Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 68

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.

68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
    அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
    நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
    நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
    நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.

தேவனை நோக்கிப் பாடுங்கள்.
    அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
    அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
    அவரது நாமத்தைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
    தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
    தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.

தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
    நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.

பூமி அதிர்ந்தது,
    இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
    மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
    தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.

11 தேவன் கட்டளையிட்டார்,
    பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர்.
12 “வல்லமையுள்ள ராஜாக்களின் படைகள் ஓடிப்போயின!
    வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர்.
    வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
13 அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.)
    புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள்.
    அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”

14 சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார்.
    அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.
15 பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை.
16 பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்?
    தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார்.
    என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
17 பரிசுத்த சீயோன் மலைக்கு கர்த்தர் வருகிறார்.
    அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன.
18 உயர்ந்த மலையில் அவர் ஏறினார்.
    சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார்.
எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார்.
    தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார்.

19 கர்த்தரைத் துதியுங்கள்!
    ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
    தேவன் நம்மை மீட்கிறார்.

20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
    நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
21 தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
    அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார்.
22 என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
    மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
23 நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய்,
    உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார்.

24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள்.
    என் ராஜாவாகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள்.
    பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள்.
    இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்!
    இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான்.
    அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது.
அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.

28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்!
    கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு,
    ராஜாக்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.
30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும்.
    அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
போரில் அத்தேசங்களை நீர் வென்றீர்.
    இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும்.
    தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.

32 பூமியிலுள்ள ராஜாக்களே, தேவனைப் பாடுங்கள்!
    நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!

33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார்.
    அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்.
    இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர்.
    இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார்.

தேவனைத் துதியுங்கள்!

சங்கீதம் 72

சாலொமோனுக்கு.

72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
    உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
    உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
    திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
    அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.

சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
    என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
    பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
    சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.

ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
    கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
    புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
    ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
    எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.

12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
    ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
    ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
    அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.

15 ராஜா நீடூழி வாழ்க!
    அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
    மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
    நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
    சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
    அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.

18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
    தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
    அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!

20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.

1 இராஜாக்கள் 19:9-18

அங்கு ஒரு குகையில் இரவில் தங்கினான்.

அப்போது கர்த்தர், “இங்கே ஏன் இருக்கிறாய்?” என்று எலியாவிடம் பேசினார்.

10 அதற்கு எலியா, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்னால் முடிந்தஅளவு சிறப்பாக சேவை செய்திருக்கிறேன். ஆனால் இஸ்ரவேலர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை அழித்தனர். உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். இப்பொழுது ஒரே தீர்க்கதரிசியான என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்!” என்று முறையிட்டான்.

11 கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல! 12 அதற்குப்பின், நெருப்பு உருவானது. அதுவும் கர்த்தர் அல்ல. நெருப்புக்குப்பின், அமைதியான மென்மையான சத்தம் வந்தது.

13 எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது.

14 எலியாவோ, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என்னால் முடிந்தவரை உமக்கு எப்போதும் சேவை செய்து வருகிறேன். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது உடன்படிக்கையில் இருந்து நழுவி மீறிவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை உடைத்தனர். அவர்கள் உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். நான் மட்டுமே ஒரே தீர்க்கதரிசியாக உயிரோடு இருக்கிறேன். இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்” என்றான்.

15 கர்த்தர், “சாலைக்குப் போ, அது தமஸ்குவிற்கு போகும். அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் ராஜாவாக அபிஷேகம் செய், 16 பிறகு, இஸ்ரவேலின் ராஜாவாக நிம்சியின் குமாரனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய். 17 ஆசகேல் பல தீயவர்களைக் கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை யெகூ கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை எலிசா கொன்றுவிடுவான். 18 எலியா, நீ மட்டும் இஸ்ரவேலில் உண்மையானவன் என்றில்லை. இன்னும் பலர் இருக்கிறார்கள். நான் 7,000 பேரின் உயிரை மீதியாக வைப்பேன். 7,000 இஸ்ரவேலர் பாகாலை வணங்காதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் பாகாலின் விக்கிரகத்தை முத்தமிடுவதில்லை” என்றார்.

எபேசியர் 4:17-32

நீங்கள் வாழ வேண்டிய வழி

17 கர்த்தருக்காக நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் எச்சரிப்பதாவது: நம்பிக்கை அற்றவர்களைப் போன்று நீங்களும் தொடர்ந்து வாழக் கூடாது. அவர்களது சிந்தனைகள் பயனற்றவை. 18 அந்த மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் மனம் மூடியது, இதயம் கடினமானது, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எனவே தேவன் கொடுக்கிற வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. 19 அவர்கள் தங்கள் வெட்க உணர்வை இழந்துவிட்டனர். தீயவற்றைச் செய்வதற்காகவே தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா வகையான கெட்ட செயல்களையும் செய்ய அவர்கள் மேலும், மேலும் விரும்புகிறார்கள். 20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல. 21 அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது. 22 உங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுவிடவும், எப்போதும் தீமையைத் தருகிற பழைய குணங்களை ஒதுக்கவும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது மேலும் மோசமாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தீயவற்றால் முட்டாளாக்கப்பட்டு அவற்றையே புதுப்பிக்க விரும்புகிறார்கள். 23 ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். 24 நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று செய்யப்படுகிறான். உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான்.

25 எனவே நீங்கள் பொய் சொல்வதை நிறுத்துங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் பல்வேறு உறுப்புகளாகச் சேர்ந்திருக்கிறோம். 26 உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள். 27 உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம். 28 ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும்.

29 நீங்கள் பேசும்போது தீயவற்றைச் சொல்லாதீர்கள். ஆனால் மற்றவர்களுக்குப் பயன் தரத்தக்கதும், மற்றவர்களைப் பலமுள்ளதாக்குகிறவைகளை மட்டும் பேசுங்கள். அதனால் உங்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு உங்கள் பேச்சு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். 30 பரிசுத்த ஆவியானவரைச் சோகப்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்குரியவராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆவியானவரே சான்றாக உள்ளார். தேவன் உங்களுக்குச் சரியான நேரத்தில் விடுதலை தருவார் என்பதைக் காட்டவே தேவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்துள்ளார். 31 கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள். 32 ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருங்கள். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்துவிடுவதைப்போல நீங்களும் மற்றவர்களை மன்னித்துவிடுங்கள்.

யோவான் 6:15-27

15 அவரை மக்கள் ராஜாவாக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசு தண்ணீர் மீது நடத்தல்

(மத்தேயு 14:22-27; மாற்கு 6:45-52)

16 அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர். 17 அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர். 18 காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன. 19 அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். 20 “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். 21 இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.

மக்கள் இயேசுவைத் தேடுதல்

22 மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். 23 அப்போது திபேரியாவிலிருந்து சில படகுகள் வந்தன. அப்படகுகள், கர்த்தர் நன்றி சொன்னதற்குப் பின் மக்கள் உணவு உண்ட இடத்தின் அருகில் நின்றன. 24 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.

ஜீவ அப்பமான இயேசு

25 கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர்.

26 “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். 27 பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center