Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 69

“லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்.

69 தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது.
நான் நிற்பதற்கு இடமில்லை.
    சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன்.
    அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன.
    நான் அமிழும் நிலையில் உள்ளேன்.
உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன்.
    என் தொண்டை புண்ணாகிவிட்டது.
நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை
    உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன்.
என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள்.
    எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள்.
    என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள்.
நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள்.
    நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள்.

தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர்.
    நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது.
என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும்.
    இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தொழுதுகொள்வோர் என்னால் அவமானப்படாதபடிச் செய்யும்.
என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது.
    உமக்காக இவ்வெட்கத்தை நான் சுமக்கிறேன்.
என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள்.
    என் தாயின் பிள்ளைகள் என்னை ஒரு அயல் நாட்டவனைப்போல நடத்துகிறார்கள்.

உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன.
    உம்மைக் கேலி செய்யும் ஜனங்களின் அவதூறுகளை நான் ஏற்கிறேன்.
10 நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன்.
    அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள்.
11 துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன்.
    ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள்.
12 பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
    குடிக்காரர்கள் என்னைப்பற்றிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.

13 ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம்.
    நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன்.
    நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
14 என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும்.
    நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும்.
என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
15 அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும்.
    ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும்.
    கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும்.

16 கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும்.
    உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!
17 உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும்.
    நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்!
    விரைந்து எனக்கு உதவும்.
18 வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்.
    என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.

19 நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர்.
    என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர்.
    அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர்.
20 வெட்கம் என்னை நசுக்கிற்று!
    வெட்கத்தால் நான் இறக்கும் நிலைக்கு ஆளானேன்.
எனக்காகப் பரிதபிப்பவர்களுக்காகக் காத்திருந்தேன்.
    ஆனால் ஒருவரையும் நான் பார்க்க முடியவில்லை.
எனக்கு ஆறுதல் கூறுவோருக்காக நான் காத்திருந்தேன்.
    ஆனால் ஒருவரும் வரவில்லை.
21 அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள்.
    அவர்கள் எனக்குத் திராட்சை ரசத்தையல்ல, காடியைக் கொடுத்தார்கள்.

22 அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன.
    ஐக்கிய பந்திக்கான உணவு வகைகள் நிரம்பியிருந்தன.
    அந்த உணவுகளே அவர்களை அழிக்குமென நம்புகிறேன்.
23 அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன்.
24 உமது கோபத்தை அவர்கள் உணரட்டும்.
25 அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும்.
    யாரும் அங்கு வாழவிடாதேயும்.
26 அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள்.
    அப்போது அவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவர்களுக்கு வலியும் காயங்களும் உண்டாகும்.
27 அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
    நீர் எவ்வளவு நல்லவர் என்பதை அவர்களுக்குக் காட்டாதேயும்.
28 ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்களை எடுத்துப்போடும்.
    நல்லோரின் பெயர்களோடு அவர்கள் பெயர்களை அப்புத்தகத்தில் எழுதாதேயும்.

29 நான் கவலையும் புண்பட்டவனுமானேன்.
    தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும்.

30 நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன்.
    நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன்.
31 இது தேவனை சந்தோஷப்படுத்தும்!
    ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது.
32 ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள்.
    நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள்.
33 கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார்.
    சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார்.

34 பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக்கட்டும்.
    கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்.
35 கர்த்தர் சீயோனை மீட்பார்.
    கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார்.
நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.
36     அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள்.
    அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள்.

சங்கீதம் 73

புத்தகம் 3

ஆசாபின் துதிப்பாடல்.

73 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
நான் தவறி வீழ்ந்து,
    பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.
    பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.

அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.
    வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.
    பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.
    அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.
    தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
    அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள்.
    அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
    பூமியின் ராஜாக்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று
    அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!
    உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.”

12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.
    ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?
    ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,
    ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.

15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.
    அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
16-17 இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன்.
    ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன.
நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன்,
    அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.
    விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.
    கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.
    எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.

21-22 நான் மூடனாக இருந்தேன்.
    நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
    மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
    நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
    தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
    பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
    நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
    ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
    என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.

27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
    உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
    என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
    தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.

எஸ்தர் 1:1-4

வஸ்தி ராணி ராஜாவுக்கு கீழ்ப்படிய மறுக்கிறாள்

அகாஸ்வேரு ராஜாவாக இருந்த காலத்தில் இது நடைபெற்றது. அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். ராஜா அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான்.

அகாஸ்வேருவின், மூன்றாவது ஆட்சியாண்டில், அவன் தனது அதிகாரிகளுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்தான். படை அதிகாரிகளும், பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள முக்கிய தலைவர்களும் அங்கே இருந்தனர். விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக்காலம் முழுவதும் அகாஸ்வேரு ராஜா தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான்.

