Book of Common Prayer
கோப்
145 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.
எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
146 கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்!
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
147 நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.
நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
148 உமது வார்த்தைகளைக் கற்பதற்கு
இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
149 உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.
கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
150 ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
151 கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.
உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
152 பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,
உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.
ரேஷ்
153 கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.
நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
154 கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.
நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
155 தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்
அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
156 கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.
நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
157 என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.
ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
158 நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.
கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.
நான் அதை வெறுக்கிறேன்.
159 பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
160 கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.
உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஷீன்
161 எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
162 கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
163 நான் பொய்களை வெறுக்கிறேன்!
நான் அவற்றை அருவருக்கிறேன்!
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
164 உமது நல்ல சட்டங்களுக்காக
ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
166 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
167 நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
168 நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
தௌ
169 கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.
170 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
171 நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.
ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
172 உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
173 என்னருகில் வந்து எனக்கு உதவும்.
ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
174 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
175 கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
176 காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
128 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.
2 நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும்.
3 வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்.
மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
4 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
5 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்.
வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.
6 நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன்.
இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
129 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.
2 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
ஆனால் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை.
3 என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள்.
எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
4 ஆனால் நல்லவராகிய கர்த்தர் கயிறுகளை அறுத்துக்
கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார்.
5 சீயோனை வெறுத்த ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
அவர்கள் போரிடுவதை நிறுத்தி, ஓடிப்போய்விட்டார்கள்.
6 அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள்.
வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும்.
7 ஒரு வேலையாளுக்கு ஒரு கை நிரம்ப அந்த புல் கிடைக்காது.
ஒரு குவியல் தானியமும் கிடைப்பதில்லை.
8 அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள்.
ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.
5 கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
6 நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
7 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
கர்த்தர் நம்மை மீண்டும், மீண்டும் காப்பாற்றுகிறார்.
8 கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.
சாமுவேல் இஸ்ரவேலரிடம் ராஜாவைப் பற்றி பேசுகிறான்
12 சாமுவேல் இஸ்ரவேலரிடம், “நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு ராஜாவை நியமித்திருக்கிறேன். 2 இப்போது உங்களை வழி நடத்த ஒரு ராஜா இருக்கிறான். எனக்கு முதுமையும் நரையும் வந்துவிட்டது. ஆனால் என் குமாரர்கள் உங்களுடன் இருக்கிறார்கள். நான் சிறுவயது முதலே உங்களது தலைவனாக இருந்திருக்கிறேன். 3 நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை கர்த்தரிடமும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவிடமும் சொல்லவேண்டும். நான் ஏதாவது உங்கள் பசுவையோ, கழுதையையோ திருடியிருக்கிறேனா? யாரையாவது புண்படுத்தியோ, ஏமாற்றியோ இருக்கிறேனா? நான் பணத்தையோ பாதரட்சையை லஞ்சமாக பெற்றிருக்கிறேனா? அப்படி எதாவது செய்திருந்தால் நான் அதை சரி செய்துக் கொள்வேன்” என்றான்.
4 இஸ்ரவேலர்களோ, “இல்லை! நீங்கள் எங்களுக்கு எப்போதும் தீமை செய்யவில்லை. எங்களை ஏமாற்றவோ, எங்கள் பொருட்களை எந்தக் காலத்திலும் எடுத்துக் கொள்ளவோயில்லை!” என்றனர்.
5 சாமுவேல் அவர்களிடம், “கர்த்தரும், அரசரும் இன்று சாட்சிகளாக உள்ளனர். நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்கிறார்கள். என்னிடம் தவறில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்” என்றான். “ஆமாம்! கர்த்தரே சாட்சி!” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.
6 பின் சாமுவேல் ஜனங்களிடம், “இங்கே நடந்ததை கர்த்தர் பார்த்திருக்கிறார். கர்த்தர் தாமே மோசேயையும், ஆரோனையும், தேர்ந்தெடுத்தவர். அவரே எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை மீட்டுக்கொண்டவர்.
16 “இப்பொழுது நீங்கள் அமைதலாயிருந்து கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன் செய்யப்போகும் பெரியக் காரியத்தைப் பாருங்கள். 17 இப்போது கோதுமை அறுவடைக்காலம். நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். இடியையும் மழையையும் கேட்பேன். நீங்கள் ராஜா வேண்டுமென்று கேட்டது கர்த்தருக்கு விரோதமான காரியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான்.
18 எனவே, சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். அன்றே கர்த்தர் இடியையும் மழையையும் அனுப்பினார். ஜனங்கள் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தனர். 19 அனைத்து ஜனங்களும் சாமுவேலிடம், “உம்முடைய அடியார்களாகிய எங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபியுங்கள், நாங்கள் அழிந்துவிட விட்டு விடாதேயும்! நாங்கள் பலமுறை பாவம் செய்திருக்கிறோம். இப்போது ராஜாவைக் கேட்டு மேலும் பாவம் செய்து விட்டோம்” என்றனர்.
