Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 105

105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
    அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
    அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
    அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
    ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
    உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
    அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
    நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.

கர்த்தரே நமது தேவன்.
    கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.

தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.
    ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார்.
10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
    அது என்றென்றும் தொடரும்!
11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
    அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.

12 ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார்.
    அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர்.
13 அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும்,
    ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள்.
14 ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை.
    அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் ராஜாக்களை எச்சரித்தார்.
15 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள்.
    எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.

16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார்.
    ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.
17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார்.
    யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள்.
    அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான்.
    யோசேப்பு நேர்மையானவன் என்பதை கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.
20 எனவே எகிப்திய ராஜா அவனை விடுதலை செய்தான்.
    தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார்.
    அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.
22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான்.
    யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.
23 பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்.
    யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.
24 யாக்கோபின் குடும்பம் பெருகிற்று.
    அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.
25 எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள்.
    அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.
26 எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார்.
    தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.
27 காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு
    தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.
28 தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார்.
    ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.
29 எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார்.
    எல்லா மீன்களும் மடிந்தன.
30 அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று.
    ராஜாவின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.
31 தேவன் கட்டளையிட்டார்.
    ஈக்களும் பேன்களும் வந்தன.
    அவை எங்கும் நிரம்பின.
32 தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
    நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.
33 தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்.
    அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.
34 தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன.
    அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!
35 வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும்,
    வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.
36 பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார்.
    தேவன் முதலில் பிறந்த குமாரர்களைக் கொன்றார்.

37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
    அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர்.
    தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.
    ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.
    தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார்.
40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.
    தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.
    பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
    தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.
    மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.
    பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
    அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.

கர்த்தரைத் துதியுங்கள்!

2 இராஜாக்கள் 18:28-37

28 பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக,

“இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய ராஜா உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான். 29 ராஜா, ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான். 30 அதுபோல் கர்த்தர் மீது நம்பிக்கையை அவன் ஏற்படுத்தும்படியும் விடாதீர்கள். ஏனென்றால் எசேக்கியா, ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்! இந்நகரத்தை அசீரிய ராஜாவால் தோற்கடிக்க முடியாது!’ என்று கூறுகிறான்.

31 “ஆனால் அவன் கூறுவதைக் கேட்கவேண்டாம்! அசீரிய ராஜா: என்னோடு சமாதானமாக இருங்கள். என்னோடு வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைபழங்களைத் தின்னலாம், அத்திப்பழங்களைத் தின்னலாம், சொந்தக் கிணற்றிலுள்ளத் தண்ணீரைக் குடிக்கலாம். 32 நீங்கள் இதனை நான் உங்களை அழைத்துப்போய் இதுபோன்ற இன்னொரு நாட்டில் குடியேற்றும்வரை செய்யலாம். அந்த நிலம் தானியங்களும் திராட்சைரசமும் நிறைந்தது, அப்பமும் திராட்சைக் கொடிகளும் நிறைய ஒலிவமரமும் தேனும் நிறைந்தது. பிறகு நீங்கள் மரிக்க வேண்டாம், வாழலாம்.

“எசேக்கியா கூறுவதை கேளாதீர்கள். அவன் உங்கள் மனதை மாற்ற முயல்கிறான். அவனோ, ‘கர்த்தர் நம்மைக் காப்பார்’ என்கிறான். 33 இது போல் வேறு எந்த நாட்டிலாவது அங்குள்ள தேவர்கள் அந்த நாட்டை அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றி இருக்கிறதா? இல்லையே! 34 ஆமாத் மற்றும் அர்பாத் எனும் தெய்வங்கள் என்ன ஆனார்கள்? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என்றைக்காவது காப்பாற்றியதுண்டா? இல்லை! 35 வேறு எந்த நாட்டிலேனும் வேறு எந்த தெய்வங்களும் என்னிடமிருந்து அந்நாட்டைக் காப்பற்றியதுண்டா? இல்லை! கர்த்தர் என்னிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவாரா? காப்பாற்ற முடியாது” என்றான்.

36 ஆனால் ஜனங்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் தளபதிக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஏனென்றால் ராஜாவாகிய எசேக்கியா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவன், “நீங்கள் அவனுக்கு எதையும் சொல்லவேண்டாம்” என்று கூறி இருந்தான்.

37 இல்க்கியா என்பவனின் குமாரனான எலியாக்கீம், (ராஜாவின் அரண்மனைக்குப் பொறுப்பானவன் எலியாக்கீம்.) செப்னா (செயலாளர்) ஆகாப் என்பவனின் குமாரன் யோவாக் (பதிவேடுகள் பாதுகாப்பாளர்) எல்லாரும் எசேக்கியாவிடம் வந்தார்கள். அவர்களின் ஆடைகள் கிழிந்தவை. (அவர்களின் துக்கத்தையும் கவலையையும் காட்டியது) ஆசாரியன் தளபதி சொன்னதையெல்லாம் எசேக்கியாவிடம் அவர்கள் சொன்னார்கள்.

1 கொரி 9:1-15

நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.

சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன். உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. படையில் சேவை புரியும் எந்த வீரனும் தன் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை. திராட்சையை விதைக்கிற யாரும் அதன் பழத்தை உண்ணாமல் இருப்பதில்லை. மந்தையை மேய்க்கிற எவரும் அதன் பாலைப் பருகாமல் இருப்பதில்லை.

இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. ஆம், மோசேயின் சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளது “உழைக்கும் மிருகத்தை, தானியத்தைப் பிரிக்கப் பயன்படுத்தும்போது அதன் வாயை மூடாதே. அது தானியத்தை உண்ணாதபடி தடை செய்யாதே.”(A) தேவன் இதைக் கூறியபோது, அவர் உழைக்கும் மிருகங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாரா? இல்லை. 10 இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும். 11 நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல. 12 பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம். 13 தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும். 14 நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.

15 ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும்.

மத்தேயு 7:22-29

22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.

இரண்டுவித மனிதர்கள்

(லூக்கா 6:47-49)

24 “என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான். 25 கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.

26 “என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான். 27 கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”

28 இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர். 29 வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center