Book of Common Prayer
97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
2 அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
3 கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
அது பகைவரை அழிக்கிறது.
4 வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
5 கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
6 வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!
7 ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
8 சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
9 மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் ராஜா.
பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!
99 கர்த்தர் ராஜா.
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
நன்றி கூறும் பாடல்.
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
94 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
2 நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
3 கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
6 அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
7 அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
8 தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்?
கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்!
நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
9 தேவன் நமது காதுகளை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்!
தேவன் நமது கண்களை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.
16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.
20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார்.
எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார்.
95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
2 கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
3 ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
4 ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
5 சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
6 வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
7 அவரே நமது தேவன்!
நாம் அவரது ஜனங்கள்.
அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
8 தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
9 உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா
29 எசேக்கியா அவனது 25 வது வயதில் ராஜா ஆனான். அவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் அபியாள். இவள் சகரியாவின் குமாரத்தி. 2 அவன் செய்யவேண்டு மென கர்த்தர் விரும்பியபடியே எசேக்கியா செயல்களைச் செய்து வந்தான். இவனது முற்பிதாவான தாவீது சரியானவை என்று எவற்றைச் செய்தானோ அவற்றையே இவனும் செய்துவந்தான்.
3 எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குக் கதவுகளைப் பொருத்தினான். அதனைப் பலமுள்ளதாக ஆக்கினான். எசேக்கியா மீண்டும் ஆலயத்தைத் திறந்தான். அவன் ராஜாவாகிய முதல் ஆண்டின் முதல் மாதத்திலேயே இதனைச் செய்தான்.
எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான்
30 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு எசேக்கியா ராஜா செய்திகளை அனுப்பினான். அவன் எப்பிராயீம் மற்றும் மனாசேயின் ஜனங்களுக்கும் கடிதம் எழுதினான். எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் அனைவரையும் எசேக்கியா அழைத்தான். அவன் எல்லா ஜனங்களையும் வந்திருந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அழைத்தான். 2 எசேக்கியா ராஜா தனது அனைத்து அதிகாரிகளிடமும் எருசலேமில் உள்ள சபையார்களிடமும் பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட ஒப்புக்கொண்டான். 3 அவர்கள் சரியான வேளையில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் பரிசுத்த சேவைசெய்வதற்குப் போதுமான ஆசாரியர்கள் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளவில்லை. எருசலேமில் ஜனங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடாததும் இன்னொரு காரணமாகும். 4 இந்த ஒப்பந்தம் எசேக்கியா ராஜாவையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது, 5 எனவே இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பெயர்செபா முதல் தாண் நகரம்வரை இது பற்றி அறிவிப்பு செய்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாட அனைவரையும் வரும்படி அவர்கள் ஜனங்களிடம் சொன்னார்கள். பஸ்கா பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று மோசே சொன்னபடி நீண்ட நாட்களாக பெரும்பகுதி இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடவில்லை. 6 எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் ராஜாவின் கடிதத்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்:
இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா ராஜாக்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார். 7 உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம். 8 உங்கள் முற்பிதாக்களைப் போன்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனப்பூர்வமான விருப்பத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். மகா பரிசுத்தமான இடத்திற்கு வாருங்கள். பின்பு மகா பரிசுத்தமான இடத்தைக் (ஆலயத்தை) கர்த்தர் எக்காலத்திற்கும் பரிசுத்தமாக்கியுள்ளார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். பிறகு கர்த்தருடைய அஞ்சத்தக்க கோபம் உங்களைவிட்டு விலகும். 9 நீங்கள் திரும்பி வந்து கர்த்தருக்கு அடிபணிந்தால் பிறகு உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் சிறை பிடித்தவர்களிடம் இருந்து இரக்கத்தைப் பெறுவார்கள். உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் இந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அன்பும் இரக்கமும் கொண்டவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் உங்களை விட்டு விலகிப் போகமாட்டார்.
