Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 24

தாவீதின் பாடல்.

24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
    உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
    ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.

கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
    கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
    யார் அங்கு வழிபட முடியும்?
தீயவை செய்யாத ஜனங்களும்,
    பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
    பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.

நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
    அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
    யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
    மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
யார் இந்த மகிமைமிக்க ராஜா?
    கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
    கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
    மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
    சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
    அவரே மகிமை மிக்க ராஜா.

சங்கீதம் 29

தாவீதின் பாடல்.

29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
    உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
    மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
    அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
    லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
    இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
    இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
    கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
    கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.

10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
    என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
    கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.

சங்கீதம் 8

கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்.

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
    விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.

பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
    உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.

கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
    நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
    ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
    ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?

ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
    அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
    மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
ஆடுகள், பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
வானத்துப் பறவைகளையும்
    சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது!

சங்கீதம் 84

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
    ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
    உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
    அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
    ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
    தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
    இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
    ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.

தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
    நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.

10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
    எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
    தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
    தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
    உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.

ஆதியாகமம் 18:16-33

16 பிறகு அந்த மனிதர்கள் எழுந்து சென்றனர். அவர்கள் சோதோம் இருந்த திசை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கொஞ்சம் தூரம் சென்று அவர்களை அனுப்பி வைத்தான்.

ஆபிரகாம் தேவனோடு பரிந்து பேசுதல்

17 கர்த்தர் தனக்குள், “நான் செய்யப்போகிறவற்றை ஆபிரகாமிற்கு மறைக்கமாட்டேன். 18 ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 19 நான் ஆபிரகாமோடு சிறந்த உடன்படிக்கை ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். நான் இதைச் செய்ததால் அவன் தன் பிள்ளைகளையும், சந்ததிகளையும் எனது விருப்பப்படி வாழ கட்டளையிடுவான். அவர்கள் நீதியோடும், நேர்மையோடும் வாழும்படி அவர்களுக்குப் போதனை செய்வான் என அறிவேன். கர்த்தராகிய நான் வாக்குறுதியளித்தபடியே அவனுக்குச் செய்வேன்” என்று சொல்லிக்கொண்டார்.

20 மேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் மிகவும் பாவிகள் என்று நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். 21 எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்” என்றார்.

22 ஆகையால், அந்த மனிதர்கள் திரும்பி சோதோமை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ஆனால் ஆபிரகாம் கர்த்தருக்கு முன்னால் நின்றான். 23 பிறகு ஆபிரகாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, “கர்த்தாவே! நீர் தீயவர்களை அழிக்கும்போதே நல்லவர்களையும் அழிக்கப்போகிறீரா? 24 அந்த நகரத்தில் 50 நல்ல மனிதர்கள் இருந்தால் என்ன செய்வீர்? அழித்துவிடுவீரா? உறுதியாக நீர் அந்த 50 நல்ல மனிதர்களுக்காக அந்நகரத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும். 25 உம்மால் உறுதியாக அந்நகரத்தை அழிக்க முடியாது. தீயவர்களை அழிப்பதற்காக அந்த 50 நல்ல மனிதர்களையும் உம்மால் அழிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் பிறகு நல்ல மனிதர்களும் தீய மனிதர்களும் ஒரே மாதிரி ஆகிவிடுவார்கள். இருவருமே தண்டிக்கப்பட்டுவிடுவார்கள். பூமி முழுவதற்கும் நீரே நீதிபதி. நீர் நியாயமானவற்றையே செய்வீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.

26 பிறகு கர்த்தர், “என்னால் சோதோம் நகரத்தில் நல்லவர்கள் 50 பேரைக் காண முடியுமானால் நான் அந்த நகரத்தைக் காப்பாற்றுவேன்” என்றார்.

27 பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஒரு கேள்வியைக் கேட்க அனுமதியும். 28 அந்நகரத்தில் 45 நல்ல மனிதர்கள் மட்டுமே இருந்தால் என்ன செய்வீர்? அந்த முழு நகரத்தையும் அழித்துவிடுவீரா?” என்று கேட்டான்.

அதற்கு கர்த்தர், “நான் அங்கு 45 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.

