Book of Common Prayer
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது.
51 தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
என் பாவங்களை அழித்துவிடும்.
2 தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
என் பாவங்களைக் கழுவிவிடும்.
என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
3 நான் பாவம் செய்தேனென அறிவேன்.
அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
4 நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.
நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன்.
உமது முடிவுகள் நியாயமானவை.
5 நான் பாவத்தில் பிறந்தேன்.
என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
6 தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
7 ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
8 என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும்.
9 எனது பாவங்களைப் பாராதேயும்!
அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
10 தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
11 என்னைத் தூரத் தள்ளாதேயும்!
என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
12 உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும்.
எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
13 நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.
14 தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
என் தேவனே, நீரே எனது மீட்பர்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
15 என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16 நீர் பலிகளை விரும்பவில்லை.
நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
17 தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
18 தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
எருசலேமின் சுவர்களை எழுப்பும்.
19 அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.
ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.
“லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்.
69 தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது.
2 நான் நிற்பதற்கு இடமில்லை.
சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன்.
அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன.
நான் அமிழும் நிலையில் உள்ளேன்.
3 உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன்.
என் தொண்டை புண்ணாகிவிட்டது.
நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை
உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன்.
4 என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள்.
எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள்.
என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள்.
நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள்.
நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள்.
5 தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர்.
நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது.
6 என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும்.
இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தொழுதுகொள்வோர் என்னால் அவமானப்படாதபடிச் செய்யும்.
7 என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது.
உமக்காக இவ்வெட்கத்தை நான் சுமக்கிறேன்.
8 என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள்.
என் தாயின் பிள்ளைகள் என்னை ஒரு அயல் நாட்டவனைப்போல நடத்துகிறார்கள்.
9 உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன.
உம்மைக் கேலி செய்யும் ஜனங்களின் அவதூறுகளை நான் ஏற்கிறேன்.
10 நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன்.
அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள்.
11 துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன்.
ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள்.
12 பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
குடிக்காரர்கள் என்னைப்பற்றிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.
13 ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம்.
நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன்.
நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
14 என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும்.
நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும்.
என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
15 அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும்.
ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும்.
கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும்.
16 கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும்.
உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!
17 உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும்.
நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்!
விரைந்து எனக்கு உதவும்.
18 வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்.
என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
19 நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர்.
என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர்.
அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர்.
20 வெட்கம் என்னை நசுக்கிற்று!
வெட்கத்தால் நான் இறக்கும் நிலைக்கு ஆளானேன்.
எனக்காகப் பரிதபிப்பவர்களுக்காகக் காத்திருந்தேன்.
ஆனால் ஒருவரையும் நான் பார்க்க முடியவில்லை.
எனக்கு ஆறுதல் கூறுவோருக்காக நான் காத்திருந்தேன்.
ஆனால் ஒருவரும் வரவில்லை.
21 அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள்.
அவர்கள் எனக்குத் திராட்சை ரசத்தையல்ல, காடியைக் கொடுத்தார்கள்.
22 அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன.
ஐக்கிய பந்திக்கான உணவு வகைகள் நிரம்பியிருந்தன.
அந்த உணவுகளே அவர்களை அழிக்குமென நம்புகிறேன்.
23 அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன்.
எரேமியா தேவனிடம் முறையிடுகிறான்
12 கர்த்தாவே, நான் உம்மோடு வாதம் செய்தால் நீர் எப்பொழுதும் சரியாகவே இருப்பீர்!
ஆனால், நான் உம்மிடம் சரியாக தோன்றாத சிலவற்றைப்பற்றி கேட்க விரும்புகிறேன்.
கெட்டவர்கள் ஏன் சித்தி பெறுகிறார்கள்?
உம்மால் நம்பமுடியாதவர்கள், ஏன் இத்தகைய இலகுவான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்?
2 நீர் அந்த கெட்ட ஜனங்களை இங்கே வைத்திருக்கிறீர்,
அவர்கள் பலமான வேர்களையுடைய செடிகளைப்போல் உள்ளனர்.
அவர்கள் வளர்ந்து கனிகளை உற்பத்தி செய்கின்றனர்.
அவர்கள் தம் வாயில் நீர் அவர்களோடு அன்பாகவும்
நெருக்கமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்;
ஆனால், அவர்கள் இதயத்தில் உண்மையில் உம்மை விட்டுத் தூரத்தில் உள்ளனர்.
3 ஆனால், கர்த்தாவே!
நீர் என் இதயத்தை அறிவீர், நீர் என்னைப் பார்க்கிறீர்.
என் மனதை சோதிக்கிறீர்.
வெட்டுவதற்கு இழுத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போன்று அந்தத் தீய ஜனங்களை வெளியே இழுத்துப்போடும்.
