Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 24

தாவீதின் பாடல்.

24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
    உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
    ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.

கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
    கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
    யார் அங்கு வழிபட முடியும்?
தீயவை செய்யாத ஜனங்களும்,
    பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
    பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.

நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
    அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
    யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
    மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
யார் இந்த மகிமைமிக்க ராஜா?
    கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
    கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
    பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
    மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
    சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
    அவரே மகிமை மிக்க ராஜா.

சங்கீதம் 29

தாவீதின் பாடல்.

29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
    உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
    மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
    அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
    லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
    இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
    இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
    கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
    கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.

10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
    என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
    கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.

சங்கீதம் 103

தாவீதின் ஒரு பாடல்.

103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
    அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
    அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
    அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.

கர்த்தர் நியாயமானவர்.
    பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
    அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
    தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
    கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
    ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
    அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
    அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
    கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
    நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.

15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
    நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
    அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
    பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
    என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
    தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
    அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.

19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
    அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
    தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
    நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
    நீங்கள் அவரது பணியாட்கள்.
    தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
    எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
    அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.

என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

சகரியா 9:9-12

வருங்கால ராஜா

சீயோன் நகரமே, மகிழ்ச்சியாயிரு.
    எருசலேம் ஜனங்களே, மகிழ்ச்சியோடு கூவுங்கள்.
பார், உனது ராஜா உன்னிடம் வருகிறார்.
    அவர் நல்லவர், வெற்றிபெற்ற ராஜா.
    ஆனால் அவர் பணிவுள்ளவர்.
    அவர் கழுதை மேல் வந்துக்கொண்டிருக்கிறார்.
    இது வேலை செய்யக்கூடிய கழுதைக்கு பிறந்த இளங்கழுதை.
10 ராஜா கூறுகிறார்: “நான் எப்பிராயீமின் இரதங்களை அழித்தேன்.
    எருசலேமின் குதிரைவீரர்களை அழித்தேன்.
    நான் போரில் பயன்படும் வில்களை அழித்தேன்.”

அவ்வரசன் சமாதனத்தின் செய்தியை நாடுகளுக்கு அறிவிப்பான்.
    அவன் கடல் விட்டு கடலையும் ஐபிராத்து நதி தொடங்கி
    பூமியிலுள்ள தொலைதூர இடங்களையும் ஆள்வான்.

கர்த்தர் தனது ஜனங்களைப் காப்பாற்றுவார்

11 எருசலேமே, உனது உடன்படிக்கையை நாம் இரத்தத்தால் முத்தரித்தோம்.
    எனவே நான் தரையில் துவாரங்களில் அடைப்பட்ட ஜனங்களை விடுதலை பண்ணுவேன்.
12 கைதிகளே, வீட்டிற்குப் போங்கள்.
    இப்பொழுது நீங்கள் நம்பிக்கைக்கொள்ள இடமுண்டு.
நான் திரும்பி உங்களிடம் வருவேன்
    என்று இப்பொழுது சொல்கிறேன்.

சகரியா 12:9-11

கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில், எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும் நாடுகளை நான் அழிப்பேன். 10 நான் எருசலேமில் உள்ள தாவீதின் குடும்பத்தாரையும் மற்ற ஜனங்களையும் கருணையின் ஆவியாலும், இரக்கத்தின் ஆவியாலும் நிரப்புவேன். அவர்கள் தாங்கள் குத்தின ஒருவரான என்னைப் பார்ப்பார்கள். அவர்கள் மிகவும் துக்கமாக இருப்பார்கள். அவர்கள், ஒருவன் தன் ஒரே குமாரனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும், ஒருவன் தன் மூத்த குமாரனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும் துக்கம் கொள்வார்கள். 11 எருசலேமில் பெருந்துக்கத்துக்கும், அழுகைக்கும் உரியகாலம் இருக்கும். இது மெகிதோன் பட்டணத்து பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத் ரிம்மோனின் புலம்பலைப் போன்றிருக்கும்.

சகரியா 13:1

13 ஆனால் அந்நேரத்தில், தாவீதின் குடும்பத்தாருக்கும், எருசலேமின் குடிமக்களுக்கும் ஒரு புதிய நீரூற்று திறக்கப்படும். அந்த ஊற்று அவர்களின் பாவத்தைக் கழுவி அந்த ஜனங்களைச் சுத்தப்படுத்தும்.

சகரியா 13:7-9

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “வாளே, மேய்ப்பனைத் தாக்கு. என் நண்பனைத் தாக்கும் மேய்ப்பனைத் தாக்கு. அந்த மந்தை ஓடிச் செல்லும். நான் அந்தச் சிறியவர்களையும் தண்டிப்பேன். இந்த நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் காயப்பட்டு மரிப்பார்கள். ஆனால் மூன்றில் ஒரு பங்கினர் பிழைப்பார்கள். பின்னர் நான் மீதியானவர்களைச் சோதிப்பேன். நான் அவர்களுக்கு அநேக துன்பங்களைக் கொடுப்பேன். அத்துன்பங்கள் வெள்ளியைச் சுத்தமான வெள்ளி என்று நிரூபிக்கும் நெருப்பைப் போன்றிருக்கும். ஒருவன் தங்கத்தைச் சோதிப்பது போல நான் அவர்களைச் சோதிப்பேன். பின்னர், அவர்கள் என்னை உதவிக்காக வேண்டுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலுரைப்பேன். நான், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன். அவர்கள், ‘கர்த்தர் எங்கள் தேவன்’” என்பார்கள்.

1 தீமோத்தேயு 6:12-16

12 விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய். 13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.

மத்தேயு 21:12-17

இயேசு ஆலயத்திற்குள் செல்லுதல்

(மாற்கு 11:15-19; லூக்கா 19:45-48; யோவான் 2:13-22)

12 இயேசு ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பொருட்களை விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டுமிருந்த அனைவரையும் வெளியேற்றினார். பலவகையான நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களின் மேஜைகளைக் கவிழ்த்தார். புறாக்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் மேஜைகளையும் கவிழ்த்தார். 13 அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் இயேசு, “ஏற்கெனவே வேத வாக்கியங்களில் ‘பிரார்த்தனை செய்வதற்கான இடம் என்னுடைய வீடு!’(A) என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய வீட்டைக் கொள்ளைக்காரர்கள் பதுங்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்”(B) என்று கூறினார்.

14 சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். 15 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன.

16 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம், “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள்.

இயேசு அவர்களிடம், “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே (தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார்.

17 பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center