Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 102

துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளை கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது.

102 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
    உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
    உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.

என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
    எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது.
என் வலிமை போயிற்று.
    நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன்.
    நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.
என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
    பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
என்னால் தூங்க இயலவில்லை.
    கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.
என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
    அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள்.
என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
    என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
10 ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
    நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.

11 பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
    நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
    உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
    நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
    அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
    தேவனே, பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
    ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
    தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.

18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
    எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
    பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
    மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
    அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
    அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.

23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
    என் ஆயுள் குறைந்தது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
    தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
    உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
    அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
    அவையெல்லாம் மாறிப்போகும்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
    நீர் என்றென்றும் வாழ்வீர்!
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
    நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
    அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.

சங்கீதம் 107:1-32

புத்தகம் 5

107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
    கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
    அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.

அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.
    அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள்.
    ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி,
    சோர்வடைந்து போனார்கள்.
எனவே அவர்கள் உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர் அவர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்டார்.
தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார்.
அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும்
    அவரது அன்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார்.
    பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார்.

10 தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள்.
    அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.
11 ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள்.
    மிக உன்னதமான தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தார்கள்.
12 அவர்கள் செய்த காரியங்களால்
    தேவன் அந்த ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கினார்.
அவர்கள் இடறி வீழ்ந்தார்கள்.
    அவர்களுக்கு உதவ ஒருவனும் இருக்கவில்லை.
13 அந்த ஜனங்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினார்கள்.
    தேவன் அவர்கள் துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
14 அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார்.
    அவர்களைக் கட்டியிருந்த கயிறுகளை தேவன் அறுத்தெறிந்தார்.
15 அவரது அன்பிற்காகவும் அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும்
    கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
16 நாம் நமது பகைவரை முறியடிப்பதற்கு தேவன் உதவுகிறார்.
    அவர்களின் வெண்கலக் கதவுகளை தேவனால் உடைக்க முடியும்.
    அவர்களின் வாயிற் கதவுகளின் இரும்புக் கம்பிகளை தேவனால் சிதறடிக்க முடியும்

17 சிலர் தங்கள் பாவங்களின் காரணமாக அறிவற்றவர்களாக மாறினார்கள்.
    தங்களுடைய குற்றங்களுக்காக அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள்.
18 அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள்.
    அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.
19 அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள்.
    கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள்.
    அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
20 தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார்.
    எனவே அந்த ஜனங்கள் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.
21 அவரது அன்பிற்காகவும்,
    அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
22 அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள்.

23 சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.
    பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
24 கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.
    கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
25 தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.
    அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
26 அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.
    மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
27 அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.
    மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
28 அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.
    எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
29 தேவன் புயலை நிறுத்தினார்.
    அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
30 கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.
    அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
31 அவரது அன்பிற்காகவும்,
    அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
32 பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.
    முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள்.

நியாயாதிபதிகள் 14:20-15

20 சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான்.

சிம்சோன் பெலிஸ்தியருக்குத் தொல்லை கொடுத்தல்

15 கோதுமை அறுவடையின்போது சிம்சோன் தன் மனைவியைச் சந்திக்கப் போனான். அவளுக்கு அன்பளிப்பாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். அவன், “என் மனைவி இருக்கும் அறைக்குச் செல்கிறேன்” என்றான்.

அவளது தந்தை சிம்சோனை உள்ளே விடவில்லை. அவளது தந்தை சிம்சோனிடம், “நீ அவளை வெறுத்தாய் என நான் நினைத்தேன். எனவே மாபிள்ளைத் தோழனை அவள் திருமணம் செய்துகொள்ள நான் அனுமதித்து விட்டேன். அவள் தங்கை இன்னும் அழகானவள், அவளை மணந்துகொள்” என்றான்.

ஆனால் சிம்சோன் அவனிடம், “இப்போது பெலிஸ்தியராகிய உங்கள் அனைவரையும் துன்புறுத்துவதற்கு எனக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கிறது. என்னை இப்போது யாரும் குறைச் சொல்ல முடியாது” என்றான்.

பின்பு சிம்சோன் வெளியே சென்று 300 நரிகளைப் பிடித்தான். அவற்றை இரண்டு இரண்டாகச் சேர்த்து அவற்றின் வாலைக் கட்டி, வால்களுக்கிடையில் நெருப்புப் பந்தத்தை வைத்தான்.

பின்பு சிம்சோன் அவற்றைக் கொளுத்தி வாலில் நெருப்பு வைக்கப்பட்ட அந்நரிகளைப் பெலிஸ்தியரின் தானியங்கள் விளையும் வயல்களுக்கிடையில் துரத்திவிட்டான். இவ்வாறு அவர்களின் வயல்களில் விளைந்துகொண்டிருந்த பயிர்களையும், அறுவடை செய்து தனியே குவித்து வைத்த கதிர்க்கட்டுகளையும் நெருப்பால் அழித்தான். மேலும் திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எரித்தான்.

