Book of Common Prayer
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
147 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள்.
அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது.
2 கர்த்தர் எருசலேமைக் கட்டினார்.
சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார்.
3 தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி,
அவர்கள் காயங்களைக் கட்டுகிறார்.
4 தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார்.
ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.
5 நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.
6 கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார்.
ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார்.
7 கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
8 தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார்.
தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார்.
9 தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார்.
தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
10 போர்க் குதிரைகளும்
வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள்.
11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள்.
அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
12 எருசலேமே, கர்த்தரைத் துதி!
சீயோனே, உன் தேவனைத் துதி!
13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார்.
தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.
14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார்.
எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை.
உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார்.
அது உடனே கீழ்ப்படிகிறது.
16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார்.
உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார்.
அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.
18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது.
பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.
19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார்.
தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.
20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை.
தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை.
கர்த்தரைத் துதியுங்கள்!
[a]111 கர்த்தரைத் துதியங்கள்!
நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில்
நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
2 கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
3 உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
4 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
5 தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
6 அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
7 தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
8 தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
9 தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.
[b]112 கர்த்தரை துதியுங்கள்!
கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான்.
அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.
2 அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள்.
நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
3 அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும்.
அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
4 தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர்.
தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
5 தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது.
தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.
6 அவன் விழமாட்டான்,
ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.
7 அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான்.
அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.
8 அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான்.
அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.
9 அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான்.
அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள்.
அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள்.
பின்பு அவர்கள் மறைந்து போவார்கள்.
தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரிக்கிறான்
36 கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது. யூதாவின் ராஜாவாக யோசியாவின் குமாரன் யோயாக்கீம் ஆண்ட நான்காம் ஆட்சி ஆண்டில் இது நடந்தது. கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: 2 “எரேமியா, ஒரு புத்தச்சுருளை எடு. நான் உன்னிடம் சொன்ன அனைத்து செய்திகளையும் அதில் எழுது. நான் உன்னிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா மற்றும் அனைத்து தேசங்களைப்பற்றிக் கூறியிருக்கிறேன். யோசியா ராஜாவாக இருந்த காலம் முதல் இன்றுவரை நான் உனக்குச் சொன்ன அனைத்தையும் எழுது. 3 நான் அவர்களுக்காக செய்ய திட்டமிட்டுக்கொண்டிருப்பதை ஒரு வேளை யூதா ஜனங்கள் கேட்கலாம். அப்போது ஒவ்வொருவனும் தன்னுடைய தீயச் செயல்களை நிறுத்திவிடலாம். அவர்கள் அவ்வாறு செய்தால், நான் அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்களை மன்னிப்பேன்.”
4 எனவே எரேமியா, பாருக் என்ற பெயருள்ளவனை அழைத்தான். பாருக் நேரியாவின் குமாரன். எரேமியா கர்த்தர் கூறிய வார்த்தையைச் சொன்னான். எரேமியா பேசிக்கொண்டிருக்கும் போது, பாருக் புத்தகச்சுருளில் அச்செய்திகளை எழுதினான். 5 பிறகு எரேமியா பாருக்கிடம், “என்னால் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகமுடியாது. அங்கே நான் போவதற்கு அனுமதியில்லை. 6 எனவே, நீ கர்த்தருடைய ஆலயத்திற்குள் போக வேண்டுமென்று விரும்புகிறேன். உபவாச நாளில் நீ அங்கே போ. புத்தகச்சுருளில் உள்ளவற்றை ஜனங்களுக்கு வாசி. கர்த்தரிடமிருந்து கேட்ட செய்தியை நான் சொல்ல நீ புத்தகச்சுருளில் எழுதியவற்றை வாசி. தாங்கள் வாழும் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த யூதாவின் அனைத்து ஜனங்களுக்கும் அச்செய்தியை வாசி. 7 ஒரு வேளை அந்த ஜனங்கள் கர்த்தர் தங்களுக்கு உதவ வேண்டுமென கேட்பார்கள். ஒரு வேளை ஒவ்வொருவனும் தன்னுடைய தீய செயல் செய்வதை நிறுத்திவிடலாம். கர்த்தர் அந்த ஜனங்களுடன் கோபமுள்ளவராக இருக்கிறார்” என்பதை அறிவித்திருக்கிறார். 8 எனவே, நேரியாவின் குமாரனான பாருக் தீர்க்கதரிசியான எரேமியா சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான். பாருக், கர்த்தருடைய செய்தி எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளை உரக்க வாசித்தான். அவன் அதனை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான்.
