Book of Common Prayer
மேம்
97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
நூன்
105 கர்த்தாவே, உமது வார்த்தைகள்
என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
106 உமது சட்டங்கள் நல்லவை.
நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
சாமெக்
113 கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
114 என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.
கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
115 கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.
நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
116 கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.
நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
117 கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.
நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
118 கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.
ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
119 கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.
எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
120 கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.
நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று.
81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
3 மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
4 அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
5 தேவன் யோசேப்பை[a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.
6 தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
7 நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”
8 “எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
9 வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
நான் உன்னைப் போஷிப்பேன்.
11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்.”
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
82 தேவன் தேவர்களின் சபையில்[b] நிற்கிறார்.
தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.
2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”
3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
அவர்கள் புரிந்துகொள்ளார்கள்!
அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள்.
அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
6 நான் (தேவன்),
“நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்.
7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.
8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!
தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!
எலிசாவும் கோடரியும்
6 தீர்க்கதரிசிகளின் குழு எலிசாவிடம், “நாங்கள் அங்கிருக்கும் இடத்தில் தங்கியிருக்கிறோம், ஆனால் அது மிகவும் சிறியது. 2 நாம் யோர்தான் ஆற்றுவெளிக்குப் போய் கொஞ்சம் மரங்களை வெட்டிவருவோம். ஒவ்வொருவரும் ஒரு மரத்தடி கொண்டுவந்தால் வசிப்பதற்கு ஒரு இடம் அமைக்கலாம்” என்றனர்.
எலிசாவும், “நல்லது, போய் செய்யுங்கள்” என்றான்.
3 அவர்களில் ஒருவன், “எங்களோடு வாரும்” என்று அழைத்தான்.
எலிசாவும், “நல்லது நான் உங்களோடு வருகிறேன்” என்றான்.
4 எனவே எலிசாவும் தீர்க்கதரிசிகளின் குழுவோடு சென்றான். அவர்கள் யோர்தான் ஆற்றை அடைந்ததும் சில மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். 5 ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், “ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!” என்று கூறினான்.
6 தேவமனுஷனோ, (எலிசா) “எங்கே அது விழுந்தது?” என்று கேட்டான்.
அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது. 7 எலிசா, “கோடரியை எடுத்துக்கொள்” என்றான். பிறகு அவன் கை வைத்து அதனை எடுத்துக்கொண்டான்.
ஆராமின் ராஜா இஸ்ரவேல் ராஜாவைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான்
8 ஆராமின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தான். வேலைக்காரர்களோடும் படை அதிகாரிகளோடும் ஆலோசனை கூட்டம் நடத்தினான். ராஜா, “இந்த இடத்தில் ஒளிந்திருங்கள். இஸ்ரவேலின் படைகள் வரும்போது தாக்க வேண்டும்” என்றான்.
9 ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, “எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!” என்று சொல்லச் செய்தான்.
10 உடனே ராஜா எலிசாவின் எச்சரிக்கைச் செய்தியை தன் படைவீரர்களுக்கு அந்த இடத்திற்கு அனுப்பி பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.
11 இதை அறிந்ததும் ஆராமின் ராஜா மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, “நம் திட்டத்தை இஸ்ரவேல் ராஜாவுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?” என்று கேட்டான்.
12 ஒரு அதிகாரி, “எங்கள் ராஜாவும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையும் கூட, இஸ்ரவேலில் இருக்கிற தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் ராஜாவிடம் சொல்ல முடியும்!” என்றான்.
13 அதற்கு ராஜா, ஆட்களை அனுப்பி “போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்” என்றான்.
வேலைக்காரர்களோ, “எலிசா தோத்தானில் இருக்கிறார்” என்றனர்.
14 பிறகு ராஜா குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர். 15 தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), “எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
16 எலிசாவோ, “பயப்படவேண்டாம், ஆராம் ராஜாவுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்” என்றான்.
17 பிறகு அவன் ஜெபம் செய்து “கர்த்தாவே! என் வேலைக்காரனின் கண்ணை திறந்துவிடும். அதனால் அவன் கண்டுகொள்வான்” என்று வேண்டிக்கொண்டான்.
அந்த வேலைக்காரனின் கண்களை கர்த்தர் திறந்தார். அவன் பார்த்தபோது, மலை முழுவதும் படை வீரர்களும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைப் பார்த்தான் அவர்கள் எலிசாவை சுற்றியிருந்தனர்!
18 பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்து நின்றதும், அவன் கர்த்தரிடம், “இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார். 19 எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான்.
20 அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான்.
பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்! 21 இஸ்ரவேலின் ராஜா ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு எலிசா, “இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்கள் உன் வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்கள் அல்ல! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு” என்றான்.
23 ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் ராஜா நிறைய உணவைத் தயாரித்தான். ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் ராஜா ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்குமேல் படைகளை அனுப்பவில்லை.
9 பாலுறவில் பாவம் செய்யும் மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது என்று என் கடிதத்தில் எழுதி இருந்தேன். 10 உலக இயல்பின்படி வாழ்கின்ற மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாது என்று நான் கருதவில்லை. உலக இயல்பின்படியான வாழ்வை உடைய அம்மக்களும் பாலுறவுரீதியாகப் பாவச் செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் சுயநலம் உள்ளவர்களாகவோ, பிறரை ஏமாற்றுபவராகவோ உள்ளனர். அவர்கள் உருவங்களை வணங்குகின்றனர். அவர்களைவிட்டு விலக வேண்டுமானால் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டியதிருக்கும். 11 நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாத மக்களை உங்களுக்கு இனம் காட்டுவதற்காகவே இதை எழுதுகிறேன். தன்னைக் கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரனாகக் கூறியும் பாலுறவில் பாவம் செய்கின்றவனுடனும், தன்னலம் பொருந்தியவனுடனும், உருவங்களை வணங்குபவனோடும், மற்றவர்கள் மீது களங்கம் சுமத்துபவனோடும், மது அருந்துபவனோடும், மக்களை ஏமாற்றுகின்றவனோடும் நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது. அப்படிப்பட்டவர்களோடு அமர்ந்து உணவு உட்கொள்ளுதலும் கூடாது.
12-13 சபையின் அங்கம் அல்லாத அந்த மனிதர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவது எனது வேலையல்ல. தேவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். சபையின் அங்கத்தினருக்கு நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும். “தீயவனை உன்னிடமிருந்து விலக்கிவிடு” என்று எழுதப்பட்டிருக்கிறது.
பிரச்சனைகளைத் தீர்த்தல்
6 உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? 2 தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். 3 எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். 4 எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். 5 நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். 6 ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?
7 உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். 8 ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.
பழிவாங்குதல் பற்றிய போதனை
(லூக்கா 6:29-30)
38 “‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’(A) என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.
அனைவரையும் நேசியுங்கள்
(லூக்கா 6:27-28,32-36)
43 “‘உன் சினேகிதனை நேசி.(B) உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center