Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 5-6

புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
    நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
எனது தேவனாகிய ராஜாவே,
    என் ஜெபத்தைக் கேளும்.
கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
    உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.

தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
    தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
மூடர் உம்மிடம் வர இயலாது,
    தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
    பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.

கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
    உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
    ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
    எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.

அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
    அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
    ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
    அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
    எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
    என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
    தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
    அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.

செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
    என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
    என்னைக் குணமாக்கும்!
    என் எலும்புகள் நடுங்குகின்றன.
என் முழு உடம்பும் நடுங்குகிறது.
    கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?

கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
    நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
    மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
    எனவே என்னை நீர் குணமாக்கும்!

கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
    என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
    உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
    வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
    தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.

தீயோரே அகன்று போங்கள்!
    ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
    கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.

10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
    ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.

சங்கீதம் 10-11

10 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்?
    தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.
பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள்.
    அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.
தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள்.
    பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள்.
தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள்.
    தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள்.
தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள்.
    அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை.[a]
    தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள்.
தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள்.
    அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.
அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள்.
    அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள்.
அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.
    ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள்.
    ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.
    ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும், மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.
    நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!”
    என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.

12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்!
    தேவனே, அத்தீயோரைத் தண்டியும்!
    ஏழைகளை மறவாதேயும்!
13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள்.
    ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.
14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர்.
    அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்!
தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள்.
    கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர்.
    எனவே அவர்களுக்கு உதவும்!
15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.
16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.
    அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.
    அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.
    துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும்.
    தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

11 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
    நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.

தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
    அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
    நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
    நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?

கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
    பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
    கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
    கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
    வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
ஆனால் கர்த்தர் நல்லவர்.
    நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
    நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.

1 இராஜாக்கள் 1:38-2:4

38 எனவே ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் குமாரனான பெனாயா, மற்றும் அரசு அதிகாரிகள் தாவீது ராஜாவுக்குக் கீழ்ப்படிந்தனர். சாலொமோனை ராஜாவினுடைய கழுதையின் மேல் ஏற்றி கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். 39 ஆசாரியனான சாதோக் பரிசுத்த கூடாரத்தில் இருந்து எண்ணெயை எடுத்துச் சென்றான். அவனது தலையில் அதனை ஊற்றி ராஜாவாக அபிஷேகம் செய்தான். எக்காளம் ஊத மற்ற ஜனங்கள், “ராஜா சாலொமோன் நீண்ட காலம் வாழட்டும்!” என்று வாழ்த்தினார்கள். 40 பிறகு அனைவரும் சாலொமோனைப் பின்தொடர்ந்து நகருக்கு வந்தனர். நாதசுரங்களை ஊதினர். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பூமி அதிரும்படி அவர்கள் சத்தத்தை எழுப்பினர்.

41 இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். “இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?” என யோவாப் கேட்டான்.

42 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் குமாரனான, யோனத்தான் வந்தான்.

அதோனியா அவனிடம், “இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்” என்றான்.

43 ஆனால் அவனோ, “இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது ராஜா சாலொமோனைப் புதிய ராஜாவாக நியமித்துவிட்டான். 44 அவனோடு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரனான பெனாயாவையும், மற்ற அரச அதிகாரிகளையும் அனுப்பினான். அவர்கள் ராஜாவின் கழுதை மேல் அவனை ஏற்றினார்கள். 45 பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை ராஜாவாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம், 46 சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான். 47 அனைத்து அதிகாரிகளும் ராஜா தாவீதுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், ‘தாவீது ராஜாவே, நீ மிகப் பெரிய ராஜா! சாலொமோனையும் மிகப் பெரிய ராஜாவாக்கும்படி உங்கள் தேவனிடம் இப்போது நாங்கள் ஜெபம் செய்கிறோம். உங்கள் தேவன் உங்களைவிடவும் சாலொமோனைப் புகழுள்ளவனாக்குவார் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் அரசாங்கத்தைவிட சாலொமோனின் அரசாங்கம் பெரியதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்!’” என்று வாழ்த்தினர்.

அங்கே தாவீது ராஜாவும் இருந்தான். படுக்கையிலேயே அவன் குனிந்து வணங்கினான். 48 ராஜா தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள். என் சிங்காசனத்தில் என் குமாரனையே கர்த்தர் உட்காரவைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காண எனக்கு ஜீவனைக் கொடுத்தார்” என்று சொன்னான்.

