Book of Common Prayer
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
மகிமை உமக்கே உரியது.
உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
2 எங்கள் தேவன் எங்கே என்று
ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
3 தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
4 அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
5 அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
6 அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
7 அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
8 அச்சிலைகளைச் செய்து,
அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
9 இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.
அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.
அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)
2 அன்னாள் ஜெபம் பண்ணி,
“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
2 கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
3 இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
4 வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
5 கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
6 கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
7 கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
8 கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
இந்த முழு உலகமும் அவருக்குரியது!
9 கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10 கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
அவர் தமது ராஜாவுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.
கானாவூர் கல்யாணம்
2 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். 2 இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.
4 “அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.
5 “இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.
6 அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.
7 இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.
8 பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.
வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். 9 அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” என்றான்.
11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.
12 பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.
“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல்.
45 ராஜாவுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும்.
தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
2 நீரே யாவரினும் அழகானவர்!
நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார்.
3 வாளை எடும்.
மேன்மையான ஆடைகளை அணியும்.
4 நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்!
நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும்.
அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும்.
5 உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன.
நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது ராஜாவாயிரும்.
6 தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும்.
நன்மையே உமது செங்கோலாகும்.
7 நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர்.
எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார்.
8 வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும்.
தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும்.
9 மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர்.
உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.
10 மகளே, கேள்,
கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11 ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
13 அரச குமாரத்தி
பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
தாவீதின் ஒரு பாடல்.
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
149 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
சீயோனின் ஜனங்கள் அவர்களின் ராஜாவோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
அவர் அவர்களை மீட்டார்!
5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.
6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
8 தேவனுடைய ஜனங்கள் அந்த ராஜாக்களுக்கும் அங்குள்ள முக்கியமான
ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
கர்த்தரைத் துதியுங்கள்!
23 ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24 எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர்.
“அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர்.
என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்”(A)
என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.
25 இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் குமாரன்” என்றார். 27 பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.
2008 by World Bible Translation Center