Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 1-4

புத்தகம் 1

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
    தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
    அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
    தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
    அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.

ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
    அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
    அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரை அவர் அழிக்கிறார்.

யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
    ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
    கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
    அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.

ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா,
    அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
    “நான் இம்மனிதனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
    சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.

இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
    கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
    நீ எனக்கு குமாரன்.
நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
    பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
    நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.

10 எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
    அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
    கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
    கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.

தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு.

கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
    பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.

ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
    கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!

நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
    அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.

நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
    இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
    ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!

கர்த்தாவே, எழும்பும்!
    எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
    என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.

கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
    கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது.

என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும்.
என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்!
    என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்!

ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்?
    என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
    நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்.

கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
    கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள்.
    படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள்.
தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக்
    கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்!

“நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்?
    கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!”
    என்று பலர் கூறுகிறார்கள்.
கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்!
    தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன்.
நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன்.
    ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்.

சங்கீதம் 7

கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் குமாரனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்.

எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
    என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என்னை மீட்டுக்கொள்ளும்!
நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
    என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!

எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
    நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்!
என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
    என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
    அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.

கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
    என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
    கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
    உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
    எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
    தேவனே, நீர் நல்லவர்.
    நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.

10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார்.
    தேவன் என்னைப் பாதுகாப்பார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
    எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.[a]

14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
    அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
    ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
    அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
    ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.

17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
    மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.

தானியேல் 1

தானியேல் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படுதல்

நேபுகாத்நேச்சார் பாபிலோனின் ராஜாவாக இருந்தான். நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சார் அவனது படையுடன் எருசலேமை முற்றுகையிட்டான். யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் இது நடந்தது. கர்த்தர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை, நேபுகாத்நேச்சார் தோற்கடிக்கும்படி அனுமதித்தார். தேவனுடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் அனைத்துப் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டான். நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை அவனது விக்கிரக தெய்வங்களின் ஆலயத்தில் வைத்தான்.

பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அஸ்பேனாஸ் என்பவனுக்கு ஒரு கட்டளை கொடுத்தான். (அஸ்பேனாஸ், ராஜாவுக்குப் பணிவிடை செய்யும் அலிகளில் மிக முக்கியமான தலைவன்). ராஜா, அஸ்பேனாசிடம் அவனது வீட்டிற்கு சில யூதர்களை அழைத்துவரும்படி சொன்னான். நேபுகாத்நேச்சார் முக்கியமான குடும்பங்களிலிருந்தும் இஸ்ரவேல் அரசகுடும்பங்களிலிருந்தும், யூதர்களை விரும்பினான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஆரோக்கியமான இளம் யூதர்களை மட்டுமே விரும்பினான். தம் உடம்பில் தழும்போ, காயமோ, குறைபாடுகளோ இல்லாத இளைஞர்களை ராஜா விரும்பினான். ராஜா அழகான சுறுசுறுப்பான இளைஞர்களை விரும்பினான். இளைஞர்களில் எல்லாவற்றையும் எளிதாகவும், வேகமாகவும், கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவர்களை ராஜா விரும்பினான். ராஜா, தன் வீட்டில் வேலை செய்யத் தகுதியுள்ள இளைஞர்களை விரும்பினான். ராஜா அஸ்பேனாசிடம், அந்த இஸ்ரவேல் இளைஞர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும், மொழியையும் கற்றுக்கொடுக்கும்படி கூறினான்.

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உணவையும் திராட்சைரசத்தையும் இளைஞர்களுக்குக் கொடுத்தான். அது ராஜா உண்ணும் உணவின் தரத்தில் இருந்தது. ராஜா இஸ்ரவேலிலிருந்து கொண்டுவரப்பட்ட இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற வேண்டும் என விரும்பினான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் பாபிலோன் ராஜாவின் பணியாட்களாக இருக்கவேண்டும். அந்த இளைஞர்களுள் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். இந்த இளைஞர்களெல்லாம் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அஸ்பேனாஸ் அந்த இளைஞர்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தான். தானியேலுக்குப் பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்குச் சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்கள் கொடுக்கப்பட்டன.

தானியேல் ராஜாவின் வளமான உணவையும், திராட்சைரசத்தையும் உண்ண விரும்பவில்லை. தானியேல் அந்த உணவினாலும் திராட்சைரசத்தாலும் தன்னைத்தானே அசுத்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாசிடம் தன்னைத் தானே அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான்.

தேவன், அஸ்பேனாஸ் தானியேலிடம் தயவும் இரக்கமும் கொள்ளும்படி செய்தார். 10 ஆனால் அஸ்பேனாஸ் தானியேலிடம், “நான் என் ராஜாவான எஜமானருக்குப் பயப்படுகிறேன். ராஜா இந்த உணவையும், திராட்சைரசத்தையும் உனக்குத் தரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த உணவை உண்ணாவிட்டால், பலவீனமுடையவனாகவும், நோயாளியாகவும் ஆவாய். நீ உன் வயதுள்ள மற்ற இளைஞர்களைவிட மோசமான நிலையில் இருப்பாய். ராஜா இதனைப் பார்த்து என் மீது கோபங்கொள்வார். அவர் என் தலையை வெட்டிவிடலாம், ஆனால் இதற்கு உனது தவறே காரணமாகும்” என்று சொன்னான்.

