Book of Common Prayer
117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
2 தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.
கர்த்தரைத் துதிப்போம்!
118 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
2 இஸ்ரவேலே, இதைக்கூறு,
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
5 நான் தொல்லையில் உழன்றேன்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன்.
கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
நான் உம்மைத் துதிக்கிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.
112 கர்த்தரை துதியுங்கள்!
கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான்.
அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.
2 அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள்.
நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
3 அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும்.
அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
4 தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர்.
தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
5 தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது.
தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.
6 அவன் விழமாட்டான்,
ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.
7 அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான்.
அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.
8 அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான்.
அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.
9 அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான்.
அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள்.
அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள்.
பின்பு அவர்கள் மறைந்து போவார்கள்.
தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
17 சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடிக்கக் கூட ஜனங்களுக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. 2 எனவே ஜனங்கள் மோசேக்கு எதிராக திரும்பி, அவனோடு வாதாட ஆரம்பித்தார்கள். “எங்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தா” என்று ஜனங்கள் கேட்டார்கள்.
மோசே அவர்களை நோக்கி, “ஏன் எனக்கு எதிராகத் திரும்பினீர்கள்? ஏன் கர்த்தரை சோதிக்கிறீர்கள்? கர்த்தர் நம்மோடு வரவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்றான்.
3 ஆனால் ஜனங்கள் மிகவும் தாகமாக இருந்தபடியால் மோசேயிடம் தொடர்ந்து முறையிட்டார்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்களும், எங்கள் பிள்ளைகளும், ஆடு மாடுகளும் தாகத்தால் மரித்துபோவதற்காகவா எங்களை அழைத்து வந்தீர்?” என்றார்கள்.
4 எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, “நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்” என்றான்.
5 கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகப் போ, ஜனங்களின் மூப்பர்களில் (தலைவர்களில்) சிலரையும் உன்னோடு அழைத்துச் செல். உனது கைத்தடியையும் எடுத்துக்கொள். நைல் நதியை அடித்தபோது நீ பயன்படுத்திய தடி இதுவே. 6 உனக்கு முன்பாக ஓரேபிலுள்ள (சீனாய் மலையிலுள்ள) பாறையில் நான் இருப்பேன். உனது கைத்தடியால் பாறையை அடி, உடனே பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும், அப்போது ஜனங்கள் அதைப் பருகலாம்” என்றார்.
மோசே அவ்வார்த்தைகளின்படியே செய்தான். இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அதைப் பார்த்தார்கள். 7 இவ்விடத்தில் ஜனங்கள் மோசேக்கு எதிராகத் திரும்பி கர்த்தரை சோதித்ததால் மோசே அதற்கு மேரிபா என்றும், மாசா என்றும் பெயரிட்டான். கர்த்தர் அவர்களோடு இருக்கிறாரா, இல்லையா என்று சோதிக்க ஜனங்கள் விரும்பினார்கள்.
கிறிஸ்துவைப் பார்க்கும்போது நாம் தேவனைக் காண்கிறோம்
15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.
ஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.
படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.
16 பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை.
அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள்,
அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே
அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை.
17 எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார்.
அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன.
18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்).
எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன.
அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.
19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.
20 பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும்
கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார்.
சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார்.
21 ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. 22 ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். 23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.
பரிசுத்த ஆவியானவர்
37 பண்டிகையின் இறுதி நாளும் வந்தது. இது மிக முக்கியமான நாள். அன்று இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் பேசினார். “ஒருவன் தாகமாய் இருந்தால் அவன் என்னிடம் வந்து பருகட்டும். 38 என்னில் நம்பிக்கை வைக்கிறவனுடைய இதயத்தில் இருந்து ஜீவத் தண்ணீருள்ள ஆறுகள் பெருக்கெடுக்கும், இதைத்தான் வேத வாக்கியங்கள் கூறுகின்றன” என்றார். 39 இயேசு பரிசுத்த ஆவியானவரைப்பற்றி இவ்வாறு பேசினார். இன்னும் மக்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஏனென்றால் இயேசு இன்னும் மரணமடையவும் இல்லை; மகிமையாக உயிர்த்தெழவும் இல்லை. ஆனால் பிறகு அவரிடம் விசுவாசம் வைக்கப்போகிற மக்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவர்.
இயேசுவைப் பற்றி மக்களின் விவாதம்
40 இயேசு சொன்ன இக்காரியங்களை மக்கள் கேட்டனர். சிலர், “இந்த மனிதர் உண்மையான தீர்க்கதரிசிதான்” என்றனர்.
41 வேறு சிலரோ, “இவர்தான் கிறிஸ்து” என்றனர். மற்றும் சிலரோ, “கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வரமாட்டார். 42 வேதவாக்கியங்கள், தாவீதின் குடும்பத்திலிருந்து தான் கிறிஸ்து வரப்போகிறார் என்று கூறுகின்றன. அத்துடன் தாவீது வாழ்ந்த பெத்லகேமிலிருந்துதான் கிறிஸ்து வருவார் என்றும் கூறுகின்றன” என்றனர். 43 எனவே, இயேசுவைப் பற்றிய கருத்துக்களில் ஒருவருக்கொருவர் ஒத்துக்கொள்ளவில்லை. 44 சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினர். ஆனால் ஒருவரும் உண்மையில் அவர் மேல் கை வைக்கவில்லை.
யூததலைவர்களின் அவிசுவாசம்
45 தேவாலயச் சேவகர்கள் தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயர்களிடமும் திரும்பிப் போனார்கள். “ஏன் இயேசுவைக் கொண்டுவரவில்லை?” என்று அவர்கள் கேட்டனர்.
46 தேவாலயச் சேவகர்களோ, “எந்த ஒரு மனிதனும் அவரைப்போல் கருத்துக்களைக் கூறியதில்லை” என்றனர்.
47 இதற்குப் பரிசேயர்கள், “அப்படியானால் இயேசு உங்களையும் முட்டாளாக்கிவிட்டார். 48 எந்தத் தலைவராவது இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? இல்லை. எந்தப் பரிசேயராவது அவனை நம்புகிறார்களா? இல்லை. 49 ஆனால் அவரை நம்புகிற மக்கள் மோசேயின் சட்டத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனின் சாபத்திற்கு ஆளாவார்கள்” என்றார்கள்.
50 ஆனால் அந்தக் கூட்டத்தில் நிக்கொதேமுவும் இருந்தான். நிக்கொதேமுவும் இயேசுவைக் காண்பதற்காகப் போனவர்களில் ஒருவன். [a] 51 அவன், “ஒரு மனிதனைப் பற்றி முழுவதும் கேட்டறிவதற்கு முன்னால் தண்டிப்பதற்கு நம் சட்டம் இடம் கொடுப்பதில்லை. அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும்வரை நாம் தீர்ப்பளிக்க முடியாது” என்றான்.
52 யூதத் தலைவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவிலிருந்துதான் வந்திருக்கிறாயா? வேதவாக்கியங்களைப் படித்துப் பார். கலிலேயாவிலிருந்து எந்தவொரு தீர்க்கதரிசியும் வர முடியாது என்று நீ அறிந்துகொள்வாய்” என்றனர்.
(சில கிரேக்க பிரதிகளில் 7:53-8:11 வரை உள்ள வசனங்களை எழுதவில்லை.)
2008 by World Bible Translation Center