49 அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள். 50 அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.[a] 51 சிலர் சாலொமோனிடம் போய், “அதோனியா உங்களைக் கண்டு அஞ்சுகிறான். அவன் பரிசுத்த கூடாரத்தில் பலி பீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அவன், ‘என்னை கொல்லமாட்டேன் என சாலொமோனை வாக்குறுதி தரச்சொல்லுங்கள்’ என்கிறான்” என்றார்கள்.

52 எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான். 53 பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.

தாவீது ராஜாவின் மரணம்

தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது “நான் எல்லா மனிதரையும் போலவே மரிக்க இருக்கிறேன். ஆனால் நீ மேலும் பலத்தில் வளர்ந்து மனிதனாக இரு. இப்போது, உனது தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. நீ அனைத்து சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், முடிவுகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படி. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், பின்னர் இஸ்ரவேலரின் ராஜா உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார்” என்றான்.

அப்போஸ்தலர் 26:24-27:8

அகிரிப்பாவை தன் சார்பாக்க முனைவது

24 பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான்.

25 பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும். 26 அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே. 27 அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான்.

28 அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

29 பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான்.

30 அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து 31 ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.

ரோமாபுரிப் பயணம்

27 நாங்கள் இத்தாலிக்குக் கடற்பயணம் செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. ஜூலியஸ் என்னும் பெயருள்ள படை அதிகாரி பவுலையும் வேறு சில கைதிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டான். இராயரின் படையில் ஜூலியஸ் சேவை புரிந்துகொண்டிருந்தான். நாங்கள் ஒரு கப்பலில் ஏறிச் சென்றோம். கப்பல் அதிரமித்தியம் என்னும் நகரிலிருந்து வந்து ஆசியாவின் பல இடங்களுக்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தது. அரிஸ்தர்க்கும் எங்களோடு வந்தான். அம்மனிதன் மக்கதோனியாவில் தெசலோனிக்கா நகரத்தைச் சேர்ந்தவன்.

மறுநாள் நாங்கள் சீதோன் நகரத்திற்கு வந்தோம். ஜூலியஸ் பவுலோடு நல்ல முறையில் நடந்துகொண்டான். அவன், பவுல் அவனது நண்பர்களைச் சென்று சந்திக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். இந்த நண்பர்கள் பவுலுக்குரிய தேவைகளைக் கவனித்து வந்தனர். நாங்கள் சீதோன் நகரத்திலிருந்து கடலில் பயணமானோம். காற்று எங்களுக்கு எதிர்த் திசையில் வீசியபடியால் சீப்புரு தீவின் கரையோரம் எங்கள் கடற்பயணம் தொடர்ந்தது. சிலிசியா, பம்பிலியா வழியாகக் கடலைக் கடந்து சென்றோம். பின் லீசியாவிலுள்ள மீரா நகரத்திற்கு நாங்கள் வந்தோம். மீராவில் படை அதிகாரி அலெக்ஸாண்டிரியா நகரத்திலிருந்து வந்த ஒரு கப்பலைக் கண்டான். இந்தக் கப்பல் இத்தாலிக்குப் போய்க் கொண்டிருந்தது. எனவே அவன் எங்களை அதில் ஏற்றினான்.

நாங்கள் நிதானமாகப் பல நாட்கள் கடலில் பயணம் செய்தோம். காற்று எங்களுக்கு எதிராக வீசிக்கொண்டிருந்தபடியால் கினீது நகரை அடைவதே கடினமாக இருந்தது. அவ்வழியாக மேலும் போக முடியவில்லை. சால்மோனின் அருகேயுள்ள கிரேத்தா தீவின் தென் பகுதியின் வழியாகக் கடல் பயணமானோம். கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது.

மாற்கு 13:28-37

28 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். 29 இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள். 30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

32 “எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார். 33 கவனமாய் இருங்கள். எப்பொழுதும் தயாராக இருங்கள். அக்காலம் எப்போது வரும் என உங்களுக்கும் தெரியாது.

34 “இது, பயணம் செய்பவன் தன் வீட்டைவிட்டுப் போவதைப் போன்றது. அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுப்போகிறான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு வேலையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். ஒரு வேலைக்காரன் வாசலைக் காவல் காப்பான். எப்பொழுதும் வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும் என்று சொல்வான். அதைப் போலவே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். 35 எனவே, நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பி வருவான் என்று எவருக்கும் தெரியாது. ஒரு வேளை அவன் பிற்பகலில் வரலாம், அல்லது நடு இரவில் வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம், அல்லது சூரியன் உதயமாகும்போது வரலாம். 36 வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல் வருவான். நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக அவன் கண்டுபிடிக்க மாட்டான். 37 நான் இதனை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் சொல்கிறேன், தயாராக இருங்கள்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center