Book of Common Prayer
33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
2 சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
4 தேவனுடைய வாக்கு உண்மையானது!
அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.
3 பின் மோசே தேவனைச் சந்திக்கும்பொருட்டு மலைமீது ஏறினான். மலையின் மேல் தேவன் அவனோடு பேசினார். அவனிடம், “யாக்கோபின் பெரிய குடும்பத்தினராகிய இஸ்ரவேலின் ஜனங்களுக்கு இவ்விஷயங்களைக் கூறு: 4 ‘என் எதிரிகளுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்த்தீர்கள். எகிப்தின் ஜனங்களுக்கு நான் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். கழுகைப்போல நான் உங்களை எகிப்திலிருந்து சுமந்து வந்து, இங்கு என்னிடம் அழைத்து வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். 5 எனவே என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென உங்களுக்குக் கூறுகிறேன். எனது உடன்படிக்கையை மீறாதீர்கள். நான் கூறுகிறபடி நீங்கள் நடந்தால், என் விசேஷமான ஜனங்களாயிருப்பீர்கள். உலகம் முழுவதும் எனக்குச் சொந்தமானது. ஆனால் எனது விசேஷ ஜனங்களாக இருக்கும்படி, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். 6 ராஜரீக ஆசாரிய கூட்டமான, ஒரு பரிசுத்த ஜனமாக நீங்கள் இருப்பீர்கள்.’ மோசே, நான் கூறியதை நீ இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.
7 மோசே மலையிருந்து கீழே இறங்கினான். ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்கள்) வரவழைத்து அவர்களிடம் கூறும்படியாக கர்த்தர் கட்டளையிட்டவற்றை மோசே கூறினான். 8 எல்லா ஜனங்களும் சேர்ந்து ஒரே குரலில், “கர்த்தர் கூறுகின்றவற்றிற்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.
மோசே மீண்டும் மலையின் மேலேறி தேவனிடம் சென்றான். மோசே தேவனிடம் ஜனங்கள் அவருக்குக் கீழ்ப்படிவதாகக் கூறியதைச் சொன்னான்.
16 மூன்றாம் நாள் காலையில், மலையின் மேல் மேகமொன்று திரண்டு வந்தது. இடியும் மின்னலும் எக்காளத்தின் பேரொலியும் இருந்தன. கூடாரத்திலிருந்த ஜனங்கள் அனைவரும் பயந்தனர். 17 அப்போது மோசே, ஜனங்களைக் கூடாரத்திலிருந்து மலையருகேயுள்ள ஓரிடத்திற்கு தேவனைச் சந்திப்பதற்காக வழிநடத்திச் சென்றான். 18 சீனாய் மலை புகையால் நிரம்பிற்று. சூளையிலிருந்து புகை வருவதுபோல் மலையின் மேல் புகை எழுந்தது. கர்த்தர் மலைக்கு நெருப்பில் இறங்கி வந்ததால் இப்படி ஆயிற்று. மலையும் அதிரத்தொடங்கிற்று. 19 எக்காள சத்தம் உரத்து தொனிக்க ஆரம்பித்தது. மோசே தேவனிடம் பேசியபோதெல்லாம், தேவன் இடிபோன்ற குரலில் பதிலளித்தார்.
20 கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்கினார். பரலோகத்திலிருந்து கர்த்தர் மலையின் உச்சியில் இறங்கினார். பின் கர்த்தர் மோசேயை மலையின் உச்சிக்கு தன்னிடத்தில் வருமாறு கூறினார். அவ்வாறே மோசேயும் மலையின் மீது ஏறினான்.
4 கர்த்தர் இயேசு ஜீவனுள்ள “தலைக் கல்லாக” இருக்கிறார். உலக மக்களால் ஒதுக்கப்பட்ட கல்லாக அவர் இருந்தார். ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த கல் அவர் தான். தேவனிடம் அவர் விலை மதிப்புள்ளவராக இருக்கிறார். எனவே அவரிடம் வாருங்கள். 5 நீங்களும் ஜீவனுள்ள கற்களைப் போன்றிருக்கிறீர்கள். ஓர் ஆன்மீக ஆலயத்தைக் கட்ட உங்களை தேவன் பயன்படுத்துகிறார். நீங்கள் இயேசு கிறிஸ்து வழியாக தேவன் ஏற்கத்தக்க ஆவிக்குரிய பலிகளைக் கொடுக்கும் பரிசுத்த ஆசாரியராக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் அப்பலிகளைக் கொடுங்கள். 6 வேதவாக்கியம் சொல்கிறது,
“பாருங்கள், நான் ஒரு விலையுயர்ந்த கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
அக்கல்லை சீயோன் என்னுமிடத்தில் வைத்தேன்.
அவரை நம்புகிற மனிதன் எப்போதும் வெட்கமுறுவதில்லை.” (A)
7 நம்புகிற மக்களுக்கு அவர் கௌரவத்துக்குரியதாகிறார். ஆனால் நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர் கட்டுபவர்கள்,
“வேண்டாமென்று தள்ளிய கல்லாகிறது.
ஆனால் அக்கல்லே மிக முக்கியமான கல்லாயிற்று” (B)
என்பதற்கேற்ப இருக்கிறார்.
8 நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர்,
“மக்களை இடறச் செய்யும் கல்லாவார்.
மக்களை விழவைக்கும் கல்லாவார்” (C)
என்பதற்கேற்ப இருக்கிறார். தேவனுடைய செய்திக்குக் கீழ்ப்படியாததால் மக்கள் இடறுகிறார்கள். அம்மக்களுக்கு தேவன் திட்டமிட்டிருப்பது இதுவே.
9 ஆனால் நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நீங்கள் அரசரின் ஆசாரியர். நீங்கள் ஒரு பரிசுத்த தேசம். நீங்கள் தேவனுக்குச் சொந்தமான மக்கள். தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார்.
10 ஒரு காலத்தில் நீங்கள் தேவனுடைய மனிதர்களாக இருக்கவில்லை.
ஆனால் இப்போது தேவனுடைய மக்களாக இருக்கிறீர்கள்.
ஒரு காலத்தில் தேவனுடைய இரக்கத்தை நீங்கள் பெறவில்லை.
ஆனால் இப்போது நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ளீர்கள்.
2008 by World Bible Translation Center