Book of Common Prayer
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று
75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
2 தேவன் கூறுகிறார்:
“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”.
4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
6 ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
எதுவும் இப்பூமியில் இல்லை.
7 தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
8 தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
9 நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்
76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில் [a] இருக்கிறது.
தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
தாவீதின் பாடல்
23 கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
தாவீதின் பாடல்
27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
7 கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
8 கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
9 கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
என்னை விட்டு விடாதிரும்!
என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.
பாபிலோன் அழிக்கப்படுதல்
18 பிறகு வேறொரு தூதன் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவனுக்கு மிகுதியான அதிகாரம் இருந்தது. அவனுடைய மகிமையால் பூமி ஒளி பெற்றது. 2 அத்தூதன் உரத்த குரலில் கூவினான்:
“அவள் அழிக்கப்பட்டாள்!
மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது!
அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள்.
அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று.
எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது.
அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று.
3 அவளுடைய வேசித்தனத்தினுடையதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லாத் தேசங்களும் குடித்தன.
உலகிலுள்ள அரசர்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்.
உலகிலுள்ள வியாபாரிகள் அவளது மாபெரும் செல்வச் செழிப்பில் இருந்து செல்வர்கள் ஆனார்கள்.”
4 பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன்.
“ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில்
உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள்.
பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது.
5 அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன.
தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை.
6 அவள் கொடுத்ததைப்போலவே நீங்களும் அந்நகருக்கு கொடுங்கள்.
அவள் கொடுத்ததைப்போல இருமடங்கு திருப்பிச் செலுத்துங்கள்.
மற்றவர்களுக்கு அவள் தயாரித்த அடர்த்தியான மதுவைப்போல இருமடங்கு அடர்த்தியான மதுவை அவளுக்காகத் தயார் செய்யுங்கள்.
7 அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள்.
அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்.
அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி.
நான் விதவை அல்ல.
நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள்.
8 எனவே ஒருநாளில் இக்கேடுகள் அவளுக்கு வரும்.
அவை மரணம், அழுகை, பெரும் பசியாய் இருக்கும்.
அவள் நெருப்பால் அழிக்கப்படுவாள்.
ஏனென்றால் அவளை நியாயந்தீர்க்கிற தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”
9 “அவளோடு வேசித்தனம் புரிந்து அவளுடைய செல்வத்தைப் பகிர்ந்துகொண்ட பூமியின் எல்லா அரசர்களும் அவள் எரியும்போது வரும் புகையைக் காண்பார்கள். அவளது மரணத்துக்காக அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். 10 அவளது துன்பத்தைக் கண்டு அரசர்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்:
“பயங்கரம்! எவ்வளவு பயங்கரம்,
மாநகரமே,
சக்திமிக்க பாபிலோன் நகரமே!
உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது.”
11 “அவளுக்காக உலகிலுள்ள வியாபாரிகள் அழுது துக்கப்படுவார்கள். இப்பொழுது அவர்களின் பொருள்களை வாங்குவதற்கு யாரும் இல்லை என்பது தான் அவர்களின் துயரத்துக்குக் காரணம். 12 அவர்கள் தங்கம், வெள்ளி, நகைகள், முத்துக்கள், மெல்லிய ஆடை, இரத்தாம்பர ஆடை, பட்டு ஆடை, சிவப்பு ஆடை, எல்லாவிதமான வாசனைக் கட்டைகள், தந்தத்தால், தங்கத்தால் செய்யப்பட்ட அனைத்து விதமான பொருள்கள், விலையுயர்ந்த மரப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், வெள்ளைக்கல் பொருட்கள், ஆகியவற்றை விற்கின்றனர். 13 இலவங்கப்பட்டை, தூபவர்க்கம், தைலங்கள், சாம்பிராணி, திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மெல்லிய மாவு, கோதுமை, மாடு, ஆடு, குதிரைகள், இரதங்கள், மனிதர்களின் சரீரங்கள் மற்றும் ஆன்மாக்கள் போன்றவற்றையும் அவர்கள் விற்கின்றனர்.
14 “ஓ பாபிலோனே, நீ விரும்பிய பொருட்களெல்லாம் உன்னை விட்டுப் போய்விட்டன.
உன் செல்வமும் நாகரீகமும் மறைந்து விட்டன.
உன்னால் அவற்றை மீண்டும் பெற இயலாது.”
ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?
14 ஓய்வு நாளில் இயேசு பரிசேயர்களின் தலைவனாகிய ஒருவனின் வீட்டுக்கு அவனோடு உணவு உண்ணச் சென்றார். அங்கிருந்த ஜனங்கள் இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். 2 கொடிய நோய் [a] உள்ள ஒரு மனிதனை இயேசுவின் முன்னே கொண்டு வந்தார்கள். 3 இயேசு பரிசேயரிடமும், வேதபாரகரிடமும், “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா அல்லது தவறா?” என்று கேட்டார். 4 ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார். 5 பரிசேயரிடமும், வேதபாரகரிடமும் இயேசு, “உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் விரைந்து வெளியே எடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார். 6 இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.
சுயமுக்கியத்துவம் வேண்டாம்
7 விருந்தினர்களில் சிலர் மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தில் அமருவதற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதை இயேசு கவனித்தார். எனவே இயேசு இவ்வுவமையைச் சொன்னார். 8 “ஒருவன் உங்களை ஒரு திருமணத்திற்காக அழைக்கும்போது, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள். அந்த மனிதன் உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் ஒருவரை அழைத்திருக்கக் கூடும். 9 நீங்கள் முக்கியமான இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கையில் உங்கள் இருவரையும் அழைத்த மனிதன் வந்து, ‘உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்’ என்று கூறக்கூடும். எனவே கடைசி இடத்தை நோக்கி, நீங்கள் செல்லக் கூடும். உங்களுக்கு அது அவமானமாக இருக்கும்.
10 “எனவே ஒருவன் உங்களை அழைக்கும்போது முக்கியமற்ற இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்த மனிதன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்’ என்பான். அப்போது மற்ற எல்லா விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள். 11 தன்னை முக்கியமாகக் கருதும் எந்த மனிதனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக்கொள்கிற மனிதன் உயர்வாக வைக்கப்படுவான்” என்றார்.
2008 by World Bible Translation Center