Book of Common Prayer
தாவீதின் பாடல்.
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க ராஜா?
கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
அவரே மகிமை மிக்க ராஜா.
தாவீதின் பாடல்.
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் ராஜாவாயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே ராஜா.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்.
8 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
2 பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
4 ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
5 ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
6 நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
7 ஆடுகள், பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
8 வானத்துப் பறவைகளையும்
சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது!
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
9 தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
1 இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் குமாரன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது. 2 கர்த்தர், யூதா நாட்டின் ராஜாவாக யோசியா இருந்தபோது அந்நாட்களில் எரேமியாவுடன் பேசத்தொடங்கினார். யோசியா, ஆமோன் என்ற பெயருடைய மனிதரின் குமாரனாகும். கர்த்தர், யோசியாவின் ஆட்சியில் 13வது ஆண்டில்[a] எரேமியாவுடன் பேச ஆரம்பித்தார். 3 யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் குமாரன், யூதாவின் ராஜாவாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் குமாரனாக இருந்தான். சிதேக்கியா ராஜாவாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர்.
தேவன் எரேமியாவை அழைக்கிறார்
4 கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,
5 “உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே
நான் உன்னை அறிவேன்.
நீ பிறப்பதற்கு முன்பு
உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
6 பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான்.
7 ஆனால் கர்த்தர் என்னிடம்,
“‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே.
நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார்.
8 “எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
9 பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம்,
“எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன்.
10 இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன்.
நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும்,
அழிக்கவும், கவிழ்க்கவும்,
கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.
11 அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். 12 பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும். 13 ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும். 14 அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். 15 ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.
16 நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார். 17 தேவனுடைய ஆலயத்தை அழிக்கும் ஒருவனை தேவன் அழிப்பார். ஏன்? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீங்கள் தேவனுடைய ஆலயமாவீர்கள்.
18 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான். 19 ஏன்? ஏனெனில் இந்த உலகத்து ஞானத்தை தேவன் மடமையானதாகவே கருதுகிறார். அது வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. “அவர் ஞானிகள் தங்கள் தந்திர வழிகளைப் பயன்படுத்துகையில் அவர்களை மடக்கிப் பிடிக்கிறார்”(A) என்று எழுதப்பட்டிருக்கிறது. 20 தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார்.(B) 21 எனவே, நீங்கள் மனிதரைப்பற்றி பெருமைப் பாராட்டாதீர்கள். எல்லாப் பொருள்களும் உங்களுக்கு உரியனவே. 22 பவுல், அப்பொல்லோ, கேபா, உலகம், வாழ்வு, மரணம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாம் உங்களுடையவையே. 23 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து தேவனுக்கு உரியவர்.
இயேசுவின் உண்மை உறவினர்கள்
(மத்தேயு 12:46-50; லூக்கா 8:19-21)
31 பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். 32 இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான்.
33 இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். 34 பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். 35 தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
உழவன்-விதை பற்றிய உவமை
(மத்தேயு 13:1-9; லூக்கா 8:4-8)
4 இயேசு மறுபடியும் கடற்கரையோரத்தில் போதிக்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆகையால் இயேசு படகில் ஏறி ஏரிக்குள் சென்றார். எல்லா மக்களும் ஏரிக்கரையில் நின்றுகொண்டனர். 2 இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார்.
3 அவர் சொன்னார், “கேளுங்கள், ஓர் உழவன் தன் விதையை விதைக்கச் சென்றான். 4 உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. 5 சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன. 6 ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை. 7 சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. விதைகள் அவற்றில் நன்றாக வளர ஆரம்பித்தன. அவை வளர்ந்து பலன் தர ஆரம்பித்தது. சில செடிகள் முப்பது தானியங்களையும், சில அறுபது தானியங்களையும், சில நூறு தானியங்களையும் தந்தன,”
9 பிறகு இயேசு, “நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும்” என்றார்.
2008 by World Bible Translation Center