9 யோயாக்கீம் ராஜாவாகிய ஐந்தாம் ஆண்டின் ஒன்பதாவது மாதத்தில் ஒரு உபவாசம் அறிவிக்கப்பட்டது. எருசலேம் நகரத்தில் வாழ்கின்ற அனைத்து ஜனங்களும் யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முன்னால் உபவாசம் இருக்கவேண்டும். 10 அப்போது, எரேமியாவின் வார்த்தைகள் உள்ள புத்தகச்சுருளைப் பாருக் வாசித்தான். அவன் புத்தகச்சுருளை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களின் முன்பும் பாருக் புத்தகச்சுருளை வாசித்தான். பாருக், புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கும்போது மேற்பிரகாரத்திலுள்ள கெமரியாவின் அறையில் இருந்தான். அந்த அறை ஆலயத்தின் புதிய வாசல் நுழைவில் இருந்தது. கெமரியா சாப்பானின் குமாரன். கெமரியா ஆலயத்தில் எழுத்தாளனாக இருந்தான்.
லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்
8 பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். 9 அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.
11 பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12 மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13 சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர்.[a] பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15 “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.
16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17 ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.
18 பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பரிசேயனான சீமோன்
36 பரிசேயர்களில் ஒருவன் தன்னோடு உண்ணுமாறு இயேசுவை அழைத்தான். இயேசு பரிசேயனின் வீட்டுக்குள் சென்று மேசையில் அமர்ந்தார்.
37 அப்போது நகரத்தில் பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். பரிசேயனின் வீட்டில் இயேசு உணவு உண்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே அலங்கரிக்கப்பட்ட ஜாடி ஒன்றில் நறுமணத் தைலத்தை அவள் கொண்டு வந்தாள். 38 அவள் இயேசுவின் பாதத்தருகே, அழுதுகொண்டே நின்றாள். அவளது கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அவளது தலைமயிரால் இயேசுவின் பாதங்களைத் துடைத்து உலரவைத்தாள். அவரது பாதங்களைப் பலமுறை முத்தமிட்டு நறுமண தைலத்தைப் பாதங்களில் பூசினாள்.
39 தனது வீட்டுக்கு இயேசுவை அழைத்த பரிசேயன் இதைக் கண்டான். அவன் தனக்குள், “உண்மையாகவே இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் தன்னைத் தொடுகிற பெண் ஒரு பாவி என்பதை அறிந்திருப்பார்” என்று நினைத்தான்.
40 இயேசு பரிசேயனை நோக்கி, “சீமோனே! நான் உனக்குச் சிலவற்றைக் கூறவேண்டும்” என்றார்.
சீமோன், “போதகரே, சொல்லுங்கள், கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
41 “இரண்டு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே மனிதனிடம் கடன் வாங்கினர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிப் பணம் கடன் வாங்கியிருந்தான். மற்றொருவன் ஐம்பது வெள்ளிப்பணம் கடனாக வாங்கியிருந்தான். 42 பணம் இல்லாததால் இருவராலும் கடனை அடைக்க முடியாமல் போயிற்று. கடன் கொடுத்த மனிதன் இருவரிடமும் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறினான். இப்போது கடன் பெற்றிருந்த இருவரில் யார் அதிக அளவில் கடன் கொடுத்த மனிதனை நேசிப்பார்கள்?” என்று கேட்டார் இயேசு.
43 சீமோன், “அந்த மனிதனிடம் அதிக அளவு பணம் பெற்றிருந்த மனிதனே அதிக நேசம் கொண்டவனாக இருப்பான் என எண்ணுகிறேன்” என்று பதில் கூறினான்.
இயேசு சீமோனை நோக்கி, “நீ கூறியது சரியே” என்றார். 44 பின்பு அப்பெண்ணைச் சுட்டிக்காட்டி சீமோனிடம், “இந்த பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தபோது என் பாதங்களைக் கழுவுவதற்கு நீ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ தன் கண்ணீரால் என் பாதங்களைக் கழுவித் தன் தலை மயிரால் என் பாதங்களைத் துடைத்து உலர்த்தினாள். 45 நீ என்னை முத்தமிடவில்லை. நான் உள்ளே வந்ததிலிருந்து அவள் என் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். 46 நீ என் தலையில் எண்ணெயால் தடவவில்லை. ஆனால் அவள் என் பாதங்களை நறுமண தைலத்தால் தடவினாள். 47 அவளுடைய கணக்கற்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். அவள் காட்டிய மிகுந்த அன்பே இதைத் தெளிவாக்குகிறது. மன்னிக்கப்பட வேண்டியதன் தேவையைச் சற்றே உணர்ந்தவன் மன்னிப்படையும்போது சிறிதளவு அன்பையே உணர்வான்” என்றார்.
48 பின் இயேசு அவளை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
49 மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மனிதர்கள் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் தன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறான்? அவன் எப்படிப் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டார்கள்.
50 இயேசு அப்பெண்ணை நோக்கி, “நீ விசுவாசித்ததால் பாவங்களினின்று விடுதலையடைந்தாய். நிம்மதியோடு போ” என்றார்.
2008 by World Bible Translation Center