Book of Common Prayer
33 தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார்.
நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார்.
34 தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார்.
அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர்.
35 தேவன் பாலைவனத்தை மாற்றினார்.
அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று.
தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.
36 தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார்.
அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள்.
37 அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள்.
அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள்.
அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள்.
38 தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார்.
அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.
39 திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும்,
அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின.
40 தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார்.
பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
41 பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார்.
இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன.
42 நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.
43 ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான்.
அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.
108 தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
2 சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம்.
3 கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம்.
பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
4 கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
5 தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்!
உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும்.
6 தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும்.
எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும்.
7 தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி,
“நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்!
என் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன்.
அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன்.
அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்
8 கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும்.
எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும்.
யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல்
9 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.”
10-11 யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்?
யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்?
தேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும்.
ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர்.
நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை!
12 தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்!
ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது!
13 தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும்.
தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார்.
33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
2 சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
4 தேவனுடைய வாக்கு உண்மையானது!
அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 ராஜா தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.
சீபா தாவீதைச் சந்திக்கிறான்
16 தாவீது ஒலிவமலை உச்சியின் மேல் கொஞ்சதூரம் நடந்துப்போனான். அங்கு மேவிபோசேத்தின் பணியாளாகிய சீபா தாவீதைச் சந்தித்தான். சீபாவிடம் சேணம் கட்டப்பட்ட இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகள் 200 ரொட்டிகளையும், 100 குலைகள் உலர்ந்த திராட்சைகளையும், 100 கோடைக்காலக் கனிகளையும் ஒரு துருத்தி திராட்சைரத்தையும் சுமந்து வந்தன. 2 தாவீது ராஜா சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான்.
சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் ராஜாவின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான்.
3 ராஜா, “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான்.
சீபா ராஜாவிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான்.
4 பின்னர் ராஜா சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான்.
சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான்.
சீமேயி தாவீதை சபிக்கிறான்
5 தாவீது பகூரிமுக்கு வந்தான். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவன் பகூரிமுலிருந்து அங்கு வந்தான். இம்மனிதன் கேராவின் குமாரனாகிய சீமேயி. சீமேயி தாவீதிடம் தீயவற்றைப் பேசியவனாக வந்தான். அவன் மீண்டும், மீண்டும் தீயனவற்றையே பேசினான்.
6 தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர். 7 சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ. 8 கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். ஏனெனில், நீ சவுலின் குடும்பத்தாரைக் கொலைச் செய்தாய். நீ சவுலின் இடத்தில் ராஜாவாக அமர்ந்தாய். ஆனால் இப்போது கர்த்தர் அரசாட்சியை உனது குமாரனான அப்சலோமுக்குக் கொடுத்துள்ளார். இப்போது அதே தீமைகள் உனக்கு நேர்கின்றன. ஏனெனில் நீ ஒரு கொலைக்காரன்” என்றான்.
9 செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவை நோக்கி, “எனது ராஜாவாகிய ஆண்டவரே, ஏன் இந்த மரித்த நாய் உம்மை சபிக்க வேண்டும்? நான் சீமேயியின் தலையை வெட்டப் போகிறேன்” என்றான்.
10 அதற்கு ராஜா, “நான் என்ன செய்ய முடியும், செருயாவின் ஜனங்களே? சீமேயி என்னை சபிக்கிறான். ஆனால் அவன் என்னை சபிக்குமாறு அவனிடம் கர்த்தர் கூறியுள்ளார்” என்றான். 11 தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த குமாரனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார். 12 ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான்.
13 இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான்.
14 தாவீது ராஜாவும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். ராஜாவும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர்.
15 அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர். 16 தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “ராஜாவே! நீண்டகாலம் வாழ்க” என்றான்.
17 அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான்.
18 அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன். 19 முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் குமாரனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான்.
அப்சலோம் அகித்தோப்பேலிடம் அறிவுரை கேட்கிறான்
20 அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.
21 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான்.
22 பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். 23 அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.
17 “பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். 18 நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
19 “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். 20 உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன்.
21 “ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.
22 யூதரல்லாத மக்களிடம் செல்வதைப் பற்றிய இக்கடைசி வார்த்தைகளைப் பவுல் கூறியபோது, மக்கள் கவனிப்பதை நிறுத்தினர். அவர்கள் எல்லோரும் உரக்க, “அவனைக் கொல்லுங்கள். உலகத்திலிருந்து அவனை ஒழித்துக்கட்டுங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனை உயிர்வாழ விடக்கூடாது” என்றனர். 23 அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர்.[a] 24 அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான். 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான்.
26 அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான்.
27 அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான்.
பவுல் “ஆம்” என்றான்.
28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான்.
ஆனால் பவுல், “நான் பிறப்பால் குடிமகன்” என்றான்.
29 பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.
எருசலேமுக்குள் இயேசு நுழைதல்
(மத்தேயு 21:1-11; லூக்கா 19:28-40; யோவான் 12:12-19)
11 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். 2 இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். 3 யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார்.
4 சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். 5 அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். 6 இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.
7 சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். 8 ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். 9 சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர்.
“அவரைப் புகழுங்கள்
‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’(A)
10 தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக.
அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது.
பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்”
என்று அவர்கள் சத்தமிட்டனர்.
11 எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார்.
2008 by World Bible Translation Center