Book of Common Prayer
சாயீன்
49 கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும்.
அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
50 நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர்.
உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.
51 என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர்.
ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
52 உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன்.
கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.
53 தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர்.
அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன்.
54 உமது சட்டங்கள் எனது வீட்டின் [a] பாடல்களாகின்றன.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன்.
நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.
56 நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.
கேத்
57 கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
58 கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன்.
நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும்.
59 என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன்.
உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.
60 தாமதமின்றி
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.
61 தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின.
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
62 உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.
63 உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன்.
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.
64 கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
தேத்
65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
71 துன்புறுவது எனக்கு நல்லது.
நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்
49 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
3 ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
4 நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5 தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
6 பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
7 மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
8 ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
9 என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.
10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.
13 மூடரான மனிதருக்கும்,
தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது.
14 எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர்.
கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன்.
அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும்.
15 ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார்.
கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்!
16 சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
17 அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள்.
அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது.
18 மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும்.
தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும்.
19 அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும்.
அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை.
20 ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது.
மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான்.
மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல்.
53 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான்.
அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
2 தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று
பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
3 ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தீயவன்.
நன்மையான காரியத்தைச் செய்பவன்
ஒருவன் கூட இல்லை.
4 தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்!
ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப்பதில்லை.
தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
5 ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள்.
அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள்.
அத்தீயோரை தேவன் தள்ளிவிட்டார்.
எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள்.
அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக.
தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார்.
அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான்.
இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.
ஒரு காலம் உண்டு
3 எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு.
2 பிறப்பதற்கு ஒரு காலமுண்டு,
மரிப்பதற்கு ஒரு காலமுண்டு,
நடுவதற்கு ஒரு காலமுண்டு,
பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு.
3 கொல்வதற்கு ஒரு காலமுண்டு,
குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு,
அழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு.
4 அழுவதற்கு ஒரு காலமுண்டு,
சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு,
வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு,
மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு.
5 ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு,
ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. [a]
தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு,
தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.
6 சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு,
இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு,
பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு,
பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு.
7 துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு,
அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு,
பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.
8 அன்பு செய்ய ஒரு காலமுண்டு,
வெறுக்கவும் ஒரு காலமுண்டு,
சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு,
சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.
தேவன் தன் உலகைக் கட்டுப்படுத்துகிறார்
9 ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா? 10 தேவன் நமக்குக்கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான் பார்க்கிறேன். 11 அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயே செய்துவருகிறார்.
12 ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன். 13 எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள்.
14 தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும். 15 ஏற்கெனவே நடந்து முடிந்தவை முடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும். நாம் அவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் தேவன், மிகமோசமாக நடத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். [b]
பேதுருவின் தவறைப் பவுல் வெளிப்படுத்துதல்
11 அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன். 12 அந்தியோகியாவுக்கு அவர் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு அவர் சேர்ந்தார். அவர்களோடு உணவு உட்கொண்டார். ஆனால் யாக்கோபிடமிருந்து அனுப்பியிருந்த சில யூதர்கள் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு சேர்ந்து உணவு உண்ணப் பேதுரு மறுத்துவிட்டார். அவர்களிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் யூதர்களுக்குப் பயந்துவிட்டார். ஏனென்றால் யூதர்கள், யூதர் அல்லாதவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நம்புகின்றவர்கள். 13 ஆகையால் பேதுரு பொய் முகக்காரராக இருந்தார். ஏனைய யூதர்களும் அவரோடு சேர்ந்துகொண்டனர். எனவே அவர்களும் பொய்முகக்காரர்கள். இதனால் பர்னபாவும் பாதிக்கப்பட்டான். 14 யூதர்கள் செய்வதை நான் பார்த்தேன். அவர்கள் நற்செய்தியின் முழு உண்மையைப் பின்பற்றவில்லை. எனவே எல்லாரும் கேட்கும்படியே நேரடியாய்ப் பேதுருவிடம் சென்று நான் கண்டித்தேன். “பேதுரு நீங்கள் ஒரு யூதர். ஆனால் நீங்கள் ஒரு யூதரைப்போல வாழவில்லை. நீங்கள் யூதர் அல்லாதவரைப்போல வாழ்கிறீர்கள். இவ்வாறு இருக்க நீங்கள் எப்படி யூதர் அல்லாதவர்களை யூதர்கள்போல வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்?” என்று கேட்டேன்.
15 யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம். 16 சட்டங்களின் விதி முறைகளை ஒருவன் பின்பற்றுவதினாலேயே தேவனுக்கு வேண்டியவனாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவின் மீது எவன் நம்பிக்கை வைக்கிறானோ அவனே தேவனுக்கு வேண்டியவனாகிறான். எனவே, நாம் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏனென்றால் நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். நாம் சட்டங்களைப் பின்பற்றுவதால் அல்ல, இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதாலேயே தேவனுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம். இது உண்மை. ஏனென்றால் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் எவரொருவரும் தேவனுக்கு வேண்டியவராக முடியாது.
17 யூதர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் வந்துள்ளோம். காரணம், நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். எனவே, நாம் பாவிகள் என்பது தெளிவாகிறது. இதற்குக் கிறிஸ்து காரணம் ஆவாரா? இல்லை. 18 ஆனால், நான் விட்டுவிட்டவற்றை மீண்டும் போதிக்கத் தொடங்கினால் நானும் தவறானவன் என்று கருதப்படுவேன். 19 சட்டங்களுக்காக வாழ்வது என்பதை நான் விட்டுவிட்டேன். அச்சட்டங்களோ என்னைக் கொன்றுவிட்டது. நான் விதிமுறையின்படி இறந்து போனேன். எனினும் தேவனுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது கடந்தகால வாழ்வு கிறிஸ்துவோடு சிலுவையில் இறந்தது. 20 நான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்வு எனக்கானது அல்ல. இயேசு கிறிஸ்து இப்போது என்னில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போது இந்த சரீரத்திலே நான் வாழ்ந்தாலும் தேவனுடைய குமாரன் மீதுள்ள விசுவாசத்தால் வாழ்கிறேன். இயேசு ஒருவரே என்மீது அன்பு கொண்டவர். என்னை இரட்சிப்பதற்காக அவர் தன்னையே தந்தவர். 21 இந்தக் கிருபை தேவனிடமிருந்து வந்தது. இது எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சட்டத்தின் மூலம் மனிதன் திருந்தி நீதிமானாக முடியுமென்றால் இயேசு கிறிஸ்துவின் மரணம் தேவையில்லாமல் போயிருக்கும்.
ஏரோது இயேசுவைப்பற்றி அறிதல்(A)
14 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். 2 எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம்,, “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
3 இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். 4 ,“நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். 5 யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான்.
6 ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் மகள் ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். 7 எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். 8 தன் மகள் எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம்,, “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள்.
9 இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் மகள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். 10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். 11 அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். 12 யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.
2008 by World Bible Translation Center