Book of Common Prayer
97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
2 அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
3 கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
அது பகைவரை அழிக்கிறது.
4 வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
5 கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
6 வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!
7 ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
8 சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
9 மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் ராஜா.
பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!
99 கர்த்தர் ராஜா.
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
நன்றி கூறும் பாடல்.
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
94 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
2 நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
3 கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
6 அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
7 அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
8 தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்?
கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்!
நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
9 தேவன் நமது காதுகளை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்!
தேவன் நமது கண்களை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.
16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.
20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார்.
எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார்.
95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
2 கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
3 ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
4 ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
5 சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
6 வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
7 அவரே நமது தேவன்!
நாம் அவரது ஜனங்கள்.
அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
8 தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
9 உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.
ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தல்
19 கர்த்தர் என்னிடம் இவற்றைச் சொன்னார்: “எரேமியா, யூதாவின் ராஜாக்கள் வந்துபோகிற எருசலேமின் ஜனங்கள் வாசலுக்குப்போய் நில். எனது வார்த்தையை ஜனங்களிடம் கூறு. பிறகு எருசலேமின் மற்ற வாசல்களுக்கும் போ. அதே செயலைச் செய்.”
20 அந்த ஜனங்களிடம் சொல்: “கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள்! யூதாவின் ராஜாக்களே, கேளுங்கள்! யூதாவின் ஜனங்களே, கேளுங்கள்! இந்த வாசல்கள் வழியாக எருசலேமிற்குள் வருகின்ற ஜனங்களே, என்னை கவனியுங்கள்! 21 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: ‘ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிச் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் வழியாகச் சுமையைத் தூக்கிவராதீர்கள். 22 ஓய்வுநாளில் உங்கள் வீட்டுக்கு வெளியே சுமையைத் தூக்கி வராதீர்கள். அந்த நாளில் எந்த வேலையும் செய்யாதீர்கள். நீங்கள் ஓய்வுநாளை ஒரு பரிசுத்த நாளாக்க வேண்டும். நான் இதே கட்டளையை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்தேன். 23 ஆனால் உங்கள் முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் என் மீது கவனம் செலுத்தவில்லை. உங்கள் முற்பிதாக்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். நான் அவர்களைத் தண்டித்தேன். ஆனால் அது அவர்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. அவர்கள் என்னை கவனிக்கவில்லை. 24 ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. ஓய்வு நாளில் நீங்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக சுமையைக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக்க வேண்டும். அந்நாளில் எவ்வித வேலையும் செய்யாமல் இருப்பதே ஓய்வுநாளை பரிசுத்தமான நாளாக வைப்பதாகும்.
25 “‘நீங்கள் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்தால், பிறகு தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ராஜாக்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள் இரதங்களின் மீதும் குதிரைகள் மீதும் வருவார்கள். அந்த ராஜாக்களோடு யூதாவின் மற்றும் எருசலேமின் தலைவர்கள் இருப்பார்கள். எருசலேம் நகரம் என்றென்றும் ஜனங்கள் வாழும் இடமாகும்! 26 யூதாவின் நகரங்களில் இருந்து ஜனங்கள் எருசலேமிற்கு வருவார்கள். எருசலேமிற்கு அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்கள் வாழும் நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். மேற்கு மலை அடிவாரங்களிலிருந்தும், மலை நாடுகளிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். நெகேவிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். அந்த ஜனங்கள் எல்லோரும் தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும், ஸ்தோத்திர பலிகளையும் கொண்டு வருவார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு அவர்கள் இந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டு வருவார்கள்.
27 “‘ஆனால், நீங்கள் என்னை கவனிக்காமலும் அடிபணியாமலும் இருந்தால் பிறகு தீயவை நிகழும். ஓய்வுநாளில் நீங்கள் எருசலேமிற்குள் சுமைகளைக் கொண்டு வந்தால் பின் நீங்கள் அந்நாளைப் பரிசுத்தப்படுத்தவில்லை. எனவே, உங்களால் அணைக்க முடியாத ஒரு தீயை பற்றவைப்பேன். எருசலேமின் வாசலிலிருந்து அந்த நெருப்பு தொடங்கும். அது அரண்மனைகள்வரை பற்றி எரியும்.’”
13 அதனால் நன்மையானது எனக்கு இறப்புக்குரியதாயிற்றா? இல்லை. ஆனால் பாவமானது அந்நன்மையையும் தீமையாக்கி எனக்கு மரணத்தைக் கொண்டு வந்துவிட்டது. இதனால் பாவத்தின் இயல்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம் மிக மிகக் கொடுமையானதாகக் காட்டப்பட்டது. இதற்குப் பிரமாணமே பயன்பட்டது.
மனிதனுக்குள் முரண்பாடு
14 சட்டவிதி ஆவிக்குரியது என நாம் அறிகிறோம். ஆனால் நான் அல்ல. ஒரு அடிமையின் மேல் ஆட்சி செலுத்துவதைப்போல பாவம் என்னை ஆளுகிறது. 15 நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். 16 நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும். 17 உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. 18 என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. 19 எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன். 20 அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.
21 அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். 22 என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 23 ஆனால் வேறொரு விதியும் என் சரீரத்திற்குள் இயங்குவதை அறிகிறேன். என் மனம் ஒத்துக்கொள்ளும் விதிக்கு எதிராக அது ஒரு போரையே நிகழ்த்துகிறது. அதுதான் பாவம் பற்றிய விதி ஆகும். அது என் உடலை அடக்கி, அதன் கைதியாக்கிக்கொள்கின்றது. 24 நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? 25 தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.
ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.
இயேசு தண்ணீர் மீது நடத்தல்
(மத்தேயு 14:22-27; மாற்கு 6:45-52)
16 அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர். 17 அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர். 18 காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன. 19 அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். 20 “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். 21 இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.
மக்கள் இயேசுவைத் தேடுதல்
22 மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். 23 அப்போது திபேரியாவிலிருந்து சில படகுகள் வந்தன. அப்படகுகள், கர்த்தர் நன்றி சொன்னதற்குப் பின் மக்கள் உணவு உண்ட இடத்தின் அருகில் நின்றன. 24 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.
ஜீவ அப்பமான இயேசு
25 கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர்.
26 “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். 27 பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center