Book of Common Prayer
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய ராஜாவே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
6 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
என்னைக் குணமாக்கும்!
என் எலும்புகள் நடுங்குகின்றன.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
எனவே என்னை நீர் குணமாக்கும்!
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8 தீயோரே அகன்று போங்கள்!
ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
10 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்?
தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.
2 பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள்.
அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.
3 தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள்.
பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள்.
4 தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள்.
தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள்.
5 தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள்.
அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை.[a]
தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள்.
6 தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள்.
அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.
7 அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள்.
அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள்.
8 அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.
ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள்.
ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
9 மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.
ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும், மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.
நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!”
என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.
12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்!
தேவனே, அத்தீயோரைத் தண்டியும்!
ஏழைகளை மறவாதேயும்!
13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள்.
ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.
14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர்.
அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்!
தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள்.
கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர்.
எனவே அவர்களுக்கு உதவும்!
15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.
16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.
அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.
அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.
துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும்.
தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
11 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
2 தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
3 நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
4 கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
5 கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
6 தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
7 ஆனால் கர்த்தர் நல்லவர்.
நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.
நேபுகாத்நேச்சாரின் கனவு
2 நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் இரண்டாவது ஆண்டில் அவனுக்குச் சில கனவுகள் வந்தன. அக்கனவுகள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவனால் தூங்கமுடியவில்லை. 2 எனவே ராஜா, தனது அறிஞர்களைத் தன்னிடம் அழைத்தான். அவர்கள் தங்கள் மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நட்சத்திரங்களைக் கவனித்தனர். அவர்கள் கனவுகளின் பலனைச் சொல்லவும் எதிர்காலத்தில் நடக்கக்கூடியதைத் கூறவுமே இவ்வாறு செய்தனர். தனது கனவைப் பற்றி தனக்குச் சொல்லவேண்டும் என்று ராஜா அவர்களிடம் கேட்டான். எனவே அவர்கள் வந்து ராஜாவின் முன்னால் நின்றார்கள்.
3 ராஜா அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறது. நான் கனவின் பொருளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
4 பிறகு கல்தேயர்கள் ராஜாவுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் அராமிக் மொழியில் பேசினார்கள். அவர்கள் ராஜாவே, “நீர் என்றென்றும் வாழ்க. நாங்கள் உமது வேலைக்காரர்கள். தயவுசெய்து உமது கனவைக் கூறும். பிறகு அதன் அர்த்தம் என்னவென்று நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள்.
5 பிறகு ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “இல்லை, நீங்கள் எனது கனவைச் சொல்ல வேண்டும். பிறகு அதன் பொருள் என்னவென்றும் செல்லவேண்டும். நீங்கள் இவற்றைச் சொல்லாவிடால் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடும்படிக் கட்டளையிடுவேன். அதோடு உங்கள் வீடுகள் குப்பைமேடுகளாக அழிக்கும்படிக் கட்டளையிடுவேன். 6 ஆனால் நீங்கள் எனது கனவையும், அதன் பொருளையும் சொல்லிவிட்டால் நான் உங்களுக்கு பரிசுகளையும், அன்பளிப்புகளையும், மரியாதையும் தருவேன். எனவே என் கனவையும், அதன் பொருளையும் கூறுங்கள்” என்றான்.
7 மீண்டும் அந்த ஞானிகள் ராஜாவிடம், “தயவு செய்து கனவை எங்களுக்குச் சொல்லும். பிறகு நாங்கள் அதன் பொருளைக் கூறுகிறோம்” என்றனர்.
8 பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள். 9 எனது கனவைப்பற்றிச் சொல்லாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்! எனவே நீங்கள் அனைவரும் என்னிடம் பொய் சொல்ல உடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் காலதாமதம் செய்கின்றீர்கள். நீங்கள் நான் செய்ய விரும்புவதை மறந்துவிடுவேன் என்று நம்புகிறீர்கள். இப்பொழுது எனது கனவைக் கூறுங்கள். உங்களால் எனது கனவைக் கூறமுடியுமானால் அதன் பொருளையும் கூறமுடியும் என்று நான் அறிவேன்” என்றான்.
