Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 20-21

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
    யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
    சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
    உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.

தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
    உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
    நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.

கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
    தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குப் பதில் தந்தார்.
    அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
    மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
    அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
    அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
    நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.

கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ராஜாவை மீட்டார்!
    தேவன் தேர்ந்தெடுத்த ராஜா உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
    நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
    ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.

கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
    அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
    நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
    அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
    அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
    உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
    ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
ராஜா கர்த்தரை நம்புகிறான்.
    உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
    உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
    அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
    அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
    அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
    நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
    அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.

13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
    கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!

சங்கீதம் 110

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.

110 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
    “என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.

உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
    உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
    பிற நாடுகளிலும் நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது,
    உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்.
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
    அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
    தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.

கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
    அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
    மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”

என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
    அவர் கோபமடையும்போது மற்ற ராஜாக்களைத் தோற்கடிப்பார்.
தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
    பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
    தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.

வழியின் நீரூற்றில் ராஜா தண்ணீரை பருகுகிறார்.
    அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!

சங்கீதம் 116-117

116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் மரித்தவன் போலானேன்!
    மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
    நான் அஞ்சிக் கலங்கினேன்.
அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
    நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.

கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
    தேவன் தயவுள்ளவர்.
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
    நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
    கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
    நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
    நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
நான் உயிருள்ளோரின் தேசத்தில்
    தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.

10 “நான் அழிந்துபோனேன்!”
    என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
11 நான் பயப்பட்டபோதும்
    “மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.

12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?
    என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
13 அவர் என்னைக் காப்பாற்றினார்.
    எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
14 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.

15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!
    கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
16 நான் உமது பணியாள்.
    உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான்.
    கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.
    நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
18 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
    நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.

கர்த்தரைத் துதிப்போம்!

117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
    ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
    என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.

கர்த்தரைத் துதிப்போம்!

1 இராஜாக்கள் 7:51-8:21

51 இவ்வாறு கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை சாலொமோன் செய்து முடித்தான். பிறகு தனது தந்தை தாவீது சேர்த்து வைத்திருந்தப் பொருட்களையெல்லாம் ஆலயத்துக்காக ஒன்றாகச் சேர்த்தான். இவை அனைத்தையும் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். வெள்ளி, பொன் முதலியவற்றையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொக்கிஷத்தில் சேர்த்துவைத்தான்.

ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி

பின் சாலொமோன் இஸ்ரவேலரின் முதியவர்களையும் கோத்திரத் தலைவர்களையும் கூட்டினான். அவர்களை எருசலேமுக்கு வரச்செய்தான். அவர்களை தாவீது நகரத்திலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்திற்கு கொண்டு வரும்படி கேட்டான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சாலொமோனிடம் வந்தனர். இது, ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்து அடைக்கல கூடார பண்டிகைக்குரியதாக இருந்தது. இஸ்ரவேலின் முதியவர்கள் அனைவரும் அங்கு வந்துசேர்ந்ததும் பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் எடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியோடு ஆசரிப்புக் கூடாரத்தையும் கூடாரத்திலிருந்து பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்துகொண்டு ஆசாரியரும் லேவியர்களும் வந்தனர். சாலொமோன் ராஜாவும் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் கூடினார்கள். அவர்கள் பல பலிகளைக் கொடுத்தனர். எவராலும் எண்ணிப்பார்க்க முடியாதபடி ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டனர். பின்னர் ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதற்கு உரிய சரியான இடத்தில் வைத்தனர். அது ஆலயத்தின் உள்ளே மகா பரிசுத்தமான இடத்தில் இருந்தது. உடன்படிக்கைப் பெட்டியானது கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் இருந்தது. கேருபீன்கள் தங்கள் சிறகுகளை விரித்து பரிசுத்தப் பெட்டியையும் அதன் தண்டுகளையும் மூடின. தூக்கிச் செல்லத்தக்க தண்டுகள் மிகவும் நீளமானவை. அவை பரிசுத்த இடத்திற்கு முன்னால் மகா பரிசுத்த இடத்தில் நிற்கும் எவராலும் காணத்தக்கதாக இருந்தன. என்றாலும் அவை வெளியே காணப்படவில்லை. அவை இன்றும் அங்கே தான் உள்ளன. அப்பரிசுத்தப் பெட்டிக்குள்ளே இரண்டு கற்பல கைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவற்றை மோசே ஓரேப் என்ற இடத்தில் பரிசுத்தப் பெட்டிக்குள்ளே வைத்தான். அந்த இடத்தில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்ததும் கர்த்தர் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டார்.

10 ஆசாரியர்கள் பரிசுத்தப் பெட்டியை மகா பரிசுத்த இடத்தில் வைத்தனர். ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறியதும் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை மூடிக்கொண்டது. 11 ஆசாரியர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது. ஏனென்றால் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிவிட்டது. 12 பிறகு சாலொமோன்:

“கர்த்தர், கனமான மேகத்தில் வாழ்வதாகச் சொன்னார்,[a]
13 நான் உங்களுக்காக ஒரு பிரமாதமான ஆலயத்தைக் கட்டினேன்,
    என்றென்றும் நீங்கள் வாழத்தக்க இடத்தை உருவாக்கினேன்” என்றான்.

