Book of Common Prayer
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த ராஜாவைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த ராஜாவைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த ராஜாவைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான குமாரனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான ராஜாவாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 “அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த ராஜாவின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த ராஜாவிடம் கோபங்கொண்டு,
அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.
நீர் ராஜாவின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40 ராஜாவின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.
அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.
அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42 நீர் ராஜாவின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.
அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.
உமது ராஜா யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44 நீர் அவனை வெல்ல விடவில்லை.
நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.
நீர் அவனை அவமானப்படுத்தினீர்.
46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?
எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்?
என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.
குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.
ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.
49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?
நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50-51 ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும்.
கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது.
நீர் தேர்ந்தெடுத்த ராஜாவை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.
52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!
ஆமென், ஆமென்!
பரிசுத்தப் பெட்டியினால் பெலிஸ்தர்களுக்குத் தொல்லை
5 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுப் போனார்கள். 2 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்த பெட்டியை தாகோனின் கோவிலுக்குள் கொண்டுப் போய் தாகோனின் சிலைக்கு அருகில் வைத்தனர். 3 மறுநாள் காலை, அஸ்தோத் ஜனங்கள் எழுந்ததும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர். தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்னால் விழுந்துகிடந்தது.
அஸ்தோத் ஜனங்கள் தாகோனின் சிலையைப் பழைய இடத்தில் வைத்தனர். 4 ஆனால் மறுநாள் காலையில், மீண்டும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர்! கர்த்தருடைய பரிசுத்த பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை விழுந்துகிடந்தது. இந்தமுறை தாகோனின் தலையும், கைகளும் உடைந்து கோவில் வாசற்படியிலேகிடந்தன. தாகோனின் உடல் மாத்திரம் அப்படியே கிடந்தது. 5 அதனால்தான் இன்றும் கூட, தாகோனின் பூசாரிகளும், அஸ்தோத்தில் உள்ள தாகோனின் கோவிலுக்குள் நுழைகிற ஒருவனும் கோவில் வாசற்படியை மிதிப்பதில்லை.
6 அஸ்தோத்து ஜனங்களுக்கும், அவர்களது அக்கம் பக்கத்தினருக்கும் வாழ்க்கைச் சிரமமாகும்படி கர்த்தர் செய்தார். கர்த்தர் அவர்களுக்கு பல துன்பங்களைத் தந்தார். அவர்களை தோல் கட்டிகளினால் வாதித்தார். அவர்களுக்கு சுண்டெலிகளையும் அனுப்பினார். அவை அவர்களின் கப்பல்களுக்கும், நிலப்பகுதிகளுக்கும் பரவியது. நகர ஜனங்கள் அஞ்சினார்கள். 7 அஸ்தோத் ஜனங்கள் நடப்பதை எல்லாம் கண்டனர். அவர்கள், “இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியானது இங்கே இருக்கக் கூடாது! அவர் நம்மையும் நமது தெய்வமான தாகோனையும் தண்டித்திருக்கிறார்” என்றனர்.
8 அஸ்தோத் ஜனங்கள் பெலிஸ்தியரின் 5 ஆளுனர்களையும் வரவழைத்தனர். அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை நாம் என்னச் செய்யவேண்டும்?” என்று கேட்டனர்.
ஆளுனர்களோ, “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை இங்கிருந்து காத் பட்டணத்திற்கு எடுத்துப்போக வேண்டும்” என்றனர். ஆகவே பெலிஸ்தர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர்.
9 ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை காத் நகரம் வரைக்கும் பெலிஸ்தர்கள் எடுத்துச் சென்றதும், காத் நகரை கர்த்தர் தண்டித்தார். ஜனங்கள் மிகவும் கலக்கமுற்றனர். இளைஞர் முதியவர் என அனைவருக்கும் தேவன் தொல்லைகளை ஏற்படுத்தினார். தேவன் அங்குள்ளவர்களுக்கும் தோல் கட்டிகளை தந்தார். 10 எனவே, பெலிஸ்தியர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினர்.
ஆனால் அங்குள்ள ஜனங்கள் தேனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கண்டதும், முறையிட்டார்கள். “எங்களது எக்ரோன் நகரத்திற்கு இஸ்ரவேலருடைய தேவனின் பரிசுத்தப் பெட்டியை ஏன் கொண்டு வந்தீர்கள்? நீங்கள் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்டனர். 11 எக்ரோன் ஜனங்கள் பெலிஸ்திய ஆளுனர்களைக் கூட்டி, “இஸ்ரவேலருடைய தேவனின் பெட்டி நம்மை கொன்றுப் போடுவதற்கு முன் இதனை அதன் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுவோம்!” என்றனர்.
எக்ரோன் ஜனங்கள் மிகவும் பயமடைந்தனர்! அங்குள்ள ஜனங்களை தேவன் மிகவும் கஷ்டப்படுத்தினார். 12 பலர் மரித்தனர். மரிக்காதவர்களுக்கு தோல் கட்டி இருந்தது. எக்ரோன் ஜனங்களின் கூக்குரல் பரலோகம்வரை எட்டியது.
