Book of Common Prayer
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்.
31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
2 தேவனே, எனக்குச் செவிகொடும்.
விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
3 தேவனே, நீரே என் பாறை.
எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
6 பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன்.
7 தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது.
நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர்.
என் தொல்லைகளை நீர் அறிகிறீர்.
8 எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர்.
அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும்.
9 கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும்.
என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன.
என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன.
10 என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது.
பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது.
என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன.
என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது.
11 என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என் அக்கம் பக்கத்தாரும் என்னை வெறுக்கிறார்கள்.
என் உறவினர்கள் தெருவில் என்னைப் பார்க்கிறார்கள்.
அவர்கள் எனக்குப் பயந்து என்னை விட்டு விலகுகிறார்கள்.
12 காணாமற்போன கருவியைப் போலானேன்.
ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள்.
13 ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன்.
அந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
14 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
நீரே என் தேவன்.
15 என் உயிர் உமது கைகளில் உள்ளது.
என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.
என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்!
17 கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன்.
எனவே நான் ஏமாந்து போகமாட்டேன்.
தீயோர் ஏமாந்து போவார்கள்.
அமைதியாக கல்லறைக்குச் செல்வார்கள்.
18 அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள்.
அத்தீயோர் பெருமைக்காரர்.
ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும்.
19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.
உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.
அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள்.
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும்.
உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும்.
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.
ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.
23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.
தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார்.
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார்.
அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,
வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!
தாவீதின் பாடல்.
35 கர்த்தாவே, என் யுத்தங்களையும்
என் போர்களையும் நீரே நடத்தும்.
2 கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும்.
எழுந்திருந்து எனக்கு உதவும்.
3 ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும்.
கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும்.
4 சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும்.
அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள்.
அவர்களை வெட்கமடையச் செய்யும்.
5 காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும்.
கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
6 கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும்.
கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
7 நான் பிழையேதும் செய்யவில்லை.
ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
8 எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும்.
அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும்.
அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.
9 அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன்.
அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
10 “கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை.
கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர்.
ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து
அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன்.
11 சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர்.
அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
12 நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன்.
ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர்.
கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும்.
13 அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன்.
உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன்.
அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா?
14 அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன்.
அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன்.
தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன்.
அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன்.
துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன்.
15 ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர்.
அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல.
ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை.
அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள்.
16 அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள்.
அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
17 என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்?
அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள்.
கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும்.
18 கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன்.
வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன்.
19 பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது.
தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள்.
20 என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை.
இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள்.
21 என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா!
நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள்.
22 கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும்.
எனவே சும்மா இராதேயும்.
என்னை விட்டு விலகாதேயும்.
23 கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும்.
என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும்.
24 எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும்.
அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும்.
25 அந்த ஜனங்கள், “ஆஹா!
எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும்.
கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!”
என அவர்கள் கூறவிடாதேயும்.
26 என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன்.
எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள்.
எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும்.
27 எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள்.
அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன்.
அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்!
அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள்.
28 எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன்.
ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.
நல்ல அத்திகளும் கெட்ட அத்திகளும்
24 கர்த்தர் என்னிடம் இவற்றைக் காட்டினார்: கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பு இரண்டு கூடைகள் நிறைய அத்திப்பழங்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். (பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சர் எகொனியாவைச் சிறைபிடித்துச் சென்றபின் இக்காட்சியைக் கண்டேன். எகொனியா, யோகாக்கீம் ராஜாவின் குமாரனாவான். எருசலேமிலிருந்து எகொனியாவையும் அவனது அதிகாரிகளையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நேபுகாத்நேச்சார் யூதாவிலுள்ள அனைத்து தச்சர்களையும் கொல்லர்களையும் கொண்டு சென்றான்.) 2 ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அந்த அத்திப் பழங்கள் பருவத்தின் முதலில் பறித்த நல்லப் பழங்களாய் இருந்தன. ஆனால், அடுத்தக் கூடையில் அழுகிய பழங்கள் இருந்தன. அவை உண்ண முடியாத அளவிற்கு மிகவும் அழுகியதாக இருந்தன.
