Book of Common Prayer
“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல்.
45 ராஜாவுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும்.
    தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
2 நீரே யாவரினும் அழகானவர்!
    நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார்.
3 வாளை எடும்.
    மேன்மையான ஆடைகளை அணியும்.
4 நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்!
    நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும்.
    அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும்.
5 உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன.
    நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது ராஜாவாயிரும்.
6 தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும்.
    நன்மையே உமது செங்கோலாகும்.
7 நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர்.
    எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார்.
8 வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும்.
    தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும்.
9 மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர்.
    உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.
10 மகளே, கேள்,
    கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11     ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
    நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
    அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
13 அரச குமாரத்தி
    பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
    மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
    மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
    தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
    என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
47 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,
    தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.
    பூமியெங்கும் அவர் பேரரசர்.
3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
    அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.
    தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.
5 எக்காளமும் கொம்பும் முழங்க,
    கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.
6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
    நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
7 அகில உலகத்திற்கும் தேவனே ராஜா.
    துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.
    எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.
9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்
    தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள்.
எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள்.
    தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
48 கர்த்தர் மேன்மையானவர்.
    தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
    அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
    அதுவே பேரரசரின் நகரமாகும்.
3 அந்நகரத்து அரண்மனைகளில்
    தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4 ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து,
    இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5     அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
    அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
    பெருங்கப்பல்களை உடைத்தீர்.
8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
    ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
    தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
    பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
    நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
    யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
    நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
    சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
    வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
    அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்
15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
    ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
    படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
    அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
    அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.
17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
    அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
    எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
    அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.
19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20     பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
    கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.
21 ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. 22 ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். 23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.
அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தல்
(மத்தேயு 10:1-4; மாற்கு 3:13-19)
12 அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். 13 மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:
14 சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்)
அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன்,
யாக்கோபு,
யோவான்,
பிலிப்பு,
பர்தொலொமேயு,
15 மத்தேயு,
தோமா,
யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்),
சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்)
16 யூதா, (யாக்கோபின் குமாரன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள்.
இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.
போதனையும்-குணமாக்குதலும்
(மத்தேயு 4:23-25; 5:1-12)
17 இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். 18 அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும் தங்கள் நோய்களில் இருந்து குணம் பெறவும் அங்கு வந்தனர். பிசாசின் அசுத்த ஆவிகளால் துன்புற்ற மக்களை இயேசு குணமாக்கினார். 19 எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றனர். ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இயேசு அவர்கள் எல்லோரையும் குணப்படுத்தினார்.
20 இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து,
“ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது.
21 இப்போது பசியால் வாடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள்.
இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    ஏனெனில் நீங்கள் சந்தோஷமாக நகைப்பீர்கள்.
22 “மக்கள் உங்களை வெறுக்கும்போதும் நிராகரிக்கும்போதும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் மனித குமாரனுக்கு உரியோர். ஆதலால் உங்களைத் தீயோர் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 23 உங்களுக்குப் பரலோகத்தில் பெரிய வெகுமதி காத்திருப்பதால் இத்தருணங்களில் நீங்கள் மகிழுங்கள். உங்களை அவர்கள் மிக இழிவான முறையில் நடத்துவதைப்போலவே அவர்கள் முன்னோர் தீர்க்கதரிசிகளையும் இழிவுபடுத்தினர்.
24 “ஆனால் செல்வந்தர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் சுகமாக வாழ்ந்ததால் இனிமேல் அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
25 இப்போது திருப்தி பெற்ற மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
    ஏனெனில் நீங்கள் பசியடைவீர்கள்.
தற்போது சிரிக்கும் மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
    ஏனெனில் நீங்கள் வேதனையும் அழுகையும் அடைவீர்கள்.
26 “எல்லாரும் உங்களைக் குறித்து நல்லதாகச் சொல்லுகையில் மோசமானதே நேரும். பொய் தீர்க்கதரிசிகளைக் குறித்து அவர்கள் முன்னோர் நல்லதாகவே சொன்னார்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center