தேவனிடமிருந்து சான்றுகள்
12 அப்போஸ்தலர்கள் அதிசயங்கள் பலவற்றையும், வல்லமைமிக்க காரியங்களையும் செய்தனர். எல்லா மக்களும் இந்தக் காரியங்களைப் பார்த்தனர். சாலோமோனின் மண்டபத்தில் அப்போஸ்தலர்கள் கூடியிருந்தனர். அவர்கள் ஒரே நோக்கம் உடையோராக இருந்தனர். 13 வேறு எந்த மக்களும் அவர்களோடு அங்கு நிற்பதற்குத் தகுதியானவர்களாகத் தங்களைக் கருதவில்லை. அப்போஸ்தலர்களை எல்லா மக்களும் மிகவும் புகழ்ந்தார்கள். 14 மேலும், மேலும் மிகுதியான மக்கள் கர்த்தரில் நம்பிக்கை வைத்தனர். பல பெண்களும் ஆண்களும் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். 15 எனவே மக்கள் தங்களுடைய நோயாளிகளை தெருவுக்குக் கொண்டு வந்தனர். பேதுரு அவ்வழியே வருகிறானென்று கேள்விப்பட்டனர். எனவே மக்கள் நோயாளிகளை சிறு கட்டில்களிலும் படுக்கைகளிலும் படுக்கவைத்தனர். பேதுருவின் நிழல் நோயாளிகள் மீது விழுந்தால் கூட அவர்கள் குணமாவதற்கு அதுவே போதும் என்று அவர்கள் நம்பி பேதுரு நடக்கும் வழியில் அவர்களைப் படுக்க வைத்தனர். 16 எருசலேமின் சுற்றுப் புறத்திலுள்ள எல்லா ஊர்களிலுமிருந்து மக்கள் வந்தனர். நோயாளிகளையும் பிசாசின் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டோரையும் அவர்கள் கொண்டு வந்தனர். இந்த மக்கள் எல்லோரும் குணம் பெற்றனர்.
தடை செய்யும் முயற்சி
17 தலைமை ஆசாரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். 19 ஆனால் இரவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் சிறையின் கதவுகளைத் திறந்தான். தேவ தூதன் அப்போஸ்தலர்களை வெளியே அழைத்துச் சென்று அவர்களை நோக்கி, 20 “செல்லுங்கள். தேவாலயத்தில் போய் நில்லுங்கள். இப்புதிய வாழ்க்கையைக் குறித்த ஜீவ வார்த்தைகள் அனைத்தையும் மக்களுக்குக் கூறுங்கள்” என்றான். 21 அப்போஸ்தலர்கள் இதைக் கேட்டபோது அவ்வாறே கீழ்ப்படிந்து தேவாலயத்துக்குச் சென்றார்கள். அது அதிகாலை வேளையாக இருந்தது. அப்போஸ்தலர்கள் மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசாரியனும் அவனது நண்பர்களும் தேவாலயத்துக்கு வந்தனர். யூதத் தலைவர்களும் எல்லா முக்கியமான யூத முதியவர்களும் கூடி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போஸ்தலர்களை அவர்களிடம் அழைத்து வருவதற்கெனச் சில மனிதர்களை அனுப்பினர். 22 அவர்கள் சிறைக்குப் போனபோது, அங்கு அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பிச் சென்று, யூத அதிகாரிகளுக்கு அதனை அறிவித்தனர். 23 அம்மனிதர்கள், “சிறை பூட்டித் தாளிடப்பட்டிருந்தது. சிறைவாயில்களருகே காவலர்கள் நின்றனர். ஆனால் நாங்கள் கதவுகளைத் திறந்தபோது சிறையில் யாருமில்லை!” என்றனர். 24 தேவாலயத்துக் காவலரின் தலைவனும் முக்கிய போதகர்களும் இதனைக் கேட்டனர். அவர்கள் குழப்பமுற்றனர். அவர்கள் ஆச்சரியமுற்று, “இதனால் என்ன நடக்கப்போகிறதோ?” என்றனர்.
25 பின் மற்றொரு மனிதன் வந்து, “கேளுங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் தேவாலயத்துக்குள் நிற்கின்றனர். அவர்கள் மக்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று அவர்களுக்குக் கூறினான். 26 காவலர் தலைவனும், காவலரும் வெளியே வந்து அப்போஸ்தலரை அழைத்துச் சென்றனர். மக்களுக்குப் பயந்ததால் வீரர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. மக்கள் சினம் கொண்டு கற்களாலெறிந்து அவர்களைக் கொல்லக்கூடுமென்று வீரர்கள் பயந்தனர்.
அழியாத தேவ வார்த்தை
(மத்தேயு 24:32-35; மாற்கு 13:28-31)
29 பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30 அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31 நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.
32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.
33 “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.
ஆயத்தமாயிருங்கள்
34 “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36 எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center