Book of Common Prayer
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்.
55 தேவனே, என் ஜெபத்தைக் கேளும்.
இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.
2 தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.
என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
3 என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான்.
கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.
என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.
4 என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது.
நான் மரணபயம் அடைந்தேன்.
5 நான் அஞ்சி நடுங்கினேன்.
பயத்தால் தாக்குண்டேன்.
6 ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்.
அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
7 நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.
8 நான் ஓடி தப்பித்துக்கொள்வேன்.
துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
9-10 என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும்.
இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன்.
என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன.
இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.
11 தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன.
ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.
12 ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன்.
என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன்.
13 ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும்,
என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய்.
14 நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.
15 என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன்.
அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்!
ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
நித்திய அரசர் எனக்கு உதவுவார்.
20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.
22 உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.
தாவீதின் ஒரு பாடல்
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று
139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
2 நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
3 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
4 கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
5 கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
6 நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
7 நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
8 கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
9 கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.
11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
பகல் இரவாக மாறிப்போயிற்று.
“இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
முக்கியமானவை.
தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.
19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும்.
அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.
20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன்.
உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன்.
உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.
23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.
என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.
18 கர்த்தர் கூறியபடியே மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவினான். முதலில் பீடங்களை வைத்தான். பிறகு பீடங்களின்மீது சட்டங்களை பொருத்தினான். பின்பு தாழ்ப்பாள்களை வைத்து, தூண்களை நிறுவினான். 19 அதன் பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் வெளிக் கூடாரத்தை அமைத்தான். பிறகு பரிசுத்தக் கூடாரத்தின் மேல் மூடியை அமைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இவற்றையெல்லாம் செய்தான்.
20 மோசே உடன்படிக்கையை எடுத்து அதை பரிசுத்தப் பெட்டியில் வைத்தான். மோசே பெட்டியின்மீது தண்டுகளை வைத்து பெட்டியின் மூடியை பொருத்தினான். 21 பின்பு மோசே பரிசுத்தப் பெட்டியை பரிசுத்தக் கூடாரத்தில் வைத்தான். அதைப் பாதுகாப்பதற்காக தொங்கு திரையை அதற்குரிய இடத்தில் தொங்கவிட்டான். இவ்வாறு அவன் கர்த்தர் கட்டளையிட்டபடியே தொங்கு திரைகளுக்குப் பின்னே உடன்படிக்கைப் பெட்டியை வைத்து பாதுகாத்தான். 22 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் மேசையை வைத்தான். அதைக் கூடாரத்தின் வடக்குத் திசையில் இருந்த பரிசுத்தக் கூடாரத்தில் திரைகளுக்கு முன்னே வைத்தான். 23 பிறகு கர்த்தருக்கு முன்னே மேசையின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான். 24 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்துவிளக்குத் தண்டை வைத்தான். கூடாரத்தின் தெற்குப் பகுதியில் மேசைக்கு எதிராக அதனை வைத்தான். 25 அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.
26 பின்பு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பொன் நறுமணப்பீடத்தை திரைக்கு முன்னால் நிறுவினான். 27 பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான். 28 பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான்.
29 பரிசுத்தக் கூடாரம், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலில் தகன பலிக்கான பலிபீடத்தை மோசே வைத்தான். பின் மோசே அந்தப் பலிபீடத்தின் மேல் ஒரு தகன பலியைச் செலுத்தினான். தானிய காணிக்கைகளையும் கர்த்தருக்குச் செலுத்தினான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இக்காரியங்களைச் செய்தான்.
30 பின்பு ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் மத்தியில் மோசே தொட்டியை வைத்தான். கழுவுவதற்கான தண்ணீரை மோசே, தொட்டியில் நிரப்பினான். 31 மோசே, ஆரோன், ஆரோனின் மகன்கள் ஆகியோர் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு இந்தத் தொட்டியைப் பயன்படுத்தினார்கள். 32 அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் நுழையும்போதெல்லாம் தங்களைக் கழுவிக்கொண்டனர். பலிபீடத்தின் அருகே செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் இக்காரியங்களைச் செய்தார்கள்.
33 பின்பு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைகளைத் தொங்கவிட்டான். மோசே பலி பீடத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்தான். வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலில் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டான். கர்த்தர் செய்யுமாறு கூறிய எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தான்.
கர்த்தரின் மகிமை
34 அப்போது ஆசாரிப்புக் கூடாரத்தை மேகம் வந்து மறைத்துக்கொண்டது. கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியது. 35 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் மோசே செல்ல முடியவில்லை. ஏனெனில், மேகம் அதன் மீது மூடியிருந்தது. மேலும் கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியிருந்தது.
36 இந்த மேகமே ஜனங்கள் புறப்பட வேண்டிய நேரத்தை உணர்த்தி வந்தது. பரிசுத்தக் கூடாரத்திலிருந்து மேகம் எழும்பியபோது, இஸ்ரவேல் ஜனங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.
37 ஆனால் பரிசுத்தக் கூடாரத்தில் மேகம் மூடியிருந்தபோது ஜனங்கள் பயணத்தைத் தொடர முயலவில்லை. மேகம் கிளம்பும் வரையிலும் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கினார்கள். 38 எனவே பகலில் கர்த்தரின் மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மீது இருந்தது. இரவில் மேகத்தில் நெருப்பு காணப்பட்டது. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணத்தின் போதெல்லாம் மேகத்தைப் பார்க்க முடிந்தது.
தேவனை மகிழ்வூட்டும் வாழ்க்கை
4 சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம். 2 நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம். 3 நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 4 உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும். 5 உங்கள் சரீரத்தை வெறித்தனமான உணர்வுகளுக்கு ஒப்படைக்காதீர்கள். தேவனை அறிந்துகொள்ளாதவர்கள்தான் அதனை அதற்குப் பயன்படுத்துவார்கள். 6 உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம். 7 நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை. 8 எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர்.
9 கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார். 10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும் மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
11 சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். 12 இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.
பழிவாங்குதல் பற்றிய போதனை(A)
38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ [a] என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.
அனைவரையும் நேசியுங்கள்(B)
43 ,“‘உன் சினேகிதனை நேசி. [b] உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center