Book of Common Prayer
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த ராஜாவை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த ராஜா உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
2 நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
4 தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
5 வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
6 தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
7 ராஜா கர்த்தரை நம்புகிறான்.
உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
8 தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
9 கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
தாவீதின் பாடல்.
23 கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார்.
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும்.
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.
தாவீதின் பாடல்.
27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
7 கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
8 கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
9 கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
என்னை விட்டு விடாதிரும்!
என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.
தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்
25 கர்த்தாவே, நீர் எனது தேவன்.
நான் உம்மை கனம்பண்ணி, உமது நாமத்தைத் துதிக்கிறேன்.
நீர் அதிசயமானவற்றை செய்திருக்கிறீர்.
நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் சொன்னவை, அனைத்தும் முழுமையாக உண்மையாகியுள்ளது.
இப்படி இருக்கும் என்று நீர் சொன்ன ஒவ்வொன்றும், சரியாக நீர் சொன்னபடியே ஆயிற்று.
2 நீர் நகரத்தை அழித்திருக்கிறீர். அந்த நகரமானது பலமான சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இப்போது அது மண்மேடாயிற்று.
அயல்நாட்டு அரண்மனை அழிக்கப்பட்டிருக்கிறது.
அது மீண்டும் கட்டப்படமாட்டாது.
3 வல்லமை மிக்க தேசங்களிலுள்ள ஜனங்கள் உம்மை மதிப்பார்கள்.
பலமான நகரங்களில் உள்ள வல்லமையுள்ள ஜனங்கள் உமக்குப் பயப்படுவார்கள்.
4 கர்த்தாவே, நீர் பாதுகாப்புத் தேவைபடுகிற ஏழை ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடம்.
இந்த ஜனங்களைத் தோற்கடிக்க பல பிரச்சனைகள் தொடங்கும்.
ஆனால் நீர் அவர்களைப் பாதுகாப்பீர்.
கர்த்தாவே, நீர் வெள்ளத்திலிருந்தும், வெப்பத்திலிருந்தும் ஜனங்களைக் காப்பாற்றும் வீடுபோல இருக்கிறீர்.
தொல்லைகள் எல்லாம், பயங்கரமான காற்று மற்றும் மழைபோன்று இருக்கும். மழை சுவரைத் தாக்கி கீழே விழச்செய்யும்.
ஆனால் வீட்டிற்குள் உள்ள ஜனங்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
5 பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான்.
பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான்.
ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர்.
கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும்.
அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும்.
அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர்.
தேவன் அவரது ஊழியர்களுக்கு அமைத்த விருந்து
6 அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இந்த மலையில் உள்ள ஜனங்களுக்கு ஒரு விருந்து தருவார். அந்த விருந்தில் சிறந்த உணவும், திராட்சை ரசமும் தரப்படும். மாமிசமானது புதிதாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.
7 ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது. 8 ஆனால் மரணமானது எக்காலத்திற்கும் அழிக்கப்படும். கர்த்தராகிய எனது ஆண்டவர், ஒவ்வொரு முகத்திலும் வடியும் கண்ணீரைத் துடைப்பார். கடந்த காலத்தில், அவரது ஜனங்கள் எல்லாரும் துக்கமாயிருந்தார்கள். ஆனால், பூமியிலிருந்து தேவன் அந்தத் துக்கத்தை எடுத்துவிடுவார். இவையெல்லாம் நிகழும். ஏனென்றால், இவ்வாறு நிகழும் என்று கர்த்தர் கூறினார்.
9 அந்த நேரத்தில், ஜனங்கள்,
“இங்கே எங்கள் தேவன் இருக்கிறார்.
அவர், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒருவர்,
நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார்.
நமது கர்த்தருக்காக நாம் காத்துக்கொண்டிருந்தோம்.
கர்த்தர் நம்மைக் காப்பாற்றும்போது, நாம் கொண்டாடுவோம், மகிழ்ச்சி அடைவோம்.”
9 நான் யோவான், கிறிஸ்துவில் நான் உங்கள் சகோதரன். இயேசுவின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கும், இராஜ்யத்துக்கும், பொறுமைக்கும் நாம் பங்காளிகள். தேவனின் செய்தியைப் போதித்துக்கொண்டிருந்ததற்காகவும், இயேசுவைப் பற்றிய சாட்சியின் நிமித்தமாகவும் பத்மு[a] என்னும் தீவிற்கு நான் நாடுகடத்தப்பட்டேன். 10 கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது. 11 அந்த சத்தம், “நீ பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுது. அதனை ஏழு சபைகளுக்கும் அனுப்பு. அவை ஆசியாவில் உள்ள எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் நகரங்களில் உள்ளன” என்று கூறியது.
12 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன். 13 அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது. 14 அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. 15 அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. 16 அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.
17 நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். 18 நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன. 19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. 20 எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.
விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்
53 [a] யூதத் தலைவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போயினர்.
8 இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார். 2 மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார்.
3 வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். 4 அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். 5 மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர்.
6 யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். 7 யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். 8 பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார்.
9 இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். 10 இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார்.
11 அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள்.
பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார்.
2008 by World Bible Translation Center