Book of Common Prayer
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
61 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
என் ஜெபத்தைக் கேளும்.
2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
6 ராஜாவுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
அவர் என்றென்றும் வாழட்டும்!
7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி
அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
6 தேவனே என் அரண்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
அவர் எனக்குப் பலமான அரண்.
தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
9 மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
2 காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
3 ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
4 தேவனை நோக்கிப் பாடுங்கள்.
அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
அவரது நாமத்தைத் துதியுங்கள்.
5 அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
6 தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
7 தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
8 பூமி அதிர்ந்தது,
இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
9 தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
11 தேவன் கட்டளையிட்டார்,
பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர்.
12 “வல்லமையுள்ள ராஜாக்களின் படைகள் ஓடிப்போயின!
வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர்.
வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
13 அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.)
புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள்.
அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”
14 சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார்.
அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.
15 பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை.
16 பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்?
தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார்.
என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
17 பரிசுத்த சீயோன் மலைக்கு கர்த்தர் வருகிறார்.
அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன.
18 உயர்ந்த மலையில் அவர் ஏறினார்.
சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார்.
எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார்.
தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார்.
19 கர்த்தரைத் துதியுங்கள்!
ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
தேவன் நம்மை மீட்கிறார்.
20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
21 தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார்.
22 என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
23 நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய்,
உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார்.
24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள்.
என் ராஜாவாகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள்.
பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள்.
இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்!
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான்.
அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது.
அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.
28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்!
கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு,
ராஜாக்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.
30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும்.
அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
போரில் அத்தேசங்களை நீர் வென்றீர்.
இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும்.
தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.
32 பூமியிலுள்ள ராஜாக்களே, தேவனைப் பாடுங்கள்!
நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!
33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்.
இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர்.
இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார்.
தேவனைத் துதியுங்கள்!
பூமி அறுவடையாகுதல்
14 நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது. 15 பிறகு இன்னொரு தேவதூதன் ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவன் மேகத்தின்மேல் இருப்பவரைப் பார்த்து, “அறுவடைக்கு உரிய காலம் வந்துவிட்டது. பூமியின் பயிரும் முதிர்ந்து விட்டது. எனவே உங்கள் அறிவாளை எடுத்து அறுவடை செய்யுங்கள்” என்றான். 16 அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று.
17 பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான். 18 பின்பு இன்னொரு தேவதூதன் பலிபீடத்தில் இருந்து வெளியே வந்தான். நெருப்பின் மீது இவனுக்கு வல்லமை இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்த தேவதூதனை அழைத்து, அவன், “பூமியின் திராட்சைகள் பழுத்திருக்கின்றன. கூர்மையான உன் அரிவாளை எடு. பூமியின் திராட்சைக் குலைகளை கூரிய உன் அரிவாளால் அறுத்துச் சேகரி” என்று உரத்த குரலில் கூறினான். 19 அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான். 20 நகரத்துக்கு வெளியிலிருந்த அந்த ஆலையிலே திராட்சைப் பழங்கள் நசுக்கப்பட்டன. அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அது குதிரைகளின் தலை உயரத்திற்கு 200 மைல் தூரத்துக்குப் பொங்கி எழுந்தது.
இறுதி வாதைகள்
15 பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது.
2 நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன. 3 அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்:
“சர்வ வல்லமையுள்ள தேவனே!
நீர் செய்தவை எல்லாம் பெரியவை,
அற்புதமானவை. நாடுகளின் ராஜாவே!
உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை.
4 கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள்.
எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள்.
நீர் ஒருவரே பரிசுத்தமானவர்
எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள்.
ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”
5 இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது. 6 ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள். 7 நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன. 8 தேவனுடைய மகிமையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் வருகிற புகையால் ஆலயம் நிறைந்துவிட்டது. ஏழு தேவதூதர்களின் ஏழு துன்பங்களும் முடிகிறவரையில் எவராலும் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.
மனம் மாறுங்கள்
13 அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான். 2 இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 3 இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள். 4 சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேரின் நிலை என்ன? எருசலேமில் வசிக்கின்ற எல்லாரைக் காட்டிலும் அவர்கள் மிகுந்த பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 5 அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார்.
பயனற்ற மரம்
6 இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதனுக்கு ஓர் அத்தி மரம் இருந்தது. தனது தோட்டத்தில் அம்மரத்தை நட்டுவைத்திருந்தான். மரத்தில் சில பழங்கள் இருக்கிறதா என அம்மனிதன் பார்த்து வந்தான். அவன் கண்ணில் பழம் எதுவும் படவில்லை. 7 தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். 8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். 9 அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.”
2008 by World Bible Translation Center