன் எஜமானிடம் சொன்னான், ‘எஜமானே! நீர் என்னை நம்பி ஐந்து பை பணம் தந்தீர்கள். ஆகவே, நான் அதை முதலிட்டு மேலும் ஐந்து பை பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான்.
21 “அதற்கு எஜமானன், ‘நீ செய்தது சரி. நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிது பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய், மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்!’ என்றான்.
22 “பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான்.
23 “அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்!’ என்றான்.
24 “பின் ஒரு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர் நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். 25 எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான்.
26 “எஜமான் அவனை நோக்கி, ‘நீ ஒரு மோசமான சோம்பேறி வேலைக்காரன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். 27 எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான்.
28 “ஆகவே, எஜமானன், தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம் வைத்திருப்பவனிடம் கொடுங்கள். 29 தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவனும் மேலும் அதிகம் பெறுவான். அவனுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகக் கிடைக்கும். ஆனால் தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்தாதவனிடமிருந்து அனைத்தும் பறிக்கப்படும்.’ என்றான். 30 பிறகு அந்த எஜமானன், ‘பயனற்ற அந்த வேலைக்காரனைத் தூக்கி வெளியே இருளில் எறியுங்கள். அவ்விடத்தில் மக்கள் கூக்குரலிட்டு பற்களைக் கடித்துக் கொண்டு வேதனையால் அழுது கொண்டிருப்பார்கள்’ என்றான்.
2008 by World Bible Translation Center