14 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் அங்கே நின்றுக்கொண்டு இருந்தனர். எனவே சாலொமோன் அவர்களை நோக்கி திரும்பி ஆசீர்வதிக்கும்படி தேவனை வேண்டினான். 15 பிறகு சாலொமோன் ராஜா கர்த்தருக்கு முன் மிக நீண்ட நேரம் ஜெபித்தான். அவன்:

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மிகப் பெரியவர். கர்த்தர் தாமாகவே என் தந்தையான தாவீதிற்குச் செய்த வாக்குறுதியைச் செய்து முடித்தார், அவர் என் தந்தையிடம், 16 ‘நான் என் இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். ஆனால் நான் இன்னும் என்னை மகிமைப்படுத்தும் ஆலயத்தைக் கட்டுவதற்குரிய இடத்தை இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவில்லை. அதோடு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திச் செல்லும் தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் மகிமைப்படுவதற்குரிய இடமாக எருசலேமை தேர்ந்தெடுத்துள்ளேன். அதோடு, இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.’

17 “என் தந்தையான தாவீது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்திட, ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினார். 18 ஆனால் அவரிடம் கர்த்தரோ, ‘என்னை மகிமைப்படுத்திட நீ ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறாய். நீ என் ஆலயத்தைக் கட்ட விரும்புவது நல்லதுதான். 19 ஆனால் நான் என் ஆலயத்துக்காக உன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. உன் குமாரன் என் ஆலயத்தைக்கட்டுவான்!’ என்று கூறினார்.

20 “எனவே கர்த்தர் தனது வாக்குறுதியை நிறைவேற்றிக்கொண்டார். நான் என் தந்தையான தாவீதின் இடத்தில் ராஜாவாக இருக்கிறேன். கர்த்தருடைய வாக்குறுதியின்படி இப்போது நான் இஸ்ரவேலை ஆண்டு வருகிறேன். நான் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டிவிட்டேன். 21 ஆலயத்திற்குள் பரிசுத்தப் பெட்டியை வைக்கவும் இடம் அமைத்துவிட்டேன். அப்பரிசுத்தப் பெட்டிக்குள் கர்த்தர் நமது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிறது. இந்த உடன்படிக்கையை அவர் நமது முற்பிதாக்களோடு எகிப்தை விட்டு வெளியே வந்ததும் செய்தார்” என்றான்.

அப்போஸ்தலர் 28:17-31

17 மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், “எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர். 18 ரோமர்கள் என்னை விசாரித்தார்கள். ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஏதுவான எந்தக் காரணத்தையும் என்னிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் என்னை விடுதலை செய்ய விரும்பினர். 19 ஆனால் அங்கிருந்த யூதர்கள் அதை விரும்பவில்லை. எனவே நான் என்னை இராயரிடம் வழக்காடும்படியாக ரோமுக்குக் கொண்டு வருமாறு கேட்க வேண்டியதாயிற்று. ஆனால் எனது மக்கள் தவறிழைத்தார்கள் என்று நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை. 20 எனவே தான் உங்களைச் சந்தித்து உங்களோடு பேச விரும்பினேன். இஸ்ரவேலரின் நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் இவ்விலங்குகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.

21 யூதர்கள் பவுலுக்குப் பதிலாக, “நாங்கள் உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதையும் பெறவில்லை. அங்கிருந்து பயணம் செய்த எந்த யூத சகோதரரும் உன்னைக் குறித்து செய்தி கொண்டுவரவோ, உன்னைப் பற்றித் தவறாக எதையும் கூறவோ இல்லை. 22 நாங்கள் உனது கருத்துக்களை அறிய விரும்புகிறோம். இந்தக் கூட்டத்தினருக்கு (கிறிஸ்தவர்களுக்கு) எதிராக எல்லா இடங்களின் மக்களும் பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்” என்றனர்.

23 பவுலும் யூதரும் கூட்டத்திற்கு ஒரு நாளைத் தேர்ந்துகொண்டனர். அந்த நாளில் இன்னும் பல யூதர்கள் பவுலை அவனது வீட்டில் சந்தித்தனர். நாள் முழுவதும் பவுல் அவர்களிடம் பேசினான். தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து பவுல் அவர்களுக்கு விளக்கினான். இயேசுவைக் குறித்த காரியங்களில் அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்ய முயன்றான். மோசேயின் சட்டங்களையும் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் இதற்குப் பயன்படுத்தினான். 24 சில யூதர்கள் பவுல் கூறியவற்றை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் அதை நம்பவில்லை. 25 அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர்,

26 “‘இம்மக்களிடம் போய் அவர்களுக்குக் கூறு,
நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கேட்பீர்கள்,
    ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
நீங்கள் காண்பீர்கள், நீங்கள் பார்ப்பீர்கள்,
    ஆனால் நீங்கள் பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
27 ஆம், இம்மக்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன.
    இம்மக்களுக்குக் காதுகள் உள்ளன.
    ஆனால் அவர்கள் கேட்பதில்லை.
இம்மக்கள் உண்மையைக் காணவும் மறுக்கிறார்கள்.
    இம்மக்கள் தம் கண்களால் பார்க்காமலும்,
    தம் காதுகளால் கேளாமலும்,
    தம் மனங்களால் புரிந்துகொள்ளாமலும் இருக்கப் போவதாலேயே இது நடந்தது.
அவர்கள் குணமடைவதற்காக என்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதற்காகவே இது நிகழ்ந்தது’ என்றார்.(A)

28 “தேவன் தமது இரட்சிப்பை யூதரல்லாத மக்களுக்கு அனுப்பினார் என்பதை யூதராகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் கவனிப்பார்கள்!” என்றான். 29 [a]

30 அவனது வாடகை வீட்டில் பவுல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் தங்கியிருந்தான். அவனைச் சந்திக்கும்படியாக வந்த மக்களை வரவேற்றான். 31 பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.

மாற்கு 14:43-52

இயேசு கைதாகுதல்

(மத்தேயு 26:47-56; லூக்கா 22:47-53; யோவான் 18:3-12)

43 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாள்களும், தடிகளும் இருந்தன.

44 யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான். 45 அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். 46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். 47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.

48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். 49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். 50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.

51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center