Book of Common Prayer
துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளை கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது.
102 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
2 கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
3 என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
4 என் வலிமை போயிற்று.
நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
5 என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
6 பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
7 என்னால் தூங்க இயலவில்லை.
கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
8 என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
9 என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
10 ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.
11 பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
என் ஆயுள் குறைந்தது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
அவையெல்லாம் மாறிப்போகும்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
நீர் என்றென்றும் வாழ்வீர்!
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.
தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்
142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
143 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
2 உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
3 ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள்.
அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
4 நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.
5 ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
6 கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
7 விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
நான் என் தைரியத்தை இழந்தேன்.
என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும்.
கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
8 கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
நான் உம்மை நம்புகிறேன்.
நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும்.
நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
9 கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
நீரே என் தேவன்.
11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும்.
என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.
என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும்.
ஏனெனில் நான் உமது ஊழியன்.
எரேமியாவின் ஐந்தாவது முறையீடு
7 கர்த்தாவே, நீர் என்னிடம் தந்திரம் செய்தீர்.
நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
நீர் என்னைவிட பலமுள்ளவர்.
எனவே நீர் வென்றீர்.
நான் வேடிக்கைக்குரிய பொருளானேன்.
ஜனங்கள் என்னைப் பார்த்து சிரித்தனர்.
நாள் முழுவதும் என்னை வேடிக்கை செய்தனர்.
8 ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது கதறுகிறேன்.
நான் எப்பொழுதும் வன்முறை மற்றும் பேரழிவு பற்றி சத்தமிடுகிறேன்.
நான் கர்த்தரிடமிருந்து பெற்ற வார்த்தையைப்பற்றி ஜனங்களிடம் சொல்கிறேன்.
ஆனால், ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்;
என்னை வேடிக்கை செய்கிறார்கள்.
9 சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன்.
“நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன்.
நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!”
ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது,
எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது!
எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்!
இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
10 ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன்.
எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன்.
என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள்.
அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள்.
அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள்.
நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும்.
பிறகு அவனைப் பெறுவோம்.
இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம்.
பிறகு அவனை இறுகப்பிடிப்போம்.
அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள்.
11 ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்;
கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார்.
எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள்.
அவர்கள் ஏமாந்துப் போவார்கள்.
அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.
ஜனங்கள் அந்த அவமானத்தை
என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
14 என் அன்புக்குரிய நண்பர்களே, அதனால் நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகுங்கள். 15 நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 16 நாம் நன்றியறிதலுடன் பங்குபெறும் ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பங்கிடுவதாகும். நாம் பகிர்ந்துண்ணும் அப்பமோ கிறிஸ்துவின் சரீரத்தைப் பகிர்தலாகும். 17 ஒரு அப்பம் உள்ளது. நாமோ பலர். ஆனால் அந்த ஒரே அப்பத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். எனவே நாம் உண்மையாகவே ஒரே சரீரமாக இருக்கிறோம்.
27 எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். 28 இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். 29 கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். 30 எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். 31 நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். 32 ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார்.
சீஷர்களுக்காகப் பிரார்த்தனை
17 இவற்றையெல்லாம் இயேசு சொன்ன பிறகு, அவர் தனது கண்களால் வானத்தை (பரலோகத்தை) அண்ணாந்து பார்த்தார். “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார். 2 உமது குமாரன் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கும்படியாக அனைத்து மக்கள் மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர். 3 அந்த மனிதர்கள், நீர்தான் உண்மையான தேவன் என்பதையும் உம்மால் அனுப்பப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்பதையும் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு தெரிந்துகொள்வதுதான் நிரந்தரமான வாழ்க்கை. 4 நான் செய்யுமாறு நீர் கொடுத்த வேலைகளை நான் முடித்துவிட்டேன். நான் பூமியில் உம்மை மகிமைப்படுத்தினேன். 5 இப்பொழுது, உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்.
6 “உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். 7 நீர் எனக்குத் தந்தவையெல்லாம் உம்மிடமிருந்து வந்தவை என்று அவர்கள் இப்போது தெரிந்துகொண்டனர். 8 நீர் எனக்குக் கொடுத்த போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். உண்மையாகவே நான் உம்மிடமிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். நீர் என்னை அனுப்பிவைத்ததையும் அவர்கள் நம்புகிறார்கள். 9 நான் அவர்களுக்காக இப்பொழுது வேண்டுகிறேன். நான் உலகில் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீர் எனக்குக் கொடுத்த மக்களுக்காக வேண்டுதல் செய்கிறேன். ஏனென்றால் அவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையவை எல்லாம் உம்முடையவை. உம்முடையவை எல்லாம் என்னுடையவை. அவர்களில் நான் மகிமை அடைந்திருக்கிறேன்.
11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள். 12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.
13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். 14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.
15 “அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். 16 நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள். 17 உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. 18 நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன். 19 நான் சேவைக்காக என்னைத் தயார் செய்து கொண்டேன். நான் இதனை அவர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களும் உமது சேவைக்காக உண்மையில் தம்மைத் தயார் செய்துகொள்வார்கள்.
20 “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவர்களுக்காக மட்டுமல்ல இவர்களுடைய உபதேசங்களால் என்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். 21 பிதாவே, என்னில் நம்பிக்கை வைக்கிற அனைவரும் ஒன்றாயிருப்பதற்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். நீர் என்னில் இருக்கிறீர். நான் உம்மில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கும்படிக்கும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆகையால் இவ்வுலகம் நீர் என்னை அனுப்பினதில் நம்பிக்கைகொள்ளும். 22 நீர் எனக்குத் தந்த மகிமையை நான் தருவதால் அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். நானும் நீரும் ஒன்றாக இருப்பது போல, 23 நான் அவர்களில் இருப்பேன்; நீர் என்னில் இருப்பீர். ஆக அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். பிறகு இந்த உலகம் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொள்ளும். நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோலவே நீர் அவர்களிடமும் அன்பாக இருக்கிறீர் என்பதையும் உலகம் தெரிந்து கொள்ளும்.
24 “பிதாவே! நீர் எனக்குத் தந்த இவர்கள், நான் எங்கே இருந்தாலும் என்னுடனே இருக்குமாறு விரும்புகிறேன். அவர்கள் என் மகிமையைக் காண வேண்டும் எனவும் விரும்புகிறேன். உலகம் உண்டாவதற்கு முன்னரே நீர் என்னுடன் அன்பாக இருந்தீர். இதனால் எனக்கு நீர் மகிமை தந்தீர். 25 பிதாவே! நீர் நல்லவராக இருக்கிறீர். இந்த உலகம் உம்மை அறிந்துகொள்ளவில்லை. ஆனால் உம்மை நான் அறிந்துகொண்டுள்ளேன். இந்த மக்கள் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொண்டுள்ளனர். 26 உம்மை நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். இன்னும் வெளிப்படுத்துவேன். பிறகு நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோன்று அவர்களும் அன்பாக இருப்பார்கள். நானும் அவர்களுக்குள் வாழ்வேன்” என்றார்.
2008 by World Bible Translation Center