3 கர்த்தர் என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய், எரேமியா?” என்று கேட்டார்.
நான், “நான் அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். நல்லப் பழங்கள் மிகவும் நன்றாக உள்ளன. அழுகிய பழங்கள் மிகவும் அழுகியதாக உள்ளன. அவை உண்ண முடியாத அளவிற்கு அழுகியுள்ளன” என்று பதில் சொன்னேன்.
4 பிறகு, கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது. 5 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறினார், “யூதாவின் ஜனங்கள் அவர்களின் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பகைவர்கள் அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்தனர். அந்த ஜனங்கள் இந்த நல்ல அத்திப்பழங்களைப் போன்றவர்கள். நான் அந்த ஜனங்களிடம் இரக்கத்துடன் இருப்பேன். 6 நான் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களை யூதா நாட்டிற்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கிழித்துப் போடமாட்டேன். நான் அவர்களைக் கட்டுவேன். நான் அவர்களை பிடுங்கமாட்டேன். நான் அவர்களை நட்டுவைப்பேன். அதனால் அவர்கள் வளர முடியும். 7 நான் அவர்களை என்னை அறிந்துக்கொள்ள விரும்புமாறு செய்வேன். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், பாபிலோனில் உள்ள அதிகாரிகள் தம் முழு மனதோடு என்னிடம் திரும்புவார்கள்.”
8 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா உண்ண முடியாத அளவிற்கு அழுகிப்போன அத்திப்பழங்களைப் போன்றவன். சிதேக்கியா, அவனது உயர் அதிகாரிகள் எருசலேமில் விடப்பட்ட ஜனங்கள் மற்றும் எகிப்தில் வாழும் யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் அழுகிய அத்திப்பழங்களைப் போன்றவர்கள். 9 நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அது அதிர்ச்சிப்படுத்தும். யூதாவிலிருந்து வந்த ஜனங்களை மற்ற ஜனங்கள் பரிகாசம் செய்வார்கள். நான் சிதறடித்த அவர்களை, எல்லா இடங்களிலும் ஜனங்கள் சபிப்பார்கள். 10 நான் அவர்களுக்கு எதிராக வாள், பசி, நோய் ஆகியவற்றை அனுப்புவேன். நான், அவர்கள் அனைவரும் அழிக்கப்படும்வரை தாக்குவேன். நான் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டில் அவர்கள் என்றும் இல்லாமல் போவார்கள்.”
19 “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். 20 அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? 21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.
22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். 23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். 24 நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.
25 “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும்
‘என் மக்களே’ என்றும்,
நேசிக்கப்படாது இருந்தவர்களையும்,
‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’
என்று நான் அழைப்பேன்.(A)
26 “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று
அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்”(B)
என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
27 ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார்.
“இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது.
எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள்.
28 ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.”(C)
29 “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு.
எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார்.
அவர் அதனைச் செய்திருக்காவிட்டால்
இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்.”(D)
என்று ஏசாயா சொன்னார்.
30 இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை. எனினும் நீதிமான்களாக ஆனார்கள். காரணம் அவர்களது விசுவாசமே. 31 ஆனால் இஸ்ரவேல் மக்கள் சட்டவிதிகளின்படி வாழ்ந்து தேவனுக்கேற்ற நீதிமான்களாக விரும்பினார்கள். ஆனால் அவர்கள் வெல்லவில்லை. 32 காரணம் அவர்கள் அதனை தேவனில் நம்பிக்கை வைக்காமல், தங்கள் செயல்கள் மூலம் தேடினர். தடுக்கி விழத்தக்க கல்லிலேயே தடுக்கி விழுந்தார்கள். 33 அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.
“பாருங்கள்! நான் கல்லை சீயோனில் வைத்திருக்கிறேன்.
அது மக்களைத் தடுக்கி விழச் செய்யும்.
அந்தப் பாறை மக்களைத் தடுமாறி விழ அனுமதிக்கும்.
ஆனால் அக்கல்லிடம் நம்பிக்கைக்கொண்ட எவனும் அவமானம் அடைவதில்லை.”(E)
பிறவிக் குருடனைக் குணமாக்குதல்
9 இயேசு நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு குருடனைப் பார்த்தார். அவன் பிறந்தது முதல் குருடனாக இருந்தான். 2 இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “போதகரே! இந்த மனிதன் குருடனாகப் பிறந்தான். யார் செய்த பாவம் இவனைக் குருடனாக்கியது? அது இவனது பாவமா? அல்லது இவனது பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டனர்.
