Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 113

113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
    கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
    கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
    வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
    தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
    தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
    குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
    அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
    ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!

சங்கீதம் 122

ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்

122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
    நான் மிகவும் மகிழ்ந்தேன்.
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.
இது புதிய எருசலேம்.
    ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
    கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
    அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
    தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
    “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
    உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”

என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
    இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
    இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.

1 சாமுவேல் 1:20-28

20 அதே காலம் அதற்கடுத்த ஆண்டில் அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவள் தன் மகனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். அவள், “இவன் பெயர் சாமுவேல் ஏனென்றால் நான் கர்த்தரிடம் இவனைக் கேட்டேன்” என்றாள்.

21 அந்த ஆண்டில் எல்க்கானா சீலோவிற்குப் பலிகளைக் கொடுப்பதற்காகவும் மற்றும் தேவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் சென்றான். அவன் தனது குடும்பத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். 22 ஆனால் அன்னாள் செல்லவில்லை, அவள் எல்க்கானாவிடம், “பிள்ளை வளர்ந்து திட உணவு உண்ணும் வயதை அடையும்பொழுது, நான் இவனைச் சீலோவிற்கு அழைத்து வருவேன். பிறகு அவனை கர்த்தருக்குத் தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் சீலோவிலேயே தங்கி இருப்பான்” என்றாள்.

23 அன்னாளின் கணவனான எல்க்கானா அவளிடம், “உனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அதைச் செய். பையன் பாலை மறந்து உணவு உண்ணும் காலம்வரை நீ வீட்டிலேயே தங்கியிரு. நீ சொன்னபடியே கர்த்தர் உனக்கு செய்வாராக” என்றான். எனவே அன்னாள் தன் மகனை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருந்தாள்.

சீலோவில் ஏலியிடம் சாமுவேலை அன்னாள் கொண்டுபோகிறாள்

24 பிள்ளை வளர்ந்து உணவு உண்ண ஆரம்பித்ததும் அன்னாள் அவனை அழைத்துக்கொண்டு சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனாள். தன்னோடு மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும் ஒரு துருத்தி திராட்சைரசத்தையும் கொண்டு வந்தாள்.

25 அவர்கள் கர்த்தருக்கு முன் சென்றார்கள். எல்க்கானா காளையைப் பலியாகக் கொன்றான். அவன் முன்பு கர்த்தருக்கென்று வழக்கமாகச் செய்வதுபோல் செய்தான். பின் அன்னாள் ஏலியிடம் பிள்ளையைக் கொடுத்தாள். 26 அன்னாள் ஏலியிடம், “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா, கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடி உங்கள் முன்நின்ற அதே பெண்தான் நான். நான் உண்மையை சொல்கிறேன் என இதன்மூலம் உறுதி கூறுகிறேன். 27 நான் இக்குழந்தைக்காக ஜெபம் செய்து கொண்டேன், கர்த்தர் என் ஜெபத்திற்கு பதில் அளித்தார். கர்த்தர் இந்தக் குழந்தையை எனக்குத் தந்தார். 28 இப்போது நான் இந்தக் குழந்தையை கர்த்தருக்குத் தருகிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்வான்” என்றாள்.

பிறகு அன்னாள், அந்தப் பிள்ளையை அங்கேயே விட்டு விட்டு கர்த்தரைத் தொழுதுகொண்டாள்.

ரோமர் 8:14-21

14 எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். 15 நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். 16 ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். 17 நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும்.

எதிர்காலச் சிறப்பு

18 இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும். 19 தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன. 20 தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். 21 ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center