Book of Common Prayer
தாவீதின் பாடல்.
26 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
2 கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
3 நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
4 நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
5 அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.
6 கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
7 கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
9 கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன்.
எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.
தாவீதின் ஒரு பாடல்.
28 கர்த்தாவே, நீர் என் பாறை.
உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
2 கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
3 கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
4 கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
5 கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
6 கர்த்தரைத் துதிப்பேன்,
இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
7 கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
நான் மிகவும் மகிழ்கிறேன்!
அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
8 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
9 தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!
இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.
36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
2 அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
3 அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
4 இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.
5 கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
6 கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
8 கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
9 கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.
எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
39 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
2 நான் பேச மறுத்தேன்.
நான் எதையும் கூறவில்லை.
ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
3 நான் மிகவும் கோபமடைந்தேன்.
அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
4 கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
5 கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!
6 நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.
7 எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
நீரே என் நம்பிக்கை!
8 கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
9 நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.
12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
13 கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும்,
நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
15 நகரத்தின் மதிலில் அப்பெண்ணின் வீடுகட்டப்பட்டிருந்தது. அது சுவரின் ஒரு பாகமாக அமைந்திருந்தது. எனவே அப்பெண் ஜன்னல் வழியே ஒரு கயிற்றின் மூலமாக அவ்விருவரையும் கீழே இறக்கினாள். 16 அப்போது அப்பெண் அம்மனிதரை நோக்கி: “ராஜாவின் ஆட்கள் உங்களைக் காணாதபடிக்கு மேற்குத் திசையில் மலைகளின் உள்ளே சென்றுவிடுங்கள். அங்கு மூன்று நாட்கள் ஒளிந்திருங்கள். ராஜாவின் ஆட்கள் திரும்பி வந்தபின் நீங்கள் திரும்பிப் போகலாம்” என்றாள்.
17 அம்மனிதர்கள் அவளைப் பார்த்து, “நாங்கள் உனக்கு ஒரு வாக்குறுதி அளித்தோம். ஆனால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். 18 நாங்கள் தப்பிச்செல்ல உதவுவதற்கு நீ இந்தச் சிவப்புக் கயிற்றைப் பயன்படுத்துகிறாய். நாங்கள் இத்தேசத்திற்குத் திரும்பவும் வருவோம். அப்போது உன் வீட்டு ஜன்னலில் இந்தக் கயிற்றை நீ கட்ட வேண்டும். உன் தந்தை, தாய், குடும்பத்தினர் எல்லோரையும் உன்னோடு வீட்டிற்குள் அழைத்துக் கொள்ளவேண்டும். 19 இவ்வீட்டில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் காப்போம். உன் வீட்லுள்ள யாரேனும் காயமுற்றால், நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகளாவோம். ஆனால் உன் வீட்டிலிருந்து ஒருவன் வெளியே போனால் அவன் கொல்லப்படக்கூடும். அவனுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அது அவனுடைய குற்றமாகும். 20 நாங்கள் இந்த ஒப்பந்தத்தை உன்னோடு செய்கிறோம். ஆனால் நாங்கள் செய்கிறதை நீ யாருக்காவது கூறினால், இந்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் நீங்கலாயிருப்போம்” என்றனர்.
21 அதற்கு அப்பெண், “நீங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்வேன்” என்று கூறி அவர்களை வழியனுப்பினாள். அம்மனிதர்கள் அவள் வீட்டைவிட்டுச் சென்றனர். அப்பெண் ஜன்னலில் அச்சிவப்பு கயிற்றைக் கட்டினாள்.
22 அவ்விருவரும் அவள் வீட்டிலிருந்து மலைகளுக்குச் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். ராஜாவின் ஆட்கள் பாதைகளில் எல்லாம் தேடினார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நகருக்குத் திரும்பினார்கள். 23 ஒற்றர்கள் இருவரும் மலைகளைவிட்டு நீங்கி, நதியைக் கடந்து நூனின் குமாரனாகிய யோசுவாவிடம் சென்றார்கள். தாங்கள் அறிந்து வந்த எல்லாவற்றையும் அவர்கள் யோசுவாவுக்குக் கூறினார்கள். 24 அவர்கள் யோசுவாவை நோக்கி, “கர்த்தர் நமக்கு உண்மையாகவே அத்தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் நமக்கு அஞ்சுகிறார்கள்” என்றார்கள்.
13 நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வேலைகளை முடிக்க வேண்டும். 14 நான் என் நாட்டு மக்களை வைராக்கியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த வழியில் அவர்களில் சிலரையாவது இரட்சிப்பிற்குள் கொண்டுவர உதவமுடியும். 15 தேவன் யூதர்களிடமிருந்து விலகிக்கொண்டார். உலகிலுள்ள மற்றவர்களுக்கு அவர் நெருக்கமானார். அவர் யூதர்களை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது மக்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது உறுதியாக இருக்கும். 16 ஒரு அப்பத்தின் முதல் துண்டு தேவனுக்குப் படைக்கப்படுமானால் மற்றக் முழுதும் புனிதமாகிவிடும். ஒரு மரத்தின் வேர்கள் புனிதமாய் இருந்தால் மற்ற கிளைகளும்கூட புனிதமாகிவிடும்.
