Book of Common Prayer
93 கர்த்தர் ராஜா.
அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
அது அசைக்கப்படுவதில்லை.
2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.
96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
7 குடும்பங்களும் தேசங்களும்
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
அவர் உலகை ஆளுகை செய்வார்.
[a] தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.
34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
யூதர்களை அழிப்பதற்கான ஆமானின் திட்டம்
3 இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு ராஜா ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் குமாரன். இவன் ஆகாகியன். ராஜா ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான். 2 ராஜாவின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று ராஜா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான். 3 பிறகு, அரச வாசலில் உள்ள ராஜாவின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர்.
4 நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான். 5 மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான். 6 மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான்.
7 அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது). 8 பிறகு, ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு ராஜாவே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது ராஜாவாகிய உமக்கு நல்லதல்ல.
9 “இது ராஜாவுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை ராஜாவின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.
10 எனவே, ராஜா தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரன். ஆமான் யூதர்களின் எதிரி. 11 பிறகு ராஜா ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான்.
12 பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் ராஜாவின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் ராஜாவின் நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். ராஜா அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
13 தூதுவர்கள் ராஜாவின் அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் ராஜாவின் கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது.
14 கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள். 15 ராஜாவின் கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. ராஜாவும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது.
மொர்தெகாய் உதவிக்காக எஸ்தரை தூண்டுகிறான்
4 நடந்த அனைத்தையும் மொர்தெகாய் கேள்விப்பட்டான். யூதர்களுக்கு எதிரான ராஜாவின் கட்டளையைக் கேட்டதும் அவன் தனது ஆடையைக் கிழித்தான். துக்கத்திற்கு அடையாளமான ஆடையை அணிந்து தலையில் சாம்பலை போட்டுக்கொண்டான். பிறகு அவன் நகரத்திற்குள் உரத்தக்குரலில் அழுதவண்ணம் சென்றான். 2 ஆனால் மொர்தெகாய் ராஜாவின் வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். 3 எல்லா நாடுகளிலும் ராஜாவின் கட்டளை போய்ச் சேர்ந்தது. அதனால் யூதர்களிடம் அழுகையும், துக்கமும், அதிகரித்தன. அவர்கள் உரத்த அழுகையுடன் உபவாசத்தை கடைப்பிடித்தனர். பல யூதர்கள் துக்கத்திற்கான ஆடையை அணிந்தும் தலைகளில் சாம்பலைப் போட்டுக்கொண்டும் தரையில் விழுந்துகிடந்தனர்.
கவனிப்பதும் கீழ்ப்படிவதும்
19 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாகவும், கோபிப்பதில் தாமதமாகவும் இருங்கள். 20 ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது. 21 எனவே உங்களைச் சுற்றி மிகுந்த அளவில் இருக்கிற எல்லாவிதமான அழுக்கையும், தீமையையும் நீங்கள் ஒழித்துவிட்டு உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற வல்ல போதனையைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
22 தேவன் சொல்கிறபடி செய்கிறவர்களாக இருங்கள். போதனையைக் கேட்கிறவர்களாக மட்டுமே இருந்து தம்மைத் தாமே வஞ்சித்துக்கொள்கிறவர்களாக இருக்காதீர்கள். 23 ஒருவன் தேவனுடைய போதனையைக் கேட்டுவிட்டு எதுவும் செயல்படாமல் இருந்தால் அது ஒருவன் கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தைத் தானே பார்த்துக்கொள்வது போன்றது ஆகும். 24 அவன் தன்னைத் தானே பார்த்து, அந்த இடம் விட்டுப் போனபிறகு தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். இதுவும் அதைப் போன்றதுதான். 25 முழுமையான தேவனுடைய சட்டத்தை ஆழமாக ஆராய்ந்து, கேட்டு மறந்துவிடுகிறவனாக இல்லாமல் தொடர்ந்து அதைப் படித்து அதன்படி நடக்கிறவன் தான் செய்வதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறான். தேவனுடைய சட்டம் மக்களை விடுதலையடையச் செய்கிறது.
தேவனை வழிபடுகிற உண்மையான வழி
26 தெய்வ பக்தி உள்ளவன் என ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தன் நாக்கை அவன் அடக்கிக்கொள்ளவில்லையெனில், தன்னைத்தானே அவன் முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன் “தெய்வ பக்தி” பயனற்றதாக இருக்கின்றது. 27 பிதாவாகிய தேவன் தூய்மையானதும் குற்றமற்றதுமென எண்ணுகிற வழிபாடு என்பது உதவி தேவைப்படுகிற விதவைகள், அனாதைகள் ஆகியோர்மேல் அக்கறை கொள்வதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்வதுமே ஆகும்.
தர்மம் செய்வதைப் பற்றிய போதனை
6 “நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.
2 “நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். 3 எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். 4 உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
பிரார்த்தனை பற்றி போதித்தல்
(லூக்கா 11:2-4)
5 “நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
உபவாசத்தைப் பற்றிய போதனை
16 “நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள். 17 எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள். 18 எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
2008 by World Bible Translation Center