Book of Common Prayer
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
புத்தகம் 4
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.
90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
2 தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!
3 நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
4 ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
5 நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
6 காலையில் புல் வளரும்,
மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
7 தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
8 எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
9 உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.
உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.
14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.
நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.
இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும்.
16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்
உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும்.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.
நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்.
தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.
136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
2 தேவாதி தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
4 ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
5 வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
6 தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
7 தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
8 தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
9 தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் ராஜாவாகிய ஓகைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
4 சாமுவேலைப் பற்றியச் செய்தி அனைத்து இஸ்ரவேலருக்கும் பரவியது. ஏலி முதியவனானான். அவனது குமாரர்கள் தொடர்ந்து கர்த்தருக்கு எதிராக தீய செயல்களைச் செய்து வந்தனர்.
பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை வெல்லுகின்றனர்
அந்த காலத்தில், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு எதிராகப் போர் செய்யப் போனார்கள். இஸ்ரவேலர் எபெனேசர் என்ற இடத்தில் முகாமிட்டனர். பெலிஸ்தர் தங்கள் முகாம்களை ஆப்பெக்கில் அமைத்தனர். 2 பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தாக்கும் பொருட்டுத் தயாரானார்கள். போர்த் துவங்கியது.
பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் சேனையில் உள்ள 4,000 வீரர்களைப் பெலிஸ்தர் கொன்றனர். 3 இஸ்ரவேல் வீரர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பி வந்தனர். மூப்பர்கள், “கர்த்தர் ஏன் பெலிஸ்தர் நம்மைத் தோற்கடிக்கும்படிச் செய்தார்? சீலோவில் உள்ள நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம். அதன்படி தேவன் நம்மோடு கூட போர்க்களத்துக்கு வருவார். அவர் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்” என்றனர்.
4 எனவே ஜனங்கள் சீலோவிற்குச் சிலரை அனுப்பினார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர். அப்பெட்டியின் மேல் கேருபீன்கள் இருந்தார்கள். அவை கர்த்தர் உட்காரும் சிங்காசனம் போல இருந்தது. ஏலியின் இரண்டு குமாரர்களான ஓப்னியும் பினெகாசும் அப்பெட்டியோடு வந்தனர்.
5 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியானது முகாமுக்குள்ளே வந்ததும், இஸ்ரவேல் ஜனங்கள் பலமாகச் சத்தமிட்டனர். அச்சத்தம் பூமியையே அதிரச் செய்தது. 6 பெலிஸ்தர் இஸ்ரவேலர்களின் சத்தத்தைக் கேட்டு, “ஏன் இஸ்ரவேல் முகாமில் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டனர்.
பின்னர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி முகாமிற்கு கொண்டு வரப்பட்டதை அறிந்துக்கொண்டனர். 7 பெலிஸ்தர் அதனால் அஞ்சினர். அவர்களோ, “தேவன் அவர்களின் முகாமிற்கு வந்திருக்கிறார்கள். நாம் இக்கட்டில் இருக்கிறோம். இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை! 8 நாங்கள் கவலைப்படுகிறோம். வல்லமையான இந்தத் தெய்வங்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள்? இந்தத் தெய்வங்கள் ஏற்கெனவே எகிப்தியர்களுக்கு நோயையும் துன்பங்களையும் கொடுத்தவர்கள். 9 பெலிஸ்தியர்களே, தைரியமாக இருங்கள், ஆண்களைப்போன்றுப் போரிடுங்கள். முற்காலத்தில் இஸ்ரவேலர்கள் நமக்கு அடிமைகளாக இருந்தனர். நீங்கள் ஆண்களைப் போன்று சண்டையிடாவிட்டால் அவர்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள்!” என்றனர்.
10 எனவே பெலிஸ்தர்கள் கடுமையாகச் சண்டையிட்டு இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தனர். ஒவ்வொரு இஸ்ரவேல் வீரனும் தங்கள் முகாமிற்கு ஓடினார்கள். இது இஸ்ரவேலுக்குப் படுதோல்வியாயிருந்தது. 30,000 இஸ்ரவேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஓப்னியையும் பினெகாசையும் கொன்றுவிட்டனர்.
விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு
32 விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 33 மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். 34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து 35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.
36 விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். 37 அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.
அனனியாவும் சப்பீராளும்
5 அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான். 2 ஆனால் தனக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அவன் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தான். மீதியிருந்த பணத்தை இரகசியமாக தனக்கென வைத்துக்கொண்டான். அவன் மனைவி இதனை அறிந்து இத்திட்டத்துக்கு ஒப்புக்கொண்டாள்.
3 பேதுரு “அனனியாவே, சாத்தான் உனது இருதயத்தை ஆள ஏன் அனுமதித்தாய்? நீ பொய் கூறி, பரிசுத்த ஆவியை ஏமாற்ற முயன்றாய். நீ உனது நிலத்தை விற்றாய். ஆனால் பணத்தில் ஒரு பகுதியை ஏன் உனக்காக வைத்துக்கொண்டாய்? 4 நீ நிலத்தை விற்கும் முன்பு அது உனக்கு உரியதாக இருந்தது. நீ அதனை விற்ற பிறகும் அந்தப் பணத்தை நீ விரும்பிய வகையில் செலவழித்திருக்கலாம். ஏன் இந்தத் தீய செயலைச் செய்வதற்கு எண்ணினாய்? நீ தேவனிடம் பொய் கூறினாய், மனிதரிடம் அல்ல!” என்றான்.
5-6 அனனியா இதனைக் கேட்டபோது, கீழே விழுந்து உயிர்விட்டான். சில இளைஞர்கள் வந்து அவன் சரீரத்தைப் பொதிந்தனர். அதனை வெளியே எடுத்துச்சென்று புதைத்தனர். இதைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மனமும் அச்சத்தால் நிரம்பியது.
7 சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை. 8 பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான்.
சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள்.
9 பேதுரு அவளை நோக்கி, “கர்த்தருடைய ஆவியைச் சோதிப்பதற்கு நீயும் உன் கணவனும் ஏன் ஒத்துக்கொண்டீர்கள்? கவனி, அந்தக் காலடிகளின் சத்தத்தைக் கேட்டாயா? உனது கணவனைப் புதைத்த மனிதர்கள் கதவருகே வந்துவிட்டனர். உன்னையும் அவர்கள் அவ்வாறே சுமந்து செல்வர்” என்றான். 10 அதே கணத்தில் சப்பீராள் அவன் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். அம்மனிதர்கள் உள்ளே வந்து அவள் இறந்துவிட்டதைக் கண்டனர். அவர்கள் அவளைச் சுமந்துசென்று, அவளது கணவனின் அருகே புதைத்தனர். 11 விசுவாசிகளனைவரும், இந்தக் காரியங்களைக் குறித்துக் கேட்ட பிற மக்களும் பயத்தால் நிரம்பினர்.
எருசலேமின் அழிவு
(மத்தேயு 24:15-21; மாற்கு 13:14-19)
20 “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21 அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22 தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23 அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24 வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.
அஞ்சாதீர்கள்
(மத்தேயு 24:29-31; மாற்கு 13:24-27)
25 “சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள். 26 மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும். 27 அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள். 28 இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center