எஸ்தர் 1:10-19

10-11 விருந்தின் ஏழாவது நாளில், அகாஸ்வேரு ராஜா திராட்சைரசத்தால் உச்சப் போதையில் இருந்தான். அவன் ஏழு பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். அந்த பிரதானிகள், மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகியோர். அவன் இந்த ஏழு பேரிடம் இராணி வஸ்தியை இராஜகிரீடம் அணிவித்து அழைத்துவருமாறு கட்டளையிட்டான். அவள் அழகை முக்கியமான ஜனங்களுக்கும், தலைவர்களுக்கும் காட்டவேண்டும் என்று ராஜா விரும்பினான். ஏனென்றால் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

12 ஆனால், அந்த வேலைக்காரர்கள் போய் இராணி வஸ்தியிடம் ராஜாவின் கட்டளையைச் சொன்னதும் அவள் வரமறுத்தாள். அதனால் ராஜா மிகவும் கோபம்கொண்டான். 13-14 சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, ராஜா அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் ராஜாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு ராஜாவைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர். 15 ராஜா அவர்களிடம், “இராணி வஸ்தியை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது? ராஜா அகாஸ்வேருவின் கட்டளையை பிரதானிகள் கொண்டுபோனபோது அதற்கு அவள் அடிபணியவில்லை” என்று சொன்னான்.

16 பிறகு, மெமுகான் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்கையில், “இராணி வஸ்தி தவறு செய்தாள். அவள் ராஜாவுக்கு எதிராகவும், எல்லா தலைவர்களுக்கு எதிராகவும், அகாஸ்வேரு ராஜாவின் அரசாட்சியில் உள்ள எல்லா ஜனங்களுக்கு எதிராகவும் தவறு செய்தாள். 17 மற்ற எல்லாப் பெண்களும் இராணி வஸ்தி செய்ததை கேள்விப்படுவார்கள். பிறகு அவர்கள் தம் கணவர்களுக்கு அடிபணிவதை நிறுத்துவார்கள். அவர்கள் தம் கணவர்களிடம், ‘ராஜா அகாஸ்வேரு இராணி வஸ்தியை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள்’ என்பார்கள்.

18 “இன்றைக்கு பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள தலைவர்களின் மனைவிகளும் இராணி செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்பெண்களும் இராணியின் செயலால் தூண்டப்படுவார்கள். அப்பெண்களும் ராஜாவின் முக்கிய தலைவர்களுக்கு அவ்வாறே செய்வார்கள். அதனால் மிகுதியான மதிப்பின்மையும் கோபமும் பிறக்கும்.

19 “எனவே ராஜாவுக்கு விருப்பமானால், நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். ராஜா ஒரு அரச கட்டளையைக் கொடுக்கலாம். அது பெரிசியா மற்றும் மேதியாவிற்குச் சட்டமாக எழுதப்படலாம். பெர்சியா மற்றும் மேதியாவின் சட்டங்கள் மாற்ற முடியாதவை. வஸ்தி மீணடும் ராஜா அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்பதுதான் அரச கட்டளையாக இருக்கவேண்டும். அதோடு ராஜா அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு இராணியின் உயர் இடத்தைக் கொடுக்கவேண்டும்.

அப்போஸ்தலர் 17:1-15

தெசலோனிக்கேயில் பவுலும் சீலாவும்

17 அம்பிபோலி, அப்போலோனியா நகரங்கள் வழியாகப் பவுலும் சீலாவும் பிரயாணம் செய்தனர். அவர்கள் தெசலோனிக்கே நகரத்திற்கு வந்தனர். அந்நகரில் யூதர்களின் ஜெப ஆலயம் ஒன்று இருந்தது. யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான். வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் “நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார்” என்றான். அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள். ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.

ஆனால் விசுவாசியாத யூதர்கள் பொறாமை கொண்டனர். நகரத்திலிருந்து சில தீய மனிதர்களை கூலிக்காக அமர்த்திக்கொண்டனர். இத்தீய மனிதர்கள் பல மக்களைச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் கலகம் விளைவித்தனர். பவுலையும் சீலாவையும் தேடிக்கொண்டு இந்த மனிதர்கள் யாசோனின் வீட்டிற்குச் சென்றனர். பவுலையும் சீலாவையும் நகர சபையின் முன்பாக அழைத்து வரவேண்டுமென்று அம்மனிதர்கள் கேட்டனர். ஆனால் அவர்கள் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மக்கள் யாசோனையும், வேறு சில விசுவாசிகளையும் நகரின் தலைவர்கள் முன்பாக இழுத்து வந்தனர். மக்கள் எல்லோரும், “இம்மனிதர்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் கலகமுண்டாக்கினார்கள். இப்போது இவர்கள் இங்கும் வந்துவிட்டனர்! யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வைத்திருக்கிறான். இராயரின் சட்டங்களுக்கு எதிரான செயல்களை அவர்களெல்லாம் செய்கின்றனர். இயேசு என்னும் இன்னொரு மன்னன் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்” என்று கூக்குரலிட்டனர்.

நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள். யாசோனும் பிற விசுவாசிகளும் தண்டனைப் பணம் செலுத்தும்படியாகச் செய்தனர். பின் விசுவாசிகளை விடுதலை செய்து போகும்படி அனுமதித்தனர்.

பெரேயாவில் ஊழியம்

10 அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். 11 தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். 12 இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர்.

13 தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர். 14 எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர். 15 பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள்” என்றன.

யோவான் 12:36-43

36 ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.

இயேசுவை நம்பாத யூதர்கள்

37 இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. 38 தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.

“கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்?
    தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?”(A)

39 இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,

40 “தேவன் மக்களைக் குருடாக்கினார்.
    தேவன் அவர்களின் மனதை மூடினார்.
அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார்.
அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.”(B)

41 இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.

42 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். 43 அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center