17 ஒலிவ மரத்தின் சில கிளைகளை ஒடித்தெறிந்து விட்டு அந்த இடத்தில் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளை ஒட்ட வைத்தால் எப்படி இருக்ககுமோ அப்படி இருக்கிறீர்கள். யூதரல்லாத நீங்கள் காட்டு ஒலிவ மரத்தைப் போன்றவர்கள். யூதரல்லாத நீங்கள் யூதர்களோடு இணைத்து வைக்கப்பட்டு, நீங்களும் அதே வேர்களைப் பங்கிட்டு, மரச் சாற்றிலிருந்து குடிக்கிறீர்கள். யூதர்களின் பலனையும் பெறுகின்றீர்கள். 18 நீங்கள் அந்தக் கிளைகளைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். அதற்கான எந்தக் காரணமும் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேர்களுக்கு உயிர்கொடுக்கவில்லை. வேர்களே உங்களுக்கு உயிரைக் கொடுக்கின்றன. 19 “நான் ஒட்டவைக்கப்படுவதற்காகவே அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.” 20 அது உண்மை. ஆனால் விசுவாசம் இல்லாததால்தான் அக்கிளைகள் முறிக்கப்பட்டன. உனது விசுவாசத்தினால்தான் நீ அந்த மரத்தின் ஒரு பகுதியானாய். இதற்காகப் பெருமைப்படாதே, பயப்படு. 21 உண்மையான கிளைகளை மரத்தோடு நிலைத்திருக்க தேவன் அனுமதிக்கவில்லை என்றால் நீ விசுவாசம் இழந்துவிட்டால் உன்னையும் இணைந்து இருக்க அனுமதிக்கமாட்டார்.
22 தேவன் இரக்கமுடையவர் எனினும் பயங்கரமானவரும் கூட என்பதை அறிந்துகொள். தன்னைப் பின்பற்றுவதை நிறுத்துகின்ற மக்களை அவர் தண்டிக்கிறார். நீங்கள் அவரைப் பின்பற்றினால் அவர் உங்களிடம் அன்போடு இருப்பார். நீங்கள் அவரைப் பின்பற்றுவதை நிறுத்தினால் மரத்திலிருந்து வெட்டியெறியப்படுவீர்கள். 23 மீண்டும் யூதர்கள் தேவன் மீது விசுவாசம் வைக்கத் தொடங்கினால் தேவன் மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்வார். அவர்கள் துவக்கத்தில் எப்படியிருந்தார்களோ அப்படி அவர்களை தேவன் உருவாக்குவார். 24 காட்டுமரக் கிளைகள் ஒரு ஒலிவ மரத்தின் கிளையாக ஒட்டி வளர்வது இயற்கையன்று, யூதரல்லாதவர்களாகிய நீங்கள் காட்டு ஒலிவ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகளைப் போன்றவர்கள். இப்பொழுது நல்ல ஒலிவ மரத்தோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள். யூதர்களோ நல்ல ஒலிவமரத்தில் வளர்ந்த கிளைகளைப் போன்றவர்கள். எனவே, நிச்சயமாக அவர்கள் தங்கள் சொந்த மரத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்வார்கள்.
மூன்று வேலைக்காரர்களைப் பற்றிய உவமை
(லூக்கா 19:11-27)
14 “பரலோக இராஜ்யம், தன் வீட்டை விட்டு வேறொரு இடத்திற்குப் பயணமான ஒருவனுக்கு ஒப்பாகும். புறப்பட்டுச் செல்வதற்கு முன் அவன் தனது மூன்று வேலைக்காரர்களுடன் பேசினான். தான் புறப்பட்டுச் சென்றபின் தனது உடமைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொன்னான். 15 ஒவ்வொரு வேலைக்காரனும் எதைப் பார்த்துக் கொள்ள முடியுமென அவன் தீர்மானித்தான். அதற்கேற்ப ஒருவனிடம் ஐந்து பை நிறையப் பணமும்[a] மற்றொருவனிடம் இரண்டு பை நிறையப் பணமும் மூன்றாவது வேலைக்காரனிடம் ஒரு பை நிறையப் பணமும் கொடுத்தான். பின் அவன் புறப்பட்டுப் போனான். 16 ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது. 17 அதே போல இரண்டு பை பணம் பெற்றவனுக்கும் நடந்தது. அவன் தான் பெற்ற இரண்டு பை பணம் முதலிட்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டினான். 18 ஆனால், ஒரு பை பணம் பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.
19 “நீண்ட காலம் கழித்து எஜமானன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன செய்தார்கள் எனத் தன் மூன்று வேலைக்காரர்களிடமும் கேட்டான். 20 ஐந்து பை பணம் பெற்ற வேலைக்காரன் மேலும் ஐந்து பை பணத்தைக் கொண்டு வந்து தன் எஜமானிடம் சொன்னான், ‘எஜமானே! நீர் என்னை நம்பி ஐந்து பை பணம் தந்தீர்கள். ஆகவே, நான் அதை முதலிட்டு மேலும் ஐந்து பை பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான்.
21 “அதற்கு எஜமானன், ‘நீ செய்தது சரி. நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிது பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய், மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்!’ என்றான்.
22 “பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான்.
23 “அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்!’ என்றான்.
24 “பின் ஒரு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர் நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். 25 எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான்.
26 “எஜமான் அவனை நோக்கி, ‘நீ ஒரு மோசமான சோம்பேறி வேலைக்காரன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். 27 எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான்.
28 “ஆகவே, எஜமானன், தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம் வைத்திருப்பவனிடம் கொடுங்கள். 29 தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவனும் மேலும் அதிகம் பெறுவான். அவனுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகக் கிடைக்கும். ஆனால் தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்தாதவனிடமிருந்து அனைத்தும் பறிக்கப்படும்.’ என்றான். 30 பிறகு அந்த எஜமானன், ‘பயனற்ற அந்த வேலைக்காரனைத் தூக்கி வெளியே இருளில் எறியுங்கள். அவ்விடத்தில் மக்கள் கூக்குரலிட்டு பற்களைக் கடித்துக் கொண்டு வேதனையால் அழுது கொண்டிருப்பார்கள்’ என்றான்.
2008 by World Bible Translation Center