10 தூதுவர்கள் எப்பிராயீம் மனாசே ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்றனர். செபுலோன் நாடுவரையுள்ள வழி எங்கும் போயினர். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்து கேலிச் செய்தனர். 11 ஆனால் ஆசேர், மனாசே, செபுலோன் ஆகிய நாடுகளில் சிலர் அவற்றைக் கேட்டுப் பணிவுடன் எருசலேம் சென்றனர். 12 மேலும், யூதாவில் ஜனங்கள் ராஜாவுக்கும், அவனது அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுமாறு தேவனுடைய வல்லமை ஜனங்களை ஒன்றிணைத்தது. இந்தவிதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
13 எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது. 14 அவர்கள் அங்குள்ள அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை அகற்றினார்கள். அவற்றுக்கான நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடங்களையும் அகற்றி அவற்றை கீதரோன் பள்ளத் தாக்கிலே எறிந்தார்கள். 15 பின்னர் அவர்கள் இரண்டாவது மாதத்தின் 14வது நாளன்று பஸ்காவுக்கான ஆட்டுக்குட்டியை கொன்றார்கள். ஆசாரியரும் லேவியரும் வெட்கப்பட்டனர். தங்களை அவர்கள் பரிசுத்தச் சேவைக்காகத் தயார் செய்துகொண்டனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தனர். 16 தேவமனிதனாகிய மோசேயின் சட்டம் சொன்னபடி அவர்கள் ஆலயத்தில் தங்களது வழக்கமான இடத்தில் இருந்தார்கள். லேவியர்கள் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். பிறகு ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 17 அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
18-19 எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய நகரங்களிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் பஸ்கா பண்டிகையை சரியான வழியில் கொண்டாடத் தம்மைத் தயார் செய்துக்கொள்ளவில்லை. மோசேயின் சட்டம் கூறியபடி அவர்கள் பஸ்காவை முறையாகக் கொண்டாடவில்லை. ஆனால் அவர்களுக்காக எசேக்கியா ஜெபம் செய்தான். எனவே அவன், “தேவனாகிய கர்த்தாவே! நீர் நல்லவர். இந்த ஜனங்கள் உண்மையிலேயே உம்மை சரியாக தொழுதுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை சட்டப்படி பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. தயவுசெய்து அவர்களை மன்னியும். நீர் எங்கள் முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவன். சிலர் மகா பரிசுத்தமான இடத்திற்குத் தக்கவாறு தம்மை பரிசுத்தப் படுத்திக்கொள்ளாவிட்டாலும் அவர்களை மன்னித்தருளும்” என்று ஜெபித்தான். 20 எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார். 21 இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர். 22 எசேக்கியா ராஜா, எவ்வாறு கர்த்தருக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதை அறிந்த லேவியர்களை உற்சாகப்படுத்தினான். ஜனங்கள் 7 நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி சமாதானப் பலிகளைக் கொடுத்துவந்தனர். தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை அவர்கள் நன்றியுடன் போற்றித்துதித்தார்கள்.
23 அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். 24 எசேக்கியா ராஜா 1,000 காளைகளையும் 7,000 செம்மறி ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்து கொன்று உண்ணச் சொன்னான். தலைவர்கள் 1,000 காளைகளையும், 10,000 ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்தனர். பல ஆசாரியர்கள் பரிசுத்தச் சேவைசெய்வதற்குத் தம்மைத் தயார் செய்துக்கொண்டனர். 25 யூதாவின் அனைத்து சபையோர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலில் இருந்து வந்த சபையோர்களும், இஸ்ரவேலிலிருந்து யூதாவிற்குப் பயணிகளாகச் செல்வோரும் மிகவும் மகிழ்ந்தனர். 26 எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் குமாரனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை. 27 ஆசாரியர்களும், லேவியர்களும் எழுந்து நின்று கர்த்தரிடம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்கள். தேவன் அவற்றைக் கேட்டார். அவர்களின் ஜெபங்கள் கர்த்தருடைய பரிசுத்த வீடான பரலோகத்திற்கு வந்தது.
32 நீங்கள் கவலையினின்று விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். திருமணம் ஆகாதவன் கர்த்தரின் வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறான். 33 ஆனால், திருமணமானவனோ உலகத்துப் பொருள்கள் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறான். 34 அவன் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதும், கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும் ஆகியவை அவை. திருமணம் ஆகாத பெண்ணோ, ஒரு இளம்பெண்ணோ கர்த்தரின் வேலையில் முனைவாள். கர்த்தருக்கு சரீரத்தையும் ஆன்மாவையும் முழுக்க அர்ப்பணிக்க விரும்புகிறாள். ஆனால், திருமணமான பெண்ணோ உலகக் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். அவள் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாள். 35 உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
36 ஒருவனின் குமாரத்தி திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல. 37 ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான். 38 தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான்.[a]
39 எவ்வளவு காலம் கணவன் உயிரோடு இருக்கிறானோ அதுவரைக்கும் ஒரு பெண் அவனோடு சேர்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் அவள் கணவன் இறந்தால், அப்பெண் தான் விரும்புகிற யாரையேனும் மணந்துகொள்ளும் உரிமை பெறுகின்றாள். ஆனால், கர்த்தருக்குள் அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். 40 பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாய் இருக்கிறாள். இது எனது கருத்து. தேவனுடைய ஆவி எனக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன்.
நியாயம் தீர்ப்பதைப்பற்றி போதனை
(லூக்கா 6:37-38,41-42)
7 “மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். 2 நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.
3 “உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? 4 ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. 5 மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள்.
6 “புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்.
தேவனிடம் கேட்டுப்பெறுதல்
(லூக்கா 11:9-13)
7 “தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். 8 ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
9 “உங்களில் யாருக்கேனும் குமாரன் உண்டா? உங்கள் குமாரன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. 10 அல்லது, உங்கள் குமாரன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. 11 நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ?
மிகமுக்கியமான சட்டம்
12 “மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும்.
2008 by World Bible Translation Center