Book of Common Prayer
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ராஜாவை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த ராஜா உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
2 நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
4 தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
5 வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
6 தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
7 ராஜா கர்த்தரை நம்புகிறான்.
உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
8 தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
9 கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.
110 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
2 உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
பிற நாடுகளிலும் நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
3 நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது,
உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்.
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.
4 கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”
5 என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
அவர் கோபமடையும்போது மற்ற ராஜாக்களைத் தோற்கடிப்பார்.
6 தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
7 வழியின் நீரூற்றில் ராஜா தண்ணீரை பருகுகிறார்.
அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!
116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
நான் நேசிக்கிறேன்.
2 நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
நான் நேசிக்கிறேன்.
3 நான் மரித்தவன் போலானேன்!
மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
நான் அஞ்சிக் கலங்கினேன்.
4 அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.
5 கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
தேவன் தயவுள்ளவர்.
6 கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
7 என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
8 தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
9 நான் உயிருள்ளோரின் தேசத்தில்
தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
10 “நான் அழிந்துபோனேன்!”
என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
11 நான் பயப்பட்டபோதும்
“மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.
12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?
என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
13 அவர் என்னைக் காப்பாற்றினார்.
எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன்.
நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
14 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!
கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
16 நான் உமது பணியாள்.
உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான்.
கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.
நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
18 நான் வாக்குறுதி அளித்தவற்றை கர்த்தருக்குக் கொடுப்பேன்.
நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.
கர்த்தரைத் துதிப்போம்!
117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
2 தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.
கர்த்தரைத் துதிப்போம்!
தேவன் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார்
43 யாக்கோபே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இஸ்ரவேலே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இப்போது கர்த்தர் கூறுகிறார் “அஞ்சாதே! நான் உன்னைக் காப்பாற்றினேன். நான் உனக்குப் பெயரிட்டேன். நீ என்னுடையவன். 2 உனக்குத் தொல்லைகள் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, நீ பாதிக்கப்படமாட்டாய். நீ நெருப்பினூடே நடக்கும்போது, நீ எரிக்கப்படமாட்டாய். நெருப்புச் ஜூவாலைகள் உன்னைப் பாதிக்காது. 3 ஏனென்றால், கர்த்தராகிய நான் உனது தேவன். இஸ்ரவேலின் பரிசுத்தரான நான் உனது மீட்பர். உன்னை மீட்கும் பொருளாக எகிப்தைக் கொடுத்தேன். உன்னை என்னுடையவனாக்க எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுத்தேன். 4 நீ எனக்கு மிகவும் முக்கியமானவன். எனவே, நான் உன்னைப் பெருமைப்படுத்துவேன். நான் உன்னை நேசிக்கிறேன். நான் (உன் ஜீவனுக்குப் பதிலாக) அனைத்து ஜனங்களையும் தேசங்களையும் கொடுப்பேன். எனவே நீ வாழலாம்.”
5 “அஞ்ச வேண்டாம்! நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனது பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை உன்னிடம் அழைத்து வருவேன். நான் அவர்களைக் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஒன்று சேர்ப்பேன். 6 நான் வடக்குக்குச் சொல்வேன், எனது ஜனங்களை எனக்குக் கொடு. தெற்குக்கு நான் சொல்லுவேன், எனது ஜனங்களைச் சிறையில் வைக்காதீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து எனது குமாரர்களையும், குமாரத்திகளையும் என்னிடம் கொண்டு வாருங்கள். 7 எனக்குரிய அனைத்து ஜனங்களையும், என்னிடம் கொண்டு வாருங்கள். எனது நாமத்தை வைத்திருக்கிற ஜனங்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்! அவர்களை நான் எனக்காக படைத்தேன். அவர்களை நான் படைத்தேன். அவர்கள் என்னுடையவர்கள்.”
8 தேவன் கூறுகிறார், கண்களிருந்தும் குருடாக இருக்கிற ஜனங்களை என்னிடம் அழைத்து வா, காதுகளிருந்தும் கேட்காதவர்களை என்னிடம் அழைத்து வா.
9 அனைத்து ஜனங்களும் அனைத்து நாடுகளும் ஒன்றுசேர வேண்டும். அவர்களது பொய்த் தெய்வங்களில் ஒன்று தொடக்கத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லட்டும். அவர்கள் தங்கள் சாட்சிகளை அழைத்து வரட்டும். சாட்சிகள் உண்மையைப் பேச வேண்டும். அவர்கள் சரியானவர்கள் என்பதை இது காட்டும்.
10 கர்த்தர் கூறுகிறார், “நீங்களே எனது சாட்சிகள். நீயே நான் தேர்ந்தெடுத்த தாசன். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, ஜனங்கள் என்னை நம்புவதற்கு நீங்கள் உதவவேண்டும். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, நான்தான் அவர் என்பதையும் நான் உண்மையான தேவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனக்கு முன்பாக வேறு தேவன் இருந்ததில்லை, எனக்குப் பிறகும் வேறு தேவன் இருக்கப்போவதில்லை. 11 நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே! 12 உங்களோடு பேசியவர் நான் ஒருவரே. நான் உங்களைக் காப்பாற்றினேன். நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உங்களோடு இருப்பது வேறு யாரும் அந்நியர் அல்ல. நீங்கள் என்னுடைய சாட்சிகள், நான் தேவன்!” (கர்த்தர் தாமாகவே இதனைச் சொன்னார்). 13 “நான் எப்பொழுதும் தேவனாக இருக்கிறேன். நான் ஏதாவது செய்யும்போது, நான் செய்ததை எவராலும் மாற்றமுடியாது. எனது வல்லமையிலிருந்து எவரும் ஜனங்களைக் காப்பாற்றமுடியாது.”
கிறிஸ்துவின் அன்பு
14 ஆகையால் நான் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறேன். 15 அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும் 16 உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். 17 கிறிஸ்து உங்கள் இதயத்தில் விசுவாசத்தின் மூலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை அன்பால் கட்டப்படவும், அன்பில் வல்லமையாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். 18 நீங்களும் தேவனின் பரிசுத்தமான மக்களும் உயர்ந்த கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும். 19 அவரது அன்பு எவ்வளவு அகலமானது, எவ்வளவு நீளமானது, எவ்வளவு உயரமானது, எவ்வளவு ஆழமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
20 இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர். தேவனின் வல்லமை நமக்குள் உள்ளது. 21 சபையிலே இயேசு கிறிஸ்துவின் மூலமாக எப்போதும் தலைமுறை தலை முறைக்கும் எல்லாக் காலங்களிலும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென்.
யூதர்களின் விமர்சனம்
(மத்தேயு 12:1-8; லூக்கா 6:1-5)
23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.
25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.
27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
சூம்பின கை குணமாக்கப்படுதல்
(மத்தேயு 12:9-14; லூக்கா 6:6-11)
3 மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். 2 இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். 3 இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார்.
4 பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை.
5 இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. 6 பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர்.
2008 by World Bible Translation Center