Book of Common Prayer
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த ராஜாவைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த ராஜாவைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த ராஜாவைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான குமாரனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான ராஜாவாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 “அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த ராஜாவின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த ராஜாவிடம் கோபங்கொண்டு,
அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.
நீர் ராஜாவின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40 ராஜாவின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.
அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.
அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42 நீர் ராஜாவின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.
அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.
உமது ராஜா யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44 நீர் அவனை வெல்ல விடவில்லை.
நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.
நீர் அவனை அவமானப்படுத்தினீர்.
46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?
எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்?
என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.
குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.
ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.
49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?
நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50-51 ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும்.
கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது.
நீர் தேர்ந்தெடுத்த ராஜாவை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.
52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!
ஆமென், ஆமென்!
சமாரியர்களின் தொடக்கம்
24 அசீரியாவின் ராஜா இஸ்ரவேலரை சமாரியாவிலிருந்து வெளியேற்றினான். பிறகு அவன் பாபிலோன், கூத்தா, ஆபா, ஆமாத், செப்பர்வாயிமிலும் ஆகிய நாடுகளிலிருந்து ஜனங்களை அங்கே குடியேற்றினான். அவர்கள் சமாரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர். 25 அவர்கள் சமாரியாவில் வாழத்தொடங்கியபோது, கர்த்தரை உயர்வாக மதிக்கவில்லை. எனவே, கர்த்தர் சிங்கங்களை அனுப்பி அவர்களைத் தாக்கினார். அவர்களில் சிலரை அச்சிங்கங்கள் கொன்றுபோட்டன. 26 சிலர் அசீரியாவின் ராஜாவிடம், “நீங்கள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து சமாரியாவில் குடியேற்றிய ஜனங்கள் அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அதனால் அந்த தெய்வம் அவர்களைக் தாக்க சிங்கங்களை அனுப்புகிறார். அவை அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களை அறியாதவர்களைக் கொன்றுபோடுகிறது” என்றார்கள்.
27 அதற்கு அசீரியாவின் ராஜா, “நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்” என்றான்.
28 எனவே அவ்வாறே சமாரியாவிலிருந்து அழைத்துப்போயிருந்த ஆசாரியர்களில் ஒருவனை பெத்தேல் என்னும் இடத்தில் வாழவைத்தனர். அவன் கர்த்தரை எவ்வாறு கனப்படுத்துவது என்று ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.
29 ஆனால் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவற்றை அவர்கள் குடியேறிய நகரங்களில் சமாரியர் உருவாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தனர். 30 பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும், 31 ஆவியர்கள் நிபேகாஸ், தர்தாக் என்னும் பொய்த் தெய்வங்களையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தெய்வங்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் தகன பலி கொடுத்துவந்தனர்.
32 அவர்கள் கர்த்தருக்கும் ஆராதனைச் செய்தார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு அவர்களுக்குள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த ஆசாரியர்கள் ஜனங்களுக்காக அவ்வாலயங்களில் பலிகொடுத்து வந்தனர். 33 அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர்.
34 இன்றும் அவர்கள் முன்பு போலவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கர்த்தரை கனப்படுத்துவதில்லை. அவர்கள் இஸ்ரவேலர்களின் விதிகளுக்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபுவின் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டத்திற்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. 35 இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தர் ஒரு உடன்படிக்கைச் செய்து கொண்டார். அவர் அவர்களிடம், “நீங்கள் அந்நிய தெய்வங்களை மதிக்கக் கூடாது. அதோடு அவற்றைத் தொழுதுகொள்ளவோ, அவற்றுக்கு சேவைசெய்யவோ பலிகள் செலுத்தவோ கூடாது, 36 ஆனால் நீங்கள் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும். தேவனாகிய கர்த்தரே உங்களை எகிப்திலிருந்து மீட்டார். உங்களைக் காப்பாற்ற கர்த்தர் தனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தினார். நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டு அவருக்குப் பலிகள் தரவேண்டும். 37 நீங்கள் அவர் உங்களுக்காக எழுதிய விதிகளுக்கும், சட்டங்களுக்கும், போதனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டும். எப்பொழுதும் இவற்றுக்கு அடிபணியவேண்டும். வேறு தெய்வங்களை மதிக்கக் கூடாது. 38 நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறக்கக்கூடாது. நீங்கள் பிற தெய்வங்களை மதிக்கக்கூடாது. 39 உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே நீங்கள் மதிக்க வேண்டும்! பிறகு அவர் உங்கள் பகைவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்” என்றார்.
40 ஆனால் இஸ்ரவேலர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் அதற்கு முன்னால் செய்தவற்றையே மீண்டும் தொடர்ந்து செய்து வந்தனர். 41 எனவே, இப்போது வேறு நாட்டினர் கர்த்தரை மதிப்பதோடு தங்கள் தெய்வங்களையும் சேவித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இதனை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தொடர்ந்து இன்றுவரையிலும் கூட செய்து வருகின்றனர்.
திருமணம் குறித்த கேள்விகள்
25 திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். 26 இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். 27 உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். 28 ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
29 சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். 30 துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். 31 இந்த உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருட்கள் முக்கியமானவை அல்ல என்பது போன்று வாழவேண்டும். இந்த உலகமும் இந்த உலகத்தின் வழிகளும் மறைந்துபோகும். எனவே, நீங்கள் இவ்வாறு வாழ வேண்டும்.
தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்
(லூக்கா 12:22-34)
25 “எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.
28 “உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.
31 “‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.
2008 by World Bible Translation Center