10 கல்தேயர்கள் ராஜாவுக்குப் பதிலாக, “ராஜா கேட்பவற்றைச் சொல்லக்கூடிய மனிதன் பூமியில் எவனுமில்லை. இதுவரை எந்த அரசரும் இப்படிப்பட்ட ஒன்றை ஒரு மந்திரவாதியிடமோ, ஒரு ஜோசியனிடமோ, ஒரு கல்தேயனிடமோ, கேட்டதில்லை. மிகச் சிறந்தவனும், வலிமைபொருந்தியவனுமான எந்த ராஜாவும் இதுவரை இவ்வாறு அறிவாளிகளிடம் கேட்டதில்லை. 11 ராஜா மிகக் கடினமான ஒன்றைச் செய்யும்படிக் கேட்கிறீர். தெய்வங்களால் மட்டுமே அரசரது கனவையும், அக்கனவின் பொருளையும் கூறமுடியும். ஆனால் தெய்வங்கள் மனிதர்களோடு வாழ்வதில்லை” என்றனர்.
12 ராஜா இதனைக் கேட்டபோது மிகவும் கோபமடைந்தான். எனவே அவன் பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படிக் கட்டளையிட்டான். 13 ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கட்டளை அறிவிக்கப்பட்டது. எல்லா ஞானிகளும் கொல்லப்படவிருந்தனர். ராஜாவின் ஆட்கள் தானியேலையும் அவனது நண்பர்களையும் கொலை செய்வதற்காகத் தேடினார்கள்.
14 ராஜாவின் காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான். 15 தானியேல் ஆரியோகுவிடம்: “ராஜா எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான்.
பிறகு ஆரியோகு ராஜாவின் கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான். 16 தானியேல் இச்செய்தியை அறிந்ததும் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் ராஜாவிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் ராஜாவின் கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான்.
இயேசு நமது உதவியாளர்
2 எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்கும்படிக்கு நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் ஒருவன் பாவம் செய்தால் இயேசு கிறிஸ்து நமக்கு உதவுகிறார். அவர் நீதியுள்ளவர். பிதாவாகிய தேவனுக்கு முன்பாக இயேசு நமக்காகப் பரிந்து பேசுவார். 2 நமது பாவங்கள் நம்மிலிருந்து நீக்கப்படும் வழி இயேசுவே. எல்லா மக்களின் பாவங்களும் நீக்கப்படும் வழி இயேசுவே.
3 நாம் செய்யும்படியாக தேவன் கூறியவற்றிற்கு நாம் கீழ்ப்படிந்தால், நாம் தேவனை உண்மையாக அறிந்திருக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்கலாம். 4 ஒருவன், “நான் தேவனை அறிவேன்!” என்கிறான். ஆனால் அவன் தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அவன் ஒரு பொய்யன். அவனில் உண்மை இல்லை. 5 ஆனால் ஒருவன் தேவனின் போதனைக்குக் கீழ்ப்படியும்போது, அம்மனிதனில் தேவனின் அன்பு முழுமை பெற்றிருக்கும். நாம் தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை இவ்வாறே அறிந்துகொள்கிறோம். 6 ஒரு மனிதன் தான் தேவனில் வாழ்வதாகக் கூறினால், அவன் இயேசு வாழ்ந்ததைப் போன்று வாழ வேண்டும்.
பிற மக்களை நேசிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டார்
7 எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும். 8 இருந்த போதிலும் இக்கட்டளையை ஒரு புதிய கட்டளையாக உங்களுக்கு எழுதுகிறேன். இக்கட்டளை உண்மையானது. இதன் உண்மையை இயேசுவிலும் மற்றும் உங்களிலும் நீங்கள் காணலாம். இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
9 ஒரு மனிதன், “நான் ஒளியில் இருக்கிறேன்” என்கிறான். ஆனால் அவன் அவனது சகோதரனை வெறுக்கிறானென்றால், அவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றே பொருள்படும். 10 தன் சகோதரனை நேசிக்கிற மனிதன் ஒளியில் இருக்கிறான். பாவத்திற்குக் காரணமாக இருக்கிற எதுவும் அவனிடம் இல்லை. 11 ஆனால் சகோதரனை வெறுக்கிற ஒருவன் இருளில் இருக்கிறான். அவன் இருளில் வாழ்கிறான். அவன் எங்கு போய்க்கொண்டிருக்கிறான் என்பது அம்மனிதனுக்குத் தெரியாது. ஏன்? இருள் அவனைக் குருடனாக்கியிருக்கின்றது.
12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.
13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். 14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.
15 “அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். 16 நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள். 17 உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. 18 நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன். 19 நான் சேவைக்காக என்னைத் தயார் செய்து கொண்டேன். நான் இதனை அவர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களும் உமது சேவைக்காக உண்மையில் தம்மைத் தயார் செய்துகொள்வார்கள்.
2008 by World Bible Translation Center