அவர்களை வெட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடும்.
4 இந்தப் பூமி இன்னும் எவ்வளவு காலத்திற்கு வறண்டிருக்கும்?
இந்தப் புல் நிலங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காய்ந்து மடிந்திருக்கும்?
இந்தப் பூமியிலுள்ள மிருகங்களும், பறவைகளும், செத்திருக்கின்றன.
இது தீய ஜனங்களின் குற்றமாகும்,
எனினும் அத்தீய ஜனங்கள்,
“எரேமியா நமக்கு நிகழப்போவதைப் பார்க்க நீண்டகாலம் உயிர்வாழமாட்டான்”
என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எரேமியாவிற்கு தேவனுடைய பதில்
5 “எரேமியா! நீ மனிதர்களோடும் ஓடும் பந்தயத்திலேயே சோர்வடைந்துவிட்டால்,
குதிரைகளோடு பந்தயத்தில் எப்படி ஓடுவாய்?
பாதுகாப்பான இடங்களிலேயே நீ சோர்வடைந்துவிட்டால்,
ஆபத்தான இடங்களில் நீ என்ன செய்யப்போகிறாய்?
யோர்தான் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள
முட்புதர்களின் மத்தியில் நீ என்ன செய்யப் போகிறாய்?
6 இந்த மனிதர்கள் உனது சொந்தச் சகோதரர்கள்.
உனது சொந்தக் குடும்பத்து உறுப்பினர்களே உனக்கு எதிராகத் திட்டங்களைப் போடுகிறார்கள்.
உனது சொந்தக் குடும்பத்து ஜனங்களே உனக்கெதிராய் கூச்சல் போடுகிறார்கள்.
அவர்கள் நண்பர்களைபோன்று
பேசினாலும் கூட நம்பாதே.”
கர்த்தர் தமது ஜனங்களான யூதாவை ஏற்க மறுக்கிறார்
7 “நான் (கர்த்தர்) எனது வீட்டைத் தள்ளிவிட்டிருக்கிறேன்.
நான் எனது சொந்த சொத்தை விட்டுவிட்டேன்.
நான் நேசம் வைத்த ஒன்றை (யூதா) அவளின் பகைவர்களிடமே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
8 ஒரு காட்டுச் சிங்கத்தைப்போன்று, எனது சொந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் என்மீது கெர்ச்சிக்கிறார்கள்.
எனவே நான் அவர்களிடமிருந்து திரும்பி வந்துவிட்டேன்.
9 எனது சொந்த ஜனங்கள், கருடகழுகுகளின் நடுவிலே சூழப்பட்ட,
மரிக்கிற மிருகத்தைப் போல ஆனார்கள்.
அப்பறவைகள் அவனைச் சுற்றி பறக்கின்றன.
காட்டு மிருகங்களே வாருங்கள்.
நீங்கள் உண்பதற்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.
10 பல மேய்ப்பர்கள் (தலைவர்கள்) எனது திராட்சைத் தோட்டங்களை அழித்திருக்கின்றனர்.
அந்த மேய்ப்பர்கள் எனது வயல்களில் அந்தச் செடிகளின் மேல் நடந்திருந்தார்கள்:
அந்த மேய்ப்பர்கள் எனது அழகிய வயலை வெறுமையான வனாந்தரமாக ஆக்கிவிட்டனர்.
11 அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள்.
இது காய்ந்து செத்துப்போனது.
எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை.
நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று.
அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை.
12 வனாந்தரத்தின் பசுஞ்சோலையைக் கொள்ளையடிக்க சிப்பாய்கள் வந்தனர்.
தேசத்தைத் தண்டிக்கும்படி கர்த்தர் அந்தப் படைகளை பயன்படுத்தினார்.
தேசத்தின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர்.
ஒருவனும் பத்திரமாக இருக்கவில்லை.
13 ஜனங்கள் கோதுமையை விதைப்பார்கள்.
ஆனால் அவர்கள் முட்களையே அறுவடை செய்வார்கள்.
அவர்கள் களைத்து போகிறவரை கடுமையாக உழைப்பார்கள்.
ஆனால் அவர்கள் தமது வேலைக்காக எதையும் பெறமாட்டார்கள்.
அவர்கள் தங்கள் விளைச்சலுக்காக வெட்கப்படுவார்கள்.
கர்த்தருடைய கோபம் அவற்றுக்குக் காரணமாயிற்று.”