29 ஆபிரகாம் மீண்டும் பேசினான். அவன், “நீர் 40 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் அப்போது அந்நகரத்தை அழிப்பீரா?” என்று கேட்டான்.

அதற்கு கர்த்தர், “நான் 40 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்று சொன்னார்.

30 மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே தயவு செய்து என்மீது கோபம் கொள்ளாதிரும். இதையும் கேட்க அனுமதியும், அந்நகரத்தில் 30 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால், அந்நகரத்தை அழித்துவிடுவீரா?” என்று கேட்டான்.

அதற்கு கர்த்தர், “நான் 30 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.

31 பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே மேலும் உம்மிடம் ஒன்று கேட்கலாமா? அந்நகரத்தில் 20 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு கர்த்தர், “நான் அங்கே 20 நல்ல மனிதர்களை மட்டும் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.

32 மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே என் மீது கோபம்கொள்ள வேண்டாம். இறுதியாக இன்னொன்றைக் கேட்க அனுமதி தாரும். நீர் அங்கே 10 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் என்ன செய்வீர்?” என்று கேட்டான்.

அதற்கு கர்த்தர், “நான் 10 நல்ல மனிதர்களைக் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார்.

33 கர்த்தர் ஆபிரகாமுடன் தன் பேச்சை முடித்து விட்டுப் போனார். ஆபிரகாமும் தன் வீட்டிற்குத் திரும்பினான்.

கலாத்தியர் 5:13-25

13 சகோதர சகோதரிகளே, நீங்கள் சுதந்தரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். பாவக் காரியங்களுக்காக அச்சுதந்தரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஆனால் ஒருவருக்கொருவர் அன்புடன் சேவை செய்யுங்கள். 14 “உன்னை நீ நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” என்ற ஒரு வாக்கியத்திலேயே மொத்த சட்டமும் அடங்கி இருக்கிறது. 15 நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கடித்தும், கிழித்தும் வந்தீர்களேயானால் முழுவதுமாய் அழிந்து போவீர்கள். இது பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.

ஆவியும் மனித இயல்பும்

16 ஆகையால் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், ஆவிக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள். பிறகு நீங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றமாட்டீர்கள். 17 ஆவிக்கு எதிராக மாம்ச இச்சையும், மாம்ச இச்சைக்கு எதிராக ஆவியும் செயல்பட விரும்புகிறது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆகையால் நீங்கள் உண்மையில் விரும்புவதை உங்களால் செய்ய முடியாது. 18 உங்களை ஆவியானவர் வழி நடத்தும்படி அனுமதித்தால், நீங்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல.

19 மாம்சத்தின் செயற்பாடுகள் தெளிவாய் உள்ளன. அவை விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரக வழிபாடு, பில்லிசூனியம், பகைமை, விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சுயநல ஆசைகள், பிரிவினைகள், கோஷ்டிப் பூசல்கள், 21 பொறாமை, குடிவெறி, களியாட்டங்கள் என்பன. நான் ஏற்கெனவே உங்களை எச்சரித்தது போன்று இப்போதும் எச்சரிக்கிறேன். இத்தகையப் பாவங்களைச் செய்பவர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்குள் இடம்பெற முடியாது. 22 ஆனால், ஆவியானவர் நமக்கு அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, கருணை, நன்மை, விசுவாசம், 23 நற்பண்பு, தன்னடக்கம் ஆகிய நற்கனிகளை உருவாக்குகின்றார். இவற்றைத் தவறு என்று எந்தச் சட்டமும் கூறுவதில்லை. 24 இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் மாம்சத்தைச் சிலுவையில் கொன்றுவிட்டார்கள். அவர்கள் ஆசைகளையும் கெட்ட விருப்பங்களையும் கூட விட்டிருக்கிறார்கள். 25 ஆவியானவரிடம் இருந்து நாம் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். எனவே நாம் அவரைப் பின்பற்ற வேண்டும்.

மாற்கு 8:22-30

குருடன் குணமாக்கப்படுதல்

22 இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர். 23 ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார்.

24 அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான்.

25 மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. 26 இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார்.

இயேசுதான் கிறிஸ்து என்று அறிக்கை

(மத்தேயு 16:13-20; லூக்கா 9:18-21)

27 இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார்.

28 அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள். 29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.

30 இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center