பெலிஸ்தியர், “இதனைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள்.

திம்னாவிலுள்ள மனிதனின் மருமகனான சிம்சோன் அதனைச் செய்ததாகச் சிலர் கூறினார்கள். அவர்கள் “சிம்சோனின் மாமனார் தன் குமாரத்தியை மாப்பிள்ளைத் தோழனுக்குத் திருமணம் செய்து வைத்ததால் அவன் அத்தகைய செயலைச் செய்தான்” என்றார்கள். அதனால் பெலிஸ்தியர் சிம்சோனின் மனைவியையும், அவளது தந்தையையும் எரித்துக் கொன்றனர்.

பின்பு சிம்சோன் அப்பெலிஸ்திய ஜனங்களிடம் “நீங்கள் தீமை செய்ததால் நானும் உங்களுக்குத் தீமை செய்வேன். நான் உங்கள் மேல் பழி சுமத்துகிறவரைக்கும் நிறுத்தமாட்டேன்!” என்றான்.

பின்பு சிம்சோன் பெலிஸ்தியரைத் தாக்கி அவர்களில் பலரைக் கொன்றான். பின்பு அவன் ஒரு குகையில் சென்று தங்கினான். அக்குகை ஏத்தாம் பாறையில் இருந்தது.

பின்பு பெலிஸ்தியர் யூதாவின் தேசத்திற்குச் சென்று, லேகி என்னுமிடத்திற்கருகில் தங்கினார்கள். அவர்களின் சேனையும் அங்கேயே தங்கிப் போருக்குத் தயாரானது. 10 யூதா கோத்திரத்தினர் அவர்களிடம், “பெலிஸ்தியராகிய நீங்கள் ஏன் எங்களோடு போரிட வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு பெலிஸ்தியர், “நாங்கள் சிம்சோனைக் கைது செய்ய வந்துள்ளோம். எங்கள் ஜனங்களுக் கெதிராக அவன் செய்த செயல்களுக்கு அவனைத் தண்டிக்க விரும்புகிறோம்” என்றனர்.

11 பின்பு 3,000 யூதா கோத்திரத்தினர் சேர்ந்து ஏத்தாம் பாறைக்கு அருகில் இருந்த குகைக்கு சிம்சோனிடம் சென்றனர். அவர்கள், “நீ எங்களுக்கு என்ன செய்தாய் என்பதை அறிவாயா? பெலிஸ்தியர் நம்மை ஆட்சி வலிமை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?” என்று கேட்டனர்.

அதற்கு சிம்சோன், “அவர்கள் எனக்குத் தீங்கு செய்ததால் அவர்களைத் தண்டித்தேன்” என்றான்.

12 பின்பு அவர்கள், “உன்னைக் கட்டி, பெலிஸ்தியரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளோம்” என்றனர்.

சிம்சோன் யூதா ஜனங்களிடம், “நீங்களாகவே என்னை காயப்படுத்தமாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்று கேட்டான்.

13 அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர்.

14 லேகி என்னுமிடத்திற்குச் சிம்சோன் வந்தபோது, பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அப்போது கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோன் மீது வந்தார். சிம்சோன் கயிறுகளை அறுத்தான். அந்த கயிறுகள் எரிந்துபோன நூலைப் போல காணப்பட்டன. உருகின கயிறுகள் போல அவன் கரங்களிலிருந்து அவை நழுவின. 15 அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.

16 பின்பு சிம்சோன்,

“ஒரு கழுதையின் தாடையெலும்பால்
    1,000 பேரைக் கொன்றேன்!
கழுதையின் தாடையெலும்பால்
    ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான்.

17 இவ்வாறு சொல்லி அத்தாடையெலும்பை கீழே எறிந்தான். அந்த இடம் அதனால் ராமாத்லேகி என்று அழைக்கப்பட்டது.

18 சிம்சோன் மிகவும் தாகமாயிருந்தான். அவன் கர்த்தரை நோக்கி, “நான் உமது ஊழியன், நீர் எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தீர். நான் தாகத்தால் மரிக்கும்படி தயவு செய்துவிடாதிரும். விருத்தசேதனம் இல்லாத மனிதர்கள் என்னைப் பிடிக்க அனுமதியாதிரும்” என்று அழுது முறையிட்டான்.

19 லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது. 20 இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.

அப்போஸ்தலர் 7:17-29

17 “எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது) 18 பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. 19 இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான்.

20 “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். 21 மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் குமாரத்தி அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள். 22 தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.

23 “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். 24 எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். 25 தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

26 “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். 27 ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. 28 நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’(A) என்றான். 29 அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர்.

யோவான் 4:43-54

அதிகாரியின் குமாரன் குணப்படுதல்

(மத்தேயு 8:5-13; லூக்கா 7:1-10)

43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். ராஜாவின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது குமாரன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது குமாரன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.

49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய குமாரன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.

50 அதற்கு இயேசு, “போ, உன் குமாரன் பிழைப்பான்” என்றார்.

அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் குமாரன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

52 “என் குமாரன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் குமாரனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.

53 இயேசு, “உன் குமாரன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center