இஸ்ரவேலர்களின் அயலார்களுக்கு கர்த்தருடைய வாக்குறுதி
14 இதுதான் கர்த்தர் சொன்னது: “இஸ்ரவேல் நாட்டைச்சுற்றி வாழும் அனைத்து ஜனங்களுக்கும் நான் என்ன செய்வேன் என்பதை நான் சொல்வேன். அந்த ஜனங்கள் மிகவும் கெட்டவர்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த பூமியை அவர்கள் அழித்திருக்கின்றனர். நான் அந்தத் தீய ஜனங்களை இழுத்து, அவர்களின் நாட்டுக்கு வெளியே போடுவேன்; நான் யூதா ஜனங்களையும் அவர்களோடு இழுப்பேன். 15 ஆனால் அந்த ஜனங்களை நான் அவர்களின் நாடுகளிலிருந்து வெளியே இழுத்தப்பிறகு நான் அவர்களுக்காக வருத்தப்படுவேன். நான் ஒவ்வொரு குடும்பத்தையும் அவர்களின் சொந்த சொத்துக்கும் பூமிக்கும் திரும்பக் கொண்டுவருவேன். 16 அந்த ஜனங்கள், என் ஜனங்களின் வழிகளை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன், கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் எனது ஜனங்களுக்கு, வாக்குறுதிச் செய்வதற்குப் பாகாலின் பெயரைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது, அந்த ஜனங்கள் தங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அந்த ஜனங்கள் என் பெயரைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த ஜனங்கள் ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு’ ஆணையிட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த ஜனங்கள் இதனைச் செய்தால், நான் அவர்களை வெற்றிபெற அனுமதிப்பேன். அவர்கள் என் ஜனங்களோடு வாழவிடுவேன்.
கிறிஸ்துவே முக்கியமானவர்
3 இப்போதும் என் சகோதர சகோதரிகளே! கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள். அவற்றையே மீண்டும் எழுதுவதில் எனக்கு எவ்விதமான தொந்தரவும் இல்லை. ஆனால் இது நீங்கள் ஆயத்தமாக இருக்க உதவியாக இருக்கும்.
2 பாவம் செய்கிற மக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் நீங்கள் விருத்தசேதனம் செய்யும்படி பலவந்தப்படுத்துவார்கள். 3 ஆனால் உண்மையில் நாம் விருத்தசேதனம் உள்ளவர்கள். நாம் தேவனை அவரது ஆவியின் மூலம் வழிபட்டு வருகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்பதில் பெருமைப்படுகிறோம். நம் மீதோ, நமது செயல்களின் மீதோ நாம் நம்பிக்கை வைப்பதில்லை. 4 என் மீது நான் நம்பிக்கை வைக்க முடியும் என்றாலும் நான் நம்பிக்கை வைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்கக் காரணம் இருக்கும் என்று கருதினால், எனக்கும் என் மீது நம்பிக்கை வைக்க நிறைய காரணங்கள் உள்ளன. 5 நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன். 6 நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.
7 ஒரு காலத்தில் எனக்கு இவை முக்கியமாய்த் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னால் அவை பயனற்றுப் போய்விட்டன. 8 அவை மட்டுமல்ல எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன். 9 இதனால்தான் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் நான் தேவனுக்கு வேண்டியவனாகிறேன். நான் சட்டங்களைப் பின்பற்றியதால் இப்பேறு பெறவில்லை. தேவனிடமிருந்து விசுவாசத்தின் மூலம் இது எனக்கு வந்தது. நான் கிறிஸ்துவிடம் கொண்ட விசுவாசத்தைப் பயன்படுத்தி தேவன் தனக்கு ஏற்றவனாகச் செய்துகொண்டார். 10 அவரையும் அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவரது துன்பத்தில் பங்குகொள்ளவும் மரணத்தில் அவரைப் போல் ஆகவும் விரும்புகிறேன். 11 அவற்றை நான் பெறுவேனேயானால் பிறகு மரணத்தில் இருந்தும் உயிர்த்தெழுந்து வருவேன் என்ற நம்பிக்கை பெறுவேன்.
குறிக்கோளை எட்டுவதற்கான முயற்சி
12 நான் எப்படி இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அப்படி நான் ஏற்கெனவே இருக்கிறேன் என்று எண்ணவில்லை. நான் இன்று வரை கூட எனக்காக கிறிஸ்துவால் ஆக்கப்பட்ட அந்த குறிக்கோளை அடையவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். 13 சகோதர சகோதரிகளே! இன்னும் அந்த இலக்கை நான் அடையவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் எப்பொமுதும் நான் ஒன்றை மட்டும் செய்து வருகிறேன். அதாவது கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன். 14 குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்.
லாசருவுக்கு எதிரான சதி
9 யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன். 10 ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள். 11 ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர்.
எருசலேமில் இயேசு
(மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11; லூக்கா 19:28-40)
12 மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள். 13 அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்:
“‘அவரைப் புகழ்வோம்! வருக!’
‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’(A)
“தேவன் இஸ்ரவேலின் ராஜாவை ஆசீர்வதிப்பாராக!”
என்று முழங்கினர்.
14 இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.
15 “சீயோன்[a] நகரமே அஞ்சவேண்டாம். பார்.
உன் ராஜா வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்”(B)
என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர்.
16 இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர்.
17 மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர். 18 இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர். 19 அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center