Book of Common Prayer
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ராஜாவை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த ராஜா உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
2 நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
4 தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
5 வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
6 தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
7 ராஜா கர்த்தரை நம்புகிறான்.
உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
8 தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
9 கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
தாவீதின் பாடல்.
23 கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
தாவீதின் பாடல்.
27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
7 கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
8 கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
9 கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
என்னை விட்டு விடாதிரும்!
என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.
17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் குமாரன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் குமாரனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
19 எலியா அவளிடம், “உன் குமாரனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? குமாரன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.
22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் குமாரன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.
24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.
1 மூப்பனாகிய நான், உண்மையினால் நான் நேசிக்கும் எனது அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுவது,
2 எனது அன்பான நண்பனே, உனது ஆன்மா நலமாயிருக்கும் வண்ணம் ஒவ்வொரு வகையிலும் நீ நலமாயிருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். 3 உனது வாழ்க்கையில் உள்ள உண்மையைக் குறித்துச் சில சகோதரர்கள் என்னிடம் வந்து கூறினர். உண்மையின் வழியை நீ தொடர்ந்து பின்பற்றுவதை அவர்கள் எனக்குக் கூறினர். இது எனக்கு சந்தோஷம் கொடுத்தது. 4 உண்மையின் வழியை எனது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கேட்கும்போது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் உண்டாகிறது.
5 எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்! 6 இச்சகோதரர்கள் உனது அன்பைக் குறித்து சபைக்கு கூறினர். அவர்கள் பயணத்தைத் தொடருவதற்குத் தயவு செய்து நீ உதவு, தேவனை மகிழ்ச்சிப்படுத்தும் வழியில் அவர்களுக்கு உதவு. 7 கிறிஸ்துவின் சேவைக்காக இச்சகோதரர்கள் பயணம் மேற்கொண்டனர். தேவனில் விசுவாசமற்றோரிடமிருந்து அவர்கள் எந்தவித உதவியையும் ஏற்கவில்லை. 8 எனவே இச்சகோதரருக்கு நாம் உதவ வேண்டும். நாம் அவர்களுக்கு உதவும்போது, உண்மைக்கான அவர்கள் வேலையில் நாமும் பங்கு கொள்வோம்.
9 நான் சபைக்கு ஒரு நிருபம் எழுதினேன். ஆனால் நாங்கள் சொல்வதைத் தியோத்திரேப்பு கேட்கவில்லை. எப்போதும் அவர்களுக்குத் தலைவனாக இருப்பதற்கு அவன் விரும்புகிறான். 10 தியோத்திரேப்பு செய்வது தவறு என்பதை நான் வரும்போது பேசுவேன். அவன் எங்களைக் குறித்துப் பொய் கூறி, தீயன பேசுகிறான். அவன் செய்வது இது மட்டுமல்ல. கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டுள்ள சகோதரருக்கு உதவவும் மறுக்கிறான். சகோதரருக்கு உதவ விரும்பும் மக்களையும் தியோத்திரேப்பு தடுக்கிறான். அவர்கள் சபையினின்று விலகும்படியாகச் செய்கிறான்.
11 எனது அன்பான நண்பனே, தீயவற்றைப் பின்பற்றாதே. நல்லவற்றைப் பின்பற்று. நல்லவற்றைச் செய்கிற மனிதன் தேவனிடமிருந்து வந்தவன். தீயவை செய்யும் மனிதனோ, தேவனை அறியாதவன்.
12 தெமெத்திரியுவைப் பற்றி எல்லா மக்களும் நல்லபடியாகப் பேசுகிறார்கள். அவர்கள் கூறுவதோடு உண்மையும் ஒத்துப்போகிறது. அவனைக் குறித்து நாங்களும் நல்லவற்றையே சொல்கிறோம். நாங்கள் கூறுவது உண்மையென்பதும் உனக்குத் தெரியும்.
13 உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. 14 நான் உன்னை விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அப்போது நாம் ஒருமித்துக் கூடிப் பேசலாம். 15 உனக்கு சமாதானம் உண்டாகட்டும். என்னோடிருக்கும் நண்பர்கள் உனக்குத் தங்கள் அன்பைத் தெரிவிக்கிறார்கள். அங்குள்ள நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பைத் தெரியப்படுத்து.
46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். ராஜாவின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது குமாரன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது குமாரன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.
49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய குமாரன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.
50 அதற்கு இயேசு, “போ, உன் குமாரன் பிழைப்பான்” என்றார்.
அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் குமாரன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.
52 “என் குமாரன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் குமாரனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.
53 இயேசு, “உன் குமாரன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.
54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.
2008 by World Bible Translation Center