11 பிறகு தானியேல் அவர்களது காவலனிடமும் பேசினான். அஸ்பேனாசு அந்தக் காவலனிடம் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தான். 12 தானியேல் காவலனிடம் “தயவுசெய்து பின் வரும் சோதனையைப் பத்து நாட்களுக்கு எங்களுக்குத் தாரும். எங்களுக்கு உண்ண காய்கறிகளும், குடிக்கத் தண்ணீரும் தவிர வேறு எதுவும் தரவேண்டாம். 13 பத்து நாட்களுக்குப் பின்னர் ராஜாவின் உணவை உண்ணும் மற்றவர்களோடு எங்களை ஒப்பிட்டுப் பார்த்து, யார் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனப் பாரும். பிறகு நீர் எங்களை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்யலாம். நாங்கள் உமது பணியாளர்கள்” என்று சொன்னான்.

14 எனவே, காவலன் பத்து நாட்களுக்குத் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைச் சோதிக்க ஒப்புக்கொண்டான். 15 பத்து நாட்களுக்குப் பிறகு, தானியேலும் அவனது நண்பர்களும் ராஜாவின் உணவை உண்டுவந்த மற்றவர்களைவிட ஆரோக்கியமாகக் காணப்பட்டனர். 16 எனவே, காவலன் ராஜாவின் உணவையும் திராட்சைரசத்தையும் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளைக் கொடுத்தான்.

17 தேவன், தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கு ஞானத்தையும், பலவித எழுத்துக்களையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளும் திறமையையும் கொடுத்தார். தானியேல், பலவித தரிசனங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

18 ராஜா அனைத்து இளைஞர்களும் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினான். அக்கால முடிவில் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் முன்பு எல்லா இளைஞர்களையும் அஸ்பேனாஸ் கொண்டுவந்தான். 19 ராஜா அவர்களோடு பேசினான். ராஜா அந்த இளைஞர்களில் எவரும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களைப்போன்று சிறந்தவர்களாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான். எனவே அந்த நான்கு இளைஞர்களும் ராஜாவின் பணியாட்கள் ஆயினர். 20 ஒவ்வொரு முறையும் ராஜா அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு அவர்கள் மிகுந்த ஞானத்தையும் புத்தியையும் காட்டினார்கள். ராஜா அவனது அரசாங்கத்தில் உள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும்விட இவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்கள் என்று கண்டான். 21 எனவே தானியேல் தெடார்ந்து ராஜாவின் பணியாளாக கோரேஸ் ஆண்ட முதலாம் ஆண்டு மட்டும் இருந்தான்.

1 யோவான் 1

உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்த சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களாலேயே பார்த்தோம், நாங்கள் நோக்கினோம். எங்கள் கைகளால் தொட்டோம். ஜீவன் தரும் வார்த்தையைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். அந்த ஜீவன் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் அதைப் பார்த்தோம். நாங்கள் அதற்கான சான்றுகளைத் தரமுடியும். நாங்கள் இப்போது அந்த ஜீவனைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறோம். அது என்றென்றும் தொடரும் ஜீவனாகும். பிதாவாகிய தேவனோடு இருந்த ஜீவன் அது. தேவன் இந்த ஜீவனை எங்களுக்கு வெளிப்படுத்தினார். எங்களோடு நீங்களும் இவற்றில் பங்குள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டுமிருக்கிற காரியங்களை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோரோடு கூடிய ஐக்கியத்தில் நாம் ஒருமித்துப் பங்கு பெறுகிறோம். நம் மகிழ்ச்சி முழுமையாகும்படி இக்காரியங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.

தேவன் நமது பாவங்களை மன்னிக்கிறார்

தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை. ஆகையால் நாம் தேவனோடு நெருக்கமான உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருளில் தொடர்ந்து வாழ்வோமானால், பிறகு நாம் பொய்யர்களாயிருக்கிறோம். அப்படியானால், நாம் உண்மையைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறோம். தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.

நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். 10 நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.

யோவான் 17:1-11

சீஷர்களுக்காகப் பிரார்த்தனை

17 இவற்றையெல்லாம் இயேசு சொன்ன பிறகு, அவர் தனது கண்களால் வானத்தை (பரலோகத்தை) அண்ணாந்து பார்த்தார். “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார். உமது குமாரன் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கும்படியாக அனைத்து மக்கள் மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர். அந்த மனிதர்கள், நீர்தான் உண்மையான தேவன் என்பதையும் உம்மால் அனுப்பப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்பதையும் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு தெரிந்துகொள்வதுதான் நிரந்தரமான வாழ்க்கை. நான் செய்யுமாறு நீர் கொடுத்த வேலைகளை நான் முடித்துவிட்டேன். நான் பூமியில் உம்மை மகிமைப்படுத்தினேன். இப்பொழுது, உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்.

“உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். நீர் எனக்குத் தந்தவையெல்லாம் உம்மிடமிருந்து வந்தவை என்று அவர்கள் இப்போது தெரிந்துகொண்டனர். நீர் எனக்குக் கொடுத்த போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். உண்மையாகவே நான் உம்மிடமிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். நீர் என்னை அனுப்பிவைத்ததையும் அவர்கள் நம்புகிறார்கள். நான் அவர்களுக்காக இப்பொழுது வேண்டுகிறேன். நான் உலகில் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீர் எனக்குக் கொடுத்த மக்களுக்காக வேண்டுதல் செய்கிறேன். ஏனென்றால் அவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையவை எல்லாம் உம்முடையவை. உம்முடையவை எல்லாம் என்னுடையவை. அவர்களில் நான் மகிமை அடைந்திருக்கிறேன்.

11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center