Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 97

97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
    தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
    நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
    அது பகைவரை அழிக்கிறது.
வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
    ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
    பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
    ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!

ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
    அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
    யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
    ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் ராஜா.
    பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.

10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
    எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!

சங்கீதம் 99-100

99 கர்த்தர் ராஜா.
    எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
    எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
    ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
    தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
    தேவன் பரிசுத்தர்.

வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
    தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
    யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.

மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
    அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
    அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
    அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
    தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
    ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
    மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
    நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.

நன்றி கூறும் பாடல்.

100 பூமியே, கர்த்தரைப் பாடு.
கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
    மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
    அவரே நம்மை உண்டாக்கினார்.
    நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.

நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
    துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
    அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர்.
    அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
    என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.

சங்கீதம் 94-95

94 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
    நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
    பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?

எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
    அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
    உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
    பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
    நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
    நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்?
கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்!
    நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
தேவன் நமது காதுகளை உண்டாக்கினார்.
    நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்!
    தேவன் நமது கண்களை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன.
    அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
    தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
    வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.

12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
    சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
    தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
    உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
    அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.

16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
    தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
    நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
    ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
    ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.

20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
    ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
    களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
    என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
    அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார்.
    எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார்.

95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
    நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
    அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
    பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
    தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.

வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
    நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
அவரே நமது தேவன்!
    நாம் அவரது ஜனங்கள்.
    அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.

    தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
    அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
    அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
    அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
    எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.

2 சாமுவேல் 14:1-20

யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்

14 தாவீது ராஜா அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் குமாரனாகிய யோவாப் அறிந்தான். எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. ராஜாவிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.

பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் ராஜாவிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “ராஜாவே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.

தாவீது ராஜா அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.

அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். எனக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது குமாரனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது குமாரன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே குமாரன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.

அப்போது ராஜா அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.

தெக்கோவாவின் பெண் ராஜாவை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய ராஜாவே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.

10 தாவீது ராஜா, “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.

11 அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது குமாரனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் குமாரனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.

தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் குமாரனைத் தாக்கமாட்டார்கள். உன் குமாரனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.

12 அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.

ராஜா, “சொல்” என்றான்.

13 அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது குமாரனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14 நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15 எனது ஆண்டவராகிய ராஜாவே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் ராஜாவிடம் பேசுவேன். ராஜா ஒருவேளை எனக்கு உதவலாம். 16 ராஜா நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது குமாரனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17 எனது ராஜாவாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.

18 தாவீது ராஜா அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.

19 ராஜா, “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.

அப்பெண் பதிலாக, “எனது ராஜாவாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20 நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.

அப்போஸ்தலர் 21:1-14

பவுல் எருசலேமுக்குப் போகிறான்

21 நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.

சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது.

10 பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை[a] வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான்.

12 நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். 13 ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான்.

14 பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.

மாற்கு 10:1-16

விவாகரத்து பற்றிய போதனை

(மத்தேயு 19:1-12)

10 பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார்.

சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார்.

பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர்.

அவர்களிடம் இயேசு, “மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’ ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான். இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’(A) தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார்.

10 பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர். 11 அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான். 12 இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார்.

குழந்தைகளும் இயேசுவும்

(மத்தேயு 19:13-15; லூக்கா 18:15-17)

13 மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர். 14 இதனை இயேசு கவனித்தார். சிறுவர் தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை செய்தது அவருக்கு பிரியமில்லை. எனவே அவர்களிடம், “குழந்தைகள் என்னிடம் வருவதை அனுமதியுங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப் போன்றவர்களுக்குரியது. 15 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார். 16 பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center