Book of Common Prayer
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
புத்தகம் 4
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.
90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
2 தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!
3 நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
4 ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
5 நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
6 காலையில் புல் வளரும்,
மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
7 தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
8 எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
9 உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.
உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.
14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.
நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.
இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும்.
16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்
உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும்.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.
நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்.
தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.
136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
2 தேவாதி தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
4 ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
5 வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
6 தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
7 தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
8 தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
9 தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் ராஜாவாகிய ஓகைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
யூதா ராஜாவின் அனைத்து குமாரர்களையும் அத்தாலியாள் கொன்றது
11 அத்தாலியாள் என்பவள் அகசியாவின் தாயார் ஆவாள். தன் குமாரன் மரித்துப் போனதைப் பார்த்ததும், எழுந்து அரச குடும்பத்தினரையெல்லாம் கொன்றாள்.
2 ராஜாவாகிய யோராமின் குமாரத்தி யோசேபாள் ஆவாள். இவள் அகசியாவிற்குச் சகோதரி ஆவாள். யோவாஸ் அகசியா ராஜாவின் குமாரர்களுள் ஒருவன். மற்றவர்கள் கொல்லப்பட்டபோது அவள் அவனைக் காப்பற்றி ஒளித்து வைத்தாள். தன் படுக்கையறையிலேயே யோவாசையும் அவனது தாதியையும் மறைத்து வைத்தாள். இவ்வாறு யோவாஸ் அத்தாலியாவால் கொல்லப்படாமல் தப்பித்தான்.
3 பிறகு கர்த்தருடைய ஆலயத்தில் யோவாசும் யோசேபாவும் ஆறு ஆண்டுகள் மறைந்து இருந்தனர். அத்தாலியா யூதாவை ஆண்டு வந்தாள்.
4 ஏழாவது ஆண்டில், தலைமை ஆசாரியனான யோய்தா 100 பேருக்கு அதிகாரிகளையும் தலைவர்களையும் காவலர்களையும் ஒருங்கே அழைத்தான். கர்த்தருடைய ஆலயத்தில் கூடச்செய்து அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். அவர்களை ஆலயத்தில் வாக்குறுதி கொடுக்கச் செய்து ராஜாவின் குமாரனைக் காட்டினான்.
5 பின் அவன் அவர்களுக்கு ஆணையிட்டு, “நீங்கள் செய்யவேண்டிய காரியம் இதுதான். உங்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஒவ்வொரு ஓய்வு நாளில் முறைப்படி வரவேண்டும். ராஜாவின் வீட்டை கவனித்து வரவேண்டும். 6 இன்னொரு மூன்றில் ஒரு பங்கினர் சூர் வாசலில் இருக்க வேண்டும். மூன்றில் மற்றொரு பங்கினர் காவலர்களுக்குப் பின்னாலுள்ள வாசலில் இருக்க வேண்டும். இவ்வாறு நீ ராஜாவின் வீட்டைச் சுற்றி சுவர்போல இருக்க வேண்டும. 7 ஒவ்வொரு ஓய்வுநாளும் முடியும்போது, மூன்றில் இரண்டு பங்கினர் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜா யோவாசையும் பாதுகாத்து நிற்பார்கள். 8 நீங்கள் ராஜா யோவாசோடு தங்கி அவன் எங்கு போனாலும் போகவேண்டும். அவர்கள் எப்போதும் அவனைச் சுற்றியே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கையில் ஆயுதம் வைத்திருக்கவேண்டும். உங்களை நெருங்குகிற எவரையும் கொன்று விடவேண்டும்” என்றான்.
9 ஆசாரியன் யோய்தாவின் ஆணைப்படி தளபதிகள் செயல்பட்டார்கள். ஒவ்வொரு வரும் தம் ஆட்களை அழைத்தனர். சனிக்கிழமை ஒரு குழு யோவாசை பாதுகாத்தது. மற்ற குழுக்கள் மற்ற நாட்களில் காவல் காத்துவந்தனர். எல்லோரும் ஆசாரியன் யோய்தாவிடம் வந்தனர். 10 ஆசாரியனோ தளபதிகளுக்கு ஈட்டி கேடயம் போன்றவற்றைக் கொடுத்தான். இவை அனைத்தும் ராஜா தாவீதால் ஒரு காலத்தில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 11 இக்காவலர்கள் ஆயுதங்களோடு வலது மூலையிலிருந்து ஆலயத்தின் இடது மூலைவரை நின்றனர். பலிபீடம், ஆலயம் போன்றவற்றைச் சுற்றிலும் நின்றனர். ராஜா ஆலயத்திற்குப் போகும்போதும் அவனைச் சுற்றி நின்றனர். 12 அவன் (யோய்தா) யோவாசை வெளியே அழைத்து வந்தான். அவன் தலையில் மகுடத்தைச் சூடி ராஜாவுக்கும் தேவனுக்கும் இடையில் ஒப்பந்தத்தை கொடுத்தனர். அவனுக்கு அபிஷேகம் செய்து புதிய ராஜாவாக நியமித்தனர். அவர்கள் கைகளைத் தட்டி, ஓசையெழுப்பி “ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.
13 இராணி அத்தாலியாள் காவலர்களிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் எழுந்த இச்சத்தத்தை கேட்டாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போனாள். 14 ராஜா வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ராஜாவுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் “துரோகம்! துரோகம்!” என்று கத்தினாள்.
