Book of Common Prayer
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று.
77 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.
தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்.
நான் சொல்வதைக் கேளும்.
2 என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.
இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன்.
என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது.
3 நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,
நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.
4 நீர் என்னை உறங்கவொட்டீர்.
நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
5 நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
6 இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.
நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
7 நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?
மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
8 தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?
அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?
9 இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?
அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.
10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.
‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.
11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.
தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.
அக்காரியங்களை நான் நினைத்தேன்.
13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.
தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.
நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர்.
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.
நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.
16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.
ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.
உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள்.
அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.
உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று.
பூமி அதிர்ந்து நடுங்கிற்று.
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.
நீர் ஆழமான கடலைக் கடந்தீர்.
ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு
நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.
79 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.
அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள்.
அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
2 காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.
உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
3 தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.
மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
4 எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.
எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
5 தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?
உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
6 தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.
உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
7 அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.
அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
8 தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.
விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்!
நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
9 எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!
எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!
உமது நாமத்துக்கு அது மகிமையை தரும்.
உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?
அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும்.
உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!
தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்
ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும்.
உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.
நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம்.
தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
அடிமைகளின் எஜமானர்களுக்கு உரிய விதிகள்
35 “உன் சகோதரரில் ஒருவன் மிகவும் வறுமையனாகிவிட்டால் அவன் அயல் நாட்டுக்காரனைப் போன்று உன்னோடு பிழைக்கும்படி அனுமதிக்க வேண்டும். 36 நீ அவனுக்குக் கடன் கொடுத்து அவனிடம் வட்டி வாங்காமல் இருப்பாயாக. தேவனுக்குரிய மதிப்பைக் கொடுத்து, உன் சகோதரனை வாழவிடுவாயாக. 37 அவனிடம் நீ கொடுத்த கடனுக்காக வட்டி வாங்காதே. நீ விற்கிற உணவிற்கு மிகுதியாக லாபம் வரும்படி செய்யாதே. 38 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். உன்னை எகிப்தில் இருந்து அழைத்து வந்து கானான் நாட்டைக் கொடுத்து, உனது தேவனாக ஆனேன்.
39 “உனது சகோதரன் ஒருவன் ஏழ்மை காரணமாக உன்னிடம் அடிமையாக இருக்கலாம். நீ அடிமைபோன்று அவனை வேலை வாங்கக்கூடாது. 40 யூபிலி ஆண்டு வரை அவன் ஒரு கூலிக்காரனைப் போன்றும் ஒரு பயணியைப் போலவும் இருப்பான். 41 பிறகு அவன் உன்னைவிட்டுச் செல்லலாம். அவன் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மீண்டும் தன் குடும்பத்துக்குத் திரும்பமுடியும். அவன் தனது முற்பிதாக்களின் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வான். 42 ஏனென்றால் அவர்கள் எனது ஊழியர்கள். அவர்களை நான் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் மீண்டும் அடிமையாகக் கூடாது. 43 இவர்களுக்குக் கொடூரமான எஜமானனாக நீங்கள் இருக்கக் கூடாது. நீங்கள் தேவனுக்கு பயப்பட வேண்டும்.
44 “உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம். 45 உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள். 46 உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது.
47 “அயல் நாட்டுக்காரரோ பயணிகளோ செல்வந்தர் ஆகலாம். உன் சொந்த நாட்டுக்காரன் ஏழையாக இருப்பதினால் அவர்கள் அயல் நாட்டுக்காரர் ஒருவருக்கு அடிமையாகலாம். 48 அவன் திரும்பவும் சுதந்திரமானவனாக முடியும். அவனது சகோதரரில் ஒருவன் அவனை விலை கொடுத்து மீட்டுவிடலாம். 49 அவனது சித்தப்பாவோ, பங்காளிகளோ, அவனைத் திரும்ப வாங்கலாம். ஆனால் அவனுக்குப் போதுமான பணம் இருந்தால் தானே அதனைக் கொடுத்துவிட்டு சுதந்திரம் பெற்றுவிடலாம்.
50 “அவன் தன்னை விற்றுக்கொண்ட ஆண்டு முதல் அடுத்த யூபிலி வரை எண்ணிக்கொள்ள வேண்டும். ஆண்டுகளின் எண்ணிக்கையை வைத்து விலையை முடிவு செய்யலாம். ஏனென்றால் அவன் சில ஆண்டுகளே தன்னை ‘வாடகையாகத்’ தந்திருக்கிறான். 51 யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை மிகுதியாக இருக்கும். அவன் அதனைக் கொடுக்க வேண்டும். 52 யூபிலி ஆண்டு வர இன்னும் கொஞ்சம் ஆண்டுகளே இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை குறைவாக இருக்கும். 53 ஆனால் அவன் ஒரு வாடகை ஆளைப் போன்று அயல் நாட்டுக்காரனோடு ஒவ்வொரு ஆண்டும் இருக்க வேண்டும். அந்த அயல் நாட்டுக்காரன் கொடூரமான எஜமானனாக இல்லாமல் இருக்கட்டும்.
54 “அவனை யாரும் திரும்பி வாங்காவிட்டாலும் யூபிலி ஆண்டில் அவனும் அவனது பிள்ளைகளும் விடுதலை பெறுவார்கள். 55 ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் எனது ஊழியர்கள். நான் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!
9 உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது:
தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், 10 இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், 11 தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும்,
மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. 12 பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். 13 இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். 14 நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
விதையைப் பற்றிய உவமை
(மாற்கு 4:1-9; லூக்கா 8:4-8)
13 அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார். 2 ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள். 3 பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார்.
இயேசு, “ஒரு விவசாயி விதைகளை விதைக்கப் போனான். 4 அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்றுவிட்டன. 5 சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன. 6 ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன. 7 இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன. 9 நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார்.
உவமைகள் ஏன்?
(மாற்கு 4:10-12; லூக்கா 8:9-10)
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர்.
11 இயேசு மறுமொழியாக, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது. 12 சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான். 13 அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. 14 எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்:
“‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள்.
ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள்.
ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 ஆம், இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம்.
காதுகளிருந்தும் கேட்பதில்லை.
உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
தங்கள் காதால் கேளாதிருக்கவும்
தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும்
தங்கள் மனதால் அறியாதிருக்கவும்
இவ்வாறு நடந்துள்ளது.
குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’(A)
16 ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.
2008 by World Bible Translation Center