Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 24

தாவீதின் பாடல்.

24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
    உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
    ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.

கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
    கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
    யார் அங்கு வழிபட முடியும்?
தீயவை செய்யாத ஜனங்களும்,
    பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
    பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.

நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
    அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
    யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
    மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
யார் இந்த மகிமைமிக்க ராஜா?
    கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
    கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
    மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
    சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
    அவரே மகிமை மிக்க ராஜா.

சங்கீதம் 29

தாவீதின் பாடல்.

29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
    உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
    மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
    அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
    லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
    இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
    இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
    கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
    கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.

10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
    என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
    கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.

சங்கீதம் 8

கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்.

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
    விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.

பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
    உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.

கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
    நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
    ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
    ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?

ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
    அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
    மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
ஆடுகள், பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
வானத்துப் பறவைகளையும்
    சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது!

சங்கீதம் 84

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
    ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
    உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
    அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
    ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
    தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
    இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
    ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.

தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
    நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.

10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
    எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
    தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
    தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
    உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.

2 சாமுவேல் 1:17-27

சவுல், யோனத்தான் பற்றிய தாவீதின் சோககீதம்

17 சவுலையும் அவனது குமாரன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான். 18 அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது.

19 “இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது.
    ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்!
20 அச்செய்தியைக் காத்[a] நகரில் கூறாதே,
    அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே.
அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்!
    அந்த அந்நியர்கள் மகிழக்கூடும்.
21 மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன்.
    அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன்.
வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன.
    சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை.
22 வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான்.
    வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல்.
இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்!
    வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர்.

23 “சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர்.
    மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை!
அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள்.
    அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள்.
24 இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்!
    இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்!

25 “போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
    கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.
26 சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன்.
    உனது அன்பு பெருமகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு.
27 போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
    போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”

ரோமர் 12:9-21

உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். 10 சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். 11 நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள். 12 உங்களுக்கு விசுவாசம் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். 13 தேவனுடைய மக்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்யுங்கள். அம்மக்களுக்கு உங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுங்கள்.

14 உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். 15 மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள். 16 ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழுங்கள். எவ்வளவு ஞானம் எனக்கு உண்டு என்று மமதை கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கு முக்கியமாய்த் தோன்றாதவர்களோடும் கூட நட்புடன் இருங்கள். சுய பெருமை பாராட்டாதீர்கள்.

17 யாரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களுக்குத் தீமையையே திரும்பிச் செய்யாதீர்கள். எல்லாராலும் நல்லவை என்று எண்ணப்படுவதையே நீங்களும் எவ்வளவு செய்ய முடியும் என்று பாருங்கள். 18 முடிந்தளவு எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள். 19 என் அன்பு நண்பர்களே, எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள்.

“நானே தண்டிக்கிறேன்.
    நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(A)

என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது.

20 “உங்கள் பகைவன் பசியாய் இருந்தால்
    அவனுக்கு உணவைக் கொடுங்கள்.
அவன் தாகமாய் இருந்தால் அவன்
    குடிக்க ஏதாவது கொடுங்கள்.
இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.”(B)

21 பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.

மத்தேயு 25:31-46

மனிதகுமாரனின் நியாயத்தீர்ப்பு

31 “மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். ராஜாவாகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார்.

34 “பின் ராஜாவானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. 35 நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். 36 நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார்.

37 “அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? 38 எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? 39 எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள்.

40 “பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார்.

41 “பின் ராஜா தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டார். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. 42 நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. 43 நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.

44 “அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள்.

45 “அப்போது ராஜா, ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார்.

46 “பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center