15 படைவீரர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதிகளுக்கு ஆசாரியன் யோய்தா கட்டளையிட்டான். யோய்தா, “ஆலயத்தை விட்டு வெளியே அத்தாலியாளைக் கொண்டு வாருங்கள். அவளைச் சார்ந்தவர்களைக் கொல்லுங்கள். ஆனால் கர்த்தருடைய ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான்.
16 எனவே அவளை ஆலயத்தைவிட்டு வெளியே “குதிரை வாசலுக்கு” இழுத்து வந்து அங்கே அவளைக் கொன்றனர்.
17 பிறகு கர்த்தருக்கும் ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் யோய்தா ஒரு ஒப்பந்தம் செய்தான். இதன்படி ராஜாவும் ஜனங்களும் கர்த்தருக்கு உரியவர்கள். பின் யோய்தா ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன்படி ராஜா ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், ஜனங்களும் ராஜாவுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும்.
18 பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர்.
கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான். 19 ஆசாரியன் ஜனங்களை வழிநடத்தினான். அவர்கள் கர்த்தரின் ஆலயத்திலிருந்து ராஜாவின் வீட்டிற்குச் சென்றனர். ராஜாவோடு சிறப்பு காவலர்களும் அதிகாரிகளும் சென்றனர். அவன் ராஜாவின் வீட்டின் வாசலுக்குச் சென்றான். பிறகு (ராஜா யோவாஸ்) அவன் சிங்காசனத்தில் அமர்ந்தான். 20 ஜனங்கள் அனைவரும் மகிழ்ந்தனர். நகரம் சமாதானமாயிருந்தது. வாளால் கொல்லப்பட்ட இராணி அத்தாலியாள் அரண்மனைக்கருகில் கொல்லப்பட்டாள்.
10 திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது. 11 ஆனால், மனைவி கணவனைப் பிரிந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அல்லது, அவளுடைய கணவனோடேயே நல்லுறவுடன் மீண்டும் வாழவேண்டும். கணவனும் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது.
12 மற்ற எல்லாருக்காகவும் இதனைக் கூறுகிறேன். (நானே இவற்றைக் கூறுகிறேன். கர்த்தர் அல்ல) கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன் விசுவாசமற்ற ஒருத்தியை மணந்திருக்கக்கூடும். அவள் அவனோடு வாழ விரும்பினால் அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. 13 விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது. 14 விசுவாசமற்ற கணவன் விசுவாசம் உள்ள மனைவி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவான். விசுவாசமற்ற மனைவி விசுவாசமுள்ள கணவனால் பரிசுத்தமாக்கப்படுவாள். இது உண்மையில்லையெனில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள்.
15 விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார். 16 மனைவியே! நீ ஒருவேளை உன் கணவனை காப்பாற்றக் கூடும். கணவனே, நீ ஒருவேளை உன் மனைவியை காப்பாற்றக் கூடும். பிற்காலத்தில் நிகழப்போவதை நீங்கள் தற்சமயம் அறியமாட்டீர்கள்.
தேவன் அழைத்தபடியே வாழுங்கள்
17 தேவன் உங்களுக்குத் தந்த வாழ்வின்படியே ஒவ்வொருவனும் வாழ்ந்துகொண்டிருக்கட்டும். தேவன் உங்களை அழைத்தபோது நீங்கள் இருந்தபடியே வாழுங்கள். எல்லா சபைகளிலும் நான் உருவாக்கிய விதி இது தான். 18 அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனாக இருந்தால், பின்னர் அதன் அடையாளங்களை மாற்ற அவன் முயற்சி செய்யக் கூடாது. அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யப்படாதவனாக இருந்தால், பிறகு அவன் விருத்தசேதனம் செய்துகொள்ளக் கூடாது. 19 ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். 20 தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும். 21 தேவன் அழைத்தபோது நீ அடிமையாய் இருந்தால் நீ அதுபற்றிக் கவலைப்படாதே. ஆனால் நீ சுதந்தரமானவனாக இருந்தால், பிறகு எல்லாவகையிலும் வாய்ப்பைப் பயன்படுத்து. 22 கர்த்தர் அழைத்தபோது அடிமையாய் இருந்தவன் கர்த்தருக்குள் சுதந்தர மனிதனாக இருக்கிறான். அவன் கர்த்தருக்குரியவன். அழைக்கப்பட்டபோது சுதந்திர மனிதனாக இருந்தவனோ இப்போது கிறிஸ்துவுக்கு அடிமையாக இருக்கிறான். 23 நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமை ஆகாதீர்கள். 24 சகோதரர்களே, சகோதரிகளே! தேவனோடான உங்கள் புது வாழ்க்கையில், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் அழைக்கப்பட்டபோது இருந்தபடியே வாழ்க்கையைத் தொடரவேண்டும்.
பணமும் தேவனும்
(லூக்கா 12:33-34; 11:34-36; 16:13)
19 “உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
22 “உடலுக்கு ஒளி தருவது கண். உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியுடன் திகழும். 23 ஆனால், உங்கள் கண்கள் கெட்டுப் போனால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியிழந்து போகும். உங்களிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு கொடியதாயிருக்கும்.
24 “எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.
2008 by World Bible Translation Center