20 சாமுவேல் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இது உண்மை! நீங்கள் எல்லா தீமைகளையும் செய்தீர்கள். ஆனால் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்கள். முழு மனதோடு கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். 21 விக்கிரகங்கள் வெறும் சிலைகளே அவைகள் உதவாது. அவற்றைத் தொழுதுகொள்ள வேண்டாம். விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது! காப்பாற்றாது! அவைகள் ஒன்றுமில்லை.
22 “ஆனால், கர்த்தர் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை தமது சொந்த ஜனங்களாக ஆக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். எனவே, அவரது பெரிய பெயரினிமித்தம் தம் ஜனங்களை அவர் விட்டுவிடமாட்டார். 23 என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். 24 ஆனால், நீங்கள் கர்த்தரை கனம் பண்ண வேண்டும். முழு இருதயத்துடன் அவருக்கு சேவை செய்ய வேண்டும். அவர் செய்த அதிசயமான காரியங்களை மறவாதீர்கள்! 25 நீங்கள் கடினப்பட்டு தீமை செய்தால், தேவன் உங்களையும் உங்கள் ராஜாவையும் அழுக்கை துடப்பத்தால் நீக்குவதுப்போல் எறிந்துவிடுவார்” என்றான்.
14 அப்போஸ்தலர்கள் இன்னும் எருசலேமில் இருந்தனர். தேவனுடைய வார்த்தையை சமாரியாவின் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள். 15 ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர். 16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர். 17 இரண்டு அப்போஸ்தலர்களும் அவர்கள் கைகளை மக்கள் மீது வைத்தார்கள். அப்போது அம்மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.
18 அப்போஸ்தலர்கள் தமது கைகளை மக்கள் மீது வைத்தபோது ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கப் பெற்றதை சீமோன் பார்த்தான். எனவே சீமோன் அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து 19 “நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள்” என்றான்.
20 பேதுரு சீமோனை நோக்கி, “நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய். 21 இந்த வேலையில் நீ பங்கைப் பெறமுடியாது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் நேர்மையாக இல்லை. 22 உனது மனதை மாற்று! நீ செய்த இந்தத் தீய காரியத்திலிருந்து விலகி விடு. கர்த்தரை நோக்கி பிரார்த்தனை செய். நீ இவ்வாறு நினைத்ததை அவர் மன்னிக்கக் கூடும். 23 நீ வெறுப்பினாலும், பொறாமையினாலும் நிரம்பி, பாவத்தால் ஆளப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்” என்றான்.
24 சீமோன் பதிலாக, “கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!” என்றான்.
25 தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.
பிலாத்துவின் கேள்வி
(மத்தேயு 27:1-2,11-14; மாற்கு 15:1-5; யோவான் 18:28-38)
23 அந்தக் கூட்டம் முழுவதும் எழுந்து நின்று இயேசுவைப் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றது. 2 அவர்கள் இயேசுவைப் பழிக்க ஆரம்பித்தார்கள் பிலாத்துவிடம் அவர்கள், “நமது மக்களைக் குழப்புகிற செய்திகளைக் கூறுகிறபடியால் இந்த மனிதனை நாங்கள் பிடித்து வந்தோம். இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாதென்று அவன் கூறுகிறான். அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய ராஜா என்று அழைக்கிறான்” என்றனர்.
3 பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் ராஜாவா?” என்று கேட்டான்.
இயேசு, “ஆம், அது சரியே” என்றார்.
4 அதைக் கேட்ட பிலாத்து தலைமை ஆசாரியரிடமும், மக்களிடமும் “இந்த மனிதனிடம் தவறு எதையும் நான் காணவில்லையே” என்றான்.
5 அவர்கள் மீண்டும் மீண்டுமாக, “இயேசு மக்களின் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கிக்கொண்டுள்ளான். யூதேயாவைச் சுற்றிலும் அவன் போதிக்கிறான். அவன் கலிலேயாவில் ஆரம்பித்து இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள்.
ஏரோதுவின் முன் இயேசு
6 அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான். 7 பின்பு ஏரோதின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து இயேசு வருவதை அறிந்தான். அப்போது ஏரோது எருசலேமில் இருந்தான். எனவே பிலாத்து, இயேசுவை அவனிடம் அனுப்பினான்.
8 இயேசுவைப் பார்த்ததும் ஏரோது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவரைப்பற்றி அவன் அதிகமாக கேள்விப்பட்டிருந்தபடியினாலும், இயேசு ஏதேனும் ஓர் அதிசயம் செய்வாரா எனப் பார்க்க விருப்பப்பட்டிருந்தபடியினாலும் அவரைக் காண வெகு நாளாக விருப்பம்கொண்டிருந்தான். 9 இயேசுவிடம் பல கேள்விகளைக் கேட்டான் ஏரோது. ஆனால் இயேசு ஒன்றுமே கூறவில்லை. 10 தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு எதிரானவைகளை உரக்கக் கூறிக்கொண்டிருந்தார்கள். 11 ஏரோதுவும், அவனது வீரர்களும் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். ராஜாவுக்குரிய ஆடைகளை அணிவித்து அவரை எள்ளி நகையாடினார்கள். பின்பு ஏரோது இயேசுவைப் பிலாத்துவிடமே திரும்ப அனுப்பினான். 12 முன்னர் பிலாத்துவும், ஏரோதுவும் பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால் அன்று ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர்.
2008 by World Bible Translation Center