3 இயேசு அவர்களிடம், “இவனது பாவமோ, இவனது பெற்றோரின் பாவமோ இவனைக் குருடன் ஆக்கவில்லை. நான் இவனைக் குணப்படுத்தும்போது தேவனின் வல்லமை இவன் மூலமாக வெளிப்படும்படியாக இவன் குருடனாகப் பிறந்தான். 4 பகலாக இருக்கும்போது மட்டும்தான் என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டும். இரவு வந்துகொண்டிருக்கிறது. எவராலும் இரவில் வேலை செய்யமுடியாது. 5 நான் உலகத்தில் இருக்கும்வரை உலகத்துக்கு நானே ஒளியாக இருக்கிறேன்” என்றார்.
6 இயேசு இவற்றைச் சொன்ன பிறகு, அவர் புழுதியில் துப்பினார். அதில் சேறு உண்டாக்கினார். அதனை அவனது கண்களின் மேல் பூசினார். 7 இயேசு அவனிடம், “போ, சீலோவாம் குளத்தில் (சீலோவாம் என்றால் ‘அனுப்பப்பட்டவன்’ என்று பொருள்) கழுவு” என்றார். அதன்படியே அந்த மனிதன் குளத்திற்குச் சென்றான். அவன் கழுவிவிட்டுத் திரும்பி வந்தான். இப்பொழுது பார்வை பெற்றிருந்தான்.
8 இவன் இதற்கு முன்னால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததைப் பலர் பார்த்திருந்தனர். அவர்களும் அவனது சுற்றத்தார்களும், “பாருங்கள்! இவன் அங்கே உட்கார்ந்து எப்பொழுதும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அதே மனிதனல்லவா?” என்றனர்.
9 இன்னும் சிலர், “ஆம். இவன்தான் அவன்”, என்றனர். ஆனால் இன்னும் சிலர், “இல்லை. இவன் அவன் இல்லை. இவன் அவனைப்போன்றே இருக்கிறான்” என்றனர்.
அப்போது அவன் தானாகவே, “முன்பு குருட்டுப் பிச்சைக்காரனாக இருந்தவன் நான்தான்” என்றான்.
10 “என்ன நடந்தது? நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டனர்.
11 அதற்கு அவன், “இயேசு என்று மக்களால் அழைக்கப்படுகிற அந்த மனிதர் ஏதோ சேறு உண்டாக்கினார். அதனை என் கண்களின்மீது தடவினார். பிறகு அவர் என்னிடம் சீலோவாம் குளத்தில் போய் கழுவச் சொன்னார். ஆகையால் நான் போய் கழுவினேன். பின்னர் என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.
12 அந்த மனிதனிடம் மக்கள், “எங்கே அந்த மனிதர்?”
என்று கேட்டனர். அதற்கு அந்த மனிதன் “எனக்குத் தெரியாது” என்று கூறினான்.
இயேசு குணமாக்கிய மனிதனிடம் யூதர்களின் விசாரணை
13 பிறகு மக்கள் பரிசேயரிடம் அந்த மனிதனை அழைத்துச்சென்றனர். குருடாயிருந்த அந்த மனிதன் இவன்தான். 14 இயேசு சேறு உண்டாக்கி இவனது கண்களைக் குணப்படுத்தினார். அவர் இதனை ஓய்வு நாளில் செய்திருக்கிறார். 15 ஆகையால் இப்பொழுது பரிசேயர்கள் அந்த மனிதனிடம், “எப்படி நீ பார்வை பெற்றாய்?” என மீண்டும் கேட்டனர். அதற்கு அந்த மனிதன், “அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார். நான் கழுவினேன். இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது” என்றான்.
16 சில பரிசேயர்கள், “அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை” என்றனர்.
ஆனால் சிலரோ, “பாவம் செய்கிற எந்த மனிதராலும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே” என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப்போகவில்லை.
17 யூதர்கள் குருடனாயிருந்த அந்த மனிதனிடம் மீண்டும் கேட்டார்கள். “இயேசு உன்னைக் குணமாக்கினான். உன்னால் பார்க்க முடிகிறது. அவனைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்?”
அந்த மனிதன் “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்றான்.
2008 by World Bible Translation Center